சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, June 23, 2005

முதல் கதை - தேவதையின் தீர்ப்பு

தேவதையின் தீர்ப்பு - பி.சிவநேசன்

Image hosted by Photobucket.com

அது ஓர் அழகிய பனிக்காலம்.

ரவியும் சீதாவும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரே வகுப்பு. படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி விவாதங்கள் வருவதுண்டு. காரணம், அவர்களில் யார் பெரியவர் என்று. அதை நிரூபிக்க, இருவரும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதும் உண்டு.
அன்றும் அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே விவாதம் முற்றியது.

ரவி சொன்னான், ""நான்தான் உன்னை விட அறிவில் சிறந்தவன்'' என்று.
ஆனால் சீதாவோ அதை மறுத்தாள். ""நிச்சயமா இல்லை... நாந்தான்'' என்றாள் ஆணித்தரமாக. அதற்குச் சான்றாக அவரவர் தங்கள் பிரதாபங்களை சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தனர். இதே ரீதியில் பேச்சு வளர்ந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென அவர்கள் முன் தோன்றியது ஓர் அழகிய தேவதை. தேவதையைக் கண்ட இருவரும் செய்வதறியாமல் திகைத்தனர். பின் இருவரும் சுதாரித்துக்கொண்டு, ""நீங்கள் யார்?'' என்றனர்.

தேவதை அவர்களிடம், ""நான் தேவலோகத்து மங்கை. இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உலா செல்வேன்... இன்றும் அவ்வாறு போகும்போது உங்களது வாக்குவாதம் கேட்டது. பொறுக்கமுடியாமல் இறங்கி வந்தேன்'' என்றது.

பின், ""உங்களுக்குள் என்ன பிரச்சினை? என்னிடம் சொல்லுங்கள்.. முடிந்தால் தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்'' என்றது.

உடனே ரவி, ""தேவதையே! இவளைவிட நான்தான் அறிவில் சிறந்தவன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறா'' என்றான்.

""ஒண்ணும் கெடயாது... நாந்தான் இவனை விட அறிவாளி...'' என்று சீதா சொல்ல, ரவி மறுக்க, சூடான விவாதம் மீண்டும் தொடங்கியது.
இதைக் கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது.

""சரி, சரி... உங்கள் சண்டையை சற்று நிறுத்துங்கள். இதற்கு நான் ஒரு வழி செய்கிறேன்'' என்று கூறியது.

""உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவர்தான் அறிவில் சிறந்தவர்'' என்று கூறி, ""உங்களுக்கு இதில் சம்மதமா?'' என்று கேட்டது.

ரவியும் சீதாவும் "சம்மதம்' எனத் தலையாட்டினர்.

உடனே போட்டி என்ன என்பதை தேவதை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தது. ""நான் உங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு குடுவை தருகிறேன். இது பனிக்காலம் அல்லவா? அந்தக் குடுவையில் இரவு முழுவதும் பனித்துளிகளைச் சேமிக்க வேண்டும். இருவரில் யார் அதிகம் சேமிக்கிறீர்களோ அவர்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்'' என்று கூறியது.

""ஆனால் ஒரு நிபந்தனை. இத் தருணத்திலிருந்து போட்டி முடியும் வரை நீங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவோ பேசிக்கொள்ளவோ கூடாது. நான் நாளை மாலைதான் மீண்டும் வருவேன். இதே மைதானத்தில் எனக்காகக் காத்திருங்கள்'' என்று கூறி, மூடியில்லாத இரு குடுவைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு மறைந்தது.

இருவரும் குடுவையுடன் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். செங்கதிர் சூரியன் மறைந்து, பால் ஒளி வீசும் இரவு ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பனியும் கொட்ட ஆரம்பித்தது. ரவி குடுவையை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தான். திறந்தவெளியில் வைத்தான். பின் உறங்கச் சென்றான். ஆனால் உறக்கமே வரவில்லை. அடிக்கடி சென்று குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துள்ளதா எனப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

சீதாவும் அவளது வீட்டின் முன்புறம் உள்ள புல்தரையில் குடுவையை வைத்தாள். இடையிடையே பனித்துளியின் அளவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். "நாளை எப்படியாவது ரவியை ஜெயிக்கணும்' என்ற சிந்தனையிலேயே அவள் தூங்கிப்போனாள்.

மறுநாள் பொழுது புலர்ந்தது.

சீதாவும் ரவியும் சென்று அவரவர் குடுவையைப் பார்த்தனர். ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பனி நிறைந்திருந்தது. ஆனால் ரவியின் குடுவையில் இதை விட அதிகம் இருக்குமோ என்று சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தால் என்ன செய்வது என்று ரவியும் நினைத்தனர்.
மதியத்துக்கு மேல் இருவரும் மைதானத்துக்கு தேவதையைப் பார்க்கக் கிளம்பினர். அப்போது மற்றவரது குடுவையில் அதிகமாக இருந்தால் நாம் தோற்றுவிடுவோமே என்று இருவருமே நினைத்ததால், குடுவை நிறையத் தண்ணீரை ஊற்றி எடுத்துச் சென்றனர்.

மைதானத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் குடுவையை மறைத்துவைத்தபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதை வந்தது.

""சரியாக வந்துவிட்டீர்களே! எங்கே உங்கள் குடுவையைக் காட்டுங்கள்'' என்று குடுவைகளை வாங்கிப் பார்த்தது.

பின்னர் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது தேவதை. இதைக் கண்ட இருவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான்,
""ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?'' என்று.

அதற்குப் பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்த தேவதை, ""சாதாரணமாக பனித்துளி என்பது என்ன தெரியுமா? மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிவிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கே காத்திருக்கிறீர்கள். என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் சிறிதளவாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழிகிறதே! இது எப்படி? இதைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்வது?'' என்று கூறியது.

""இப்போது சொல்லுங்கள்.... உங்களில் அறிவில் சிறந்தவர் யார் என்று?'' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டது தேவதை.

இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.
""பார்த்தீர்களா? இது நம் வாழ்வில் தினமும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வு. இதைக்கூட நாம் தெரிந்துகொள்ளவில்லை. உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள் என்று எவருமே இல்லை. இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, இப்படி வீண் விவாதங்கள் செய்து நேரத்தை வீணடிப்பது எவ்வகையில் சிறந்ததாகும்?'' என்று கேட்டது தேவதை.

அதைக் கேட்ட இருவரும் தம் தவறை உணர்ந்து, ""எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள் இனிமேல் இதுபோன்ற தவறுகளை எல்லாம் செய்யமாட்டோம்'' என்று கூறினர்.

பின் தேவதை அவர்களைப் பார்த்து, ""உங்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும்? கேளுங்கள்'' என்றது.

""நீங்கள் கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு'' என்று ஒரே குரலில் கூறினர்.

""உங்களது இந்தப் பரிசை எங்களது மற்ற நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் நல்வழிப்படுத்துவோம்'' என்றாள் சீதா.

""மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்'' என்று கூறி மகிழ்ச்சியுடன் மறைந்தது தேவதை.

ரவியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் உண்மையான நட்புடன்.

1 மறுமொழிகள்:

At 3:58 PM, June 26, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

அருமையான கதை பரஞ்சோதி.. இந்தக் கதை "கற்றது கையளவு, கல்லாதது உலகளவு" என்ற முதுமொழியை நினைவு படுத்துகிறது.

Proverb in Tamil:
"கற்றது கையளவு, கல்லாதது உலகளவு"

Proverb in English:
What we have learned is handful, what we have not learned is a world in quantity.

(I think, giving the meaning in English will help the kids to understand the real meaning of proverbs).

 

Post a Comment

<<=முகப்பு