சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Monday, November 14, 2005

கதை எண் 60 - புத்திசாலி பூனை பிரபு

முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பூனையால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டில் விட்டு விடுவோம், என்று நினைத்தார் அவர். அப்படியே அதைக் காட்டில் விட்டுவிட்டு வந்தார். அந்த காட்டில் பூனையே கிடையாது. அங்கே உலவிக் கொண்டிருந்தது பூனை. பெண் நரி ஒன்று அதைப் பார்த்தது.

"ஐயா! தாங்கள் யார்? இப்பொழுது தான் தங்களை முதன் முறையாகப் பார்க்கிறேன்" என்று கேட்டது அது.

"நான் பூனை பிரபு" என்று கம்பீரமாகச் சொன்னது பூனை.

அதன் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கியது நரி. "ஐயா! என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவியாக நான் நடந்து கொள்வேன். உங்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பேன், ஒரு பிரபுவை கல்யாணம் செய்துக் கொண்ட பெருமை எனக்கு கிடடக்கும்" என்றது.

பூனையும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது. இரண்டிற்கும் திருமணம் நடந்தது.
தான் சொன்னபடியே நடந்தது நரி. தனியே சென்று கோழிக் குஞ்சுகளைப் பிடித்து வரும் பூனைக்கு உண்ணக் கொடுக்கும். சில சமயம் அது பட்டினியாகவே கிடக்கும்.

ஒரு நாள் உணவு தேடச் சென்றது நரி. வழியில் அதை முயல் ஒன்று சந்தித்தது.

"நண்பனே! உன் வீட்டிற்கு நான் வரலாம் என்று இருக்கிறேன். எப்பொழுது வருவது?" என்று கேட்டது முயல்.

"என் வீட்டிற்கு வரும் எண்ணத்தை விட்டுவிடு. அங்கே பூனை பிரபு இருக்கிறார். அவர் கொடூரமானவர். உன்னைக் கண்டால் ஒரு நொடியில் கொன்று தின்று விடுவார்" என்றது நரி.

அங்கிருந்து ஓடிய முயல் வழியில் ஓநாயைச் சந்தித்தது. "உனக்குச் செய்தி தெரியுமா? நரியின் வீட்டில் பூனை பிரபு இருக்கிறாராம். அவர் மிகக் கொடூரமானவராம். யாரையும் கொன்று தின்று விடுவாராம்" என்றது அது.

இந்த விந்தையான செய்தியைப் பன்றியிடம் சொன்னது ஓநாய். பன்றி இதைக் கரடியிடம் சொன்னது. முயல், ஓநாய், பன்றி, கரடி நான்கும் ஒன்றாகக் கூடின.

"எப்படியாவது பூனை பிரபுவை நாம் பார்க்க வேண்டுமே?" என்றது கரடி.

"உயிரின் மீது உனக்கு ஆசை இல்லையா?" என்று கேட்டது முயல்.

"எனக்கு நல்ல வழி ஒன்று தோன்றுகிறது நாம் நால்வரும் சேர்ந்து பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்வோம். பூனை பிரபுவையும் நரியையும் விருந்திற்கு அழைப்போம்" என்றது ஓநாய்.

எல்லோரும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.

மேசையின் மேல் விதவிதமான உணவுப் பொருள்கள் பரிமாறப் பட்டன.

"யார் சென்று பூனை பிரபுவை அழைப்பது?" என்ற சிக்கல் எழுந்தது.

"எனக்கு தூங்கி வழிகின்ற முகம். நான் சென்று எப்படி அழைப்பேன்?" என்று மறுத்தது பன்றி.

"எனக்கு அதிக வயதாகி விட்டது. உடல் நலமும் சரியில்லை" என்றது ஓநாய்.

"ஏதேனும் ஆபத்து என்றால் என்னால் வேகமாக ஓட முடியாது" என்றது கரடி.

மூன்றும் முயலைப் பார்த்து, "விருந்துச் செய்தியை நீதான் சொல்லிவர வேண்டும்" என்றன.
முயல் நடுங்கிக் கொண்டே நரியின் வீட்டை அடைந்தது. நீண்ட நேரம் வெலியிலேயே காத்திருந்தது. வெளியே வந்த நரி முயலைப் பார்த்து வியப்பு அடைந்தது.

"பன்றி, ஓநாய், கரடி மூன்றும் என்னை இங்கே அனுப்பின. நால்வரும் சேர்ந்து விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். உங்களுக்காகவே இந்த விருந்து நீங்களும் பூனை பிரபுவும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்" என்றது முயல்.

"நல்லது. நான் விருந்திற்கு வருகிறேன். பூனை பிரபுவும் என்னுடன் வருவார். நாங்கள் வரும் போது நீங்கள் நால்வரும் எங்காவது ஒளிந்து கொள்ளுங்கள் பூனை பிரபு உங்களைப் பார்த்தால் நீங்கள் செத்தீர்கள். விருந்து எங்கே நடக்கிறது?" என்று கேட்டது நரி.

இடத்தைச் சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தது முயல். தன் நண்பர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னது அது. பயந்து போன நான்கும் என்ன செய்வது என்று சிந்தித்தன.

"நான் அந்த மரத்தில் ஏறிக் கொள்கிறேன்" என்றது கரடி.

"அந்தப் புதரில் நான் ஒளிந்து கொள்கிறேன்" என்றது ஓநாய்.

"உன் அருகிலேயே நானும் பதுங்கிக் கொள்கிறேன்" என்றது முயல்

"அடர்ந்த அந்த மரங்களுக்குப் பின்னால் நான் மறைந்து கொள்கிறேன்" என்றது பன்றி.

பூனை பிரபுவும் நரியும் வரும் ஓசை கேட்டது. நான்கும் பதுங்கிக் கொண்டன.
பலவிதமான உணவுப் பொருள்களைப் பார்த்தது பூனை. அதற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. 'மியாவ், மியாவ்' என்று கத்திக் கொண்டே சாப்பிடத் தொடங்கியது.

புதரில் இருந்த ஓநாய், "எவ்வளவு பயங்கரமான விலங்கு? என்ன கொடூரமான குரல்? சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் நம் விருந்து அதற்குப் போதாது. நம்மையும் கொன்று தின்னும் போல இருக்கிறது" என்றது.

"ஆமாம்" என்று நடுங்கிக் கொண்டே சொன்னது முயல்.

மரத்தில் இருந்த கரடியும் மறைந்து இருந்த பன்றியும் நடுங்கின.

பூனை விருந்தை வயிறார உண்டது. மேடையின் மேல் படுத்துத் தூங்கத் தொடங்கியது.
மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த பன்றியின் வாலைக் கொசு ஒன்று கடித்தது. உடனே பன்றி தன் வாலை அசைத்தது.

சத்தம் கேட்டு விழித்தது பூனை. பன்றியின் வாலை எலி என்று தவறாக நினைத்தது அது.
"மாட்டிக் கொண்டாயா?" என்று கத்திக் கொண்டே எலியைப் பிடிக்கப் பாய்ந்தது. நேராகப் பன்றியின் முகத்தில் போய் மோதியது அது.

எதிர்பாராமல் நடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது பன்றி. அங்கிருந்து 'தப்பித்தேன்' என்று கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்தது.

பன்றியைக் கண்டு பயந்த பூனை ஒரே பாய்ச்சலில் அருகில் இருந்த மரத்தில் ஏறியது.
அங்கிருந்த கரடி தன்னைத்தான் பூனை பிரபு கொல்ல வருகிறார் என்று பயந்தது. விரைந்து மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்றது. அதன் எடை தாங்காமல் கிளை முறிந்தது. புதரில் மறைந்திருந்த ஓநாயின் மேல் விருந்தது அது.

அலறி அடித்துக் கொண்டு ஓநாயும் ஓட்டம் பிடித்தது. முயலும் அதைத் தொடர்ந்து ஓடியது. வலியைத் தாங்கிக் கொண்டு 'தப்பித்தோம் பிழைத்தோம்' என்று கரடியும் ஓடியது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு நான்கும் சந்தித்தன.

"பூனை பிரபு பார்ப்பதற்குச் சிறியவராக இருக்கிறார். நம் நால்வரையும் கொன்று தின்றிருப்பார். நல்ல வேளை தப்பித்தோம்" என்றது கரடி.

மற்ற மூன்றும் "ஆமாம்" என்றன.

அதன் பிறகு பூனை பிரபுவின் வழிக்கே அவை செல்லவில்லை. வயதானாலும், அதிஷ்டத்தாலும், தன் வாய்சொல் திறமையாலும் பூனையானது மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.

4 மறுமொழிகள்:

At 7:38 AM, November 14, 2005, Blogger மாதங்கி மொழிந்தது...

குட்டியாக பார்க்க இருந்தாலும் சுட்டியாக இருக்கிறது பூனை பிரபு. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் சிரிப்பு வரும்படி இருக்கிறது.

 
At 8:43 AM, November 16, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி சகோதரி.

இது போன்ற கதைகளை சிறுவர்களிடம் ஆடி நடித்து சொன்னால் மிகவும் ரசிப்பார்கள், அடுத்த நாளே அவர்களது நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்கள்.

இதுவே குழந்தைகள் தங்கள் கற்பனை வளத்தை வளர்க்க உதவும்.

நான் சின்ன வயதில் ரஜினி படம் பார்த்தால், அடுத்த நாள் சண்டை காட்சிகளை அதிகப்படுத்தி சொல்லி மகிழ்வேன்.

 
At 10:08 AM, November 16, 2005, Blogger G.Ragavan மொழிந்தது...

பரஞ்சோதி அழ.வள்ளியப்பா தெரியுமா? வாண்டு மாமா தெரியுமா? ஒருவர் குழந்தைகளுக்காகவே கவிதைகள் எழுதியவர். மற்றொருவர் குழந்தைகளுக்காகவே கதைகள் எழுதியவர். அது போல நீயும் குழந்தைகளுக்காகவே கதைகளைச் சேகரித்துத் தருகிறாய். நல்ல பணி. எனது பாராட்டுகள்.

 
At 5:21 PM, November 17, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

புத்திசாலியான பூனை மன்னிக்கவும் பூனைப்பிரபு :)
நன்று

 

Post a Comment

<<=முகப்பு