சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Tuesday, July 19, 2005

கதை எண் 16 - திருந்திய திருடன்

Image hosted by Photobucket.com

முன்னொரு காலத்தில் திருடன் ஒருவன் இருந்தான். தன் மகன் ராசப்பாவையும் திருட்டுத் தொழிலில் வல்லவனாக வளர்த்தான். திருடன் இறக்கும் நேரம் வந்தது.

""மகனே! நீ திருட்டுத் தொழிலில் மேலும் மேலும் வல்லவனாக வேண்டும். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள். எங்கேனும் பக்திச் சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகள் நடந்தால் அங்கு போகாதே. நீ அங்கே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் ஏதும் காதில் விழாதபடி உன் காதுகளைப் பஞ்சுகளால் அடைத்துக் கொள். இல்லையெனில் அந்த நல்ல வார்த்தைகள் உன் மனதை மாற்றமடையச் செய்துவிடும்,'' என்றான்.


""அப்படியே செய்கிறேன்,'' என்றான் மகன்.

தந்தையின் அறியுரைப்படியே நடந்து வந்தான் ராசப்பா.

ஒரு முறை திருடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தான். ஓரிடத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதைக் கண்டான். என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக அருகில் சென்றான்.

அங்கே மகாவீரர், ஒரு மேடையில் அமர்ந்து மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். தன் தந்தை சொன்னது உடனே நினைவுக்கு வந்தது. தன் இரு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டு அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

அப்பொழுது முள் ஒன்று அவன் காலில் தைத்தது. குனிந்த அவன் தன் ஒரு கையால் முள்ளைப் பிடுங்கிவிட்டு மீண்டும் காதைப் பொத்திக் கொண்டான்.

""தேவர்களுக்கு நிழல் விழாது. அவர்கள் கால்கள் நிலத்தில் படியாது,'' என்று மகாவீரர் பேசியது அவன் செவியில் விழுந்தது.

சில நாட்களில் முக்கிய திருட்டு ஒன்றைச் செய்த போது வீரர்களிடம் சிக்கிக் கொண்டான். அவன் செய்த திருட்டை எல்லாம் அறிய வீரர்கள் அவனை அடித்துத் துன்புறுத்தினர். கல்லுளி மங்கனான அவனோ வாய் திறக்கவே இல்லை. அவனிடம் இருந்து உண்மையை அறிய அதிகாரிகள் சூழ்ச்சி செய்தனர்.

மயக்க மருந்து தந்து அவர்கள் அவனை ஓர் அழகான பூஞ்சோலையில் கிடத்தினர். பல அழகான பெண்கள் அவனைச் சூழ்ந்து நின்றனர். மயக்கம் தெளிந்த ராசப்பா தான் இருந்த இனிய சூழலைப் பார்த்து வியப்பு அடைந்தான்.

""நான் எங்கே இருக்கிறேன்?'' என்று அந்தப் பெண்களைக் கேட்டான்.

அவர்களில் ஒருத்தி, ""நீங்கள் இப்பொழுது தேவலோகத்தில் இருக்கிறீர்கள். இங்கே நீங்கள் என்ன நினைத்தாலும் உடனே நிறைவேறும். நீங்கள் எங்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம். நாங்கள் தேவலோக பெண்கள். இங்கே யாரும் பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால் உடனே இந்த உலகத்தை விட்டுப் போய் விடுவர். நீங்கள் யார்? பூவுலகில் என்னென்ன செய்தீர்கள்? சொல்லுங்கள்,'' என்று இனிமையாகக் கேட்டாள்.

உடனே ராசப்பா அந்தப் பெண்களைப் பார்த்தான். அவர்கள் கால்கள் தரையில் இருப்பதையும், நிழல் விழுவதையும் பார்த்தான்.

மகாவீரர் சொன்னதைக் கேட்டது அவன் நினைவுக்கு வந்தது. "இவர்கள் தேவர்கள் அல்லர்; மனிதப் பெண்கள் தான். என்னை ஏமாற்ற முயற்சி செய்கின்றனர்' என்ற உண்மை அவனுக்குப் புரிந்தது.

"ஆ! மகாவீரர் பேசியதைச் சிறிது நேரம் கேட்டதாலேயே இவர்கள் என்னை ஏமாற்றுவதைக் கண்டுபிடிக்க முடிந்ததே... அவர் பேசுவதை நான் முழுமையாகக் கேட்டிருந்தால் எத்தனை நன்மைகள் உண்டாகி இருக்கும்' என்று நினைத்து உள்ளம் கலங்கினான்.

அவர்களைப் பார்த்து, ""நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள். இது சொர்க்கம் அல்ல; நீங்களும் தேவர் உலகப் பெண்கள் அல்ல. எனக்கு மட்டும் விடுதலை கிடைத்தால் நான் திருட்டுத் தொழிலையே செய்யமாட்டேன். மகாவீரரின் சீடனாகி அவர் அருளுரைகளை எப்பொழுதும் கேட்டுக் கொண்டு அவர் திருவடிகளில் விழுந்து கிடப்பேன்,'' என்று உணர்ச்சியுடன் சொன்னான்.

இவனது பேச்சு அரசனின் காதுகளில் விழுந்தது. ராசப்பாவை அழைத்து விசாரித்தான் அரசன். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த அரசன் அவனை விடுதலை செய்தான். அவனும் திருட்டுத் தொழிலை விட்டு விட்டு மகாவீரரின் சீடர்களில் ஒருவன் ஆனான்.

4 மறுமொழிகள்:

At 9:37 AM, July 19, 2005, Blogger NambikkaiRAMA மொழிந்தது...

பரஞ்சோதி அண்ணா கதை அருமை!

 
At 11:16 AM, July 19, 2005, Blogger Moorthi மொழிந்தது...

கொஞ்சம் கேட்டதற்கே திருடன் இந்த அளவுக்கு அறிவைப் பெற்றான் என்றால் முழு உரையும் கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? நல்ல பதிவு பரம்ஸ்.

 
At 3:51 PM, July 22, 2005, Blogger யாத்ரீகன் மொழிந்தது...

அருமையான விளக்கம், சடாலென்று திருந்துகின்ற மாதிரி காட்டாமல், தகுந்த விளக்கம், சிறு குழ்ந்தைகளுக்கு உடனே புரிகின்ற மாதிரி.

இந்த கதையை எப்படி படிக்காமல் விட்டேன் ?!

 
At 7:20 PM, September 06, 2005, Blogger Uma Krishna மொழிந்தது...

miga eliya nadaiyil, ilaguvaaga siruvargalukku puriyum padi irundhadhu. nandri.

 

Post a Comment

<<=முகப்பு