சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Tuesday, March 28, 2006

கதை எண் 88-3 - நீலத்தவளையும் அருஞ்சுவை இராமநாதனும்

இராமநாதனின் சாகசகங்கள் (தொடர்கதை-3)

தந்தையின் ஆசைப்படி மருத்துவம் படிக்க பனிப்படர் தேசம் சென்ற இராமநாதனின் பயணம் தடைப்பட்டு சித்திரக்குள்ளர்களிடம் மாட்டிக் கொண்டதை நாம் அறிந்தோம்.

மயக்கநிலையிலிருந்து மீண்ட இராமநாதன் எதிரே மூன்று சித்திரக்குள்ளர்கள் நின்றார்கள். அதுவும் எப்படி?

2 அடி உயரமே இருந்தார்கள், கொழுக்கு மொழுக்கு என்று கொழுத்து போயிருந்தார்கள், அவர்கள் கழுத்தில் பெரிய மண்டையோடும், இடுப்பில் ஆடையாக எலும்புக்கூடுகளும் இருந்தன, கையில் பெரிய எலும்புத்துண்டை ஆயுதமாக ஏந்திருந்தார்கள். மூக்கு சப்பையாகவும், ஆட்டுக்கு இருக்கும் தாடி போல் தாடியும் இருந்தது. கண்கள் நெருப்புத்துண்டு போல் சிவப்பாக மின்னியது.

இதுவரை அது மாதிரியான மனிதர்களை காணாத இராமநாதன் மிரண்டு போயிட்டார், பின்னர் மனதை திடப்படுத்திக் கொண்டு, “யார் நீங்கள்? என்னை வலையிலிருந்து விடுவியுங்கள். நான் உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றார்.

அதைக் கேட்டதும் சித்திரக்குள்ளர்கள் பட்டுதேச மொழியில் ஏதோ குசு குசு என்று பேசினார்கள். பின்னர் இராமநாதனைப் பார்த்து “என்ன தைரியம் உனக்கு, எங்க இடத்தில் வந்து எங்களிடமே யார் என்று கேட்கிறாயா? எப்போ எங்கள் வலையில் மாட்டிக் கொண்டாயோ அப்பவே நீ எங்கள் அடிமை, நீ என்னடா என்றால் எங்களை ஒன்றும் செய்யமாட்டேன் என்று சொல்கிறாய்” என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அவர்களின் சிரிப்பு இராமநாதனுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது, வலையில் இருந்து விடுவிக்க என்னவே செய்தார் முடியவில்லை. பின்னர் சித்திரக்குள்ளர்கள் அவரை நோக்கி வந்தார்கள், இராமநாதனின் கை வாள் அருகில் சென்றது, வந்த குள்ளர்கள் வலையினை விடுவிக்க, அதே வேகத்தில் இராமநாதன் வாளை உருவினார்.

வாளை உருவிய வேகத்தில் குள்ளர்களை நோக்கி பாய, என்ன ஆச்சரியம் குள்ளர்கள் அதே வேகத்தில் அங்கே இருந்த பெரிய தூண்களின் பின்னால் ஓடி மறைந்துக் கொண்டார்கள். இராமநாதனும் உருவிய வாளோடு தூண்களில் பின்னால் போனார், அங்கே இருந்த குள்ளனை காணவில்லை, திடிரென்று தூணில் மேலிருந்து இராமநாதனின் கழுத்தின் மேல் குதித்து அவரது கண்களை பொத்திக் கொண்டான் ஒரு குள்ளன், இராமநாதன் தலையை ஆட்டி அவனை கீழே தள்ளினார். பின்னர் வாளை ஓங்கி வீச, குள்ளன் தன் கையில் இருந்த எலும்புத்தடியால் தடுக்க அது பொடிப்பொடியானது. அதே நேரத்தில் அடுத்த குள்ளன் பின்பக்கமாக கத்திக் கொண்டு வந்தான்.

இராமநாதன் சடாரென்று திரும்பி அவனை நோக்கி வாளை வீசி அவன் கையில் இருந்த தடியை உடைத்தெறிந்தார். மீண்டும் அதே வேகத்தில் வாளை ஓங்க குள்ளர்கள் மீண்டும் ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்கள்.

இராமநாதன், என்னடா குள்ளர்களின் சேட்டை தாங்க முடியலையே என்று நினைத்து அவர்களை தேடி ஒவ்வொரு தூணின் பின்னாலும் போய் பார்த்தார், ஒரு தூணின் பின்னால் நிழல் அசைவதை கண்டு மெதுவாக போய் பார்த்த இராமநாதனுக்கு சிரிப்பு வந்து விட்டது, அங்கே ஒரு குள்ளன் மேல் மற்றவன் ஏறி நிற்க அதன் மேல் மூன்றாவது குள்ளன் ஏறி நின்று கையில் எலும்புத்துண்டோடு இராமநாதனை தாக்க வந்தார்கள். இராமநாதனும் ஓடி போய் இரண்டு அடி உயரம் குதித்து கடைசி குள்ளனின் கையில் இருந்த தடியை உடைத்தெறிந்தார். உடனே குள்ளர்கள் “அய்யா! நீங்க பெரிய வாள்வீரர் என்று தெரியாமல் போயிட்டு, எங்களை மன்னியுங்க, நாங்க சரணடைகிறோம், என்னை கொஞ்சம் கிழே இறக்கிவிடுங்க” என்று மேலே இருந்த குள்ளன் கெஞ்சினான்.

இராமநாதன் வெற்றிப்புன்னகையோடு குள்ளர்களை நெருங்க, திடிரென்று நெருப்பை மிதித்தது போல் இராமநாதன் தன்னுடைய வாளை தூக்கி எறிந்துவிட்டு, துள்ளிக்கு குதித்தார்.

என்ன நடந்தது என்றால், ஒருவன் மேல் ஒருவனாக இருந்த குள்ளர்களில் நடுவில் இருந்த குள்ளன், இராமநாதனின் இடுப்பில் கையை வைத்து கிளுகிளுப்புண்டாக்க, இராமநாதன் சிரிப்பு அடக்க முடியாமல் வாளை கீழே போட்டு விட்டார். இராமநாதனின் மிகப் பெரிய பலவீனம், அவரது இடுப்பு பகுதி தான், யாராவது தொட்டுவிட்டால், உடனே கூச்சத்தால் துடித்து விடுவார். அதே பலவீனத்தை பயன்படுத்தி குள்ளர்கள் அவரது கையில் இருந்த வாளை கீழே விழவைத்ததுடன், ஓடி போய் அந்த வாளை எடுத்து இராமநாதனின் முதுகில் வைத்து அவரை கீழே அமர வைத்து விட்டார்கள்.

இராமநாதனை நோக்கி குள்ளர்களின் மூத்தவனான மந்திரன் “இளைஞனே! இங்கே வந்த யாரையும் நாங்க உயிரோடு விட்டதில்லை, இந்த நிமிடமே உன்னை நாங்கள் கொல்ல முடியும், ஆனால் அவ்வாறு செய்ய எங்கள் மனம் முதன்முறையாக இடம் கொடுக்கவில்லை. ஆக நீ எங்களுக்கு அடிமையாக பணி முடியும் என்றால் உன்னை விட்டுவிடுகிறோம், இல்லை என்றால் எங்கள் மந்திர சக்தியால் உன்னை தவளையாக மாற்றி அங்கே இருக்கும் தடாகத்தில் விட்டுவிடுவோம், எது உன் விருப்பம் சொல்”.

தந்திரக்குள்ளன் “இளைஞனே! உன்னிடம் நாங்க போரிடவில்லை, விளையாடவே செய்தோம், நாங்கள் நினைத்திருந்தால் உன்னை மந்திரத்தால் ஒரு நொடியில் வென்றிருப்போம்”.

“நம்பவில்லை என்றால் எங்கள் மந்திரசக்தியை பார் “ என்று கூறிய இந்திரன் தன் கையை உயர்த்தி ஏதோ சொல்லி அடிக்க அங்கே பயங்கரமான விலங்கு தோன்றியது, அது இராமநாதனை நோக்கி பாய்ந்து வர, நடுங்கிய இராமநாதன் “உங்களுக்கு அடிமையாகவே நான் இருக்கிறேன், என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறி குள்ளர்களின் பின்னால் நின்றுக் கொண்டார்.

மந்திரக்குள்ளன் ஏதோ மந்திரத்தை சொல்ல அந்த பயங்கரமான மிருகம் மறைந்தது. இராமநாதனுக்கு அவர்கள் சாதாரண குள்ளர்கள் இல்லை, படுபயங்கரமான குள்ளர்கள் என்பது புரிந்தது. இவர்களிடம் தன் வீரத்தால் வெல்ல முடியாது, விவேகத்தால் தான் வெல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்து “அய்யா குள்ளர்மார்களே! நான் உங்க அடிமையாகவே இருக்க விரும்புகிறேன், என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன், இனிமேல் நீங்க தான் எனக்கு எஜமான்கள்” என்றார்.

குள்ளர்களும் நீ தமிழகத்திலிருந்து வந்திருக்கிறாய் என்பதை அறிவோம், “இனிமேல் நல்லா வாய்க்கு ருசியாக உங்க ஊர் சாப்பாட்டை எங்களுக்கு பொங்கிப்போடு” என்றார்கள்.

“ஆளானப்பட்ட மாவீரன் பீமனே சமையல்காரனாக இருந்தார் தானே, எனவே எனக்கு ரொம்ப சந்தோசம், உங்க விருப்பமே என் விருப்பம், எங்கே சமையல் அறை” என்றார்.

அன்று முதல் இராமநாதன் அருஞ்சுவை இராமநாதனாகி நல்ல நளபாகனாக மாறிவிட்டார். நல்ல சுவையான உணவை உண்ட குள்ளர்கள் இரவில் நிம்மதியாக குறட்டை விட்டு தூங்க, இராமநாதனுக்கோ தூக்கம் இல்லாமல் எப்படி தப்பி, மந்திரக்குடுவை எடுத்துக் கொண்டு, தங்கக்குதிரையில் மஞ்சள் ஆற்றை கடப்பது, இத்தனை பிரச்சனைகள் இருக்கும் என்று தெரிந்திருந்தால் ஊரிலேயே சொற்பொழிவோடு இருந்திருக்கலாமே என்று நினைத்தார்.

இன்னும் மந்திரக்குடுவை எங்கே இருக்குது என்று தெரியவில்லையே, இந்த குள்ளர்களோ சமையல் அறையை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று வேற உத்தரவு போட்டியிருக்கிறார்களே! இதுவரை தப்பிக்க ஒரு தடயமும் கிடைக்கலையே, இதுக்கு பேசாம தவளையாக மாறியிருக்கலாமோ என்று நினைத்த மாத்திரத்தில், இராமநாதனின் மூளையில் மின்னல் தோன்றியது.

ஆமாம், குள்ளர்கள் முதல் நாளில் அங்கே இருக்கும் தடாகத்தில் தவளையாக்கி விடுவோம் என்றார்களே! அப்படி என்றால் இப்பெரிய மாளிகையில் எங்கேயே தடாகம் இருக்குது, அது எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டும், நாளை காலையில் குள்ளர்கள் வெளியே சென்றதும் போய் பார்க்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தப்பினர் உறங்கப் போனார்.

மறுநாள் காலையில் குள்ளர்கள் வெளியே சென்றதும் இராமநாதன் முதன்முறையாக சமையல் அறைக்கு பக்கத்தில் இருக்கும் அறைகளுக்கு சென்று பார்க்கத் தொடங்கினார், சில அறைகள் பூட்டியிருந்தன, அங்கே ஒரு அறை மட்டும் ரொம்பவும் தூசி படர்ந்து, கதவில் பெரிய ஈட்டி பொருத்தியிருந்தது. அங்கே நிறைய பாம்புகளும் தேள், பூரான்கள் ஓடியது, அதை கண்டு பயந்து ஓடியே வந்து விட்டார்.

அப்படி ஒவ்வொரு அறையாக பார்த்து சென்ற போது, தூரத்தில் பெரிய அறையின் நடுவில் தடாகம் ஒன்று இருப்பதை கண்டு மகிழ்ந்தார், ஓடி போய் பார்த்தார், அதனுள் நிறைய தவளைகள் இருந்தன.

அவற்றை பார்க்க பயமாக இருந்தது, அதில் ஒரு தவளை மட்டும் நீல நிறத்தில் இருந்தது. இராமநாதனுக்கு மீண்டும் பயம் வந்து விட்டது, தடாகத்தை கண்டால் ஏதாவது வழி கிடைக்கும் என்று பார்த்தால் இங்கே தவளைகளைத் தவிர ஒன்றும் இல்லையே, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே, திரும்பினார்.

திரும்பியவர் திடுக்கென்று நின்றார், காரணம் “தம்பி! இங்கே பார்” என்ற குரல் தான்.

திடுக்கிட்டு அந்த அறை முழுவதும் சுற்றி சுற்றி பார்த்தார், யாருமே இல்லை, அப்படி இருக்கையில் யார் அழைத்திருப்பார்கள், ஒருவேளை பிரம்மையோ என்று நினைத்து மீண்டும் நகர முயல, “தம்பி, தடாகத்தின் உள்ளே பார், நான் தான் நீலத்தவளை பேசுகிறேன்”.

இராமநாதனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியலை, ஒரு தவளை பேசுவதா என்று யோசித்துக் கொண்டு தடாகத்தின் உள்ளே எட்டிப்பார்த்தார். உண்மையில் நீலத்தவளை தான் பேசியது “என்ன ஆச்சரியமாக இருக்குதா, நான் உண்மையில் தவளை அல்ல, மற்ற தவளைகளும் நிஜத்தில் மனிதர்கள் தான், அந்த படுபயங்கர குள்ளர்களால் வஞ்சிக்கபட்டவன்”

“அப்படியா? தயவு செய்து விபரமாக கூறுங்கள்”
“ உன்னை அடிமையாக்கிய அதே குள்ளர்கள் என்னிடம் அடிமையாக வேலை பார்த்தவர்கள், நான் ஒரு மந்திரவாதி, ஆனால் நல்ல செயல்களை மட்டுமே செய்பவன், ஏழை மக்களுக்கு மூலிகை வைத்தியமும் பார்த்து வந்தேன், குள்ளர்கள் மூவரும் தீய எண்ணத்தோடு என்னிடம் வேலைக்கு சேர்ந்து, என்னை ஏமாற்றி என்னுடைய மந்திரசக்தியை பறித்துக் கொண்டார்கள், மனித உருவத்தில் இருந்தால் மட்டுமே என்னால் அந்த மந்திரங்களை உபயோகிக்க முடியும், ஆகையால் என்னை என்னை நீலத்தவளையாக்கி இங்கே அடைத்து விட்டார்கள்”

“உங்களது நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்குது, என்னால் முடிந்தவரை உங்களுக்கு உதவுகிறேன், குள்ளர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது, வழியை சொல்லுங்க”

“குள்ளர்களின் முழு மந்திர சக்தியும் அவர்கள் கையில் கட்டியிருக்கும் கருப்பு கயிற்றில் இருக்கிறது, அதை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும், ஆனால் அவர்கள் கையில் கட்டியிருக்கும் வரை அதை அவர்களால் மட்டுமே தொட முடியும், மற்றவர்கள் தொட்டால் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்.

“அய்யோ, அப்படி என்றால் எப்படி தான் கையில் இருந்து எடுப்பது, ஏதாவது வழி சொல்லுங்க”

“நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுக்கிறேன், அதை நீ சொன்னால் 10 நிமிடம் வரை மாயமாக மறையலாம், அதை வைத்து நீ வழி கண்டுபிடி, ஒருமுறை மட்டுமே இந்த மந்திரம் வேலை செய்யும், 10 நிமிடம் பின்னர் உன் உருவம் தெரிய ஆரம்பித்து விடும், ஜாக்கிரதை”

இராமநாதனுக்கு அந்த மந்திரத்தை நீலத்தவளை சொல்லிக் கொடுக்க, அதை மனப்பாடமாக்கிக் கொண்டார். பின்னர் குள்ளர்கள் வருவதற்குள் சமையல் முடிக்க வேண்டும் என்று நினைத்து வேக வேகமாக வந்தார்.

இன்று இரவில் எப்படியாவது மந்திரக்கயிற்றை எடுத்து விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டே என்றும் இல்லாமல் மிகவும் சுவையாக உணவை சமைத்தார்.

வேட்டையாடி களைப்பாக வந்த குள்ளர்கள், இராமநாதன் சமைத்து வைத்த உணவை மூக்குபிடிக்க உண்டார்கள். அதே களைப்பில் குறட்டை விட்டு உறங்கத் தொடங்கினார்கள். இராமநாதனோ உறக்கம் இல்லாமல் தவித்தார், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார், புரண்டு படுத்த போது கால்சட்டை பையில் ஏதோ உறுத்தியது, அது தான் காக்கா முத்து, அப்போ தான் அவருக்கு சின்னவயதில் செய்த குறும்பு ஒன்று நினைவுக்கு வந்தது, அதை உபயோகித்து தப்பிக்க வழி கிடைக்கும் என்று நம்பினார்.

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், குள்ளர்களின் அருகில் சென்று நீலத்தவளை சொல்லிக் கொடுத்த மந்திரத்தை மனதில் சொல்ல, உடனே இராமநாதனின் உருவம் மறைந்து விட்டது. தன் கையில் இருந்த காக்கா முத்தை தரையில் தேய்த்து நல்லா சூடேறியதும் மந்திரக்குள்ளனின் மந்திரக்கயிற்றின் அருகில் அதை தேய்தார், தூக்கத்திலிருந்த குள்ளனுக்கு சுளீர் என்று சுட, ஏதோ பூச்சி தான் கடிக்குது என்று நினைத்து கையை தேய்தான், மீண்டும் இராமநாதன் அதே போல் செய்ய இந்த முறை தூக்கம் கலையுது என்ற கடுப்பில் வேகமாக கையை தேய்க அவன் கையில் கட்டியிருந்த மந்திரக்கயிறு அறுந்து கீழே விழுந்தது.

இராமநாதனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியலை, இன்னும் இருவர், அவர்களிடமும் இதே முறையை கையாள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து அதே போல் காக்கா முத்தை தரையில் வேக வேகமாக தேய்து தந்திரக்குள்ளனின் கையில் இருப்பதை கீழே விழவைத்தார்.

ஆனால் இந்திரக்குள்ளனுக்கோ சொரணையே இல்லாதது போல் இருக்க, மாயமாக மறையும் மந்திரத்தின் நேரமும் முடிய போகுதே என்ற கவலையும் பயமும் இராமநாதனை ஒட்டிக் கொண்டது. வழக்கம் போல் கடைசியில் தன் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக் கொண்டார். என்ன ஆச்சரியம் தூரத்தில் கொடுந்தேள் ஒன்று ஓடியது, அவர் அதை பிடித்து இந்திரக்குள்ளனின் கைப்பக்கம் கொண்டு போய் கொட்ட வைக்க, இப்போ உண்மையில் இந்திரக்குள்ளனுக்கு வலி எடுக்க வேகமாக கையை தேய்க்க, மந்திரக்கயிறு அறுந்து விழுந்தது, உடனே இராமநாதன் அந்த மூன்று கயிற்றையும் எடுத்துக் கொண்டு தடாகத்தை நோக்கி ஓடினார், அந்த கயிறுகளை நீலத்தவளையிடம் கொடுக்க, அடுத்த நொடியில் அது மனிதனாக மாறியது, முதியவராக அந்த மந்திரவாதி வைத்தியர் மாறினார்.

அடுத்து அவர் ஏதோ மந்திரம் சொல்ல, மூன்று குள்ளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அவர் காலில் விழுந்தார்கள். மந்திரவாதியும் அவர்களை மன்னித்து கடுமையாக எச்சரித்து விரட்டி விட்டார். “இனிமேல் உங்களுக்கு பிறரை ஏமாற்ற நினைக்கும்ப்படியாக மூளை வேலை செய்யாது, எங்கேயாவது போய் வேலை செய்து பிழைத்துக் கொள்ளுங்கள்”

பின்னர் இராமநாதனை நோக்கி “தம்பி! உன்னுடைய புத்திசாலித்தனத்தால் என்னையும் மற்றவர்களையும் காப்பாற்றியிருக்கிறாய், உனக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியலை, உனக்கு என்ன தேவை என்று சொல், கட்டாயம் உதவுகிறேன் என்றார்.

இராமநாதன் தன்னுடைய கதையை சொன்னார், தான் காந்தார தேச மன்னனுக்கு உதவ வாக்கு கொடுத்ததையும் சொன்னார். தனக்கு தேவையான மந்திரநீர் உள்ள குடுவையை கேட்டார்.

“தம்பி! எனக்கு அந்த கொடிய மந்திரவாதி கடம்பனை நன்கு தெரியும், அவனுக்கு மரணமே வரக்கூடாது என்பதற்காக பல யாகங்கள் நடத்தி, தீய சக்திகளின் உதவியோடு பல உயிர்பலிகளை செய்து பலவிதமான மந்திர சக்திகள் பெற்றிருக்கிறான், அவனை என்னால் வெல்ல முடியாது, மந்திரத்தால் வெல்வதை விட உன் மதியால் வெல்ல முடியும், உனக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும், அந்த பெரிய அறையில் இருக்கும் மந்திர நீர் குடுவையை கொடுக்கிறேன், அத்துடன் 3 அதிசய வேர்களையும் தருகிறேன், அவை உனக்கு சமயம் வரும்போது உதவும்”.

இராமநாதனும் மந்திரக்குடுவை, வேர்களோடு தங்கக்குதிரை இருந்த இடத்தை அடைந்தார், மந்திர நீரை குதிரையின் மேல் ஊற்ற அது உயிருள்ள பேசும் குதிரையாக மாறியது.

இராமநாதன் அதன் மேல் ஏறி அமர்ந்து மஞ்சள் ஆற்றைக்கடந்து பட்டு தேசத்தின் அரண்மனைக்கு போகச் சொன்னார்.

தங்கக்குதிரையும் நம்ம இராமநாதனை ஏற்றிக் கொண்டு வானவெளியில் பறந்தது, இராமநாதனுக்கு புதிய அனுபவம், வானத்தில் பறக்கும் போது மேகங்களும் பறவைகளும் அவரை கடந்து சென்றன, அவரும் பாட்டு பாடிக் கொண்டே மஞ்சள் ஆற்றின் மேல் பறந்து பட்டு தேச அரசரின் அரண்மனை நோக்கி பறந்தார்.

5 மறுமொழிகள்:

At 3:27 PM, March 28, 2006, Blogger சிவா மொழிந்தது...

காத்திருந்து படிச்சாச்சு பரஞ்சோதி! 'தொடரும்' போட மறந்துட்டீங்களா என்ன?

அடடா! கதை என்னமா போகுது. நம்ம ஊரு காக்கா முத்து, நம்ம ஊரு சாப்பாடு கூட வருதே. எப்படி ஐயா இப்படி எல்லாம் யோசிக்கறீர் :-). ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போறீங்க. நல்லா இருக்கு. இன்னும் எத்தனை பாகம் இருக்கு. வாழ்க்கைல சீரியல் பார்க்க கூடாதுன்னு ஒரு கொள்கையோட இருக்கேன். பாத்துக்கோங்க..ஆமாம். :-)

 
At 3:46 PM, March 28, 2006, Blogger G.Ragavan மொழிந்தது...

ஆகா! இராமநாதன் கைச்சமையல் நன்றாக இருக்கும் என்று தெரியாமல் போயிற்றே.....அது சித்திரக்குள்ளர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ம்ம்ம்ம்...என்ன இராமநாதன்...சித்திரக்குள்ளர்களுக்குச் சாப்பாட்டில் மருந்து வைத்துக் கொடுத்திருக்கலாமே! எப்படியோ தப்பித்தது மகிழ்ச்சி.

 
At 10:11 AM, March 29, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க சிவா,

ஆமாம் தொடரும் போட மறந்துட்டேன், மாத்தனும்.

அப்புறம் காக்கா முத்து எல்லாம் நினைவு இருக்குதா? அதை வைத்து பள்ளியில் நிறைய கூத்து நடத்தியிருக்கேன். எங்க அத்தை பொண்ணு கையில் சூடு வைத்து, அப்புறம் அடியும் வாங்கியிருக்கேன்.

எத்தனை பாகம் என்று நான் முடிவே செய்யலை, அதுவா போயிட்டு இருக்குது, இராமநாதன் என்ற பெயர் ராசி என்று நினைக்கிறேன்.

அய்யா, கண்டிப்பாக சீரியல் மாதிரி அறுவையாக இருக்காது, சீக்கிரம் முடிக்கிறேன். அப்புறம் வாண்டுகளின் சாகசங்கள் தொடரணும். கொஞ்சம் அபியையும் அனுப்பி வையுங்க.

 
At 10:13 AM, March 29, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

இராகவன் அண்ணா,

இராமநாதனின் கைப்பக்குவம் எப்படியே வெளியே சொல்லியாச்சு, இனிமேல் அவர் பாடு திண்டாட்டம் தான்.

அப்புறம் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற நாம் எப்படி விருந்தை வைத்து ஒருவருக்கு கெடுதல் செய்வோம், அதான் உங்க வழியை அவர் பின்பற்றவில்லை. ஆமாம் பெங்களூருக்கு வந்தால் எனக்கு இதே கதி தானா?

 
At 4:01 PM, March 29, 2006, Blogger யாத்ரீகன் மொழிந்தது...

ஹீம்.. பரஞ்சோதி... இந்த வாரமும் நல்லா சுவாரசியமாவே இருந்துச்சு..

 

Post a Comment

<<=முகப்பு