சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, February 23, 2006

கதை எண் 84 - கோ.இராகவனா, கொக்கா?

கோ.இராகவன் யார் என்று சின்னப்பிள்ளையை அந்த ஊரில் கேட்டால் தெரியும், அப்பா அம்மா வைத்த பெரிய என்னவோ இராகவன், ஆனால் ஊரால் சூட்டிய பெயர் கோ.இராகவன்.

இராகவன், சின்ன வயசிலேயே அதிபுத்திச்சாலி, அதிபக்திமான், அதிவாயாடி, எப்போ பார்த்தாலும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவது, சுண்டல், சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது தான் அதிகம் செய்வார். கோயிலில் அமர்ந்து ஆன்மீகத்தைப் பற்றி பேசியதால் அவரை எல்லோரும் கோயில் இராகவன் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். நாமலும் சுருக்கமாக கோ.இராகவன் என்று அழைக்கலாம்.

கோ.இராகவன் நன்றாக படித்து பட்டங்கள் பெற்றப் பின்பு வேலைக்கு போக முயற்சி செய்தார். அப்பா அம்மாவோ நம்மிடம் எக்கசக்கமான சொத்துகள் இருக்கிறதே, அவற்றை நிர்வாகம் செய்தாலே போதுமே என்றார்கள். இராகவனுக்கோ உலக ஞானத்தை பெறவும், மக்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள், சிக்கலான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது போன்றவற்றை கற்றுக் கொள்ள சில ஆண்டுகள் யாரிடமாவது தொழிலாளியாக வேலை செய்யலாம் என்று முடிவு செய்து, அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி பக்கத்து நாட்டுக்கு சென்றார்.

கால் பொன போக்கில் நடந்து போனவரிடம் இருந்த காசு எல்லாம் தீர்ந்து விட்டது, அங்கே கோயிலுக்கு போனால் ஏதாவது பிரசாதம் கிடைக்கும், சாப்பிட்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அங்கே போனால், கோயிலில் பெரிய பூட்டு போட்டிருந்தது, அருகில் போன ஒருவரை விசாரித்த போது, இக்கோயிலானது பரம்பரை பரம்பரையாக அந்த ஊர் ஜமிந்தார் குடும்பத்தால் பராமரிக்கப்பட்டதாகவும், தற்போது இருக்கும் ஜமிந்தார் கடுமையான கஞ்சபேர்வழி, கொடிய மனசு படைத்தவர், கோயிலுக்கு என்று அவர் முன்னோர் கொடுத்த விளை நிலங்களை எல்லாம் தானே எடுத்துக் கொண்டதாகவும், கோயில் நகைகள் அனைத்தையும் விற்று பணமாக்கி விட்டதாகவும், அத்தோடு கோயிலையும் இழுத்து மூடியதாக சொன்னார்.

அதைக் கேட்ட இராகவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, அதுக்கு மேலே பசி வேற, என்ன செய்யலாம் என்று யோசித்து நேராக ஜமிந்தார் வீட்டுக்கு போனார், போய் “அய்யா! எனக்கு வேலை போட்டு போடுங்க, என்ன வேலை என்றாலும் செய்வேன்”

“நீ யாரப்பா, உனக்கு என்ன வேலை தெரியும்?”

“தோட்டவேலை, கால்நடைகளை பராமரிக்கிறது எல்லாமே செய்வேன்”

“சரி, வேலையில் சேர்ந்துக் கொள், முதலில் நன்றாக சாப்பிடு” என்று கூறிவிட்டு, பெரிய விருந்தே கொடுத்தார். தினமும் சைவம், அசைவம் என்று விதம்விதமாக சாப்பாடு போட்டார், சாப்பாட்டை சாப்பிட்டு ஜமிந்தார் மீது கோ.இராகவனுக்கு தனி பக்தியே வந்து விட்டது, அன்று ஜமிந்தாரைப் பற்றி அந்த ஊர்க்காரர் தப்பு தப்பாக சொல்லிட்டார், ஜமிந்தார் தங்கமான மனுசர் என்று இராகவன் நம்பினார்.

இராகவனுக்கு வேலையே கொடுக்கவில்லை, ஒரு மாசம் உட்கார வைத்து சாப்பாடு போட்டதால், உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே கஷ்டப்படும் அளவுக்கு கொழு கொழு என்று குண்டானார்.

நம்ம ஜமிந்தாரைப் போல் உலகில் நல்லவர்கள் யாருமே இருக்கமாட்டாங்க என்ற நிலைக்கு வந்து விட்டார். ஒரு நாள் இரவில் ஜமிந்தார் கோ.இராகவனைப் பார்த்து “தம்பி, நாளை காலையில் நாம் நீண்ட தூரப் பயணம் செல்ல இருக்கிறோம், நேற்று கொன்று எருமைமாட்டின் தோலை எடுத்து மூட்டையாக கட்டிவை, போகும் போது எடுத்துட்டு போக வேண்டும்” என்றார்.

இராகவனும் தோலும் கொஞ்சம் சதையுமாக இருந்த எருமை மாட்டின் தோலை எடுத்து சுருட்டிக் கட்டினார். அடுத்த நாள் ஜமிந்தார் ஒரு குதிரையில் ஏறினார், அடுத்த குதிரையில் இராகவனும், மற்றொரு குதிரையில் பெரிய பெரிய சாக்கு மூட்டைகளும், எருமை மாட்டின் தோலும் கட்டியிருந்தார்கள்.

இரவும் பகலும் மாறி மாறி ஒரு வாரம் நெடுந்தூரப் பயணம் சென்றார்கள். போகிற வழியில் வானம் அடிக்கடி இருண்டது போல் பெரிய பெரிய பறவைகள் பறப்பதை இராகவன் கண்டார்.

இவ்வாறாக ஒருவார பயணத்தின் முடிவில் ஒரு பெரிய மலையடிவாரத்தை அடைந்தார்கள், சுற்றிலும் வெட்டவெளியாக இருந்தது. இராகவனும் ஜமிந்தாரும் இரவு உணவை முடித்து உறங்கினார்கள், விடியற்காலையில் ஜமிந்தார் இராகவனை எழுப்பி, “தம்பி! நீ அந்த எருமை மாட்டின் தோலை எடுத்து பாய் போல் விரி, பின்னர் அதில் படுத்துக் கொள்” என்றார்.

இராகவனும் ஜமிந்தார் சொல்கிறாரே என்ற பயபக்தியில் ஏன் எதுக்கு என்று கூட கேட்காமல் எருமை மாட்டின் தோலை விரித்து படுத்தார். உடனே ஜமிந்தார் பெரிய கயிறு போட்டு இராகவனை மாட்டுத்தோலுக்குள் வைத்து கட்டிவிட்டார், தன் குதிரைகளை ஓட்டிக் கொண்டு, அருகில் இருந்த காட்டுக்குள் மறைந்து விட்டார். சிறிது நேரத்தில் பெரிய பெரிய இராட்சத பறவைகள் பறந்து வந்தது, எருமை மாட்டின் தோலுக்குள் சுருண்டு இருந்த இராகவனை அப்படியே தூக்கிக் கொண்டு மலையின் உச்சிக்கு கொண்டு சென்றது. அங்கே சென்றதும், மாட்டுத்தோலை தங்கள் இராட்சச அலகுகளால் கொத்த, இராகவனுக்கு பயம் வந்து விட்டது, ஜமிந்தார் தன்னை பறவைகளுக்கு பலி கொடுத்து விட்டாரே என்று அலறி துடித்து வெளியேறத்தொடங்கினார். அதே நேரம் கீழே ஜமிந்தார் பெரிய வெடியை வெடிக்க வைக்க, பறவைகள் பயந்து பறந்தோடி விட்டது, அதே நேரத்தில் இராகவனும் வெளியே வந்து விட்டார்.

“அய்யா, ஜமிந்தாரே, என்னை காப்பாற்றுங்க, உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்”.

“கவலைப்படாதே தம்பி, நான் உன்னை காப்பாற்றுகிறேன், நீ உடனே அங்கே குவிந்து கிடக்கும் பெரிய பெரிய இரத்தினம், மரகத, வைர கற்களை எடுத்து கீழே வீசு, வேகமாக செய், இல்லை என்றால் பறவைகள் மீண்டும் வந்து விடும்” என்றார்.

இராகவனும் அங்கே இங்கே என்று ஓடி கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி கீழே வீசினார், அங்கே எல்லா இடங்களிலும் மனித எலும்புத்துண்டுகள் கிடந்தன, அதை பார்த்ததும் அவருக்கு பயம் வேறு தொத்திக் கொண்டது. ஜமிந்தாரும் தான் கொண்டு வந்த அத்தனை மூட்டைகளையும் நிரப்பிக் கொண்டு குதிரையில் கிளம்பத் தொடங்கினார்.

அதை பார்த்து பயந்து அலறிய இராகவன் “அய்யா, என்னை காப்பாற்றுங்க, இல்லை என்றால் பறவைகள் என்னை கொன்றுவிடும்”

“தம்பி, உன்னை பலி கொடுத்தால் தான், அடுத்த முறையும் மனித இறைச்சிக்காக பறவைகள் இங்கே வரும், மேலும் நான் என்ன செய்கிறேன் என்ற உண்மை உனக்கு தெரிந்து விட்டது, ஏற்கனவே உண்மை தெரிந்தவர்களின் கதியை மேலே நீ பார்க்கிறாயே, அதே தான் உனக்கும்” என்று கூறி இடத்தை காலி செய்தார்.

இராகவனுக்கோ வயித்தை கலக்கியது, பெரியபறவைகளுக்கு இன்று சரியான விருந்து தான், இனியும் தாமதித்தால் தன் கதி அதோ கதி தான், என்று யோசித்து, அங்கே கிடந்த எலும்புக்கூடுகளை எல்லாம் ஒன்றாக குவித்து, அதன் அடியில் போய் ஒளிந்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் வந்த பறவைகள் எருமை மாட்டின் தோலை மட்டும் கொத்தி சாப்பிட்டு விட்டு, அங்கே படுத்து தூங்கத் தொடங்கின, கொஞ்ச நேரத்தில் எலும்புக்கூடுகளின் அடியிலிருந்து வெளியேறி, அங்கே கிடந்த பறவைகளின் இறகுகளால் தன் உடலை சுற்றிக் கட்டிக் கொண்டார், அப்புறமா பெரிய பறவையில் ஒன்றின் காலில் தன்னைக் கட்டிக் கொண்டார்.

விடியற்காலையில் மீண்டும் பறவைகள் இரைத் தேட போனது, வெகுதூரம் பறந்த போது தூரத்தில் ஒருகிராமம் வருவதை அறிந்த கீழே பெரிய ஆறு ஓடுவதை அறிந்து தன்னை பறவையில் காலில் இருந்து விடுவித்துக் கொண்டார். பறவையில் இறகுகளுடன் தண்ணீரில் விழுந்தார், இறகுகள் இருந்ததால் மிதந்து கொண்டே அக்கிராமத்தை அடைந்தார்.

தன் பையில் இருந்த மரகத கற்களை அங்கே விற்று, புதிய உடைகள் வாங்கினார். தன்னுடைய சாப்பாட்டை பாதியாக குறைத்துக் கொண்டார், தாடி, மீசை எல்லாம் வைத்துக் கொண்டார், சில நாட்களில் உடல் மெலிந்து அடையாளமே தெரியவில்லை, நேராக அந்த ஜமிந்தாரின் வீட்டிக்கு போய் வேலை கேட்டார்.

இராகவனை அடையாளம் தெரியாத ஜமிந்தாரும் மிக்க மகிழ்ச்சி கொண்டு, வழக்கம் போல் நல்ல சாப்பாடு கொடுத்தார், ஒரு வாரத்திலேயே மாட்டுத்தோலுடன் மலையடிவாரம் என்றார்.

வழக்கம் போல் இராகவனை மாட்டுத்தோலை விரித்து படுக்கச் சொன்னார், உடனே இராகவன் “அய்யா, மாட்டுத்தோலில் எப்படி படுப்பது என்று எனக்கு தெரியலையே, நீங்க படுத்து காட்டுங்க” என்றார்.

உடனே ஜமிந்தாரும் இப்படி தான் படுக்க வேண்டும் என்று காட்ட, அதிரடியாக செயல்பட்ட இராகவன், ஜமிந்தரை மாட்டுத்தோலுக்குள் வைத்துக் கட்டினார், ஜமிந்தாரும் “டேய், டேய் என்ன செய்கிறாய், என்னை அவிழ்த்து விடு, இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன்” என்றார்.

இராகவன் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் காட்டுக்குள் ஓடி மறைந்தார், சிறிது நேரத்தில் அங்கே வந்த பறவைகள் மாட்டுத்தோலுடன் ஜமிந்தாரை தூக்கிக் கொண்டு மலை உச்சியை அடைந்தது, சிறிது நேரத்தில் இராகவன் தன்னிடம் இருந்த வெடியை வெடிக்க வைக்க பறவைகள் ஓடி விட்டன, ஜமிந்தாரும் ஒருவழியாக மாட்டுத்தோலிலிருந்து வெளியேறி “டேய், யாருடா நீ, எப்படி என் ரகசியம் உனக்கு தெரிந்தது” என்றார்.

தான் இராகவன் என்றும், சென்ற முறை தான் தப்பியதை சொன்னார், அத்துடன் அங்கே கிடக்கும் அனைத்து கற்களையும் கீழே எறியச் சொன்னார்., அவ்வாறு செய்தால் தப்பிக்கும் வழி சொல்வதாக சொன்னார்.

ஜமிந்தாரும் தன் குண்டு உடம்பை தூக்கி கொண்டு அங்கே இங்கே என்று ஓடி அனைத்தும் தூக்கி விசினார், இராகவனும் அவற்றை எல்லாம் மூட்டைகளாக கட்டுக் கொண்டு நடையை கட்டினார்.

ஜமிந்தாரும் இராகவன் தப்பித்த வழியை சொல்லித் தரச் சொல்லி கெஞ்சினார். உடனே இராகவன் “அய்யா, எனக்கு உங்க முன்னாள் வேலையாட்கள் தான் உதவினார்கள், அவர்களிடமே கேளுங்க” என்றார்.

இராகவனும் வேகவேகமாக மூன்று குதிரைகளின் மூட்டைகளை கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

ஜமிந்தாரும் ஓடி போய் குவியலாக கிடந்த எலும்புக்கூட்டின் அடியில் ஒளிந்துக்கொள்ள பார்த்தார், ஆனால் அவரது பெரிய உருவத்தை அவற்றால் மறைக்க முடியவில்லை, அங்கே வந்த பறவைகள், கொடிய ஜமிந்தாரை கொன்று தின்றன.

ஜமிந்தாரின் ஊருக்கு போன இராகவன் ஜமிந்தாருக்கு நேர்ந்ததை எல்லோரிடமும் சொல்லி, தான் கொண்டு வந்த இரத்தின கற்களில் பாதியை விற்று கோயிலை பராமரிக்கவும், ஜமிந்தாரால் கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தாருகும் கொடுத்து விட்டு, மீதியை தன் வீட்டிக்கு கொண்டு வந்து, விற்று பெரும் பணக்காரராக, எல்லோருக்கும் உதவுகிறார், இப்போவும் கோயிலுக்கு போய் சுண்டல், சர்க்கரை பொங்கல் வாங்கி சாப்பிட்டு வருகிறார், நம்ம கோ.இராகவன்.

Tuesday, February 21, 2006

கதை எண் 83 - கூடல் குமரனும், கொடிய வேதாளமும்

கூடல் மாநகரத்தில் குமரன் என்ற இளைஞர் இருந்தார், அவரது பெற்றோருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, அவரது தாயார் தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு என்று தனக்கு ஒரு குழந்தை வரம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்வார். இவ்வாறாக நீண்ட நாட்களாக வேண்டியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, ஒரு நாள் அவரது தாயார் அம்மனை வேண்டியும் குழந்தை கிடைக்கவில்லையே என்ற வெறுப்பில் வேண்டிக் கொண்டிருக்கும் போது “தாயே! குட்டையோ, நெட்டையோ எனக்கு ஒரு குழந்தையை கொடு தாயே!, எங்களுக்கும் வயதாகி வருகிறது, கருணை காட்டு தாயே!” வேண்ட, அதுவரை அமைதியாக இருந்த அம்மன், அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்து விட்டார்.

அடுத்த ஆண்டே அழகான ஆண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு அவர்கள் குமரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குமரன் மற்ற குழந்தைகளை விட உயரம் ரொம்ப கம்மியாக இருந்தார், இருந்தாலும் பெற்றோர் அன்பும், பண்பும் காட்டி வளர்த்தார்கள். குமரன் படிப்பிலும், விளையாட்டிலும், குறும்புத்தனத்திலும் சிறந்து விளங்கினார், எல்லோரும் உலகமகா சேட்டைக்காரன் என்று அழைக்கும் அளவுக்கு பெயர் எடுத்தார்.

கூடல் மாநகரத்தில் ஆட்சி செய்து வந்த மன்னரும் ரொம்பவும் நல்லவர், மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த போது ஒரு நாள் வெளிதேசத்திலிருந்து பறந்து வந்தது ஒரு வேதாளம்.

வேதாளம் என்றால் அது டிராகன் மாதிரியே இருந்தது, 50 யானைகளை கொண்டு செய்த மாதிரியான உடம்பு, பறக்க இறக்கைகள், நீண்ட வால், கால் நகங்கள் பெரியதாக, பெரிய யானை தூக்கிச் செல்லும் அளவுக்கு பலம் படைத்ததாக இருந்தது. வாயைத் திறந்தால் நெருப்பை கக்கும் தன்மை கொண்டதாக இருந்தது.

அவ்வாறு வந்த வேதாளமானது முதலில் கூடல் மாநகரத்தை ஒட்டிய கிராமங்களின் வயல்வெளிகளையும், தோப்புகளையும் தன் நெருப்பால் பொசுக்கியது, மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை மொத்தம் மொத்தமாக தூக்கி சாப்பிட்டது.

மொத்த மாநகரமே நடுங்கியது, பாதிக்கப்பட்ட மக்கள் அரசரை கண்டு கதறி அழுதார்கள், தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். எதற்கும் அஞ்சாத அரசர், உடனே தன்னுடைய சேனாதிபதியை அழைத்து, உடனே ஆயிரம் வீரர்களை தயார் செய்து, அந்த வேதாளத்தை அழித்துவிட்டு வரச் சொன்னார். ஆயிரம் பேரும் மலையடிவாரத்தில் தங்கியிருந்த வேதாளத்தை கொன்று போட செல்லும் வழியிலேயே வேதாளத்தால் தாக்கப்பட்டு மலையின் மேல் சிறைவைக்கப்பட்டார்கள். மன்னரும் பெருங்கவலை அடைந்தார்.

உடனே மன்னர் உத்தரவின் படி ஊர் எங்கும் தண்டோரா போட்டு செய்தி சொல்லப்பட்டது, அதாவது “யார் அந்த கொடிய வேதாளத்தை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இராஜ்யத்தில் பாதியையும், தன் ஒரே மகளான இளவரசியையும் திருமணம் செய்து கொடுப்பதாக சொன்னார்”.

இச்செய்தியை கேட்டதும் வீரத்தீரம் மிக்க இளைஞர் பட்டாளம் கிளம்பியது, ஆனால் அதற்கு முன்பே கொடிய வேதாளம் அரசரின் அரண்மனைக்கு மேல் பறந்து வந்து அமர்ந்தது, உடனே ஊரே பயந்து நடுங்கியது, அரசரும் அசராமல் வெளியே வந்து அந்த கொடிய வேதாளத்த்துடன் மோத வந்தார்.

அப்போ அந்த வேதாளம் அனைவரையும் பார்த்து ஒரு பாட்டு பாடியது,

“வந்தேண்டா வேதாளம்
வரவேற்க தைரியமுண்டா
என்னை வெல்ல வழியுண்டு
வெல்லுவதும் எளிதில்லை
ஆயிரம் வாட்கள் கொண்டவனே
என்னை வெல்ல முடியும்,
இல்லாத பாலமேறி
என்னருகே வரமுடியும்
செய்யாத கோப்பையிலே
கொடுக்க வேண்டும் அமுதமே
அவ்வாறு செய்தால்
நானாவேன் உன் நண்பனாய்”


என்று உரக்கப்பாடி விட்டு பறந்து விட்டது.

வேதாளம் பாடிய பாட்டை அர்த்தம் தெரிந்துக் கொள்ள அனைவரும் முயன்றார்கள். அரசவை புலவர்களும் பலவகை அர்த்தங்கள் சொல்லி அரசருக்கு தலைவலியே வந்து விட்டது, ஆயிரம் வாட்களை ஒருவனால் எப்படி தூக்கிக் கொண்டு அத்தனை பெரிய வேதாளத்தை வெல்ல முடியும். இல்லாத பாலமேறுவதும், செய்யாத கோப்பை, அதிலும் அமுதம், ஒன்றுமே புரியாமல் விழித்தார்கள்.

நாடும், இளவரசியும் கிடைப்பார் என்ற குருட்டு தைரியத்தில் வேதாளம் தங்கியிருந்த மலையடிவாரத்தை நோக்கி சென்ற இளைஞர் பட்டாளம் வேதாளத்துடன் மோதி தோற்று அங்கே அடிமையாகி கிடந்தார்கள்.

அரசருக்கோ இனியும் வேதாளத்தை வெல்ல யாரும் வரமாட்டார்கள், இனிமேல் தானே முயற்சி செய்யவேண்டியது தான் என்ற நிலைக்கு வந்த போது, அரண்மனைக்கு நல்ல குட்டி குமரன் சென்றார்.

அரசரை பார்த்து “அரசே! நான் அந்த கொடிய வேதாளத்தை கொல்லப் போகிறேன், அதற்கு முன்பு எனக்கு உங்க ஆசிர்வாதம் தேவை” என்றார்.

அத்தனை வேதனையிலும் அவையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள், அவர்கள் குமரனின் சிறிய உருவத்தை பார்த்து கேலியாக சிரித்தார்கள், ஆனால் அரசரும் இளவரசியும் சிரிக்கவில்லை.

குமரனின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பார்த்து வியந்தார்கள், இத்தகைய தன்மை கொண்டவர்களால் தான் செய்யக்கரிய செயல்களை செய்ய முடியும் என்று நம்பினார்கள். அரசரும் தன் ஆசனத்தை விட்டு கீழே இறங்கி வந்து குமரனை கட்டிப்பிடித்து தன்னுடைய வாளை குமரனிடம் கொடுத்தார். இளவரசியும் ஏதாவது கொடுக்க நினைத்து திடிரென்று தன்னுடைய தலைமுடியில் ஒன்றை பிடுங்கி கொடுத்தார், குமரன் வாளையும் இளவரசி அன்பாக கொடுத்த தலைமுடியையும் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

தைரியமாக வீட்டுக்கு சென்று அன்னையிடமும் அப்பாவிடமும் ஆசிர்வாதம் வாங்கினார், பெற்றோரும் தங்கள் பிள்ளையால் கண்டிப்பாக சாதிக்கமுடியும் என்று நம்பிக்கை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்கள்.

குமரன் தன்னுடைய குட்டிக்குதிரையில் ஏறி மலையடிவாரம் போகத் தொடங்கினார், போகிற வழியில் ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாரலாம் என்று நினைத்து குதிரையை அங்கே நிறுத்தினார்.

அங்கே ஒரு பெரிய தேன்கூடு தரையில் கிடந்தது, தேனீக்கள் எல்லாம் அங்கே இங்கே என்று பறந்துக் கொண்டிருந்தது, அதைக் கண்டு இரக்கப்பட்ட குமரன், அந்த தேன்கூட்டை கையில் எடுத்து மரத்தின் மேல் வைத்தார், உடனே தேன் கூட்டிலிருந்து வெளியே வந்த இராணித்தேனி குமரனிடம் பேசியது “இரக்கக்குணம் படைத்த இளைஞரே! நாங்கள் நீண்ட நாட்களாக இங்கே தரையில் தான் கிடைக்கிறோம், ஆனாலும் யாருமே எங்களை மரத்தின் மேல் வைக்க நினைக்கவில்லை, அதற்கு பதில் துன்புறுத்தவே செய்தார்கள், பல வீரர்கள் எங்களைத் தாண்டி சென்று தான் வேதாளத்திடம் சரணடைந்து விட்டார்கள். ஆனால் நீங்களோ அவ்வாறாக இல்லை, எனவே உங்களுக்கு உதவ நாங்களும் தயார், எனவே எங்களை உங்களுடனே கொண்டு செல்லுங்க” என்றது.

குமரனும் மகிழ்ச்சியோடு தேன் கூட்டை தன் பையில் வைத்துக் கொண்டார். குமரன் வருவதை அறிந்த வேதாளம் குமரனின் உருவத்தை கண்டு கேலியாக சிரித்தது, என் கால் நகம் உயரம் கூட நீ இல்லை, எப்படி என்னை வெல்வாய் என்று கூறியது. குமரனும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அம்மனின் அருளும் இருக்கிறது, என்று கூறி சண்டைக்கு போனார். அப்போ ராணீத்தேனி “குமரன், ஆயிரம் வாட்கள் கொண்டு வெல்ல வேண்டும் என்றால் என்னிடம் இருக்கும் ஆயிரம் வீரத்தேனிகளை கொடுக்கிறேன், அவை உங்க வாள் மீது அமர்ந்துக் கொள்வார்கள், நீங்க வாளை தூக்கி வேதாளத்தின் முகத்தை பார்த்து வீசுங்க, மீதியை என் வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றது.

குமரனும் தன் வாளை உயர்த்த, தேன் கூட்டிலிருந்து ஆயிரம் தேனீக்கள் வாளை சுற்றி அமர்ந்தது, உடனே குமரனும் தன் வாளை தூக்கி வேதாளத்தை நோக்கி வீசினார், உடனே ஆயிரம் தேனீக்களும் அந்த வாளை தூக்கிக் கொண்டு வேதாளத்தின் முகத்தை நோக்கி கொண்டு சென்று, அவை அனைத்தும் தனித்தனியாக பிரிந்து வேதாளத்தின் கண்களை குறிவைத்து கொட்டியது, ஆயிரம் தேனீக்கள் கொட்டியதால் கண் பார்வை தெரியாமல், கண்கள் வீங்கி, வலியில் வேதாளம் துடிதுடித்தது.

இனியும் குமரனும் மோதுவது சரியில்லை என்று பயந்த வேதாளம் தன் இருப்பிடத்தை நோக்கி பறந்து சென்று விட்டது. வேதாளத்தை கொட்டிய ஆயிரம் தேனிக்களும் வீரமரணம் அடைந்தது, அது குமரனுக்கு கஷ்டமாக இருந்தது, கண்களில் கண்ணீர் வந்துவிட்டது, உடனே ராணித்தேனி “குமரன், தேனீக்கள் வாழ்க்கையில் தினம் தினம் எங்களுக்கு வீரமரணம் உண்டு, கவலைப்பட வேண்டாம், அடுத்த காரியத்தை பற்றி சிந்திப்போம்” என்றது.

வேதாளம் இருந்த மலை உச்சிக்கும், குமரன் இருந்த இடத்திற்கும் இடையே பெரிய பாதாளம் இருந்தது, அதை எப்படி தாண்டுவது என்று தெரியாமல் குமரன் விழிக்க, ராணித்தேனீ “நண்பரே! உங்களிடம் நூல், கயிறு போன்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டது”, உடனே குமரனுக்கு இளவரசி கொடுத்த தலைமுடி நினைவுக்கு வந்து, அதை எடுத்து ராணித்தேனியிடம் கொடுத்தார்.

ராணித்தேனீ தன் தளபதி தேனியை அழைத்து, இந்த தலைமுடியை மலை உச்சியில் கட்டி வருமாறு சொல்லி, மறுமுனையை குமரனை பிடிக்கச் சொன்னது, என்ன ஆச்சரியம், தளபதி தேனீ பறக்க பறக்க இளவரசியின் தலைமுடியானது நீண்டுக் கொண்டே சென்றது, இறுதியில் மலை உச்சியில் முடிச்சி போட்டு வர, குமரன் மறுமுனையை தன் குதிரையின் மீது கட்டி, பின்னர் அந்த தலைமுடியை பிடித்து தொங்கிக் கொண்டு, மலை உச்சியை அடைந்தார்.

ஒருவழியாக மலை உச்சியில் வேதாளம் இருந்த இடத்தை தேடி போன போது, வேதாளத்தின் கண்கள் எல்லாம் வீங்கி, கடுமையான வலிகள் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த குமரனுக்கு கோபத்திற்கு பதில் வேதாளத்தின் மேல் இரக்கம் தோன்றியது. பாவம் வேதாளம் கெட்டக் குணம் என்றாலும் வலியால் துடிப்பதை பார்க்க மனசு இல்லாமல் எப்படி உதவுவது என்று யோசித்தார்.

உடனே ராணித்தேனீ, வேதாளத்தின் வலி நீங்கி மீண்டும் கண் பார்வை வர ஒரே ஒரு வழியுண்டு, நாங்க சேமித்து வைத்திருக்கும் தேனை குடித்தால் கண்பார்வை வரும்” என்றது.

உடனே குமரன் தேனை பிடித்து கொடுக்க பாத்திரம் போல் ஒன்றும் இல்லையே என்று யோசித்தார், தூரத்தில் வேதாளம் சாப்பிட்டு போட்ட பெரிய யானையின் மண்டையோடு கிடந்தது, அதை எடுத்து வந்து ராணித்தேனி கொடுத்த தேனை பிடித்து, வேதாளத்தின் மீது ஏறி, அதன் வாயில் தேனை ஊற்றினார்.

உடனே வேதாளத்தின் வலி நீங்கி கண் பார்வை வந்தது, நெருப்பாக இருந்த அதன் கண்கள் கருணை கொண்டதாக மாறியது.

குமரனை நோக்கி “அய்யா! நீங்க நம்பிக்கையுள்ள மாவீரர் மட்டுமல்லாது மிக்க இரக்கம் கொண்டவர், இனிமேல் நான் உங்கள் அடிமை. தேவலோகத்தை சேர்ந்த நான் முன்பு ஒரு காலத்தில் தவம் செய்த முனிவரை தொந்தரவு செய்ததால் சாபமிட்டு விட்டார், அதன் பரிகாரமாக உங்கள் வீரச்செயலாலும் அன்பாலும் என் சாபம் நீங்கும் என்றார். இன்று எனக்கு சாபவிமோசனம் கிடைத்து விட்டது, உங்களுக்கு நான் உதவப் போகிறேன்” என்று கூறியது.

கொஞ்ச நேரத்தில் அழகிய தேவதூதனாக மாறியது வேதாளம், அதே நேரம் குமரனும் அழகிய தோற்றத்துடன் ஆறடி உயரம் கொண்ட மாவீரராக மாறிவிட்டார். தேவதூதன் நிறைய பொக்கிஷங்களையும், தன்னால் உயிழந்த அனைத்து உயிர்களையும், ஆயிரம் தேனிக்களையும், சிறைபிடித்த வீரர்களையும் திருப்பி கொடுத்தார். உதவி தேவைப்படும் போது வந்து உதவுவதாக உறுதி கூறி விடைபெற்றார்.

குமரன் அனைவரோடு வெற்றிமகனாக கூடல் நகரம் திரும்பினார், ஊரே விழாக்கோலம் பூண்டது. அரசரும் இளவரசியும் குமரனை வரவேற்க நகரின் எல்லைக்கே வந்தார்கள். குமரனின் புதிய தோற்றத்தை கண்டு அவரது பெற்றோரும் மகிழ்ந்தார்கள், மக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்றார்கள்.

குமரனுக்கும் இளவரசிக்கும் திருமணம் ஆகி ஒரு குட்டி இளவரசியும் பிறந்தார், அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

Saturday, February 18, 2006

கதை எண் : 82 - கெட்டிக்காரன் புளுகு (ஈசாப் நீதி கதைகள்)

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.

இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,

“சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்” என்றது
.
நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

இதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது.

அதற்கு சேவல்,

அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்பதைக் கவனிக்கிறேன்

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது.

சேவல், “அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது”


நரி “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்”.

இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.


சேவல் “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது.


கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.

Thursday, February 16, 2006

கதை எண் 81 - ஆனந்தர் ஞானம் பெற்ற கதை

இளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெற்று கௌதம புத்தர் ஆனதும் அவருடன் வந்து சேர்ந்தார் புத்தரின் நெருங்கிய உறவினர் ஆனந்தர்.

இவர் புத்தர் மீது கொண்ட அன்பால் அவருடைய சீடனாகிவிட்டார். அதுமட்டுமல்ல மற்ற சீடர்களை விட புத்தரிடம் தனக்கு அதிக உரிமை உண்டு என நினைத்தார். அதன்படியே நடந்து கொண்டார்.

ஒரு நாள், "சித்தார்த்தா! நான் உனக்கு அண்ணன் முறை. நான் என்ன சொன்னாலும் நீர் கேட்க வேண்டும். எனக்காக நான் சொல்லும் மூன்று கட்டளைகளை ஏற்க வேண்டும்,'' என்றார்.

"அந்த மூன்று கட்டளைகள் என்ன?'' என்று கேட்டார் புத்தர்.

"நான் எப்பொழுதும் உம்முடனேயே இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் என்னை வேறு நாடுகளுக்கு அனுப்பக்கூடாது. நான் உம்மைச் சந்திக்க யாருக்கு அனுமதி தந்தாலும் நீர் சந்திக்க வேண்டும். நள்ளிரவாக இருந்தாலும் முடியாது என்று சொல்லக்கூடாது. மூன்றாவதாக நீர் உறங்கும் போது உமது அருகிலேயே நான் உறங்க வேண்டும். வேறு அறைக்குச் சென்று துõங்கு என்று என்னிடம் சொல்லக் கூடாது. சரியா,'' என்றார்.

"அப்படியே செய்கிறேன்!'' என்று வாக்குறுதி தந்தார் புத்தர். நாற்பத்திரண்டு ஆண்டுகள் புத்தருடனே தங்கியிருந்தும் ஆனந்தர் ஞானம் பெறவில்லை.

வெகு தொலைவிலிருந்து வந்து புத்தரின் சீடர்களான சிலர் சில நாட்களிலேயே ஞானம் பெற்றதை அறிந்த ஆனந்தர் தனக்கு மட்டும் ஏன் ஞானம் கிடைக்கவில்லை என்று வருந்தினார்.

இறக்கும் நிலையில் இருந்தார் புத்தர். அவரிடம் ஆனந்தர், ""இரவும் பகலும் உம்மைப் பிரியாமல் நாற்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து விட்டேன். இன்னும் நான் ஞானம் பெறவில்லை. நீர் இறந்தபின் என் நிலை என்ன ஆகும்?'' என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்டார்.

"வாழ்க்கையைப் பற்றி நீர் ஒன்றும் புரிந்து கொள்ளவில்லை. நீர் ஞானம் பெறுவதற்கு நானே தடையாக இருந்திருக்கிறேன். நான் இறந்தபிறகு நீர் ஞானம் பெற்றாலும் பெறலாம்.

"நீர் என்னிடம் மூன்று வேண்டுகோளை வைத்தீர். நான் அவற்றை ஏற்றுக் கொண்டது உம் வாழ்க்கைக்குத் தடையாயிற்று. நீர் எப்பொழுதும் என் அண்ணன் என்றே நினைத்துக் கொண்டு மற்றவர்களை விட என்னிடம் உமக்கு அதிக உரிமை உள்ளது என்று கருதினீர். உமக்காகத் தான் அந்த மூன்று வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன். என் இறப்பு ஒன்று தான் நீர் ஞானம் பெற உமக்கு உதவி செய்யும்,'' என்றார்.
அதன்பிறகு இறந்தும் போனார் புத்தர்.

ஞானம் பெற்ற சீடர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடினர். கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளில் புத்தர் என்னென்ன அறிவுரைகள் சொன்னாரோ அவற்றை எழுதி வைக்க வேண்டுமென்று நினைத்தனர்.

அங்கிருந்த யாருமே புத்தருடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது இல்லை. அத்தனை ஆண்டுகளும் புத்தருடன் இருந்த ஆனந்தரோ இன்னும் ஞானம் பெறவில்லை. அதனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை.

கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே அமர்ந்து புலம்பியபடி இருந்தார் ஆனந்தர்.

"புத்தரே! உங்களுடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் இடைவிடாமல் இருந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் என் உள்ளத்தில் பதிந்து உள்ளது. ஞானம் பெறாதவர் என்பதனால் எனக்கு அனுமதி இல்லையே. நான் என்ன செய்வேன்,'' என்று அழுது புலம்பினார். வாழ்க்கையே அழிந்து விட்டது போல அழுதார்.
கண்ணீர் வெள்ளத்தில் நனைந்தார். அப்போது தன் தம்பி தான் புத்தர் என்ற அவருடைய ஆணவம் நீங்கியது. குழந்தையைப் போல ஆன அவர் அப்பொழுதே ஞானம் பெற்றார்.

வெளியே வந்த சீடர்கள் சில விளக்கங்கள் கேட்பதற்காக ஆனந்தரை தேடினர். அவர் கூறிய விளக்கங்களை கேட்டு ஆச்சரியமடைந்த சீடர்கள் அவர் ஞானம் பெற்றதை அறிந்து மகிழ்ந்தனர்.

புத்தரின் போதனைகளை எல்லாம் அதன்பிறகு ஆனந்தரே தொகுத்தார்.

Saturday, February 11, 2006

கதை எண் 80 - உலகத்தில் சிறந்தது (முல்லா கதைகள்)

நஸ்ருதீன் முல்லா அவர்கள் துருக்கி மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார்.

மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார். ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, “முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர் ? “ என்று கேட்டார்.

“சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது” என்று முல்லா ஆமாம் போட்டார்.

மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து “இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு” என்று உத்திரவிட்டார்.

நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.

அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி “உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர் ? “ என்று கேட்டார்.

“ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை” என்றார் முல்லா

“என்ன முல்லா, பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே” என்று மன்னர் கேட்டார்.

முல்லா சிரித்துக் கொண்டே “மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே” என்றார்.

மன்னரும் விழுந்து விழுந்து சிரித்தார்.

Thursday, February 09, 2006

கதை எண் 79 - நாடோடிக்கதை- அதிஷ்ட தேவதை (சுவீடன்)

சுவீடன் நாட்டில் உள்ள சிறிய நகர் ஒன்றில் "பிளிம்போ' என்று ஒரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன்; புத்திசாலி, அந்நகர மக்கள் எல்லாரும் அவனை அதிர்ஷ்டக்காரன் என்றே அழைத்தனர்.
ஏனென்றால் பிளிம்போ ஒரு வேலைக்கு கூட செல்லமாட்டான்.

அதிர்ஷ்டத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தான். அதிர்ஷ்ட தேவியின் அருளைப் பற்றி பார்ப்பவர்களிடம் எல்லாம் பேசினான். அதிர்ஷ்ட தேவியின் அருளிருந்தால் ஒருவன் உழைக்காமலிருந்தால் கூட உலகிலேயே மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என்று கூறி வந்தான்.

இதனால் அவன் தந்தை அவனிடம் மிகுந்த கோபம் கொண்டார். ஒரு நாள் அவனை நன்றாக திட்டி வீட்டை விட்டே விரட்டி விட்டார்.

"அதிர்ஷ்ட தேவதையின் அருளால் பணக்காரனாகத் திரும்புவேன்,'' என்று சபதம் செய்த பிளிம்போ ஊரை விட்டு கிளம்பினான்.

ஒரு படகில் ஏறி கடலில் பயணம் செய்தான். படகு நடுக்கடலில் சென்றபோது புயலடித்தது. மழை பெய்தது. திடீரென படகு கவிழ்ந்தது.

பிளிம்போ தத்தளித்தான். சிறிது நேரத்தில் கடல் நீரில் மயங்கி மூழ்கினான்.
மயக்கம் தெளிந்து எழுந்த பொழுது ஒரு சிறு தீவில் ஒதுங்கி இருந்தான் பிளிம்போ.

எழுந்து களைப்புடன் மெல்ல நடந்தான். பசியும், தாகமும் வயிற்றைப் புரட்டியது. கால்போன போக்கில் நடந்தான். வழியில் கிடைத்த பழங்களையெல்லாம் தின்றான். எல்லா பழங்களும் சுவையுடன் இருந்தன.

இப்படி ஒரு வார காலம் பிளிம்போ அந்த தீவில் பழங்களை தின்றபடி வாழ்ந்தான்.

ஒரு நாள் அதிகாலையில் ஒரு புதர் அருகில் மிகவும் தெளிந்த நீரோடை ஒன்றிலிருந்தது. மிகுந்த தாகத்திலிருந்த பிளிம்போ ஓடையிலிறங்கி நீரைப் பருகினான்.

என்ன மாயம்? திடீரென பிளிம்போ ஒரு குரங்காக மாறிவிட்டான்.

கவலையுடன் கரை ஏறிய பிளிம்போ மனம் அப்போதும், ""அதிர்ஷ்ட தேவியின் அருளால் தான் இது நடந்தது. ஏதோ காரணம் இதிலுண்டு,'' என்று கூறிக் கொண்டு விறுவிறுவென்று அருகிலிருந்த மரங்களில் ஏறினான்.
விரும்பிய பழங்களைப் பறித்து உண்டான். பின் மேலும் சிறிது நேரம் மரங்களில் தொற்றியபடி அலைந்தான். திடீரென குரங்காக இருந்த பிளிம்போ கண்களில் ஒரு நீல நிற மரம் தென்பட்டது. அதில் நீல நிறப் பழங்கள் சில இருந்தன.

அந்த மரத்திற்கு தொற்றிப் பாய்ந்தான் பிளிம்போ. சில நீலப் பழங்களைப் பறித்துத் தின்றான். அவை அபூர்வ சுவையுடன் இருந்தன. பிளிம்போ அதைத் தின்ற மறு நிமிடமே முன்பு போல மனித உருவம் பெற்று மரத்தின் மேல் அமர்ந்திருந்தான். உடனே மளமளவென்று சில நீலப் பழங்களைப் பறித்து தன் சட்டையியலிருந்த பையில் போட்டுக் கொண்டான். பின் மளமளவென்று மரத்தை விட்டு இறங்கினான். முன்பு தான் நீர் பருகி குரங்காக மாறிய நீரோடையை சென்று அடைந்தான்.

ஒரு சிறு மூங்கில் குழாயை எடுத்தான். அதில் நிறைய ஓடை நீரை நிரப்பிக் கொண்டான். பின் அங்கிருந்து சில மரப்பலகைகளைக் கொண்டு ஒரு சிறு படகு செய்தான். அதில் நீலப் பழங்களையும், ஓடை நீரடங்கிய மூங்கில் குழாய்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். மறுநாள் விடியும் நேரத்தில் அவன் ஒரு நாட்டின் கரையை கண்டான்.

அது தங்கப்பாளம் என்ற நாட்டின் கடற்கரை. அங்கு வந்திறங்கிய பிளிம்போ நீலப் பழங்களையும், மூங்கில் குழாயையும் எடுத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்தான். அந்நாட்டு மக்கள் வழங்கிய உணவை உண்டான்.

வழியில் ஒரு நந்தவனத்தை கண்டான். அங்கு பூக்களும், கனிகளும், ஏராளமாக இருந்தன. அவற்றின் மணமும், நிழலும் பிளிம்போவை மயக்கியது.

எனவே, நந்தவனத்தில் புகுந்தான். அங்கிருந்த ஒரு குளக்கரையில் படுத்தான். திடீரென அடித்த காற்றில் பிளிம்போ தன்னருகில் வைத்துவிட்டு உறங்கிய மூங்கில் குழாய் கடகடவென உருண்டு குளத்தில் விழுந்தது. உடனே அதன் உள்ளிருந்த நீர் முழுவதும் குளத்தினுள் கொட்டிவிட்டது.

முதலில் திடுக்கிட்ட பிளிம்போ பின்பு, ""இதுவும் அதிர்ஷ்ட தேவியின் செயலே,'' என நினைத்தபடி எழுந்து சென்று பக்கத்திலிருந்த மர நிழலில் படுத்து உறங்கிவிட்டான். அப்படியே இரவாகிவிட்டது.

மறுநாள் விடிந்தது. திடீரென நந்தவனத்தினுள் பெண்கள் அலறியபடி ஓடும் சத்தம் கேட்டது. உடனே பிளிம்போ விழித்தான். அந்தப் பெண்களிடம் ஓடி நடந்ததைவிசாரித்தான்.

அவர்கள், ""இந்நாட்டு இளவரசி இஸ்பார் மிகுந்த அழகி. இப்போது எங்களுடன் நந்தவனத்திற்கு வந்தாள். இந்தக் குளத்துநீரில் இறங்கினாள். நீர் அவள் மீது பட்டதுமே குரங்காகி விட்டாள்,'' என்று கூறி அழுதனர்.

செய்தி அரசர் காதிற்கு எட்டியது. அரசனும், அரசியும் நந்தவனத்திற்கு ஓடி வந்தனர். தங்கள் மகள் குரங்காக இருப்பதைப் பார்த்து கண்ணீர் வடித்தழுதனர். பின் குரங்கை பிடித்துக் கொண்டு அரண்மனைக்கு சென்றனர்.

மறுநாள் ஊர் முழுக்க அரசர் செய்தி அறிவித்தார். இளவரசி இஸ்பார் திடீரென குரங்காக மாறிவிட்டாள். அவளை மீண்டும் பெண் உருவாக மாற்றுபவர்களுக்கு இளவரசி இஸ்பாரை மணம் செய்து வைப்பார் அரசர். அதோடு தங்கப்பாள நாட்டை ஆளும் பொறுப்பும் தரப்படும் என அறிவித்தார்.

உடனே பிளிம்போ, நேராக அரண்மனைக்குச் சென்றான். தன்னுடன் நீலப் பழத்தையும் எடுத்துச் சென்றான். அரசனிடம் இளவரசி இஸ்பாரை பெண்ணுருவில் மாற்றித் தருவதாக கூறினான். அரசர் ஒப்புக் கொண்டார்.

குரங்கு வடிவிலிருந்து இளவரசி இஸ்பாரை கொண்டு வந்து பிளிம்போ முன் நிறுத்தினர். பிளிம்போ உடனே தன் மடியிலிருந்த நீலப் பழத்தை அவளிடம் தந்தான். குரங்காக இருந்த இஸ்பார் அதனை வெடுக்கெனப் பறித்து கடித்துத்தின்றாள்.

மறுநிமிடம் பெண்ணாக மாறிவிட்டாள். அரசரும், அரசியும் மகிழ்ந்தனர். சொன்னபடி பிளிம்போவிற்கே இஸ்பாரைத் திருமணம் செய்து தந்தார் அரசர்.
பிளிம்போ தங்கப்பாள நாட்டின் அரசனான். விபரத்தை அவன் நகர மக்களும் அறிந்தனர். அவன் பெற்றோர் தங்கப்பாள நாட்டிற்கே வந்தனர். மகனுடன் அரண்மனையிலேயே மகிழ்வுடன் வாழ்ந்தனர்.

பிளிம்போ இஸ்பார் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு இருவரும் அதிர்ஷ்ட தேவி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

சுவீடன் நாட்டு மக்கள் இக்கதையை இன்றும் பிள்ளைகளுக்கு சொல்கின்றனர். அதோடு அதிர்ஷ்டத்தில் அதிக நம்பிக்கையும் வைத்துள்ளனர்.

குட்டீஸ்... அதற்காக அதிர்ஷ்டத்தில் கண்மூடித்தனமாக நாம் நம்பிக்கை வைக்கலாகாது. அதிர்ஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், முயற்சியும் தேவை. அப்போதுதான் வாழ்வில் நாம் முன்னேற முடியும்.

Thursday, February 02, 2006

கதை எண் 78 - விக்கிரமாதித்தனும் இந்திரனும்

ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான்.

இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான்.

இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர்.

""ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்,'' என்றான் இந்திரன்.

""நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்,'' என்று ரம்பை கூறினாள்.

""ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்,'' என்றாள் ஊர்வசி.

இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை.
இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான்.

""இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?'' என்று கேட்டார் நாரதர்.

""ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை...'' என்றான் இந்திரன்.

""இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு...'' என்றார் நாரத முனிவர்.

மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர்.

நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர்.

இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, ""இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்,'' என்றார்.

உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, ""மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!'' என்றான்.

மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. "ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?' என்று நினைத்தான்.

இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், ""மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா,'' என்றார்.

மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான்.

விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான்.

இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, "இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?' என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான்.

இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை.

உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது.

இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான்.

""விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்,'' என்றான் இந்திரன்.

போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை.

போட்டி முடிவுற்ற பிறகு, ""தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்,'' என்றான் விக்கிரமாதித்தன்.

மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான்.

இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், ""வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்,'' என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான்.

ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள்.

ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள்.

இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான்.

விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான்.

அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன.
ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும்.

இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், ""இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக,'' என்று வரமும் அளித்தான்.

ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை அடைந்தான்.