சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, July 14, 2005

கதை எண் 14 - மேதைகள்

Image hosted by Photobucket.com

முன்னொரு சமயம் விஷ்லர் என்ற ஓர் ஓவிய நிபுணர் இருந்தார். அவர் ஓவிய நிபுணர் மட்டுமல்ல. தலை சிறந்த மேதையும் கூட. அவர் வசித்து வந்த ஊரில் மற்றொரு ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரோசெட்டி என்பதாகும்.

ஒரு நாள் விஷ்லர், ரோசெட்டியின் வீட்டுக்குச் சென்று இருந்தார். ரோசெட்டி அவரிடம் அப்போது தான் வரைந்து கொண்டிருந்த ஓர் ஓவியத்தை எடுத்து வந்து காட்டினார். அது பற்றி விஷ்லரின் அபிப்ராயத்தை அவர் கேட்டார். விஷ்லர் அந்த ஓவியத்தைப் பார்த்தார்.

உண்மையிலேயே அந்த ஓவியம் மிக அற்புதமாக இருந்தது. ஆகவே, அவர் ரோசெட்டியை மனம் திறந்து பாராட்டினார். உண்மையில் அப்போது ரோசெட்டி அந்த ஓவியத்தை முழுதாக முடிக்கவில்லை.

வண்ணம் தீட்ட வேண்டிய இடங்கள் நிறைய இருந்தன. ஆகவே அவர், ""இந்தந்தப் பகுதிகளில் வண்ணம் தீட்டியிருந்தால் இன்னும் அற்புதமாக இருக்குமே...'' என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தார்.




""இன்னும் சில நாட்களிலே அந்தப் பணியும் முடிந்து விடும். நீங்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து இங்கு வந்திருந்தால் முழுமை பெற்ற படத்தைப் பார்த்திருப்பீர்கள்...'' என்று ரோசெட்டி பதில் கூறினார்.

ஒரு வாரம் ஆயிற்று. தற்செயலாக அவரைக் கடை வீதியில் சந்தித்தார் விஷ்லர்.

""என்ன மிஸ்டர் ரோசெட்டி, உங்களுடைய படம் எந்த அளவில் இருக்கிறது?'' என்று அவர் கேட்டு வைத்தார்.

""அந்தப் படம் நிறைவு பெற்றுவிட்டது. இப்போது அந்தப் படத்துக்குச் சட்டமிடுவதற்காக ஒரு சட்டத்தைச் செய்யச் சொல்லி இருக்கிறேன். அதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் வந்து, சட்டமும் இட்டுவிட்டால் அந்தப் படம் பூரண நிறைவு பெற்றுவிட்டது என்று பொருள்,'' என்று கூறினார்.

இரண்டொரு வாரங்கள் கழிந்தன. தற்செயலாக விஷ்லர், ரோசெட்டி வீட்டுக்குச் சென்றார். பேச்சுக்கிடையே, ""சட்டம் வந்து சேர்ந்து விட்டதா? நீங்கள் பூரண நிறைவு பெறும்படி ஓவியத்தைச் செய்து விட்டீர்களா?'' என்று கேட்டார்.

""ஓ முடித்து விட்டேன்! வாருங்கள் காட்டுகிறேன்,'' என்று ரோசெட்டி அவரை அழைத்துச் சென்று சட்டமிடப்பட்ட தன் ஓவியத்தைக் காண்பித்தார்.

அந்த ஓவியத்தைச் சுற்றி மிக அழகான சட்டம் ஒன்று இடப்பட்டிருந்தது.

""ஆஹா! சட்டமும் அற்புதம்!'' என்று பாராட்டினார் விஷ்லர்.

""அதன் பிறகு என்ன செய்தீர்கள், புதிய ஓவியம் ஏதாவது வரைந்தீர்களா?'' என்று கேட்டார் விஷ்லர்.

""இல்லை. அதற்கான அவகாசம் எனக்கு இல்லை!'' என்றார் ரோசெட்டி.

விஷ்லர் ஆச்சர்யம் அடைந்தார்.

""ஓவியம் வரைவது உங்கள் வேலை. ஆனால், ஓவியம் வரையவில்லை. இந்த ஓவியமும் முடித்துவிட்டீர்கள். அப்படி இருக்க அவகாசம் இல்லை என்று கூறுகின்றீர்களே! இது என்ன அதிசயம்!'' என்று கூறினார்.

""மிஸ்டர் விஷ்லர் நான் ஓவியம் வரையத்தான் அவகாசம் இல்லை என்றேன். அதற்காக நான் ஓய்வெடுக்கவில்லை!'' நான் வரைந்த ஓவியத்தைப் பற்றி அழகான கவிதை ஒன்றை எழுதினேன். கவிதை எழுதவே இத்தனை நாட்களாயிற்று!'' என்று கூறினார்.

""கவிதையா?'' என்று ஆச்சர்யமடைந்த விஷ்லர் ""எங்கே காட்டுங்கள்?'' என்றார். அவர் மிகப் பெரிய மேதையல்லவா?

ரோசெட்டி கவிதையை எடுத்து வந்து தனக்கே உரித்தான கம்பீரமான குரலில் ஏற்ற இறக்கங்களுடன் சரியான பாவனையுடன் அதைப் படித்துக் காட்டி விட்டு விஷ்லரிடம் தந்தார்.

விஷ்லர் கவனமாக அதைக் கேட்டார். பின் தானே ஒருமுறை படித்துப் பார்த்தார்.

""உங்களுடைய ஓவியத்தை விட இந்தக் கவிதை அபாரம்; அற்புதம். நல்ல கற்பனை! நீங்கள் அந்த ஓவியத்தைச் சட்டத்திலிருந்து எடுத்து விட்டு இந்தக் கவிதைக்குப் போடுங்கள் அந்தச் சட்டத்தை!'' என்று கூறினார்.

குழந்தைகளா! மற்றவர்களின் திறமையை நாம் பாராட்ட வேண்டும், அந்த மனநிலை நம்மிடம் இருந்தால் நாம் மாமேதையாக திகழலாம்.

1 மறுமொழிகள்:

At 6:39 AM, July 15, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

பரஞ்சோதி கதை அருமை. நானும் ஒரு ஓவியனைப் பற்றிய ஸென் கதை எழுதி இருந்தேன். உங்கள் வலைப் பதிவிற்கு வந்தால் நீங்களும்.. நல்ல பொருத்தம். :-)

 

Post a Comment

<<=முகப்பு