சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, April 29, 2006

கதை மலர் 99 - நயவஞ்சக நரி

ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.

மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.

அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.

“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?'' என்று கேட்டது ஆண் கழுகு.

“கழுகாரா... வாங்க... கூட யாரு? மன்னியா?'' என்று கேட்டது.


“ஆமாம்!'' “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!'' என்று கேட்டது.

“ஆமாம்...! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்...! ஏன் கேட்கிறீர்?'' என்று கேட்டது நரி.

“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!'' என்றது ஆண் கழுகு.

“ரொம்ப ராசியான மரம் இது... முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!'' என்றது நரி.

“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?'' என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.

“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!'' என்றது நரி.

பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!'' என்றது.

ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை... இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்... கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!'' என்றது.

“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!'' என்றது நரி.

நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.

பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.

பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்... பேஷ் பேஷ்...

“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?'' என்று கேட்டது அம்மா பன்றி.

“பேஷாக தங்கலாம்!'' என்றது நரி.

“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?'' என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.

“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே... கவலையே படாதே...! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்...! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்...! நானிருக்க பயமேன்?'' என்றது நரி.

பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் "கர், கர்' என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.

வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.

“இதோ பாருங்கள்...! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்... உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!'' என்றது.

இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.

மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.

“பன்றியே...! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!'' என்றது நரி.

பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.

கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.

ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.

நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.

யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.

3 மறுமொழிகள்:

At 8:55 PM, May 13, 2006, Blogger சிவா மொழிந்தது...

பரஞ்சோதி! கொஞ்ச நாளா இந்த பக்கம் வர முடியாம போச்சு. இந்த கதையும் நல்ல கதை. சுயபுத்தியோட இருக்கணும். அடுத்தவன் பேச்சை கண்ணை முடிக்கிட்டு கேட்கக் கூடாது என்று நல்ல கருத்து.

//கூட யாரு? மன்னியா?// கலக்கறீங்க :-))

 
At 8:45 AM, May 16, 2006, Blogger  வல்லிசிம்ஹன் மொழிந்தது...

பரஞ்ஜோதி, நல்ல கதை.என் பேரனுக்கு நாளைக்கு படித்துக்
காண்பிக்கலாம். அடுத்த கதையில்

நரியை ஏமாற்றுவது பற்றி வரவேண்டும். ஏனென்றால் நீதி நல்லவர்கள் வெற்றீ பெற வேண்டும்.
சக்திக்கு அன்பு.

 
At 10:07 PM, May 20, 2006, Blogger றெனிநிமல் மொழிந்தது...

பரஞ்சோதி நன்றாக நடாத்திச் செல்கின்றீர்கள் இந்த பக்கத்தினை வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

 

Post a Comment

<<=முகப்பு