சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, July 13, 2006

கதை மலர் 103 - மெய்ப் பொருள் நாயனார்

வருங்கால வாழ்க்கைச் செல்வங்களே!!!

இப்ப நான் உங்களுக்கு ஒரு நாயன்மாரைப் பற்றி சொல்லப்போறேன்.
நாயன்மார்னா யாரு தெரியுமா? சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க.

அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி பண்ணிண்டுருந்த்தார். அவரு பேரு மெய்ப்பொருள் நாயனார்.

அவர வேற எந்தநாட்டு ராஜாவலயும் ஜயிக்கமுடியல. காரணம் அவர்கிட்ட இருந்த சிவ பக்தியும், விசுவாசமான வீரர்களூம். அதில்லாம அவரும் எல்லாருக்கும் நிறைய வாரி வாரிகொடுத்து உதவி செய்வாரு. அதுனால எல்லாரும் அவர சாமி மாதிரி கும்பிட்டாங்க.

இதப்பார்த்த மத்த நாட்டு ராஜாக்குல்லாம் பொறாமையாப் போச்சு, இவர எப்படியாவது தோக்கடிச்சு, இவரோட நாட்ட புடிக்கணும்னு பல தடவை முயற்சி பண்ணி தோத்துட்டாங்க.

விபூதி பூசி ருத்ராக்ஷம் போட்டுகிட்டு யார் வந்தாலும் அவுங்களுக்கு தேவையான துணி, சாப்பாடுன்னு கொடுப்பார்..

இதத் தெரிஞ்சுகிட்ட எதிரி நாட்டு ராஜா ஒருத்தன் என்ன பண்ணினான், தங்கிட்ட இருந்த ஒற்றன் ஒருத்தன திருக்கோவிலூருக்கு சிவனடியார் வேஷத்துல அனுப்பிவச்சான். அவன் பேரு முத்தநாதன்.

அவனும் வேஷம் கட்டிக்கிட்டு நாட்டுக்குள்ள நுழைஞ்சுட்டான். நேரே அரண்மனைக்கு போனான். இவனோட விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் பார்த்த காவல்காரங்க உள்ளே விட்டுட்டாங்க.

மன்னர் மெய்ப்பொருள் நாயனார் அரச சபையில் இருந்தார். சபைக்கு ஒரு சிவனடியார் வருகிறார் என்றவுடன், அவரை ஓடி வந்து வரவேற்றார்.

சிவனடியார் வேஷத்துல இருந்த முத்தநாதன், தன்னோட வேலய ஆரம்பித்தான். அவன் மன்னனை நோக்கி, மன்னா நான் பல அரிய மந்திரங்களையெல்லாம் பல காலம் தவம் செய்து பெற்றிருக்கிறேன். அவற்றில் சிலவற்றை உங்களுக்குத் தரவே நான் வந்திருக்கிறேன் என்றான்.

இதைகேட்ட மன்னனும் மகிழ்ந்து, ஐயா நாங்கள் செய்த பாக்கியம் இது. உங்கள் விருப்பப்படி பெற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன் என்றார். இதை சற்றும் எதிர் பார்க்காத முத்த நாதன் சமாளித்துக்கொண்டு, ஐயா இதை நான் எல்லார் முன்னாலும் உங்களுக்கு தரமுடியாது.

தங்களது தனியான இடத்தில் தான் தரமுடியும் ஆக அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.

மன்னனும் தன்னுடைய தனிமாளிகைக்கு முத்தநாதனை அழைத்து சென்றார். சிவனடியார் வேஷத்திலிருந்த முத்த நாதன் ஏதோ மந்திரம் ஜபிப்பது போல் நடித்து, மன்னர் காணாத வேளையில், தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த கோடரியாலே, மன்னர் மெய்ப்பொருள் நாயனாரை வயிற்றில் குத்தி கீழே தள்ளினான்.

இதை அரண்மனை ஒற்றன் ஒருவன் பார்த்து விட்டு, முத்தநாதனை கையும் களவுமாய் பிடித்து, கொலை செய்ய பாய்ந்துவிட்டான்.

இதைக்கண்ட மன்னர் மெய்ப்பொருள் நாயனார், முத்தநாதனை பிடித்த தனது வீரனை, "தத்தா நமர்" இவர் நம்மவர், இவர் கெடுதல் செய்திருந்தாலும், இவருக்கு நாம் தீங்கு செய்யக்கூடாது. ஆகவே இவரை நம் நாட்டு எல்லைவரை ஜாக்கிரதையாய் கொண்டுவிட்டு வரவேண்டியது உன்பொறுப்பு என்று கூறி உயிரை விட்டார்.

மன்னரை சிவனடியார் வேஷத்தில் வந்த ஒருவன் கொன்றுவிட்டான் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி மக்களனைவரும் அரண்மனைமுன் கூடிவிட்டனர்.

தனக்கு சதி மூலம் தீங்கு செய்வதனுக்கும் கருணை காட்டி உயிர் பிச்சையளித்த மன்னர் மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி இன்றளவும் பக்தியுடன் போற்றப்படுகிறது.


நன்றி: மன்னைகோசை - முத்தமிழ் மன்றம்.காம்

Saturday, July 08, 2006

கதை மலர் 102 - பட்டாணி

ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, "என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்'' என்று கத்தியது.

"மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?'' என்றாள்.

ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது "நில் நில் ஓடாதே' உன்னுடன் நானும் வருகிறேன்'' என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.

"அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்'' என்றது, நிலக்கரி.

"என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்''. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.

"சரி, வா போகலாம்'' என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.

மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

"இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்'' என்றது, நிலக்கரி.

"அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்'' என்றது பட்டாணி.

"நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்'' என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

"ஷ்..ஷ்..ஷ்...''தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.

அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.

இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.

- மேகலாயா மாநில கிராமியக் கதை.
நன்றி: முத்தமிழ்மன்றம்.காம்