சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, April 08, 2006

கதை எண் 91 - முட்டாள்களுக்கு வீண் உபதேசம்

எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன.

"நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?'' என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன.

அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது.

கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது.

"கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே...'' என்று அவர்கள் வாயை கிளறியது.

"ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!'' என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின.

"கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை...'' என்று கூறியது ஆடு.

இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. "ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு... இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு... அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே,'' என்று கோபமாக கூறின.

"கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்,'' என்று கூறியது.

கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன.

கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது.

9 மறுமொழிகள்:

At 8:00 PM, April 08, 2006, Blogger Muthu மொழிந்தது...

ஹா..ஹா... முட்டாள்களோடு சகவாசகம் வைத்திருப்போரின் நிலை இதுதான்.

 
At 10:53 PM, April 08, 2006, Anonymous Anonymous மொழிந்தது...

அந்த ஆட்டின் நிலையைப் பார்த்தால் ஒரு சிலரின் பதிவுகளுக்கு விளக்கம் எழுத முனையும் பதிவாளர்களின் நிலைதான் ஞாபகத்துக்கு வருகிறது.

 
At 10:53 PM, April 08, 2006, Anonymous Anonymous மொழிந்தது...

அந்த ஆட்டின் நிலையைப் பார்த்தால் ஒரு சிலரின் பதிவுகளுக்கு பதில் எழுத முனையும் பதிவாளர்களின் நிலைதான் ஞாபகத்துக்கு வருகிறது.

 
At 12:57 PM, April 09, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

ஹா!ஹா!

முத்து, கதையை நன்றாக ரசித்து படித்திருக்கீங்க.

 
At 1:00 PM, April 09, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க வாங்க ஞானபண்டிதன் அவர்களே!

உங்க கருத்து அருமை. இருந்தாலும் நான் இந்த கதை குழந்தைகளுக்கு என்று சொன்னது :).

 
At 2:18 PM, April 20, 2006, Blogger தகடூர் கோபி(Gopi) மொழிந்தது...

நல்ல கதை... நன்றி...

 
At 10:51 PM, April 20, 2006, Blogger நிலா மொழிந்தது...

பரஞ்சோதி

குழந்தைகளின் படைப்புத் திறனை வளர்க்க குட்டி நிலவு 2006 போட்டி:

http://www.nilacharal.com/notice/children_contest.asp

உங்களுக்குத் தெரிந்த குழந்தைகளுக்கு அனுப்பிவைத்தால் மகிழ்வேன்

 
At 11:09 PM, April 20, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க கோபி,

நீண்ட நாட்களுக்கு பின்னர் வந்திருக்கீங்க, மிக்க நன்றி.

 
At 11:10 PM, April 20, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

சகோதரி நிலா,

கட்டாயம் எனக்கு தெரிந்த குழந்தைகளுக்கு தெரிவிக்கிறேன், மேலும் நானும் பரிசுகள் கொடுக்க விரும்புகிறேன்.

 

Post a Comment

<<=முகப்பு