சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, June 30, 2005

கதை எண் 6 - பேராசை

புதையல்!


Image hosted by Photobucket.com

திருவெண்ணெய் நல்லுõரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.

ஒரு நாள்—

வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.

வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக் கட்டி அதைக் கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் எடுக்கத் தொடங்கினான்.

கிணற்றுக்குள் இருந்து "யார் இங்கே தண்ணீர் எடுப்பது?' என்ற பயங்கரமான குரல் கேட்டது.


அஞ்சி நடுங்கிய அவன் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நடுங்கும் குரலில், ""ஐயா! நான் ஒரு ஏழை. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார்?'' என்று கேட்டான்.

""விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யார் கண்ணுக்கும் நான் தெரியமாட்டேன்,'' என்றது அந்தக் குரல்.

""மந்திரக்கிணறா! விரும்பியதை எல்லாம் தருமா?'' என்று வியப்புடன் கேட்டான் அவன்.

""உன்னிடம் பொற்காசுகள் உள்ளதா? ஒரு பொற்காசை இந்தக் கிணற்றுக்குள் போடு உன் விருப்பம் எதுவானாலும் கேள். உடனே அது நிறைவேறும். நன்றாக நினைவு வைத்துக் கொள். இரண்டு முறைதான் இந்தக் கிணறு உன் எண்ணத்தை நிறைவேற்றும்,'' என்றது அந்தக் குரல்.

"என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற எண்ணத்தில் ஒரு பொற்காசை கிணற்றுக்குள் போட்டான். ""விலை உயர்ந்த நகைகளாலும் பொற்காசுகளாலும் என் வண்டி நிரம்ப வேண்டும்...'' என்றான் அவன்.

ஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும் நகைகளாலும் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து வியப்படைந்தான் அவன்.

""ஆ! ஏராளமான செல்வம் கிடைத்துவிட்டது. இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வன் நான் தான்,'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே வண்டியில் அமர்ந்தான்.

"ஐயோ! காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே! வழியில் திருடர்கள் இருப்பார்களே... அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசுகளையும் கைப்பற்றிக் கொள்வார்களே! என்ன செய்வது?' என்று சிந்தித்தான்.

நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கிணற்றருகே வந்த அவன் தன்னிடம் இருந்த இரண்டாவது பொற்காசையும் அதற்குள் போட்டான்.

""உனக்கு என்ன வேண்டும்?'' என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

""வண்டியில் இருக்கும் நகைகளும் பொற்காசுகளும் என் கண்களுக்கு மட்டும் தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக் கூடாது,'' என்று கேட்டான்.

""அப்படியே ஆகட்டும்,'' என்று குரல் வந்தது.

வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான். எதிரில் திருடர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும் பொற்காசுகளும் தெரியவில்லை. தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டான் பேராசைக்காரன். மகிழ்ச்சியுடன் தன் வீட்டை அடைந்தான்.

வீட்டுக்குள் ஓடினான். ""இனி நாமோ நம் பரம்பரையோ வறுமையில் வாட வேண்டாம். அரசனைப் போலச் செல்வச் செழிப்புடன் வாழலாம். வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்!'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

வண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி திகைத்தாள். ""என்னங்க! வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். எந்தப் பொருளும் இல்லையே,'' என்றாள்.

அவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான பொற்காசுகளும் நகைகளும் இருப்பது தெரிந்தது. மனைவியைப் பார்த்து, ""வண்டியை நன்றாகப் பார்,'' என்றான்.

நன்றாகப் பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன் என்றாள்.

அப்பொழுதுதான் அவனுக்குத் தான் கேட்ட இரண்டாம் வரம் எவ்வளவு தவறானது என்று புரிந்தது. தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். கிடைத்த விலை மதிப்பற்ற பொருள்களைப் பயன்படுத்த முடியாத நிலையை எண்ணி வருத்தம் அடைந்த அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.

அந்த இடத்தில் மந்திரக் கிணறும் இல்லை; ஒன்றும் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப் போல் வண்டியை எட்டி உதைத்தான். அதிலிருந்து நகைகளும், பொருட்களும் கீழே கொட்டிச் சிதறின.

என்ன பிரயோஜனம். அவை இவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்தன. தன்னுடைய பேராசை குணத்திற்கு கிடைத்த பரிசு என நினைத்து மிகவும் வருந்தினான் பார்த்தசாரதி.

கதை எண் 5 - சந்தேகம்

சந்தேகம்

Image hosted by Photobucket.com


ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ""இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்'' என்பது போல் சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.


அப்போது இறைவன், ""தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்'' என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.

ஒருவன், ""நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,'' என்றான்.

அடுத்தவன், ""நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,'' என்றான்.

மற்றவன், ""நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,'' என்றான்.

இன்னொருவன், ""எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,'' என்றான்.

இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, ""அப்பனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.

அதற்கு அவன், ""எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.

தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.

""தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன.

""கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.

""யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதை கள்.

கடவுள் புன்னகைத்தபடியே, ""இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.

உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.

Monday, June 27, 2005

கதை எண் 4 - அழகு ராணி

Image hosted by Photobucket.com

ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன.

ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும்.

``நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!'' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியது குரங்கு.


``நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம்! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை!'' என்றது எலி.

``மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!'' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி.

``நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை!'' முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.

``என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!'' குரங்கு சொல்லியது.

``ஆமாம்... ஆமாம்...!'' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.

``நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும்'' என்றது எலி.

``எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன?'' கேட்டது வெட்டுக்கிளி.

``போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்?'' சந்தேகம் எழுப்பியது எலி.

``நடுவராக நானிருக்கிறேன்!'' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது.

``நீங்கள் எப்படி?'' ஆச் சரியப்பட்டது குரங்கு.

``நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலை யும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என்று காகம் தன் முகவரி கூறியது.

``அப்படியே செய்கிறோம்...'' அனைத் தும் சேர்ந்து குரல் கொடுத்தன.

மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டு இருந்தன.

அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம் தெரிந்தது.

``எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்!'' குருவி பல கீனமாக உதவி கேட்டது.

``நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!'' கடுமையாக கூறியது குரங்கு.

குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.

அழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.

``அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன்!'' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.

அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.

``முயல்தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன்! குருவி என் நண்பன்தான்! ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்!'' காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின.

Sunday, June 26, 2005

கதை எண் - 3 - ஒற்றுமை

ஒற்றுமை - என்.ரமேஷ்


Image hosted by Photobucket.com

கோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன.

கோபுரத்தில் கும்பாபிஷேக வேலை கள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை உலர்த் தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல் லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலை களில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன் றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், ``அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே...'' என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, ``எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்... அவ்வளவுதான்'' என்று கூறின. உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்குக்கு, ``நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக் கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது'' என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம் பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ``ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக `ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு' என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி'' என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

Saturday, June 25, 2005

கதை எண் 2 - ஸ்நோ ஒயிட்

ஸ்நோ ஒயிட்

Image hosted by Photobucket.com

அடர்ந்த காட்டையொட்டிய ஒரு வீட்டில் ஒரு விதவை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் ஸ்நோ ஒயிட்; இளையவள் பெயர் ரெட்ரோஸ். இருவரும் நல்ல அழகிகள்.

சகோதரிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். காட்டில் வசிக்கும் விலங்குகள் தான் அவர்களுக்கு உற்ற நண்பர்கள். அப்போது கடுமையான பனிக்காலம்.

ஒரு நாள் இரவு—

வீட்டின் கதவு தட்டப்பட்டது. ஸ்நோ ஒயிட் சென்று கதவைத் திறந்தாள். அங்கே கரடி ஒன்று குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. கரடியைக் கண்டதும் ஸ்நோ ஒயிட் பயந்தாள்.

ஆனால், அந்தக் கரடி மனித குரலில் பேசியது. குளிரில் நடுங்கும் தனக்கு அடைக்கலம் தரும்படி கெஞ்சியது. கரடி கூறுவதைக் கேட்டு ஸ்நோ ஒயிட் மனமிரங்கினாள். உடனே அதனைக் கணப்பருகே அழைத்துப் போனாள். கரடி கணப்பருகே அமர்ந்து கொண்டது. சிறிது நேரத்தில் சகோதரிகள் இருவரும் கரடியுடன் நெருங்கிப் பழகிவிட்டனர்.

அதன்பின் கரடி தினமும் அங்கு மாலை வேளையில் வந்துவிடும். கணப்பருகே குளிர் காயும். சிரித்துப் பேசி அவர்களுடன் விளையாடும். அதிகாலையில் காட்டிற்குள் சென்றுவிடும்.

பனிக்காலம் முடிந்ததும் சகோதரிகள் இருவரிடமும் கரடி பிரியா விடைபெற்றது. ""இனி உங்களைச் சந்திக்க முடியுமோ என்னவோ? என்னுடைய செல்வத்தைத் தேடி நான் செல்கிறேன். இடையில் உங்களைச் சந்திக்க நேர்ந்தது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்று மனம் நெகிழக் கூறி விடைபெற்றுச் சென்றது.

ஸ்நோ ஒயிட்டும் ரெட் ரோஸும் கலங்கிய கண்களுடன் கரடிக்கு விடை கொடுத்து அனுப்பினர். கரடியும் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் விடை பெற்றுச் சென்றது.

நாட்கள் சென்றன—

ஒரு நாள் சகோதரிகள் இருவரும் விறகு பொறுக்குவதற்காகக் காட்டிற்குள் சென்றனர். அங்கு ஒரு இடத்தில் குகை ஒன்று இருப்பதைக் கண்டனர். உள்ளே சென்று பார்க்க விருப்பம் கொண்டனர். குகைக்குள் நுழைந்தனர். குகை நீளமாகப் போய்க் கொண்டே இருந்தது. ஓரிடத்தில் இருளையும் மீறி ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஒளிவரும் இடமருகே சென்றனர்.

அங்கே வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கக் கற்களாலான ஆபரணங்களும் தங்க நகைகளும் குவிந்து கிடந்தன. அவற்றைக் கண்டு இருவரும் பிரமித்துப் போயினர். அப்போது குகையின் இருண்ட பகுதியிலிருந்து திடீரென்று பூதம் ஒன்று பாய்ந்து வந்தது. அதன் பயங்கரமான அலறலைக் கேட்டு சகோதரிகள் இருவரும் அஞ்சி நடுங்கினர்.

அவர்களைக் கண்ட பூதம், ""உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள். இங்கு என்னை உளவு பார்க்கவா வந்துள்ளீர்கள்?'' என்று கத்தியபடி தனது நீண்ட கைகளை நீட்டியது. இருவரும் பதறிப்போன நேரத்தில் அங்கே கரடி ஒன்று வந்தது.

பூதத்தின் கவனம் கரடி மேல் திரும்பியது. அப்போதுதான் இருவருக்கும் மூச்சே வந்தது. "அப்பாடா பிழைத்தோம்!' என்று எண்ணினர்.
கரடிக்கும் பூதத்திற்கும் கடும் சண்டை நடந்தது. இறுதியில் பூதம் கரடியால் அடித்துக் கொல்லப்பட்டது. கரடி சகோதரிகளின் அருகில் வந்தது.

" என்னைத் தெரியவில்லையா? நான் உங்கள் நண்பன். பனிக்காலம் முழுவதும் கணப்புக்காக உங்கள் வீட்டிற்கு வந்தவன்தான்!'' என்றது.

அதன் குரல் கேட்டு ஸ்நோ ஒயிட்டும், ரெட் ரோஸும். அடையாளம் கண்டு கொண்டனர். அப்போது அங்கே எதிர்பாராத அதிசயம் நடந்தது.
கரடி உருமாறத் தொடங்கியது. மனித உரு பெற்றது. அரசகுமாரன் தோற்றத்தில் அலங்கார அணிமணிகளுடன் ஒரு இளைஞன் அங்கே காட்சியளித்தான். அவன் பேச ஆரம்பித்தான்.

" நான் ஒரு அரசகுமாரன். இந்தப் பூதத்தால் தான் நான் கரடி உருவம் பெற்றேன். பனிக்காலத்தில் நான் விரைத்துபோய் இறந்து போகாதபடி நீங்கள்தான் என்னை காப்பாற்றினீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி. எனது செல்வங்களை எல்லாம் இந்தக் கரடி அபகரித்துக் கொண்டு விட்டது. அதனை மீட்கவே இங்கு வந்தேன். அப்படி வரும் போதுதான் உங்களைச் சந்திக்கிறேன்,'' என்றான்.

அரசகுமாரன் செல்வங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டான். ஸ்நோ ஒயிட், ரெட் ரோஸ் இருவரையும் அழைத்துக் கொண்டு, தனது நாட்டிற்குச் சென்றான். ஸ்நோ ஒயிட்டை அவன் திருமணம் செய்து கொண்டான்.

இளையவள் ரெட்ரோஸைத் தனது தம்பிக்கு மணமுடித்து வைத்தான்.

அவர்கள் நால்வரும் நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

பட்டூஸ்... ஏழை பெண்கள் செய்த உதவி அவர்களுக்கு எவ்ளோ பெரிய நன்மையை கொடுத்தது பார்த்தீர்களா?

நன்றி: தினமலர் - சிறுவர் மலர்

Thursday, June 23, 2005

முதல் கதை - தேவதையின் தீர்ப்பு

தேவதையின் தீர்ப்பு - பி.சிவநேசன்

Image hosted by Photobucket.com

அது ஓர் அழகிய பனிக்காலம்.

ரவியும் சீதாவும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரே வகுப்பு. படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி விவாதங்கள் வருவதுண்டு. காரணம், அவர்களில் யார் பெரியவர் என்று. அதை நிரூபிக்க, இருவரும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதும் உண்டு.
அன்றும் அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே விவாதம் முற்றியது.

ரவி சொன்னான், ""நான்தான் உன்னை விட அறிவில் சிறந்தவன்'' என்று.
ஆனால் சீதாவோ அதை மறுத்தாள். ""நிச்சயமா இல்லை... நாந்தான்'' என்றாள் ஆணித்தரமாக. அதற்குச் சான்றாக அவரவர் தங்கள் பிரதாபங்களை சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தனர். இதே ரீதியில் பேச்சு வளர்ந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென அவர்கள் முன் தோன்றியது ஓர் அழகிய தேவதை. தேவதையைக் கண்ட இருவரும் செய்வதறியாமல் திகைத்தனர். பின் இருவரும் சுதாரித்துக்கொண்டு, ""நீங்கள் யார்?'' என்றனர்.

தேவதை அவர்களிடம், ""நான் தேவலோகத்து மங்கை. இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உலா செல்வேன்... இன்றும் அவ்வாறு போகும்போது உங்களது வாக்குவாதம் கேட்டது. பொறுக்கமுடியாமல் இறங்கி வந்தேன்'' என்றது.

பின், ""உங்களுக்குள் என்ன பிரச்சினை? என்னிடம் சொல்லுங்கள்.. முடிந்தால் தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்'' என்றது.

உடனே ரவி, ""தேவதையே! இவளைவிட நான்தான் அறிவில் சிறந்தவன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறா'' என்றான்.

""ஒண்ணும் கெடயாது... நாந்தான் இவனை விட அறிவாளி...'' என்று சீதா சொல்ல, ரவி மறுக்க, சூடான விவாதம் மீண்டும் தொடங்கியது.
இதைக் கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது.

""சரி, சரி... உங்கள் சண்டையை சற்று நிறுத்துங்கள். இதற்கு நான் ஒரு வழி செய்கிறேன்'' என்று கூறியது.

""உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவர்தான் அறிவில் சிறந்தவர்'' என்று கூறி, ""உங்களுக்கு இதில் சம்மதமா?'' என்று கேட்டது.

ரவியும் சீதாவும் "சம்மதம்' எனத் தலையாட்டினர்.

உடனே போட்டி என்ன என்பதை தேவதை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தது. ""நான் உங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு குடுவை தருகிறேன். இது பனிக்காலம் அல்லவா? அந்தக் குடுவையில் இரவு முழுவதும் பனித்துளிகளைச் சேமிக்க வேண்டும். இருவரில் யார் அதிகம் சேமிக்கிறீர்களோ அவர்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்'' என்று கூறியது.

""ஆனால் ஒரு நிபந்தனை. இத் தருணத்திலிருந்து போட்டி முடியும் வரை நீங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவோ பேசிக்கொள்ளவோ கூடாது. நான் நாளை மாலைதான் மீண்டும் வருவேன். இதே மைதானத்தில் எனக்காகக் காத்திருங்கள்'' என்று கூறி, மூடியில்லாத இரு குடுவைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு மறைந்தது.

இருவரும் குடுவையுடன் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். செங்கதிர் சூரியன் மறைந்து, பால் ஒளி வீசும் இரவு ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பனியும் கொட்ட ஆரம்பித்தது. ரவி குடுவையை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தான். திறந்தவெளியில் வைத்தான். பின் உறங்கச் சென்றான். ஆனால் உறக்கமே வரவில்லை. அடிக்கடி சென்று குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துள்ளதா எனப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

சீதாவும் அவளது வீட்டின் முன்புறம் உள்ள புல்தரையில் குடுவையை வைத்தாள். இடையிடையே பனித்துளியின் அளவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். "நாளை எப்படியாவது ரவியை ஜெயிக்கணும்' என்ற சிந்தனையிலேயே அவள் தூங்கிப்போனாள்.

மறுநாள் பொழுது புலர்ந்தது.

சீதாவும் ரவியும் சென்று அவரவர் குடுவையைப் பார்த்தனர். ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பனி நிறைந்திருந்தது. ஆனால் ரவியின் குடுவையில் இதை விட அதிகம் இருக்குமோ என்று சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தால் என்ன செய்வது என்று ரவியும் நினைத்தனர்.
மதியத்துக்கு மேல் இருவரும் மைதானத்துக்கு தேவதையைப் பார்க்கக் கிளம்பினர். அப்போது மற்றவரது குடுவையில் அதிகமாக இருந்தால் நாம் தோற்றுவிடுவோமே என்று இருவருமே நினைத்ததால், குடுவை நிறையத் தண்ணீரை ஊற்றி எடுத்துச் சென்றனர்.

மைதானத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் குடுவையை மறைத்துவைத்தபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதை வந்தது.

""சரியாக வந்துவிட்டீர்களே! எங்கே உங்கள் குடுவையைக் காட்டுங்கள்'' என்று குடுவைகளை வாங்கிப் பார்த்தது.

பின்னர் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது தேவதை. இதைக் கண்ட இருவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான்,
""ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?'' என்று.

அதற்குப் பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்த தேவதை, ""சாதாரணமாக பனித்துளி என்பது என்ன தெரியுமா? மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிவிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கே காத்திருக்கிறீர்கள். என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் சிறிதளவாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழிகிறதே! இது எப்படி? இதைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்வது?'' என்று கூறியது.

""இப்போது சொல்லுங்கள்.... உங்களில் அறிவில் சிறந்தவர் யார் என்று?'' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டது தேவதை.

இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.
""பார்த்தீர்களா? இது நம் வாழ்வில் தினமும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வு. இதைக்கூட நாம் தெரிந்துகொள்ளவில்லை. உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள் என்று எவருமே இல்லை. இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, இப்படி வீண் விவாதங்கள் செய்து நேரத்தை வீணடிப்பது எவ்வகையில் சிறந்ததாகும்?'' என்று கேட்டது தேவதை.

அதைக் கேட்ட இருவரும் தம் தவறை உணர்ந்து, ""எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள் இனிமேல் இதுபோன்ற தவறுகளை எல்லாம் செய்யமாட்டோம்'' என்று கூறினர்.

பின் தேவதை அவர்களைப் பார்த்து, ""உங்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும்? கேளுங்கள்'' என்றது.

""நீங்கள் கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு'' என்று ஒரே குரலில் கூறினர்.

""உங்களது இந்தப் பரிசை எங்களது மற்ற நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் நல்வழிப்படுத்துவோம்'' என்றாள் சீதா.

""மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்'' என்று கூறி மகிழ்ச்சியுடன் மறைந்தது தேவதை.

ரவியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் உண்மையான நட்புடன்.

சிறுவர் பூங்கா - அறிமுகம்

வணக்கம்.

குழந்தைகளுக்கு என்று ஒரு வலைப்பூ தொடங்குகிறேன்.

சிறுவர் சிறுமியர்களுக்கு நல்ல நல்ல கதைகள், கட்டுரைகள், அறிவுத்திறன் வளர்க்கும் பகுதியில், மற்றும் பல தகவல்கள் இங்கே கிடைக்கும்.உங்கள் குழந்தைகள் மேன்மையடைய நீங்க பாடுபடுங்கள்.

உங்களின் வெற்றி என்பது உங்கள் குழந்தைகளின் வளர்ப்பிலேயே அடங்கியிருக்கிறது.

பெரியவர்களான நீங்க, இப்பகுதியில் இருப்பதை படித்து, உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்கள். குழந்தைகளோடு சிறிது நேரமாவது செலவிடுங்கள்.

உங்களின் வெற்றி என்பது உங்கள் குழந்தைகளின் வளர்ப்பிலேயே அடங்கியிருக்கிறது.