சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Tuesday, March 28, 2006

கதை எண் 88-3 - நீலத்தவளையும் அருஞ்சுவை இராமநாதனும்

இராமநாதனின் சாகசகங்கள் (தொடர்கதை-3)

தந்தையின் ஆசைப்படி மருத்துவம் படிக்க பனிப்படர் தேசம் சென்ற இராமநாதனின் பயணம் தடைப்பட்டு சித்திரக்குள்ளர்களிடம் மாட்டிக் கொண்டதை நாம் அறிந்தோம்.

மயக்கநிலையிலிருந்து மீண்ட இராமநாதன் எதிரே மூன்று சித்திரக்குள்ளர்கள் நின்றார்கள். அதுவும் எப்படி?

2 அடி உயரமே இருந்தார்கள், கொழுக்கு மொழுக்கு என்று கொழுத்து போயிருந்தார்கள், அவர்கள் கழுத்தில் பெரிய மண்டையோடும், இடுப்பில் ஆடையாக எலும்புக்கூடுகளும் இருந்தன, கையில் பெரிய எலும்புத்துண்டை ஆயுதமாக ஏந்திருந்தார்கள். மூக்கு சப்பையாகவும், ஆட்டுக்கு இருக்கும் தாடி போல் தாடியும் இருந்தது. கண்கள் நெருப்புத்துண்டு போல் சிவப்பாக மின்னியது.

இதுவரை அது மாதிரியான மனிதர்களை காணாத இராமநாதன் மிரண்டு போயிட்டார், பின்னர் மனதை திடப்படுத்திக் கொண்டு, “யார் நீங்கள்? என்னை வலையிலிருந்து விடுவியுங்கள். நான் உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றார்.

அதைக் கேட்டதும் சித்திரக்குள்ளர்கள் பட்டுதேச மொழியில் ஏதோ குசு குசு என்று பேசினார்கள். பின்னர் இராமநாதனைப் பார்த்து “என்ன தைரியம் உனக்கு, எங்க இடத்தில் வந்து எங்களிடமே யார் என்று கேட்கிறாயா? எப்போ எங்கள் வலையில் மாட்டிக் கொண்டாயோ அப்பவே நீ எங்கள் அடிமை, நீ என்னடா என்றால் எங்களை ஒன்றும் செய்யமாட்டேன் என்று சொல்கிறாய்” என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அவர்களின் சிரிப்பு இராமநாதனுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது, வலையில் இருந்து விடுவிக்க என்னவே செய்தார் முடியவில்லை. பின்னர் சித்திரக்குள்ளர்கள் அவரை நோக்கி வந்தார்கள், இராமநாதனின் கை வாள் அருகில் சென்றது, வந்த குள்ளர்கள் வலையினை விடுவிக்க, அதே வேகத்தில் இராமநாதன் வாளை உருவினார்.

வாளை உருவிய வேகத்தில் குள்ளர்களை நோக்கி பாய, என்ன ஆச்சரியம் குள்ளர்கள் அதே வேகத்தில் அங்கே இருந்த பெரிய தூண்களின் பின்னால் ஓடி மறைந்துக் கொண்டார்கள். இராமநாதனும் உருவிய வாளோடு தூண்களில் பின்னால் போனார், அங்கே இருந்த குள்ளனை காணவில்லை, திடிரென்று தூணில் மேலிருந்து இராமநாதனின் கழுத்தின் மேல் குதித்து அவரது கண்களை பொத்திக் கொண்டான் ஒரு குள்ளன், இராமநாதன் தலையை ஆட்டி அவனை கீழே தள்ளினார். பின்னர் வாளை ஓங்கி வீச, குள்ளன் தன் கையில் இருந்த எலும்புத்தடியால் தடுக்க அது பொடிப்பொடியானது. அதே நேரத்தில் அடுத்த குள்ளன் பின்பக்கமாக கத்திக் கொண்டு வந்தான்.

இராமநாதன் சடாரென்று திரும்பி அவனை நோக்கி வாளை வீசி அவன் கையில் இருந்த தடியை உடைத்தெறிந்தார். மீண்டும் அதே வேகத்தில் வாளை ஓங்க குள்ளர்கள் மீண்டும் ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்கள்.

இராமநாதன், என்னடா குள்ளர்களின் சேட்டை தாங்க முடியலையே என்று நினைத்து அவர்களை தேடி ஒவ்வொரு தூணின் பின்னாலும் போய் பார்த்தார், ஒரு தூணின் பின்னால் நிழல் அசைவதை கண்டு மெதுவாக போய் பார்த்த இராமநாதனுக்கு சிரிப்பு வந்து விட்டது, அங்கே ஒரு குள்ளன் மேல் மற்றவன் ஏறி நிற்க அதன் மேல் மூன்றாவது குள்ளன் ஏறி நின்று கையில் எலும்புத்துண்டோடு இராமநாதனை தாக்க வந்தார்கள். இராமநாதனும் ஓடி போய் இரண்டு அடி உயரம் குதித்து கடைசி குள்ளனின் கையில் இருந்த தடியை உடைத்தெறிந்தார். உடனே குள்ளர்கள் “அய்யா! நீங்க பெரிய வாள்வீரர் என்று தெரியாமல் போயிட்டு, எங்களை மன்னியுங்க, நாங்க சரணடைகிறோம், என்னை கொஞ்சம் கிழே இறக்கிவிடுங்க” என்று மேலே இருந்த குள்ளன் கெஞ்சினான்.

இராமநாதன் வெற்றிப்புன்னகையோடு குள்ளர்களை நெருங்க, திடிரென்று நெருப்பை மிதித்தது போல் இராமநாதன் தன்னுடைய வாளை தூக்கி எறிந்துவிட்டு, துள்ளிக்கு குதித்தார்.

என்ன நடந்தது என்றால், ஒருவன் மேல் ஒருவனாக இருந்த குள்ளர்களில் நடுவில் இருந்த குள்ளன், இராமநாதனின் இடுப்பில் கையை வைத்து கிளுகிளுப்புண்டாக்க, இராமநாதன் சிரிப்பு அடக்க முடியாமல் வாளை கீழே போட்டு விட்டார். இராமநாதனின் மிகப் பெரிய பலவீனம், அவரது இடுப்பு பகுதி தான், யாராவது தொட்டுவிட்டால், உடனே கூச்சத்தால் துடித்து விடுவார். அதே பலவீனத்தை பயன்படுத்தி குள்ளர்கள் அவரது கையில் இருந்த வாளை கீழே விழவைத்ததுடன், ஓடி போய் அந்த வாளை எடுத்து இராமநாதனின் முதுகில் வைத்து அவரை கீழே அமர வைத்து விட்டார்கள்.

இராமநாதனை நோக்கி குள்ளர்களின் மூத்தவனான மந்திரன் “இளைஞனே! இங்கே வந்த யாரையும் நாங்க உயிரோடு விட்டதில்லை, இந்த நிமிடமே உன்னை நாங்கள் கொல்ல முடியும், ஆனால் அவ்வாறு செய்ய எங்கள் மனம் முதன்முறையாக இடம் கொடுக்கவில்லை. ஆக நீ எங்களுக்கு அடிமையாக பணி முடியும் என்றால் உன்னை விட்டுவிடுகிறோம், இல்லை என்றால் எங்கள் மந்திர சக்தியால் உன்னை தவளையாக மாற்றி அங்கே இருக்கும் தடாகத்தில் விட்டுவிடுவோம், எது உன் விருப்பம் சொல்”.

தந்திரக்குள்ளன் “இளைஞனே! உன்னிடம் நாங்க போரிடவில்லை, விளையாடவே செய்தோம், நாங்கள் நினைத்திருந்தால் உன்னை மந்திரத்தால் ஒரு நொடியில் வென்றிருப்போம்”.

“நம்பவில்லை என்றால் எங்கள் மந்திரசக்தியை பார் “ என்று கூறிய இந்திரன் தன் கையை உயர்த்தி ஏதோ சொல்லி அடிக்க அங்கே பயங்கரமான விலங்கு தோன்றியது, அது இராமநாதனை நோக்கி பாய்ந்து வர, நடுங்கிய இராமநாதன் “உங்களுக்கு அடிமையாகவே நான் இருக்கிறேன், என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறி குள்ளர்களின் பின்னால் நின்றுக் கொண்டார்.

மந்திரக்குள்ளன் ஏதோ மந்திரத்தை சொல்ல அந்த பயங்கரமான மிருகம் மறைந்தது. இராமநாதனுக்கு அவர்கள் சாதாரண குள்ளர்கள் இல்லை, படுபயங்கரமான குள்ளர்கள் என்பது புரிந்தது. இவர்களிடம் தன் வீரத்தால் வெல்ல முடியாது, விவேகத்தால் தான் வெல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்து “அய்யா குள்ளர்மார்களே! நான் உங்க அடிமையாகவே இருக்க விரும்புகிறேன், என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன், இனிமேல் நீங்க தான் எனக்கு எஜமான்கள்” என்றார்.

குள்ளர்களும் நீ தமிழகத்திலிருந்து வந்திருக்கிறாய் என்பதை அறிவோம், “இனிமேல் நல்லா வாய்க்கு ருசியாக உங்க ஊர் சாப்பாட்டை எங்களுக்கு பொங்கிப்போடு” என்றார்கள்.

“ஆளானப்பட்ட மாவீரன் பீமனே சமையல்காரனாக இருந்தார் தானே, எனவே எனக்கு ரொம்ப சந்தோசம், உங்க விருப்பமே என் விருப்பம், எங்கே சமையல் அறை” என்றார்.

அன்று முதல் இராமநாதன் அருஞ்சுவை இராமநாதனாகி நல்ல நளபாகனாக மாறிவிட்டார். நல்ல சுவையான உணவை உண்ட குள்ளர்கள் இரவில் நிம்மதியாக குறட்டை விட்டு தூங்க, இராமநாதனுக்கோ தூக்கம் இல்லாமல் எப்படி தப்பி, மந்திரக்குடுவை எடுத்துக் கொண்டு, தங்கக்குதிரையில் மஞ்சள் ஆற்றை கடப்பது, இத்தனை பிரச்சனைகள் இருக்கும் என்று தெரிந்திருந்தால் ஊரிலேயே சொற்பொழிவோடு இருந்திருக்கலாமே என்று நினைத்தார்.

இன்னும் மந்திரக்குடுவை எங்கே இருக்குது என்று தெரியவில்லையே, இந்த குள்ளர்களோ சமையல் அறையை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று வேற உத்தரவு போட்டியிருக்கிறார்களே! இதுவரை தப்பிக்க ஒரு தடயமும் கிடைக்கலையே, இதுக்கு பேசாம தவளையாக மாறியிருக்கலாமோ என்று நினைத்த மாத்திரத்தில், இராமநாதனின் மூளையில் மின்னல் தோன்றியது.

ஆமாம், குள்ளர்கள் முதல் நாளில் அங்கே இருக்கும் தடாகத்தில் தவளையாக்கி விடுவோம் என்றார்களே! அப்படி என்றால் இப்பெரிய மாளிகையில் எங்கேயே தடாகம் இருக்குது, அது எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டும், நாளை காலையில் குள்ளர்கள் வெளியே சென்றதும் போய் பார்க்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தப்பினர் உறங்கப் போனார்.

மறுநாள் காலையில் குள்ளர்கள் வெளியே சென்றதும் இராமநாதன் முதன்முறையாக சமையல் அறைக்கு பக்கத்தில் இருக்கும் அறைகளுக்கு சென்று பார்க்கத் தொடங்கினார், சில அறைகள் பூட்டியிருந்தன, அங்கே ஒரு அறை மட்டும் ரொம்பவும் தூசி படர்ந்து, கதவில் பெரிய ஈட்டி பொருத்தியிருந்தது. அங்கே நிறைய பாம்புகளும் தேள், பூரான்கள் ஓடியது, அதை கண்டு பயந்து ஓடியே வந்து விட்டார்.

அப்படி ஒவ்வொரு அறையாக பார்த்து சென்ற போது, தூரத்தில் பெரிய அறையின் நடுவில் தடாகம் ஒன்று இருப்பதை கண்டு மகிழ்ந்தார், ஓடி போய் பார்த்தார், அதனுள் நிறைய தவளைகள் இருந்தன.

அவற்றை பார்க்க பயமாக இருந்தது, அதில் ஒரு தவளை மட்டும் நீல நிறத்தில் இருந்தது. இராமநாதனுக்கு மீண்டும் பயம் வந்து விட்டது, தடாகத்தை கண்டால் ஏதாவது வழி கிடைக்கும் என்று பார்த்தால் இங்கே தவளைகளைத் தவிர ஒன்றும் இல்லையே, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே, திரும்பினார்.

திரும்பியவர் திடுக்கென்று நின்றார், காரணம் “தம்பி! இங்கே பார்” என்ற குரல் தான்.

திடுக்கிட்டு அந்த அறை முழுவதும் சுற்றி சுற்றி பார்த்தார், யாருமே இல்லை, அப்படி இருக்கையில் யார் அழைத்திருப்பார்கள், ஒருவேளை பிரம்மையோ என்று நினைத்து மீண்டும் நகர முயல, “தம்பி, தடாகத்தின் உள்ளே பார், நான் தான் நீலத்தவளை பேசுகிறேன்”.

இராமநாதனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியலை, ஒரு தவளை பேசுவதா என்று யோசித்துக் கொண்டு தடாகத்தின் உள்ளே எட்டிப்பார்த்தார். உண்மையில் நீலத்தவளை தான் பேசியது “என்ன ஆச்சரியமாக இருக்குதா, நான் உண்மையில் தவளை அல்ல, மற்ற தவளைகளும் நிஜத்தில் மனிதர்கள் தான், அந்த படுபயங்கர குள்ளர்களால் வஞ்சிக்கபட்டவன்”

“அப்படியா? தயவு செய்து விபரமாக கூறுங்கள்”
“ உன்னை அடிமையாக்கிய அதே குள்ளர்கள் என்னிடம் அடிமையாக வேலை பார்த்தவர்கள், நான் ஒரு மந்திரவாதி, ஆனால் நல்ல செயல்களை மட்டுமே செய்பவன், ஏழை மக்களுக்கு மூலிகை வைத்தியமும் பார்த்து வந்தேன், குள்ளர்கள் மூவரும் தீய எண்ணத்தோடு என்னிடம் வேலைக்கு சேர்ந்து, என்னை ஏமாற்றி என்னுடைய மந்திரசக்தியை பறித்துக் கொண்டார்கள், மனித உருவத்தில் இருந்தால் மட்டுமே என்னால் அந்த மந்திரங்களை உபயோகிக்க முடியும், ஆகையால் என்னை என்னை நீலத்தவளையாக்கி இங்கே அடைத்து விட்டார்கள்”

“உங்களது நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்குது, என்னால் முடிந்தவரை உங்களுக்கு உதவுகிறேன், குள்ளர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது, வழியை சொல்லுங்க”

“குள்ளர்களின் முழு மந்திர சக்தியும் அவர்கள் கையில் கட்டியிருக்கும் கருப்பு கயிற்றில் இருக்கிறது, அதை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும், ஆனால் அவர்கள் கையில் கட்டியிருக்கும் வரை அதை அவர்களால் மட்டுமே தொட முடியும், மற்றவர்கள் தொட்டால் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்.

“அய்யோ, அப்படி என்றால் எப்படி தான் கையில் இருந்து எடுப்பது, ஏதாவது வழி சொல்லுங்க”

“நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுக்கிறேன், அதை நீ சொன்னால் 10 நிமிடம் வரை மாயமாக மறையலாம், அதை வைத்து நீ வழி கண்டுபிடி, ஒருமுறை மட்டுமே இந்த மந்திரம் வேலை செய்யும், 10 நிமிடம் பின்னர் உன் உருவம் தெரிய ஆரம்பித்து விடும், ஜாக்கிரதை”

இராமநாதனுக்கு அந்த மந்திரத்தை நீலத்தவளை சொல்லிக் கொடுக்க, அதை மனப்பாடமாக்கிக் கொண்டார். பின்னர் குள்ளர்கள் வருவதற்குள் சமையல் முடிக்க வேண்டும் என்று நினைத்து வேக வேகமாக வந்தார்.

இன்று இரவில் எப்படியாவது மந்திரக்கயிற்றை எடுத்து விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டே என்றும் இல்லாமல் மிகவும் சுவையாக உணவை சமைத்தார்.

வேட்டையாடி களைப்பாக வந்த குள்ளர்கள், இராமநாதன் சமைத்து வைத்த உணவை மூக்குபிடிக்க உண்டார்கள். அதே களைப்பில் குறட்டை விட்டு உறங்கத் தொடங்கினார்கள். இராமநாதனோ உறக்கம் இல்லாமல் தவித்தார், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார், புரண்டு படுத்த போது கால்சட்டை பையில் ஏதோ உறுத்தியது, அது தான் காக்கா முத்து, அப்போ தான் அவருக்கு சின்னவயதில் செய்த குறும்பு ஒன்று நினைவுக்கு வந்தது, அதை உபயோகித்து தப்பிக்க வழி கிடைக்கும் என்று நம்பினார்.

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், குள்ளர்களின் அருகில் சென்று நீலத்தவளை சொல்லிக் கொடுத்த மந்திரத்தை மனதில் சொல்ல, உடனே இராமநாதனின் உருவம் மறைந்து விட்டது. தன் கையில் இருந்த காக்கா முத்தை தரையில் தேய்த்து நல்லா சூடேறியதும் மந்திரக்குள்ளனின் மந்திரக்கயிற்றின் அருகில் அதை தேய்தார், தூக்கத்திலிருந்த குள்ளனுக்கு சுளீர் என்று சுட, ஏதோ பூச்சி தான் கடிக்குது என்று நினைத்து கையை தேய்தான், மீண்டும் இராமநாதன் அதே போல் செய்ய இந்த முறை தூக்கம் கலையுது என்ற கடுப்பில் வேகமாக கையை தேய்க அவன் கையில் கட்டியிருந்த மந்திரக்கயிறு அறுந்து கீழே விழுந்தது.

இராமநாதனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியலை, இன்னும் இருவர், அவர்களிடமும் இதே முறையை கையாள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து அதே போல் காக்கா முத்தை தரையில் வேக வேகமாக தேய்து தந்திரக்குள்ளனின் கையில் இருப்பதை கீழே விழவைத்தார்.

ஆனால் இந்திரக்குள்ளனுக்கோ சொரணையே இல்லாதது போல் இருக்க, மாயமாக மறையும் மந்திரத்தின் நேரமும் முடிய போகுதே என்ற கவலையும் பயமும் இராமநாதனை ஒட்டிக் கொண்டது. வழக்கம் போல் கடைசியில் தன் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக் கொண்டார். என்ன ஆச்சரியம் தூரத்தில் கொடுந்தேள் ஒன்று ஓடியது, அவர் அதை பிடித்து இந்திரக்குள்ளனின் கைப்பக்கம் கொண்டு போய் கொட்ட வைக்க, இப்போ உண்மையில் இந்திரக்குள்ளனுக்கு வலி எடுக்க வேகமாக கையை தேய்க்க, மந்திரக்கயிறு அறுந்து விழுந்தது, உடனே இராமநாதன் அந்த மூன்று கயிற்றையும் எடுத்துக் கொண்டு தடாகத்தை நோக்கி ஓடினார், அந்த கயிறுகளை நீலத்தவளையிடம் கொடுக்க, அடுத்த நொடியில் அது மனிதனாக மாறியது, முதியவராக அந்த மந்திரவாதி வைத்தியர் மாறினார்.

அடுத்து அவர் ஏதோ மந்திரம் சொல்ல, மூன்று குள்ளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அவர் காலில் விழுந்தார்கள். மந்திரவாதியும் அவர்களை மன்னித்து கடுமையாக எச்சரித்து விரட்டி விட்டார். “இனிமேல் உங்களுக்கு பிறரை ஏமாற்ற நினைக்கும்ப்படியாக மூளை வேலை செய்யாது, எங்கேயாவது போய் வேலை செய்து பிழைத்துக் கொள்ளுங்கள்”

பின்னர் இராமநாதனை நோக்கி “தம்பி! உன்னுடைய புத்திசாலித்தனத்தால் என்னையும் மற்றவர்களையும் காப்பாற்றியிருக்கிறாய், உனக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியலை, உனக்கு என்ன தேவை என்று சொல், கட்டாயம் உதவுகிறேன் என்றார்.

இராமநாதன் தன்னுடைய கதையை சொன்னார், தான் காந்தார தேச மன்னனுக்கு உதவ வாக்கு கொடுத்ததையும் சொன்னார். தனக்கு தேவையான மந்திரநீர் உள்ள குடுவையை கேட்டார்.

“தம்பி! எனக்கு அந்த கொடிய மந்திரவாதி கடம்பனை நன்கு தெரியும், அவனுக்கு மரணமே வரக்கூடாது என்பதற்காக பல யாகங்கள் நடத்தி, தீய சக்திகளின் உதவியோடு பல உயிர்பலிகளை செய்து பலவிதமான மந்திர சக்திகள் பெற்றிருக்கிறான், அவனை என்னால் வெல்ல முடியாது, மந்திரத்தால் வெல்வதை விட உன் மதியால் வெல்ல முடியும், உனக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும், அந்த பெரிய அறையில் இருக்கும் மந்திர நீர் குடுவையை கொடுக்கிறேன், அத்துடன் 3 அதிசய வேர்களையும் தருகிறேன், அவை உனக்கு சமயம் வரும்போது உதவும்”.

இராமநாதனும் மந்திரக்குடுவை, வேர்களோடு தங்கக்குதிரை இருந்த இடத்தை அடைந்தார், மந்திர நீரை குதிரையின் மேல் ஊற்ற அது உயிருள்ள பேசும் குதிரையாக மாறியது.

இராமநாதன் அதன் மேல் ஏறி அமர்ந்து மஞ்சள் ஆற்றைக்கடந்து பட்டு தேசத்தின் அரண்மனைக்கு போகச் சொன்னார்.

தங்கக்குதிரையும் நம்ம இராமநாதனை ஏற்றிக் கொண்டு வானவெளியில் பறந்தது, இராமநாதனுக்கு புதிய அனுபவம், வானத்தில் பறக்கும் போது மேகங்களும் பறவைகளும் அவரை கடந்து சென்றன, அவரும் பாட்டு பாடிக் கொண்டே மஞ்சள் ஆற்றின் மேல் பறந்து பட்டு தேச அரசரின் அரண்மனை நோக்கி பறந்தார்.

Monday, March 20, 2006

கதை எண் 88-2 - தக தக தங்க குதிரை (இராமநாதன்)

(முன்கதை - கதை என் 88-1 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்)


இராமநாதன் காந்தார நாட்டில் கற்சிலை அரசரிடம் விடை பெற்று பட்டு தேசத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார்.

கற்சிலை மன்னரிடம் பேசிய போது அவர், மந்திரவாதி பல முறை தன் முன்னால் தோன்றிய போது தன்னை மதிக்காத பட்டு தேசத்தையும் தான் பழி வாங்கியதாக சொன்னதாக இராமநாதன் தெரிந்து கொண்டார், ஆக பட்டு தேசம் சென்றால் மந்திரவாதி பற்றிய தகவல்கள் கட்டாயம் கிடைக்கும், மந்திரவாதியை வென்று காந்தார நாட்டிற்கு உதவ வேண்டும் என்று நினைத்தார்.

பட்டு தேசத்தை பற்றி ஏற்கனவே இராமநாதன் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறார், குருகுலத்திலும் ஆசிரியர்கள் சொல்ல கேட்டிருக்கிறார், சின்ன வயதிலேயே பட்டு தேசத்தின் மீது தனி பாசமுண்டு. பட்டு தேசம் உலக வரலாற்றிலும் மக்கள் நாகரிகத்தில் தனியிடம் பெற்று விளங்கியது, மக்கள் அனைவரும் சுறுசுறுப்பானவர்கள், பட்டு, தேயிலை, கண்ணாடி, கந்தகப்பொடி, காகிதம் போன்றவற்றை உலக நாடுகளுக்கு அவர்கள் தான் எப்படி உபயோகிப்பது என்பதை கற்று கொடுத்தவர்கள். வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்கியவர்கள். அவர்களின் தனிச்சிறப்பு ஏதாவது ஒரு பொருளை பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ உடனே அதை போன்றே உடனே தயாரிக்கும் தன்மை கொண்டவர்கள்.

இராமநாதர் காந்தார நாட்டின் எல்லையை மாலையில் அடைந்த போது வானம் கருமையாக இருண்டு, இடி மின்னலுடன் கடுமையான மழை பெய்தது, அவரும் ஒரு மலையடிவாரத்தில் தங்கிவிட்டார். மறுநாள் காலையில் தன்னுடைய தேரில் ஏறி பட்டு தேசத்தின் எல்லையை அடைந்தார், எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்ற மரங்களும் செடிகளும் புற்களும் நிறைந்திருந்தது, அழகிய பறவைகளும், வனவிலங்குகளையும் ரசித்தார். அங்கே கிடைத்த நல்ல பழங்களையும், காய்கறிகளையும், அம்மா கொடுத்த தனக்கு பிடித்தமான உணவையும் இடையிடையே சாப்பிட்டார்.

அவ்வாறாக இரண்டு நாட்கள் தொடர் பயணத்தின் பின்னர் மாலை நேரத்தில் அவரது பயணம் மொத்தமாக தடைப்பட்டது, காரணம் பட்டு தேசத்தின் மிகப் பெரிய ஆறான மஞ்சள் ஆறு தான். சில நாட்களாக கடுமையாக பெய்த மழையினால் காட்டு வெள்ளத்தால் மஞ்சள் ஆறு கடுமையான வேகத்தில் பாய்ந்து சென்றது. சாதாரண காலத்தில் மஞ்சள் ஆற்றை கடக்க கட்டாயம் வலிமைமிக்க படகு தேவை, இந்நிலையில் படகில் கூட பயணம் செய்யமுடியாது. தன்னுடைய தேரை உபயோகித்து ஆற்றை கடக்க முடியாத இக்கட்டான நிலைக்குள்ளானார்.

சூரியன் மறையும் நேரம் சீக்கிரத்தில் வரும் நிலையில் என்ன செய்வது என்று அறியாமல் விழித்தார், அவர் இருந்த பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை, சுற்றும் முற்றும் தன் தேரில் ஏறி பார்த்தார், ஒன்றுமே புலப்படவில்லை.

தன் இஷ்ட தெய்வமான முருகனை மனதில் நினைத்து, “இறைவா! நான் கொண்ட காரியத்தில் வெற்றி கிடைக்க உன்னால் தான் உதவ முடியும், எப்போதும் என்னுடன் இருக்கும் இறைவா! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு, மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கையோடு வேண்டினார்”

இறைவனை மனதில் கும்பிட்டு கண்களை திறந்து பார்த்தார், என்ன ஆச்சரியம் தூரத்தில் ஒரு மலையடிவாரத்தில் தங்க நிறத்தில் ஏதோ ஒளி தெரிந்தது. சூரியனின் மாலை நேர கதிர்கள் ஏதோ ஒன்றின் மீது பட்டு எதிரொலித்தது.

இராமநாதனுக்கு மனதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது, வேண்டிய இறைவன் வேண்டுதலுக்கு செவி சாய்த்துவிட்டார், இனிமேல் எல்லாம் ஜெயம் தான் என்று தான் ஒளி கண்ட இடத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார்.

அந்த ஒளியானது ஒரு மலையடிவாரத்தின் பின்னால் தெரிந்தது, அங்கே விரைந்த இராமநாதன் ஆச்சரியத்தில் வாயை பிளந்து நின்றார், அங்கே அவர் கண்ட காட்சி அவர் மனதை சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மலையடிவாரத்தில் அடைந்த இராமநாதன் கண்டது தக தக தங்க நிறத்தில் இறக்கைகள் கொண்ட ஒரு குதிரை தான். அருகே சென்ற அவர் தேரிலிருந்து இறங்கி ஓடி போய் குதிரையை பார்த்தார், பார்த்த மாத்திரத்தில் அவரது உற்சாகம் சுதி இறங்கிவிட்டது.

அங்கே இருந்த குதிரையானது உயிரற்ற தங்க குதிரை, குதிரையின் உடல் முழுவதும் தங்கத்தாலும் அதன் கண்கள் சிவப்பு நிற இரத்தின கல்லாலும், அதன் பற்கள் வைரத்தாலும் செய்யப்பட்டிருந்தது.

ஒளி காட்டிய இறைவன் சரியான வழி காட்டவில்லையோ என்று நினைத்த இராமநாதன், குதிரையை சுற்றி வந்தார், ஒன்றுமே புலப்படவில்லை, அதன் கண்களை உற்று நோக்கினார், என்ன ஆச்சரியம், அதன் கண்களில் சில எழுத்துகள் தெரிந்தன.

பட்டு தேச மொழியில் இருந்தாலும் அதை இராமநாதன் சரியாக படித்து அர்த்தம் புரிந்துக் கொண்டார்.

“நினைத்த இடத்திற்கு பறந்து செல்லும் வல்லமை மிக்க இந்த தக தக தங்க குதிரை தங்கள் குதிரையாக வேண்டும் என்றால், மலை உச்சியில் வசிக்கும் மூன்று மந்திர, தந்திர, இந்திர சித்திரக்குள்ளர்களின் மந்திர குடுவையில் இருக்கும் மந்திர நீரை இதன் மேல் ஊற்ற வேண்டும்.

குதிரையின் கண்களில் தெரிந்ததை படித்த பின்னர் இராமநாதனுக்கு தன்னால் தங்க குதிரைக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது, அதே நேரம் சித்திரக்குள்ளர்களைப் பற்றிய பயமும் ஏற்ப்பட்டது, தனக்கு முன்னர் பலர் இக்குதிரையை பார்த்திருப்பாங்க, அப்போ பலர் முயற்சி செய்தும், இது இன்னமும் தங்க குதிரையாகவே இருக்கிறது என்றால் சித்திரக்குள்ளர்களை தேடி போனவர்கள் கதி அதோ கதியாகி இருக்கும், தனக்கு அது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தேரிலிருந்த தன்னுடைய வாளை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார். தான் கொண்டு வந்த உணவு மூட்டைகளையும், அத்துடன் எதுக்காவது உதவும் என்று கொண்டு வந்த காக்கா முத்துக்களில் சில எடுத்து பையில் போட்டுக் கொண்டார்.

மிகவும் கஷ்டப்பட்டு மலையின் மேல் ஏறினார், மலை உச்சியை அடையும் போது சூரியன் மறையும் நேரமாகிவிட்டது, ஒரு வழியாக உச்சியில் ஏறிய பார்த்தால் அங்கே பளிங்கு நிறத்தில் பெரிய மாளிகையே இருந்தது, இராமநாதன் தான் நினைத்தப்படியே எல்லாம் நடக்குது, எப்படியும் சித்திர குள்ளர்களுக்கு தெரியாமல் மந்திர நீர் இருக்கும் குடுவையை மட்டும் எடுத்துக் கொண்டு ஒடி விட வேண்டும் என்று நினைத்தார்.

அதனால் வேகவேகமாக பளிங்கு மாளிகையை நோக்கி விரைந்தார், மாளிகையின் கதவை அடைய இன்னும் 3 அடி தூரம் தான் இருக்கும், திடிரென்று எங்கிருந்தோ வந்து விழுந்த வலையில் மாட்டிக் கொண்டார் இராமநாதன். எவ்வளவோ முயற்சித்தும் தன்னை விடுவிக்க முடியவில்லை, வசமாக மாட்டிக் கொண்டார். என்ன செய்வது என்றே தெரியவில்லை, சித்திரக்குள்ளர்களிடம் மாட்டிக் கொண்டோம், இனிமேல் மற்றவர்களுக்கு ஏற்ப்பட்ட கதி தான் தனக்கும் ஏற்ப்படும் என்று நினைத்த இராமநாதன் மயங்கி விழுந்து விட்டார், ஏற்கனவே மலையை ஏறி வந்த களைப்பு, மனதில் ஏற்ப்பட்ட பயம் இரண்டும் சேர்ந்து அவரை மயக்க நிலைக்கு கொண்டு சென்றது.

கண் விழித்து பார்த்த இராமநாதன் எதிரே கண்ட காட்சியை கண்டு மிரண்டு போய் மீண்டும் மயக்க நிலைக்கு ஆளானார்.

இராமநாதன் கண்ட காட்சி என்ன? சித்திரக்குள்ளர்களிடமிருந்து தப்பினாரா?

தொடரும் …

Tuesday, March 14, 2006

கதை எண் 88 - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

தஞ்சாவூருக்கு அருகில் மூனூறு என்ற கிராமத்தில் மூன்றாவது தெருவில் இராமநாதன் என்ற இளைஞர் வசித்து வந்தார்.

இராமநாதன் அழகான இளம் வாலிபர், அடிக்கடி தலை முடியை கோதி விட்டதால் முன்பக்க தலை முடி ஏறி பார்க்க அழகாக இருக்கும், அவரது சிறப்பான குணங்கள் என்ன என்றால் யார் என்ன என்று எல்லாம் பார்க்காமல் உடனே ஓடி போய் உதவி செய்வார்.

பள்ளியில் படிக்கும் போது புதிய மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தால் அவர்களுக்கு இவரே கட்டுரைகள், பாடங்கள் எழுதி கொடுத்து, தான் கொடுத்தது வெளியே தெரிய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வார்.

தெரிந்தோ தெரியாமலோ கோபப்பட்டு பேசினால் உடனே மனம் திருந்தி மன்னிப்பு கேட்பவர், பல்மொழி வல்லுநர், பறவைகள் பேசும் மொழி கூட தெரியும் என்று சொல்வார்கள்.

மேலும அவருக்கு தேரோட்டுவது என்பது மிகவும் பிடிக்கும், அடிக்கடி பாட்டு பாடிக் கொண்டு தேரோட்டி கொண்டு அருகில் இருக்கும் மலை பிரதேச முருகன் கோயில்களுக்கு செல்வார். பக்கத்து ஊரில் தேரோட்டப் பந்தயங்கள் நடந்தா உடனே ஓடி போய் பார்க்க போயிடுவார், அடுத்த நாள் அந்த தேரோட்ட பந்தயங்கள் பற்றி மணிக்கணக்கில் நண்பர்களான இராகவன், ஆனந்த், கைப்புள்ள, கணேஷ், குசும்பன், மோகன்தாஸ், குமரனிடம் பேசுவார்.

இப்படியாக இராமநாதன் தன் வாலிப பருவத்தை கழிக்க, அவரது தந்தையார் தங்கள் கிராமத்தில் அனைத்து வியாதிகளையும் சரி செய்யும் நல்ல மருத்துவர் யாருமில்லை என்பதால் தன் மகன் இராமநாதனை நல்ல மருத்துவராக்கி, மக்களுக்கு சேவை செய்ய விரும்பினார், உடனே தன் மகனை அரிய மூலிகைகள் கொண்ட பனி படர்ந்த வெகு தூர தேசத்திற்கு அனுப்ப விரும்பினார்.

இராமநாதனோ ஊரில் எப்போ பார்த்தாலும் கோயில், சாமி, பஜனை என்றே இருந்தது தான். தினமும் கோயிலுக்கு சென்று பாட்டு பாடுவதும், சொற்பொழிவு கொடுப்பதும் முக்கிய வேலையாக வைத்திருந்தார். ராஜவீதி, சந்து, பொந்து என்று எங்கே நாலு பேர் நின்றாலும் சொற்பொழிவு கொடுக்கும் ஆற்றல் கொண்டவர், இவரது சொற்பொழிவு கேட்க வயதானவர்கள் முதல் இளம் பெண்கள் வரை வருவார்கள்.

ஒரு வழியாக தந்தையின் ஆசைப்படி இராமநாதன் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு பனி படர்ந்த வெகு தூர தேசத்திற்கு பயணம் செய்யத் தொடங்கினார். அம்மாவும் அவருக்கு பிடித்த தயிர் சாதம், ஆவக்காய், வெங்காய சாம்பார், சேப்பக்கிழங்கு, உருளைக்கிழங்கு கறி, வத்தக்குழம்பு, ஜவ்வரிசி வடகம், வெங்காய கோதுமை அடை, வெங்காயப் பச்சடி செய்து, பனி தேசத்தில் பல நாட்கள் கேடாமல் வைத்திருந்து சாப்பிட கொடுத்தார்.

இராமநாதனும் மூட்டை முடிச்சுகளோடு தன்னுடைய தேரில் ஏறி பனி படர்ந்த தேசம் நோக்கி தன் பயணத்தை தொடங்கினார்.

இரவு பகலாக பயணம் செய்து காந்தார நாட்டை அடைந்தார், காந்தார நாட்டைப் பற்றி அவர் சின்னவயதிலேயே தெரிந்து வைத்திருந்தார், எங்கே பார்த்தாலும் பெரிய பெரிய மலைத் தொடர்களும், குகைகளும் கொண்ட நாடு, மக்கள் அனைவரும் எளிமையாக வாழ்ந்தவர்கள், அவர்கள் தயார் செய்யும் கம்பிளி ஆடைகள் உலகத்தரம் வாய்ந்தவை. காந்தார நாட்டில் குறைந்தது ஒருவாரமாவது தங்கியிருந்து மக்களோடு மக்களாக பழகி பின்னரே பட்டுதேசத்தை கடந்து பனிப்படர் தேசம் செல்ல நினைத்தார்.

ஊருக்குள் சென்ற போது ஊரே அமைதியாக இருந்தது, மக்கள் நடமாட்டமே இல்லை, எல்லா இடத்திலும் போட்டது போட்ட இடத்தில் கிடந்தது, இராமநாதனுக்கு ஆச்சரியம், புகழ் பெற்ற நாடாச்சே, என்ன ஆச்சுது, இத்தனை அமைதியாக இருக்கிறது என்று நினைத்து அரண்மனை இருக்கும் பகுதிக்கு சென்றார்.

அங்கே கண்ட காட்சியானது இராமநாதனின் இரத்தத்தை அத்தனை வெயிலிலும் உறையவைத்தது, ஆமாம் அங்கே மக்கள் அனைவரும் கற்சிலைகளாக மாறியிருந்தார்கள். அரண்மனைக்காவலர் முதல் அனைவரும் கற்சிலை போல் காட்சி அளித்தார்கள்.

இராமநாதனும் தன் தேரை விட்டு கிழே இறங்கி அரண்மனைக்குள்ளே சென்றார், அங்கே அரசபையில் அரசன் முதற்கொண்டு அனைவரும் கற்சிலையாக நின்றார்கள்.

என்ன ஆச்சரியம், அங்கே இருந்த அரசரின் தலை மட்டும் அசைந்தது, உடனே இராமநாதன் அரசரிடம் ஓடி போய் நின்றார். “அரசே! இது என்ன கொடுமை, என்னாச்சு உங்களுக்கும், உங்க நாட்டு மக்களுக்கும், சொல்லுங்க”

இளைஞனே! நீ வேற்று நாட்டவராக இருந்தாலும் எங்க நாட்டு மொழி பேசுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி கொடுக்கிறது, உன் மேல் நம்பிக்கையும் வருகிறது. நானும் என் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தோம்.சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் அரசவைக்கு ஒரு மந்திரவாதி வந்தான், அவனும் எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு உதவுதாக சொன்னான்.

ஏற்கனவே எங்க நாட்டிற்கும் அருகில் இருக்கும் பட்டுதேசத்திற்கும் அடிக்கடி போர் நிகழ்ந்ததால், மந்திரவாதியின் பேச்சுக்கு நான் சரி என்றேன்.மந்திரவாதியும் புதிய புதிய ஆயுதங்களை எங்களுக்கு கொடுத்து உதவினான், நாங்களும் எங்கள் நாட்டின் பாதுகாப்பை அதிகரித்தோம்.

ஒரு நாள் அரசவைக்கு வந்த மந்திரவாதிக்கு நாங்க அனைவரும் அவன் செய்த உதவிக்கு தக்க சன்மானம் கொடுக்க இருப்பதாக சொன்னோம், அவனோ! பொன்னும் பொருளும் எனக்கு தேவையில்லை, அது எக்கச்சக்கமாக இருக்குது, உன் அழகிய மகளை எனக்கு திருமணம் செய்து வை! என்றான்."


அதை கேட்டதும் எங்கள் அனைவரின் இதயமே நின்று போனது, காரணம் வயதான, அசிங்கமான, கொடிய முகத்தை கொண்ட மந்திரவாதிக்கா எங்கள் அழகிய இளவரசியை திருமணம் செய்து வைப்பது என்று அதிர்ச்சி அடைந்த நாங்கள், அது மட்டும் முடியாது, வேறு எதை வேண்டுமானும் கேள் என்றோம்.

அவனோ ஆத்திரமடைந்து அப்படி இளவரசியை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் பெரும் ஆபத்தை அனுபவிப்பீர்கள் என்றான், நான் உடனே அவசரப்பட்டு மந்திரவாதியை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டேன், அவ்வளவு தான் மந்திரவாதி தன் மந்திர சக்தியால் எங்களை எல்லாம் கற்சிலைகலாக மாற்றிவிட்டான்.

என் தலை மட்டும் கல்லாக மாற்றவில்லை, காரணம் தினம் தினம் நான் என் நாட்டிற்கும் எனது மக்களுக்கும் நடந்த கொடுமையை நினைத்து வருந்தவும், ஒரு வேளை நான் மனசு மாறி மந்திரவாதியை மருமகனாக்கிக் கொள்ள சம்மதித்தால் அதை அவனுக்கு தெரியப்படுத்தவும் என் தலையை மட்டும் மாற்றாமல் வைத்திருப்பதாக சொன்னான். வாரந்தோறும் என் முன்னால் தோன்றி என் எண்ணம் மாறியதா என்று கேட்பான்.சிறிது நாளில் வெளி தேசத்திற்கு படிக்க சென்று திரும்பி வந்த என் மகன் என் நிலைமையை தெரிந்து கொண்டு, மந்திரவாதியை கொல்லச் சென்றான், அவனையும் பிடித்து சிறையில் அடைத்து விட்டதாக மந்திரவாதி என்னிடம் சொன்னான் என்று கூறி கண்ணீர் விட்டார் அரசர்.

“அரசே! கவலை வேண்டாம், கடவுள் துணையிருக்கிறார், கட்டாயம் அந்த கொடிய மந்திரவாதிக்கு தண்டனை கிடைக்கும், நானே உங்களுக்கு உதவுகிறேன், உங்களையும், உங்கள் நாட்டு மக்களையும் பழைய நிலைக்கு மாற்றுகிறேன்”

“வீர இளைஞனே! நீ மட்டும் சொன்னது போல் செய்தால், நீ என்ன கேட்டாலும் நான் கொடுப்பேன், உன் உதவியை நானும் என் நாட்டு மக்களும் ஒரு நாளும் மறக்க மாட்டார்கள், இது சத்தியம்”

இராமநாதனும் கற்சிலை அரசரிடம் விடை பெற்று, பட்டுதேசத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார். அங்கே அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, அது என்ன ?...(தொடரும்)

கதை எண் 87 - நேர்மையான பிச்சைக்காரர்

ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான்.

பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, ""கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு,'' என்று சொன்னான்.

நீண்ட மேலங்கி அணிந்து அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான்.

இவற்றையெல்லாம் மன்னன் தன் அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தான்.

இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனை அழைத்து, ""நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு,'' என்றான்.

உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர்.

இதைக் கண்ட மன்னன், ""ஆஹா! என்ன கடவுளின் உள்ளம்! ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால் வைரக் கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது' என்று நினைத்தான்.

உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான்.

அன்று மாலையே அவ்விருவரைப் பற்றிய தகவல்களும் மன்னனுக்குக் கிடைத்தன. சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியையும், மேலங்கியையும் எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாக அறிந்தான்.

தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டான்.

மகிழ்ச்சியில் துள்ளிய அவன் மனைவி அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போது, அந்தப் பிச்சைக்காரன், ""இந்த வைரக் கற்களைக் கொண்டு கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார்.

இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால், இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம்,'' என்று கூறினான்.

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், அவனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக் கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான்.

கடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல், நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்தான் மன்னன். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோசமாக வாழ்ந்தார்.

Saturday, March 11, 2006

கதை எண் 86 - குழப்பவாதிகள் (முல்லா கதைகள்)

முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.


ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.

அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் "மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.

உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.

அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார். பிறகு முல்லாவை நோக்கி, " இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?...ஏன் அப்படிக் கூறினீர்கள் ? இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார்.

இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா, அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிறுபித்தால் ஆச்சுது என்று நினைத்து "அரசே என்னால் நிறுபிக்க முடியும்" என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.

பின்னர் அவர்களிடம், " அறிஞர் பெருமக்களே...நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன். அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்" என்றார்.

பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , " ரொட்டி என்றால் என்ன? " என்று கேட்டார்.

அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.

ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.

இரண்டாமவர் - ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாமவர் - இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.

நான்காமவர் - ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.

ஐந்தமவர் - ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.

ஆறாமவர் - அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி

ஏழாமவர் - ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது......என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.

எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா, " அரசே ! ...ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.

யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா?

இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்" என்றார்.

அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார். அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.

Monday, March 06, 2006

கதை எண் 85 - நேர்மை கொண்ட உள்ளம் (மரியாதை ராமன்)

மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார்.

மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ.


மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து
அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.