சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, June 25, 2005

கதை எண் 2 - ஸ்நோ ஒயிட்

ஸ்நோ ஒயிட்

Image hosted by Photobucket.com

அடர்ந்த காட்டையொட்டிய ஒரு வீட்டில் ஒரு விதவை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் ஸ்நோ ஒயிட்; இளையவள் பெயர் ரெட்ரோஸ். இருவரும் நல்ல அழகிகள்.

சகோதரிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். காட்டில் வசிக்கும் விலங்குகள் தான் அவர்களுக்கு உற்ற நண்பர்கள். அப்போது கடுமையான பனிக்காலம்.

ஒரு நாள் இரவு—

வீட்டின் கதவு தட்டப்பட்டது. ஸ்நோ ஒயிட் சென்று கதவைத் திறந்தாள். அங்கே கரடி ஒன்று குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. கரடியைக் கண்டதும் ஸ்நோ ஒயிட் பயந்தாள்.

ஆனால், அந்தக் கரடி மனித குரலில் பேசியது. குளிரில் நடுங்கும் தனக்கு அடைக்கலம் தரும்படி கெஞ்சியது. கரடி கூறுவதைக் கேட்டு ஸ்நோ ஒயிட் மனமிரங்கினாள். உடனே அதனைக் கணப்பருகே அழைத்துப் போனாள். கரடி கணப்பருகே அமர்ந்து கொண்டது. சிறிது நேரத்தில் சகோதரிகள் இருவரும் கரடியுடன் நெருங்கிப் பழகிவிட்டனர்.

அதன்பின் கரடி தினமும் அங்கு மாலை வேளையில் வந்துவிடும். கணப்பருகே குளிர் காயும். சிரித்துப் பேசி அவர்களுடன் விளையாடும். அதிகாலையில் காட்டிற்குள் சென்றுவிடும்.

பனிக்காலம் முடிந்ததும் சகோதரிகள் இருவரிடமும் கரடி பிரியா விடைபெற்றது. ""இனி உங்களைச் சந்திக்க முடியுமோ என்னவோ? என்னுடைய செல்வத்தைத் தேடி நான் செல்கிறேன். இடையில் உங்களைச் சந்திக்க நேர்ந்தது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்று மனம் நெகிழக் கூறி விடைபெற்றுச் சென்றது.

ஸ்நோ ஒயிட்டும் ரெட் ரோஸும் கலங்கிய கண்களுடன் கரடிக்கு விடை கொடுத்து அனுப்பினர். கரடியும் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் விடை பெற்றுச் சென்றது.

நாட்கள் சென்றன—

ஒரு நாள் சகோதரிகள் இருவரும் விறகு பொறுக்குவதற்காகக் காட்டிற்குள் சென்றனர். அங்கு ஒரு இடத்தில் குகை ஒன்று இருப்பதைக் கண்டனர். உள்ளே சென்று பார்க்க விருப்பம் கொண்டனர். குகைக்குள் நுழைந்தனர். குகை நீளமாகப் போய்க் கொண்டே இருந்தது. ஓரிடத்தில் இருளையும் மீறி ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஒளிவரும் இடமருகே சென்றனர்.

அங்கே வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கக் கற்களாலான ஆபரணங்களும் தங்க நகைகளும் குவிந்து கிடந்தன. அவற்றைக் கண்டு இருவரும் பிரமித்துப் போயினர். அப்போது குகையின் இருண்ட பகுதியிலிருந்து திடீரென்று பூதம் ஒன்று பாய்ந்து வந்தது. அதன் பயங்கரமான அலறலைக் கேட்டு சகோதரிகள் இருவரும் அஞ்சி நடுங்கினர்.

அவர்களைக் கண்ட பூதம், ""உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள். இங்கு என்னை உளவு பார்க்கவா வந்துள்ளீர்கள்?'' என்று கத்தியபடி தனது நீண்ட கைகளை நீட்டியது. இருவரும் பதறிப்போன நேரத்தில் அங்கே கரடி ஒன்று வந்தது.

பூதத்தின் கவனம் கரடி மேல் திரும்பியது. அப்போதுதான் இருவருக்கும் மூச்சே வந்தது. "அப்பாடா பிழைத்தோம்!' என்று எண்ணினர்.
கரடிக்கும் பூதத்திற்கும் கடும் சண்டை நடந்தது. இறுதியில் பூதம் கரடியால் அடித்துக் கொல்லப்பட்டது. கரடி சகோதரிகளின் அருகில் வந்தது.

" என்னைத் தெரியவில்லையா? நான் உங்கள் நண்பன். பனிக்காலம் முழுவதும் கணப்புக்காக உங்கள் வீட்டிற்கு வந்தவன்தான்!'' என்றது.

அதன் குரல் கேட்டு ஸ்நோ ஒயிட்டும், ரெட் ரோஸும். அடையாளம் கண்டு கொண்டனர். அப்போது அங்கே எதிர்பாராத அதிசயம் நடந்தது.
கரடி உருமாறத் தொடங்கியது. மனித உரு பெற்றது. அரசகுமாரன் தோற்றத்தில் அலங்கார அணிமணிகளுடன் ஒரு இளைஞன் அங்கே காட்சியளித்தான். அவன் பேச ஆரம்பித்தான்.

" நான் ஒரு அரசகுமாரன். இந்தப் பூதத்தால் தான் நான் கரடி உருவம் பெற்றேன். பனிக்காலத்தில் நான் விரைத்துபோய் இறந்து போகாதபடி நீங்கள்தான் என்னை காப்பாற்றினீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி. எனது செல்வங்களை எல்லாம் இந்தக் கரடி அபகரித்துக் கொண்டு விட்டது. அதனை மீட்கவே இங்கு வந்தேன். அப்படி வரும் போதுதான் உங்களைச் சந்திக்கிறேன்,'' என்றான்.

அரசகுமாரன் செல்வங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டான். ஸ்நோ ஒயிட், ரெட் ரோஸ் இருவரையும் அழைத்துக் கொண்டு, தனது நாட்டிற்குச் சென்றான். ஸ்நோ ஒயிட்டை அவன் திருமணம் செய்து கொண்டான்.

இளையவள் ரெட்ரோஸைத் தனது தம்பிக்கு மணமுடித்து வைத்தான்.

அவர்கள் நால்வரும் நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

பட்டூஸ்... ஏழை பெண்கள் செய்த உதவி அவர்களுக்கு எவ்ளோ பெரிய நன்மையை கொடுத்தது பார்த்தீர்களா?

நன்றி: தினமலர் - சிறுவர் மலர்

7 மறுமொழிகள்:

At 3:44 PM, June 26, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

அருமையான கதை பரஞ்சோதி.. இந்தக் கதை "தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.

For the children who does not understand the proverb:
"தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்"
The English meaning is
"He who sows millet, reaps millet, he who sows deeds(good or bad) will reap accordingly".

 
At 9:36 PM, June 26, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி மூர்த்தி அண்ணா, நண்பர் கங்கா.

உங்கள் பதிவுகள் என்னை ஊக்கப்படுத்துகிறது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன, விரைவில் அவைகளை சொல்கிறேன்.

 
At 11:05 AM, June 28, 2005, Blogger Chandravathanaa மொழிந்தது...

சிறுவர்களுக்கு படிப்பினையைத் தரும் அருமையான நீதிக்கதைகள் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

 
At 7:33 AM, July 12, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

மிக்க நன்றி சகோதரி.

உங்கள் தளங்கள் பார்த்த பின்பு தான் சிறுவர்களுக்கு என்று வலைப்பூ தொடங்க ஆர்வம் வந்தது.

உங்கள் கருத்துகளும், ஆலோசனைகளும் தேவை.

 
At 9:32 PM, April 08, 2006, Anonymous Anonymous மொழிந்தது...

Good Story, but a correction required; in your story ur hero calls the ladies as 'sister' and marrying one among them!!!!??....hope not suits to our culture.....!?

 
At 9:32 PM, April 08, 2006, Anonymous Anonymous மொழிந்தது...

Good Story, but a correction required; in your story ur hero calls the ladies as 'sister' and marrying one among them!!!!??....hope not suits to our culture.....!?

 
At 7:23 AM, April 09, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

Priyadharshini said...
Good Story, but a correction required; in your story ur hero calls the ladies as 'sister' and marrying one among them!!!!??....hope not suits to our culture.....!?

ஹா! ஹா!

ஆஹா பாயிண்டை பிடிச்சிட்டீங்க.

இருவரையும் ஒரே நேரத்தில் அழைப்பதால் சகோதரிகள் என்று அழைக்கிறார் என்று சொல்லி தப்பிக்கலாம் என்று நினைத்தேன், ஆனாலும் தவறு தான், இதோ மாற்றி விடுகிறேன்.

தவற்றை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து படித்து கருத்துகள் கூறுங்கள்.

 

Post a Comment

<<=முகப்பு