சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, April 29, 2006

கதை மலர் 99 - நயவஞ்சக நரி

ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.

மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.

அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.

“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?'' என்று கேட்டது ஆண் கழுகு.

“கழுகாரா... வாங்க... கூட யாரு? மன்னியா?'' என்று கேட்டது.


“ஆமாம்!'' “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!'' என்று கேட்டது.

“ஆமாம்...! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்...! ஏன் கேட்கிறீர்?'' என்று கேட்டது நரி.

“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!'' என்றது ஆண் கழுகு.

“ரொம்ப ராசியான மரம் இது... முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!'' என்றது நரி.

“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?'' என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.

“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!'' என்றது நரி.

பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!'' என்றது.

ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை... இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்... கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!'' என்றது.

“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!'' என்றது நரி.

நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.

பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.

பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்... பேஷ் பேஷ்...

“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?'' என்று கேட்டது அம்மா பன்றி.

“பேஷாக தங்கலாம்!'' என்றது நரி.

“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?'' என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.

“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே... கவலையே படாதே...! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்...! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்...! நானிருக்க பயமேன்?'' என்றது நரி.

பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் "கர், கர்' என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.

வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.

“இதோ பாருங்கள்...! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்... உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!'' என்றது.

இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.

மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.

“பன்றியே...! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!'' என்றது நரி.

பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.

கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.

ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.

நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.

யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.

Sunday, April 23, 2006

கதை மலர் 98 - கஞ்ச மகா பிரபு

பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன்.

எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார்.

ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.

கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, "டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?'' என்று கத்தினார்.

நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். "ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும்,'' என்றான்.

"முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே,'' என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு.

குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது.

அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான்.
கேசவனை பார்த்தக் கொல்லன், "உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்,'' என்றான்.

"என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா?'' என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு.

"எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள்,'' என்றான் அவன்.

வேறு வழியில்லாத ஜம்பு, "சரி'' என்றார்.

சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான்.

"இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்,'' என்றான் அவன்.
நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார்.

வண்டி ஓடிக் கொண்டிருந்தது. "இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்' என்று நினைத்தார் அவர்.

அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர்.

கொல்லனைப் பார்த்து, "இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்,'' என்று மிரட்டினார்.

அவருக்கு அஞ்சிய அவன், "இனி நான் இங்கு வரமாட்டேன்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, "இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர்,'' என்றார்.

"ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே,'' என்றான் அவன்.

"நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்?'' என்றார் அவர்.

"ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

"பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும்,'' என்றான் அவன்.

அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார்.

"நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும்,'' என்றார்.

பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது.
உதவியாளைப் பார்த்து, "ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும்,'' என்றார்.

உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார்.

களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். "ஐயா! என்னால் முடியவில்லை,'' என்றான்.

உழவனைப் பார்த்து அவர், "இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்,'' என்றார்.

பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான்.

நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார்.
உதட்டைப் பிதுக்கிய அவர், "என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

"சரி கோடரியே செய்து தாருங்கள், '' என்றான் அவன்.
மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர்.

சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார்.

மிகவும் சிறியதாக இருந்தது அது. "இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

"ஏதாவது செய்யுங்கள்,'' என்று கடுப்புடன் சொன்னான் உழவன்.

பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், "நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், "எதையாவது செய்து தாருங்கள்,'' என்றான்.

அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், "இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது,'' என்று அதை உழவனிடம் தந்தார்.

"நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்,'' என்றார்.

"ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்,'' என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன்.

"இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன்,'' என்றான் அவன்.

மகிழ்ச்சி அடைந்த அவர், "நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன்,'' என்றார்.

உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான்.

வண்டியோட்டியைப் பார்த்து, "நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் "போதுமா' என்று கேட்பான். நீ உடனே, "போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர்.

அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர்.

வலி பொறுக்க முடியாத அவர், "ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்,'' என்று அலறினார்.

வெளியே இருந்த வண்டியோட்டி, "போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள்,'' என்று உரத்த குரலில் கத்தினான்.

"கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்,'' என்றான் உழவன்.
எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர்.

உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர்.
வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார்.

"அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?"

"டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம்,'' என்றுஅலறினார் செல்வந்தர்.

Thursday, April 20, 2006

கதை எண் 96 - தானத்தில் சிறந்தவர் கர்ணனே

ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.

இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.

தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.

மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.

"கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று கூறினார்.

உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.

Monday, April 17, 2006

கதை எண் 95 - புத்தி பலம்

புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.

இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.

"தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!'' என்று சொல்லிச் சிரிப்பான்.

அதற்கு அந்த மூவரும், "இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்... நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!'' என்று சொல்லி சிரிப்பர்.

இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.

அப்பொழுது—
எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

"விடுவிடு'வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.

அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.

"எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!'' என்றான் இளங்கோ.

"என்ன போட்டி நோஞ்சான்?'' என்று கேட்டனர்.

"உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!'' என்றான் இளங்கோ.

அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் "ஹா... ஹா... ஹா...!'' என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.

"நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!'' என்றனர் அவர்கள்.

"இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!'' என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.

"சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!'' என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.

இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.

"ம்! இழுக்கலாம்!'' என்று கத்தினான்.

அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.

திடீரென்று "இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ' என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.

எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.

வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.

இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. "இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்' என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.

கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.

அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.

மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, ""மூளை பலம் என்பது இது தான்,'' என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.

Saturday, April 15, 2006

கதை எண் 94 - கொக்குவுக்கு எத்தனை கால் - நகைச்சுவை

பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.

"இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,'' என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

"முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்' என்று நினைத்தான் அவன்.

சாப்பாட்டு நேரம்—
முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், ""மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,'' என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. "கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?'' என்று கேட்டான்.

நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, "ம்ம்ம்... நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,'' என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.

மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. "கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,'' என்று கேட்டார் முதலாளி.

"ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,'' என்றான் சமையல்காரன்.

முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து "ச்சூ' என்று கூச்சல் போட்டு விரட்டினார்.

ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.

"இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?'' என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.

"ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் "ச்சூ' என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!'' என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.

அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், "இனி இப்படி நடந்து கொள்ளாதே... பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,'' என்றார் முதலாளி.

"என்னை மன்னிச்சிடுங்க முதலாளி... இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!'' என்றான் சமையல்காரன்.

Wednesday, April 12, 2006

கதை எண் 93 - புத்திசாலி ராணுவவீரர்

அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுõற்றாண்டு.

அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர்.

அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார்.

"இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா...? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?'' என்றார்.

இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார்.

"அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?'' என்று சீண்டினார்.

"நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும்.

"ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!''

"ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,'' என்று குமுறினார் ஆங்கில அதிகாரி.

"சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.

"இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன்.
இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு.

"இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?' என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம்.

"சரி' என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி.

பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட "ப்யூஸ்' வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார்.

நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார்.

"இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!' என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.

"இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.'

இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது.
இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்...?

நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது.

அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.

பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை.
ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.

"கோழை யார் என்பது புரிந்ததா?' என்று சப்தமாகக் கேட்டார்.

அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது.

பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம்.

"இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!' என்று அமைதியாகக் கூறினார்.

ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார்.
புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

Sunday, April 09, 2006

கதை எண் 92 - நாட்டுப்பற்று

முன்னொரு காலத்தில் மணிவர்மன் என்னும் மன்னர் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தார். அவனுடைய மனைவி ராணி பத்மாவதி மீது உயிரையே வைத்திருந்தார்.

அந்நாட்டு மக்கள் தங்கள் அரசனையும் அரசியையும் மிகவும் நேசித்தனர். எங்கும் பசுமையும் வளமையும் குடிகொண்ட அந்த நாட்டில் மக்களுக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் மன்னன் ஆட்சி செய்து வந்தார்.

மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசன், அரசி இருவருக்கும் மனதுக்குள் ஒரு பெரும் குறை இருந்தது. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் அது.

எதிர்காலத்தில் தங்கள் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என மக்களும் மிகவும் கவலைப்பட்டார்கள். ராணி கலங்கும்போதெல்லாம் மன்னன் அவரை சமாதானம் செய்துவந்தார்.

ஒரு நாள் மதுரை மாநகருக்கு முனிவர் ஒருவர் விஜயம் செய்தார். மன்னரும் மகாராணியும் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தனர். முனிவரின் காலில் விழுந்து வணங்கி, தங்கள் குறையை அவரிடம் தெரிவித்தனர்.

முனிவர் மன்னரை நோக்கி, ""இந் நாட்டு மக்களில் யாராவது ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால் உனக்குக் குழந்தை பிறக்கும்'' என்று கூறினார்.

அதைக் கேட்டதும் மன்னரும் ராணியும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு தாயும் இதற்கு ஒத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைத்து இருவரும் தயங்கினர். முனிவரும் "இதைத் தவிர வேறு வழியில்லை' என்று கூறி அங்கிருந்து சென்றார்.

மன்னர் அமைச்சரை நோக்கி, ""யாரேனும் ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால், நாட்டில் பாதி பரிசாக அளிக்கப்படும்'' என்று முரசு அறிவிக்கச் சொன்னார்.

நாடெங்கும் முரசு அறிவிக்கப்பட்டது. ஆயினும் மக்களில் எந்தத் தாயும் தங்களுடைய குழந்தையை ஆற்றில் விடுவதற்கு முன்வரவில்லை.
நாட்கள் பல கடந்தன. அரசனும் அரசியும் மிகவும் சோர்ந்துபோயினர்.

அரசனின் உடல்நிலை இக் கவலையால் மிகவும் பாதிக்கப்பட்டது.

அரசனும் அரசியும் கவலைப்படுவதை அரசனின் மெய்க்காப்பாளன் வேலப்பனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஓர் ஆண்குழந்தை இருந்தது. பிறந்து ஒரு வருடமே ஆகியிருந்த அக் குழந்தையை வேலப்பனும் அவனது மனைவி ரத்னாவும் மிகவும் நேசித்தனர்.

சில நாள்கள் சென்றன. கவலையினால் மன்னர் நோயுற்று, படுத்த படுக்கையானார். அரசன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த வேலப்பனால் இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஒரு குழந்தையின்றி, மன்னர் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்காமல் ஒரு முடிவுக்கு வந்தான்.
வீட்டுக்குச் சென்று தன் மனைவி ரத்னாவை அழைத்தான்.

"குழந்தையில்லாத ஏக்கத்தில் நம் மன்னர் இறந்துவிட்டால், பின்னர் நம் நாடு, சரியான தலைமையில்லாமல் பகைவர்களின் கையில் சிக்கி, அடிமையாகிவிடும்'' என்றான்.

"அதற்கு நாம் என்ன செய்வது?'' என்றாள் ரத்னா.

"நம் நாட்டைக் காப்பாற்ற நாம் ஒரு தியாகம் செய்யவேண்டும். நமது குழந்தையை வைகை ஆற்றுக்கு அர்ப்பணிக்க வேண்டும்'' என்றான்.

ரத்னா இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கும் நிலைக்குச் சென்றாள். குழந்தையைப் பிரிவது - அதுவும் ஆற்றில் விடுவது என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ஆயினும் குழந்தையை விட நாடும், மன்னரும் மிக முக்கியம் என்பதைப் பலவாறு தன் மனைவியிடம் எடுத்துச் சொன்னான் வேலப்பன்.

கணவனின் வார்த்தையை மீறாத அவன் மனைவியும் கண்ணீரோடு அதற்குச் சம்மதித்தாள். மறுநாள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு வந்தாள். நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்தவிதச் சலனமும் இல்லாமல் வைகை ஓடிக்கொண்டிருந்தது.

ரத்னா ஆற்றில் இறங்கி, கண்ணீரோடு கடைசியாய்த் தன் மகனை முத்தமிட்டாள். ஒரு மூங்கில் தட்டில் குழந்தையைக் கிடத்தி, ஆற்றில் விட்டாள். பிறகு கதறி அழுதவாறே வீட்டுக்குச் சென்றாள்.

இச் செய்தி அரசனுக்கும் அரசிக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேலப்பனையும் ரத்னாவையும் அழைத்து, கண்களில் நீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் புகழ்ந்து, "வேலப்பா, நீங்கள் இருவரும் செய்திருக்கும் தியாகத்துக்கு இந்த நாட்டையே பரிசாக உங்களுக்குக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. ஆயினும் நான் அறிவித்தபடி இந்த நாட்டில் பாதியை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்'' என்றார் அரசர்.

வேலப்பன் மன்னரை வணங்கி, "பிரபு! தாங்கள் அளிக்கும் பரிசுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. தங்கள் மீதுள்ள அன்பினாலும் இந்த நாட்டின் மீது நாங்கள் வைத்திருக்கும் பாசத்துக்காகவும்தான் நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தோம்'' என்று கூறி, அரசன் அறிவித்த பரிசை ஏற்க மறுத்துவிட்டான்.

மன்னர் மிகவும் வற்புறுத்தியும் அவர்களிருவரும் பரிசை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. நாடே அவர்களின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்தது.

சில நாள்களில் அரசி தாய்மைப்பேறு அடைந்தார். மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர். மாதங்கள் உருண்டோடின. அரசிக்கு ஓர் அழகிய ஆண்குழந்தை பிறந்தது. செய்தியறிந்து நாடே திருவிழாக் கோலம் பூண்டது.
வேலப்பனும் ரத்னாவும் தங்கள் துக்கத்தை மறந்து, இந்த மகிழ்ச்சியில் பங்குகொண்டனர். அன்றிரவு ரத்னாவுக்குத் தன் குழந்தை ஞாபகம் வந்தது.

வைகைக் கரைக்குச் சென்றாள். குழந்தையைத் தான் விட்ட இடத்துக்குச் சென்று நின்றுகொண்டு, மகன் நினைவில் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள்.

அப்போது..
திடீரென ஒருவர் ரத்னாவின் முன்னே குழந்தையோடு நிற்பது போலிருந்தது. கண்களைத் துடைத்துவிட்டு, ரத்னா உற்றுப்பார்த்தாள். மன்னருக்கு ஆசி வழங்கிய அதே முனிவர்தான். கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை, ரத்னாவின் குழந்தையேதான்.

ரத்னா வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் முனிவரைப் பார்த்தாள். குழந்தையை ரத்னாவிடம் கொடுத்த முனிவர், அவளைப் பார்த்து, "நீ குழந்தையை ஆற்றில் விட்டவுடன் நான்தான் எடுத்து வளர்த்து வருகிறேன். நீயும் உன் கணவனும் செய்த இந்த மாபெரும் தியாகத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் இருவருடைய நாட்டுப்பற்றை இந்த உலகம் உணரவே இதுபோல் செய்தேன். எதிர்காலத்தில் உன் மகன், இளவரசனுக்குத் துணையாக நின்று இந்த நாட்டைக் காப்பான்'' என்று கூறி, ஆசி வழங்கினார்.

குழந்தையுடன் ரத்னா வீட்டுக்கு ஓடோடி வந்த மறுநிமிஷம், இச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அரசனும் அரசியும் ரத்னாவுக்கு மீண்டும் குழந்தை கிடைத்ததை அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். அக் குடும்பத்தை அழைத்து, அரசவையில் உரிய மரியாதை தந்து கவுரவித்தனர். அவர்களின் நாட்டுப்பற்றை நாடே கவுரவித்தது.

நன்றி: தினமணி
க. அபிநயா,
நடராஜன் தமயந்தி மேனிலைப் பள்ளி,
நாகப்பட்டினம்.

Saturday, April 08, 2006

கதை எண் 91 - முட்டாள்களுக்கு வீண் உபதேசம்

எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன.

"நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?'' என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன.

அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது.

கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது.

"கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே...'' என்று அவர்கள் வாயை கிளறியது.

"ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!'' என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின.

"கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை...'' என்று கூறியது ஆடு.

இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. "ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு... இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு... அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே,'' என்று கோபமாக கூறின.

"கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்,'' என்று கூறியது.

கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன.

கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது.

Thursday, April 06, 2006

கதை எண் 90 - தந்தைக்காக சிறைக்கு சென்ற ரங்கநாத சாஸ்திரி

சிறிய வயதில் _ பெரிய வயதினர் வேடமணிந்து... வழக்கொன்றிற்கு தீர்ப்பளித்தான் மன்னன் கரிகால் சோழன்.

அம்மன்னனைப் போன்று சிறிய வயதில்... பெரிய வயதினர் போன்று சிறைச் சாலைக்கு ஜாமீன் எடுக்கச் சென்றவர் தான் வீரவல்லி `ரங்க நாத சாஸ்திரி...'

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே களாமூரில் 1819_ம் ஆண்டில் பிறந்தவர் ரங்கநாதன்.

பன்னிரண்டு வயதாக இருக்கும்போது... நிலவரி கட்டாத காரணத்திற்காக அக்கால வழக்கப்படி அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் தாத்தாவுக்கு திதி நாள் வந்தது. திதியை ரங்கநாதனின் தந்தை இருந்துதான் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை.

ரங்கநாதனின் தாய்க்கோ, கணவரை எப்படி சிறையிலிருந்து வரவழைப்பது. எவ்விதம் திதியை கொடுப்பது? என்று புரியாமல் ஏங்கித் தவித்தார். தன் எண்ணத்தை வாய்விட்டு அழுதே சொன்னார்.

தாயின் அழுகைக்கான காரணத்தைப் புரிந்து கொண்ட ரங்கநாதன்

"அம்மா, அழாதீங்கம்மா... அப்பாவை எப்படியும் சிறையிலிருந்து மீட்டு வருகிறேன்" என்றார் நம்பிக்கையுடன்.

சிறுவனான நம் பையனால் எப்படி தந்தையை சிறையிலிருந்து மீட்டு வரமுடியும்? என்று தாய்க்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் மகனை சித்தூர் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தார்.

சித்தூரில் `காஜா மேஜர்' என்னும் ஆங்கிலேயர் `ஜில்லா ஜட்ஜ்' ஆக இருந்தார்.

அவரிடம் தாத்தாவுக்கு செய்ய வேண்டிய திதிக்கு தந்தை அவசியம் வரவேண்டும். அவர்தான் திதிக்கு வேண்டிய சகலமும் செய்ய வேண் டும். அதனால் தந்தையாரை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் அய்யா என்று வேண்டினார்.

"தம்பி, உன் தந்தையார் திதியை முடித்த பின் மீண்டும் சிறைக்கு வருவதற்கு உத்திரவாதமாக யாராவது ஒருத்தர் ஜாமீன் வேண்டுமே" என்று கேட்டார்.

"அய்யா, இந்த ஊரில் எங்களுக்கு வேண்டியவங்க யாரும் தெரியாது. அப்படியிருக்கையில் யாரை ஜாமீனுக்கு அழைத்து வர முடியும்?

"அப்படியென்றால் எந்த ஆதாரத்தை வைத்து உன் தந்தை யாரை வீட்டிற்கு அனுப்புவது?

"அய்யா, என் தந்தையாருக்கு ஜாமீன் கொடுக்க எனக்கு ஒரே வழிதான் தெரிகிறது.

`சொல்லு தம்பி'

"என் தந்தை திதியை முடித்து விட்டு திரும்ப சிறைக்கு வரும்வரையில் அவருக்கு பதிலாக நான் சிறையிலிருக்கிறேன். என்னை நம்புங்கள்" என்றார்.

பன்னிரண்டு வயதுப் பையனது.. எதிர்பாராத இப்பதில், `ஜட்ஜின்' மனதை இளகச்செய்தது. ரங்கநாதன் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை வைத்தார். ஆனால் தந்தைக்கு பதிலாக மகனை சிறையில் வைக்க முடியாதே. ஏனெனில் ரங்கநாதன் மைனர் ஆயிற்றே... ஒரு கனம் யோசித்தார். எப்படியும் ரங்கநாதன் தந்தையை விடுவித்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தார்.

அதற்காக மறுநாள் காலையில் தம்மை வந்து பார்க்குமாறு ரங்கநாதனிடம் கூறி அனுப்பினார்.

ரங்கநாதனும் மறுநாள் ஜட்ஜைச் சந்தித்தார்.

ரங்கநாதன் தந்தையை விடுவிக்குமாறு சிறை அதிகாரிக்கு உத்தரவு எழுதி _ ரங்கநாதனிடம் கொடுத்து அனுப்பினார் ஜட்ஜ்.

சிறை அதிகாரியிடம் உத்தரவினைக் காட்டி தந்தையை விடுவித்தார்.

பின்பு நள்ளிரவில் தந்தையுடன் வீடு போய்ச் சேர்ந்தார்.

நடந்த நிகழ்ச்சிகளைத் தம் கண வர் மூலம் அறிந்த ரங்கநாதனின் தாய், தம் அருமை மகனைக் கட்டிய ணைத்து உச்சிமோந்து _ ஆனந்த கண்ணீர் சொறிந்தார்.

பிற்காலத்தில் அந்த ரங்கநாதன் தான், ரங்கநாத சாஸ்திரியாக மிகப் பெரும் பதவிகளைப் பெற்று, பேரும் புகழுடன் விளங்கியவர்.


நன்றி: -கள்ளிப்பட்டி சு.குப்புசாமி - தினத்தந்தி

Tuesday, April 04, 2006

கதை எண் 89 - நாவடக்கம் இல்லாத அரசன்

சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு.

இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர்.

ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்ததால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார்.

புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார்.

"அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார்.''

"உமது பெயருக்கும் உருவத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லையே!''

"ஏன் மன்னா அப்படிக் கூறுகிறீர்கள்?''

"பெருந்தலைச் சாத்தனார் என்கிறீர்கள். உமது தலை பெரியதாக இல்லையே... சிறியதாகத்தானே இருக்கிறது.''

"மன்னிக்க வேண்டும் மன்னா. பெருந்தலை என்பது எனது ஊரின் பெயர்!''

"ஓ, அப்படியா செய்தி!''

"நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!''

"இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் போண்டியாகி இருப்பான்!''

"அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும். அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம்.''

"நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழ்ந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்... யாரங்கே, இந்தப் புலவரை வெளியே அனுப்பு.''

"இல்லை, நானே சென்றுவிடுகிறேன்.''

புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான்.

மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை.

"என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா!'' எனத் துõதுவனை
அனுப்பினான்.

மூவன் அவைக்கு வந்த தூதுவன், மூவனை மரபுப்படி வணங்கி, ""மன்னன் கணைக்கால் இரும்பொறையின் துõதுவன் நான்,'' என்றான்.

"கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்... இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?''

"மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை.''

"தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்.''

"எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது.''

"உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு.''

"உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு. எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது.''

"அடே தூதுவனே... இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!''

தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்.

"தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்,'' என்று முடிவு கட்டினான் இரும்பொறை.

"மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன் முன்பற்களை உங்களிடம் கொண்டு வந்து காணிக்கையாக்குகிறேன்.'' தளபதி வீரமுழுக்கமிட்டான்.

"அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை உணர வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!''

"சரி மன்னா, அப்படியே செய்கிறேன்.''

"தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, "யாகாவாராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்!' என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்.''

"உத்தரவு மன்னா!''

கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர்.

நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான்.

குழந்தைகளே! வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.

Saturday, April 01, 2006

கதை எண் 88-4 - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

பறக்கும் தங்கக்குதிரையானது இராமநாதனை சுமந்துக் கொண்டு மஞ்சள் ஆற்றைக் கடந்து, பட்டு தேசத்தின் எல்லையில் நுழைந்தது. ஊரே அமைதியாக இருந்தது, மக்கள் நடமாட்டமே தெரியவில்லை, நேராக அரண்மனை அருகில் இறங்கி உள்ளே சென்றார், எப்படியும் அரசரை சந்தித்து கொடிய மந்திரவாதி கடம்பனை பற்றிய விபரங்கள் அறிய வேண்டும். அதன்படி மந்திரவாதியை வெல்ல வேண்டும் என்பது அவரது திட்டம்.

அரண்மனையில் பயங்கர நிசப்தம் நிலவியது, உள்ளே சென்ற இராமநாதன் கண்ட காட்சி அவரது திட்டத்தை பொடிபொடியாக்கியது. உள்ளே அரசர் மட்டுமன்றி அவரை சுற்றியிருந்த அனைவரின் உடலும் மரத்தால் ஆனது போல் இருந்தது. அரசரின் தலை மட்டுமே மனித உருவில் இருந்தது.

அரசரின் அருகே ஓடிச் சென்ற இராமநாதன் பட்டு தேச மொழியில் “அரசே! உங்களுக்கு என்ன ஆச்சுது, ஏன் இங்கே மரச்சிலையாக காட்சியளிக்கிறார்கள், என்ன நடந்தது, விபரமாக கூறுங்கள்” என்று பரபரப்பாக பேசினார்.

அரசர் “இளைஞனே! உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், எங்கள் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கை வருகிறது, நடந்ததை அப்படியே கூறுகிறேன், கேள்”

“எங்கள் நாட்டிற்கும் காந்தார தேசத்திற்கும் சில நேரங்களில் எல்லைப் பிரச்சனைகளால் போர் நிகழ்ந்த காலம், ஒரு நாள் எங்கள் ஒற்றர் தலைவன் கொடுத்த செய்தியில், காந்தார தேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு பயங்கரமான மந்திரவாதி வந்திருப்பதாகவும், அவன் புதுப்புது ஆயுதங்கள் தயாரித்து கொடுப்பதாகவும் சொல்லியிருந்தார், ஆக நாமும் அதே போல் ஆயுதங்கள் வைத்திருக்காவிட்டால் காந்தார தேசம் நம்மை அடிமைப்படுத்திடும் என்று நினைத்தேன், என் அமைச்சர்களுடன் பேசிய பின்பு, எங்கள் ஒற்றர் படைத்தலைவன் மூலமாக திறமையான சில இளைஞர்களை காந்தார தேசத்திற்கு அனுப்பி, அங்கே இருக்கும் பயங்கரமான ஆயுதங்களின் தன்மைப்பற்றி அறிந்து அடிக்கடி செய்தி அனுப்பினார்கள். நாங்களும் எங்கள் திறமையை பயன்படுத்தி அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்து, யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தோம், போர்க்காலத்தில் பயன்படுத்தவும் திட்டமிட்டிருந்தோம்”.

“சில காலத்தின் பின்னர் மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது, அது தான் காந்தார தேச மன்னரையும், நாட்டு மக்களையும் கொடிய மந்திரவாதி கற்சிலைகளாக மாற்றிவிட்டான், ஆக இனிமேல் எங்களுக்கு எதிரியில் ஒருவன் குறைந்தான் என்று நினைத்தோம், அப்படி இருக்கையில் ஒரு நாள் எங்கள் முன்னாள் அந்த கொடிய மந்திரவாதி தோன்றினான்.”

மந்திரவாதி “அரசே! உன் எதிரியான காந்தார தேச மன்னனை கல்லாக்கி விட்டேன், உனக்கு மகிழ்ச்சி தானே, இனிமேல் நான் உனக்கு உதவ நினைக்கிறேன், உனக்கு அதே போல் பல ஆயுதங்கள் தயாரித்து கொடுக்கிறேன்”

“ உன்னுடைய பேச்சுக்கு மிக்க நன்றி, தற்போது எங்களுக்கு உன்னுடைய உதவி தேவையில்லை, மேலும் எங்களாலே அந்த வகையான ஆயுதங்கள் தயாரிக்கும் வல்லமை இருக்கிறது”

நான் இப்படி கொஞ்சம் தெனாவெட்டாக பேசியது மந்திரவாதியை கடுப்படித்திருக்க வேண்டும், ஆகையால் கடும்கோபம் கொண்டு எங்களை எல்லாம் மரச்சிலைகளாக்கிவிட்டு காந்தார தேச இளவரசியை கொண்டு சென்றது போல் என் மகளையும் அவன் கடத்தி கொண்டு போய் விட்டான். நாங்களும் பல ஆண்டுகளாக சிலையாக இருக்கிறோம், இன்று தான் உன்னை பார்த்ததில் கொஞ்சம் நம்பிக்கை உண்டாகிறது.

“அரசே! கவலை வேண்டாம், இறைவன் அருள் எனக்குண்டு, கட்டாயம் அந்த மந்திரவாதியை வென்று உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லது செய்வேன்”

” வீர இளைஞனே! நீ மட்டும் சொன்னது செய்தால், நீ என்ன கேட்டாலும் கொடுப்பேன், இது உறுதி”

“ஆமாம் அரசே! மந்திரவாதி தான் பலச்சாலியாச்சே, அவன் நினைத்தால் இளவரசியை திருமணம் செய்யலாமே, ஏன் உங்க சம்மதம் கேட்கிறான், அது ஏன்?”

“ இளைஞனே! அந்த மந்திரவாதிக்கு ஒரு சாபம் இருக்கிறது, அவன் ஒரு முனிவரிடம் சீடனாக இருந்த போது, அவரது மந்திர தந்திர சக்திகள் அனைத்தும் விரைவில் கற்றுக் கொள்ள நினைத்து, அவரது மகளின் மனதை மாற்றி திருமணம் செய்ய நினைத்திருக்கிறான், அது அறிந்து கோபப்பட்ட அவனது குரு ஒரு சாபமிட்டார். தீய எண்ணத்தில் என்னிடம் சீடனாக சேர்ந்த நீ, குருவின் மகளையே திருமணம் செய்ய நினைத்தாய், இனிமேல் திருமணம் செய்ய நினைத்தால் அந்த பெண் மற்றும் பெற்றோரின் விருப்பம் இல்லாமல் செய்ய முடியாது, அப்படி செய்தால் உன் தலை சுக்கு நூறாக நொறுங்கிவிடும், ஜாக்கிரதை என்று சொல்லிட்டார்”

“ அரசே! மந்திரவாதியைப் பற்றி வேறு ஏதாவது விபரம் தெரிந்தால் சொல்லுங்களேன்”
“ கடம்பன், பனித்தேசத்தின் எல்லையில் இருக்கும் மனிதர்கள் புக முடியாத கடும் வனத்தில் இருக்கிறான்”

“நன்றி அரசே! இன்றே நான் பனி தேசத்திற்கு சென்று உங்கள் நண்பரான அந்நாட்டு மன்னரை சந்தித்து, அவரின் உதவியை பெற்று, வனத்தில் நுழைந்து, கொடியவனை அழித்து வருகிறேன், விடை கொடுங்கள்”

அரசரிடம் விடை பெற்று, பனி தேசத்திற்கு ஏற்ற உடைகளை அணிந்து குதிரையில் ஏறி பனிதேசத்தை நோக்கி பயணமானார்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது பனிதேசத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்திருந்த இராமநாதனுக்கு தந்தை படிக்க செல் என்று சொன்ன போது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சி அடைந்தார்.

பனிதேசத்தின் மீது பறந்த போது கீழே எங்கே பார்த்தாலும் பனிப்படர்ந்து வெள்ளையாக காணப்பட்டது. இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே பனிதேச மன்னர் வசிக்கும் அரண்மனையின் அருகில் இறங்கினார்.

கடும்குளிர் நிலவியதால் மக்கள் நடமாட்டம் இல்லை போல் என்று நினைத்து அரண்மனை உள்ளே நுழைந்த இராமநாதனின் தண்டுவடமே சில்லிட்டது போல் உணர்ந்தார்.

அரசவையில் அரசரும் மற்றவர்களிம் வெண்ணிறத்தில் பனிக்கட்டி சிலைகளாக காட்சி அளித்தார்கள். அரசரின் தலை மட்டுமே மனித உருவில் இருந்தது.

இராமநாதன், என்னடா எங்கே போனாலும் இந்த மந்திரவாதி தொந்தரவு தாங்க முடியலையே, அவனை சீக்கிரம் ஒழித்துக் கட்ட வேண்டும், இல்லேன்னா உலகம் முழுவதும் அவனது அட்டூழியம் பரவிவிடும் என்று நினைத்தார்.

அரசரும் காந்தார, பட்டுதேச மன்னர்கள் சொன்ன கதையே சொன்னார். இனியும் தாமதிக்கக்கூடாது என்று அரசரிடம் விடைப்பெற்று தங்ககுதிரையை அழைத்து, அதன் மேல் ஏறி மீண்டும் பறக்கத் தொடங்கினார். இரவும் பகலுமாக இரண்டு நாட்களின் பயணத்தின் பின்னர் பனிதேசத்தின் எல்லையை அடைந்தார். வேகுதூரத்தில் பச்சை பசேலென பெரிய பிரதேசமே வனப்பகுதியாக காட்சியளித்தது.

இராமநாதனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியலை, ஒருவழியாக மந்திரவாதியின் இருப்பிடத்திற்கு அருகில் வந்தாச்சு, இப்போ அவனை எப்படி வெல்வது, சரி முதலில் அவனது மாளிகையை கண்டுபிடிப்போம் என்று நினைத்துக் கொண்டு குதிரையில் அந்த வனப்பகுதியை சுற்றி சுற்றி பார்த்தார், மாளிகையே தெரியவில்லை. எப்படி கண்டுபிடிப்பது என்று தேடிய போது, ஒரு இடத்தில் மரங்கள் தீயால் கருகி இருப்பதைக் கண்டார், ஆக மொத்தம் அதன் அருகில் தான் மாளிகை இருக்க வேண்டும் என்று நினைத்து, அங்கே பறந்தப்படியே மந்திரவாதியின் மாளிகையை கண்டுபிடித்து விட்டார், பின்னர் குதிரையுடன் கொஞ்ச தொலைவில் கீழே இறங்கினார்.

குதிரையிடம் நாம் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, மாளிகையை நோக்கி நடந்தார்.

மாளிகையை ஜாக்கிரதையாக நெருங்கியவர் நெருப்பை மிதித்தது போல் பயந்து நின்றார். மாளிகையின் முன்னால் காவலுக்கு இரண்டு பெரிய நெருப்பை கக்கும் டிராகன்கள் இருந்தது, இவற்றின் நெருப்பால் தான் மரங்கள் கருகி இருந்ததை புரிந்துக் கொண்டார், அவை தன்னைப் பார்த்தால் தானும் எரிந்து போக வேண்டியது தான், எப்படி அவற்றை ஏமாற்றி மாளிகையில் நுழைவது என்று யோசித்தார்.

அப்போ குதிரையானது இராமநாதனை நோக்கி “எஜமான், நீங்க கவலைப்பட வேண்டாம், நான் உதவுகிறேன், நான் எப்படியாவது அந்த இரண்டு டிராகன்களை ஏமாற்றி என் பின்னால் வர வைக்கிறேன், அந்த இடைவெளியில் நீங்க மாளிகையில் நுழைந்து விடுங்கள்”.

குதிரையானது இராமநாதனை விட்டு மாளிகையில் எதிர்புறமாக மறைந்து சென்று பயங்கரமாக கனைத்தது, கனைப்புச் சத்தம் கேட்ட டிராகன்கள் உணவுக்கு ஒரு குதிரை கிடைச்சாச்சு என்று குதிரையை பிடிக்க ஓடியன, தங்ககுதிரையானது அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியது, அந்த நேரத்தில் இராமநாதன் வேக வேகமாக ஓடி மாளிகையில் நுழைந்தார்.

தங்க குதிரையானது வானில் பறக்கத் தொடங்கியது, டிராகன்களும் விரட்டிக் கொண்டு பறந்தன, ஆனால் தங்ககுதிரையை பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு மாளிகையின் காவலுக்கு திரும்பின. மாளிகையின் உள்ளே நுழைந்த இராமநாதன் அங்கே பயங்கர நிசப்தம் நிலவியதை கண்டார், பெரிய பெரிய தூண்களில் பயங்கரமான மிருங்கள் உயிரோடு இருப்பது போல் சிற்பங்கள் இருப்பதைக் கண்டார்.

ஒவ்வொரு அறையாக தேடி பார்த்த போது ஒரு அறையில் மூன்று இளவரசிகளும் சோர்ந்து போய் கவலையோடு இருப்பதைக் கண்டார். உள்ளே நுழைந்த இராமநாதனைக் கண்டு மூவரும் ஆச்சரியப்பட்டார்கள், இதுவரை மந்திரவாதி மட்டுமே வந்த அறையில் புதிய அழகான வாலிபனைக் கண்டதும் அவர்களால் நம்பமுடியவில்லை.

இராமநாதன் “இளவரசிகளே! கவலைப்பட வேண்டாம், உங்களை காப்பாற்ற தான் நான் வந்திருக்கிறேன், எனக்கு நீங்க கொஞ்சம் உதவி செய்தால் போது மந்திரவாதியை நான் வெல்வேன், உங்கள் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும்”.

“நயவஞ்சக மந்திரவாதியை தந்திரத்தால் வெல்ல வேண்டும், அவனது உயிர் அவனுடைய உடலில் இல்லை என்றும் எங்கே மறைத்து வைத்திருப்பதாகவும் வைத்திய மந்திரவாதி என்னிடம் சொன்னார், அது எங்கே என்பதை கண்டறிய வேண்டும், அதற்கு கால அவகாசம் இல்லை, எனவே அதை மந்திரவாதியின் வாயிலிருந்தே வரவழைக்க வேண்டும், எனக்கு உங்கள் உதவி தேவை”

“உங்களில் யாராவது ஒருவர் மந்திரவாதியை திருமணம் செய்ய சம்மதம் என்று சொல்ல வேண்டும், பின்னர் மந்திரவாதியின் மதியை மயக்கி அவனிடமிருந்து விபரங்கள் பெற வேண்டும், மந்திரவாதியின் மதியை மயக்கும் மாய வேர் என்னிடம் இருக்கிறது, சொல்லுங்க உங்களில் யார் அதை செய்ய இருக்கீங்க?”

இராமநாதன் அவ்வாறு கேட்டதும் பனிதேசத்தின் இளவரசி தைரியமாக முன்வந்தார்.
மந்திரவாதியை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்பதை தெளிவாக கூறினார். அத்துடன் தான் அதே அறையில் இருந்த பெரிய குதிருக்குள் ஒளிந்து கொண்டார்.

அன்று மாலையே மந்திரவாதி இளவரசிகள் தங்கியிருந்த அறைக்கு வந்தான். வழக்கம் போல் தன்னை திருமணம் செய்துக் கொள்ள அவர்களை மிரட்டினான். வழக்கத்திற்கு மாறாக பனித்தேசத்தின் இளவரசி அவனைப் பார்த்து புன்னகை செய்தார், அத்துடன் “மாவீரரே! நாங்கள் ஆரம்பத்தில் உங்களைக் கண்டு பயந்தோம், இப்போ உங்களின் வீரத்தையும் சக்தியையும் புரிந்துக் கொண்டோம், திருமணம் செய்தால் உங்களைத் தான் செய்வோம் என்ற முடிவுக்கு வந்தாச்சு” என்றார்.

அதைக்கேட்ட மந்திரவாதிக்கு நான் காண்பது கனவே, நினைவா என்று ஆச்சரியப்பட்டான்.. இளவரசிகளும் அவனுக்கு சுவையாக உணவு தயார் செய்து கொடுப்பதாக சொன்னார்கள். மந்திரவாதியும் மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியேறினான், இரவில் மீண்டும் வருவதாக சொன்னான்.

உடனே இராமநாதன் வெளியே வந்து தன் கைப்பக்குவத்தை காட்ட, அருஞ்சுவை உணவு தயார் ஆனது, மீண்டும் குதிருக்குள் போய் ஒளிந்துக் கொண்டார்.

இரவில் வந்த மந்திரவாதியின் உணவின் சுவையாலும், உபசரிப்பாலும் மயங்கிப் போயிருந்தான், இராமநாதன் சொன்னப்படி சுவையான பாயாசத்தில் மந்திரவேரில் ஒன்றை பொடியாக்கி போட்டிருந்தார். அதை குடித்தப் பின்னர் மந்திரவாதியின் மதி மயங்கிவிட்டது.

இராமநாதன் சொன்னப்படி பனிதேசத்தின் இளவரசி பேசத் தொடங்கினார் “மாவீரரே! நீங்களோ வயதானவர், உங்களுக்கோ எதிரிகள் அதிகம், அப்படி இருக்கையில் உங்களை மணந்தப்பின்னர் நீங்க விரைவில் மரணம் அடைந்தால், எங்கள் கதி என்ன ஆகும், அது மட்டுமே இன்னமும் பயமாக இருக்குது”

“ பெண்ணே! வீண்கவலை வேண்டாம், உங்கள் மூவரையும் உங்க பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டால் எனக்கு சாகாவரம் கிடைத்து, மிகவும் அழகான வாலிபானாகி விடுவேன், மேலும் என் உயிரை நான் மறைவான இடத்தில் வைத்திருக்கிறேன்”

“அப்படியா! ஆச்சரியமாக இருக்குதே, இப்படி கூட செய்ய முடியுமா?” என்று இளவரசி ஆச்சரியத்தோடு கேட்டார்.

“மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும்” என்று கூறியதோடு மந்திரவாதி மயங்கிப் போனான்.

மறுநாள் காலையில் மந்திரவாதி வழக்கம் போல் வெளியே சென்று விட்டான். இரவு முழுவதும் இராமநாதன் தூங்கவில்லை, அது என்ன மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும், அப்படி என்றால் மூன்றெழுத்து கொண்ட ஏதோ ஒன்றில் அவன் உயிர் இருக்கும் போலிருக்குதே, அது என்ன என்று யோசித்து யோசித்து மண்டை வலி எடுத்தது.

மூன்று எழுத்து என்றால் பூச்சி, பூரான், பல்லி, பாம்பு, கொக்கு, காக்கா, கழுதை, குதிரை இப்படியாக விலங்குகள் பறவைகள் பட்டியலும் மல்லி, லில்லி, அல்லி, தாமரை என்று பூக்கள் பட்டியலும், இப்படி பல பட்டியல் போட்டும் பிடிபடாமல், தமிழ்மணத்தில் தன் பதிவான மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் படித்தும் மண்டை காய்ந்து போனது தான் மிச்சம்.

அடுத்த நாள் இரவில் மீண்டும் இளவரசிகள் உணவு கொண்டு போய் மந்திரவாதிக்கு கொடுத்து, இரண்டாவது மாயவேர் போட்ட பாயாசத்தை கொடுத்து பேச்சு கொடுக்க கடைசியாக “காட்டுக்குள் கயிறு விடுகிறான்” என்ற சொல்லை சொல்லி மயங்கி விட்டான்.

மீண்டும் இராமநாதனுக்கு தலை வலி வந்து விட்டது, அது என்ன காட்டுக்குள் கயிறு விடுகிறான், ஒரே புதிராகவே சொல்கிறானே மந்திரவாதி, ஒருவேளை மந்திரவேரின் சக்தி போதாதா என்று யோசித்தார்.

மூன்றாவது நாள் மந்திரவாதி “நாளை அபூர்வ பௌர்ணமி வருகிறது, உங்கள் தாய் தந்தையரை இங்கே கொண்டு வந்துவிடுவேன், அவர்கள் சம்மதிக்க வைக்க வேண்டியது உங்கள் வேலை, இல்லை என்றால் அனைவரையும் இங்கேயே வெட்டி கொன்று போட்டு விடுவேன், சாகாவரம் பெற வேறு வழிகள் உள்ளது” என்று கடுமையாக சொன்ன மந்திரவாதியை சமாதானப்படுத்தி, மீண்டும் உயிர் ரகசியம் பற்றி கேட்க,
“சிப்பிக்குள் இருப்பது முத்தல்ல” என்று மூன்று வார்த்தைகள் சொல்லி மயங்கி போனான்.

ஒருவழியாக இளவரசிகளிடம் எப்படியும் நாளை இரவுக்குள் மந்திரவாதிக்கு முடிவு கட்டுகிறேன் என்று கூறி தூக்கத்திலிருந்த டிராகன்களைள ஏமாற்றிவிட்டு காட்டுக்குள் நுழைந்தார் இராமநாதன்.

தன் குதிரையில் ஏறி ஏதாவது தடயம் கிடைக்குமா என்று இரவு நேரத்தில் பயங்கரமான காட்டுக்குள் நுழைந்தார், பல மணி நேரம் தேடலுக்கு பின்னர் அங்கே பெரிய சுனை ஒன்று இருப்பதைக் கண்டார். மந்திரவாதி கடைசியாக சொன்ன சிப்பி, முத்து போன்ற வார்த்தைகள் சுனைக்கு பொருந்துகிறதே என்று மகிழ்ச்சி கொண்டார்.

வேகமாக சுனையை நோக்கி ஓடி போய் தண்ணீரில் காலை வைக்க இருந்தவர் நிலா வெளிச்சத்தில் தெரிந்த காட்சியைக் கண்டு பயந்து விட்டார். தண்ணீரில் படுபயங்கரமான பாம்புகளும், கொடிய விஷப்பற்களை கொண்ட பெரிய பெரிய மீன்களையும் கண்டு, காலை உடனே எடுத்துவிட்டார்.

தண்ணீரில் நீந்தி சிப்பியை தேடி எடுக்கலாம் என்றால் அது முடியாது போலிருக்குதே என்று கவலைப்பட்டார்.

அப்படியே அசதியில் அருகே இருந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து உறங்கிவிட்டார். காலையில் பறவைகளின் சப்தம் கேட்டு விழித்தெழுந்தார். மாலைக்குள் மந்திரவாதியின் உயிர் ரகசியத்தத கண்டுபிடிக்க வேண்டுமே என்று யோசித்து அண்ணாந்து பார்த்தார், ஆலமரத்தில் நிறைய பறவைகள் கூடு கட்டியிருந்தன, அப்படியே வேடிக்கை பார்த்தவருக்கு மின்னல் அடித்தது போல் பரவசம் ஆனார்.

ஆலமரத்தின் விழுதுகளை கண்டவருக்கு மந்திரவாதி சொன்ன “காட்டுக்குள் கயிறு விடுகிறான்” புதிருக்கான விடை ஆலமரத்தின் விழுதுகள் என்பதை புரிந்து கொண்டார்.

மந்திரவாதியின் உயிர் கட்டாயம் சுனை நீரில் தான் இருக்க வேண்டும், அதுக்கு ஆலமரத்தின் விழுது உதவி செய்யும் என்பதை வைத்து சுனையை நன்றாக ஆராய்ந்தார், சுனையின் நடுவில் நிறைய வெள்ளை தாமரை பூக்கள் பூத்திருந்தன.

மேலும் ஒன்றுமே புலப்படாமல் வழக்கம் போல் கண்களை மூடிக் கொண்டு தன் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு கண்ணை திறக்க, என்ன ஆச்சரியம் தாமரை பூக்களில் ஒரு பூ மட்டும் சிவப்பாக மாறியது, அதன் நடுவில் ஏதோ ஒன்று பளீச்சென்று சூரிய ஒளியில் பலபலத்தது. “சிப்பிக்குள் இருப்பது முத்தல்ல” என்ற புதிருக்கான விடை தாமரை பூவில் இருப்பது மந்திரவாதியின் உயிர் என்பதை அறிந்து கொண்டார். சிவப்பு தாமரையானது குறிப்பிட்ட நேரம் மட்டுமே நீரின் மேல் இருந்தது, அது மீண்டும் நீரில் மறையவும் அதன் விஷமுள்ள மீன்கள் பாய்ந்து செல்வதுமாக இருந்தது. மந்திரவாதி யாரும் தாமரைப்பூவினை பறிக்காமல் இருக்க அவ்வாறு பாதுக்காப்பு ஏற்பாடு செய்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டார். ஆலமரத்தின் ஒரு கிளையானது தாமரைப்பூவின் மேலே சற்று உயரத்தில் இருப்பதையும் பார்த்து கொண்டார்.

வேக வேகமாக ஆலமரத்தின் விழுதுகளை வெட்டி கயிறாக தயாரித்தார். நேராக ஆலமரத்தின் மேல் ஏறினார், அங்கே இருந்த பாம்புகளை எல்லாம் வெட்டி தள்ளிவிட்டு நேராக தாமரைப்பூ வரும் இடத்திற்கு நகர்ந்து சென்றார், பின்னர் கிளையின் கயிற்றை கட்டு, மறுமுனையை தன் காலில் கட்டிக் கொண்டார். பின்னர் கயிற்றை நன்றாக முறுக்கிக் கொள்ளும் அளவும் இடமிருந்து வலமாக சுற்றினார், ரொம்ப நேரம் கணக்கு போட்டார், நேரமும் ஆகி வருகிறது, ஒருவழியாக முடிவுக்கு வந்தவர் இறைவனை வேண்டிக் கொண்டு, தன் உயிரை பணயம் வைத்து, தாமரைப்பூ மேலே வரும் நேரம் பார்த்து கிழே குதித்தார், அவர் கட்டியிருந்த கயிறு முறுக்கி போயிருந்ததால் வலமிருந்து இடமாக சுற்றிக் கொண்டே கிழே இறங்கினார், ஒரு கையில் பிடித்த வாளை கொண்டு தன்னை கடிக்க பாய்ந்த மீன்களையும் பாம்புகளையும் மின்னல் வேகத்தில் வெட்டினார், அப்படியே கிழே பாய்ந்தவர் சரியாக தாமரைப்பூவினை மறுகையால் பிடித்து பிடுங்க, இராமநாதனின் உடல் பாரத்தால் கிழே வளைந்த கிளையானது வேகமாக மேலே நகர இராமநாதனும் மேலே சென்றார்.

அய்யோ! என்ன கொடுமை, மேலே வரும் போது பாய்ந்த மீனானது பூவை பிடுங்கிக் கொண்டு நீரில் பாய, கடைசி நேரத்தில் பூவை பிடிக்க முயற்சித்து தோற்றுப் போய், மேலே மரக்கிளையினை பிடித்து ஏறிக் கொண்டார்.

இராமநாதனுக்கு சரியான ஏமாற்றம், கடைசி முயற்சியும் இப்படி கைவிட்டு போயிட்டதே, இனிமேல் எப்படி பூவை எடுத்து மந்திரவாதியை கொல்வது என்று கவலைப்பட, இடது கையில் தாமரைப் பூவின் இதழ்களோடு ஏதோ ஒன்று உறுத்ததை உணர்ந்தார், என்ன ஆச்சரியம் அவரது கை விரல்களின் நடுவில் ஒரு வெள்ளியினான வண்டு ஒன்று இருந்தது, ஆகா இது தானா மந்திரவாதியின் உயிர் இருக்கும் வெள்ளி வண்டு.

வெள்ளி வண்டை பையில் பத்திரப்படுத்திக் கொண்டு வேகமாக மரத்தை விட்டு இறங்கிய இராமநாதன், மாலை நேரம் நெருங்குவதை உணர்ந்து தன் குதிரையை அழைத்தார்.

மந்திரவாதியின் மாளிகையை நெருங்கிய பின்னர் டிராகன்களை ஏமாற்ற மீண்டும் குதிரையின் உதவியை நாடினார், இந்த முறை குதிரையின் புத்திசாலித்தனத்தால் இரண்டு டிராகன்களும் ஒன்றை ஒன்றை எரிக்க, அவை சாம்பலானது.

உள்ளே சென்ற இராமநாதன், அங்கே மந்திரவாதி பெரிய யாகத்தையும் நடத்திக் கொண்டு இளவரசிகளின் பெற்றோரை மிரட்டி, இராமநாதனையும் காணவில்லை, விதி விட்ட வழி என்ற நிலைக்கு வந்த பெற்றோர் மந்திரவாதியின் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.

மந்திரவாதி மகிழ்ச்சியோடு காந்தார தேச இளவரசியின் கழுத்தை மாலைப் போட போக, அங்கே அதிரடியாக நுழைந்த இராமநாதன் “கொடியவனே! நிறுத்து உன் காரியத்தை, இல்லையேல் உன்னை கொன்று விடுவென்.

இராமநாதனின் வருகையை கண்ட அனைவரும் மகிழ்ச்சியில் திழைத்தார்கள், மந்திரவாதியை தவிர. திடிரென்று ஒருவன் நுழைந்து தன்னை தடுத்து, தன் உயிரை எடுப்பதாக சொன்னதை கேட்டதும் மந்திரவாதிக்கு ஆத்திரம் வந்தது, யாருடா நீ சிறுவன், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மந்திரம் சொல்ல கையை தூக்கினான், அதே வேகத்தில் இராமநாதன் அந்த வெள்ளி வண்டை தன் வாளின் கைப்பிடியால் தரையில் வைத்து நசுக்க, மந்திரவாதி அய்யோ என்று கத்திக் கொண்டு இரத்தம் வாந்தியெடுத்து செத்தான்.

மூன்று அரசர்களும் தங்கள் சுய உருவத்தை அடைந்தார்கள், நாட்டு மக்களும் சுய உருவத்தை அடைந்து மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். ஏற்கனவே மந்திரவாதி பிடித்து வைத்திருந்த பல தேசத்து இளவரசர்களையும், வீரர்களையும் விடுவித்தார் இராமநாதன்.

மூன்று தேச அரசர்களும் இராமநாதனை தன் மருமகனாக்கிக் கொள்ள விரும்பினார்கள், இராமநாதனோ அதற்கு மறுப்பு தெரிவித்து பட்டு தேச, காந்தார தேச பிரச்சனையை தீர்க்க பட்டு தேச இளவரசியை காந்தார தேச இளவரசனுக்கும், காந்தார இளவரசியை பட்டு தேச இளவரசனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

பனிப்பட தேச இளவரசியோ மணந்தால் இராமநாதன் தான் என்ற முடிவுக்கு வர, இளவரசியின் வீரமும் அறிவும் இராமநாதனுக்கு பிடித்துப் போக சம்மதித்தார். ஆனால் பெற்றோரின் சம்மதம் வாங்கியப்பின்னரே திருமணம் செய்ய முடியும் என்று கூறி, இளவரசியுடன் பறக்கும் தங்கக்குதிரையில் ஏறி தன் வீட்டை நோக்கி பறந்தார்.

(இராமநாதனின் திருமணம் மற்றும் செய்திகளை அவரது நண்பர்களான இலவசகொத்தனார், குமரன், இராகவன், சிவா, கைப்புள்ள, மோகன்தாஸ், குசும்பன் ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்).

இராமநாதனின் சாகசங்கள் முற்றும்.