சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, July 21, 2005

கதை எண் 18 - தேவ மைந்தன்

Image hosted by Photobucket.com

அது ஓர் குதிரை லாயம். நாலைந்து அழகிய குதிரைகளுடன் ஒரு கழுதைக் குட்டியும் அங்கே இருந்தது. குதிரைகளை நல்ல முறையில் பராமரித்து வந்த எஜமான், கழுதைக் குட்டியைக் கவனிப்பதே இல்லை. அதற்குத் தீனி போடுவதும் இல்லை. குதிரைகள் தின்று கழித்துப் போடுவதைத் தின்றே கழுதைக் குட்டி பசியாற்றிக் கொள்ளும்.

குதிரைகள் மினுமினுப்பான தேகத்துடன், அழகிய பிடரி மயிருடன் மிக நேர்த்தியாகவே இருந்தன. அவை கழுதைக் குட்டியைப் பரிகாசம் செய்து கேவலமாகப் பேசும். சமயத்தில் உதைத்துத் தள்ளியும் கடித்தும் துன்புறுத்தி வந்தன. அதனால் கழுதைக்குட்டிக்குச் சொல்ல முடியாத மனத்துயரம். மௌனமாகக் கண்ணீர் வடித்துக்கொள்வதைத் தவிர, அதனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

''கடவுளே, அடுத்த பிறவியிலாவது என்னை குதிரையாகப் படைத்துவிடு. கழுதைக் குட்டி யாகப் படைத்துவிடாதே...'' என்று மனதுக்குள் குமுறிக்கொண்டது. பெரிய நீளமான காதுகளும் முண்டுமுண்டான சூம்பிய கால்களும் அசிங்கமான வாலும் கழுதைக் குட்டிக்கே தன்மீது வெறுப்பும் கோபமுமாக இருந்தது. அப்போது எஜமானன் வருவதைக் கண்டது. அவருடன் வேறு ஒருவரும் வந்தார்.

வந்தவர், ''ஐயா! என் பெயர் ஜோசப். நானும் என் மனைவி மரியாவும் பெத்தலஹேமுக்குச் செல்கிறோம். மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறாள். இந்த இருள் சூழ்ந்த வேளையில், அவளால் ஒரு அடிகூட நடக்க முடியாமல் களைத்துப் போய்விட்டாள். உங்களால் ஒரு குதிரையைக் கொடுத்து உதவ முடியுமா? உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும்...'' என்று கெஞ்சாத குறையாக அவரிடம் கேட்டார்.

எஜமானன் தீவிர சிந்தனையுடன் தாடியைத் தடவிக்கொண்டே, தனது அழகிய மினுமினுப் பான கொழுத்த குதிரைகளைப் பார்வையிட்டான். 'இந்தக் குதிரைகள் மிகவும் விலை உயர்ந்தவை. நான் ஒருபோதும் இவற்றில் ஒன்றையேனும் இழக்கத் தயாரில்லை. இந்தக் கழுதைக்குட்டியால் எனக்கு எந்தவிதப் பயனும் இல்லை. தண்டமாகத் தின்றுவிட்டு, லாயத்தை அசுத்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்த வழிப்போக்கனிடம் இதைத் தள்ளிவிடலாம்' என்று மனதுக்குள் எண் ணிக்கொண்டான்.

அவன் ஜோசப் பைப் பார்த்து, ''ஐயா! உங்களைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மேலும், குதிரைகள் மிகவும் சண்டியானவை. வேகமாக ஓடுபவை. அவை கர்ப்பிணியான உங்கள் மனைவியைப் பாதுகாப்பாகச் சுமந்து செல்லாது. இந்த நோஞ்சான் கழுதைக்குட்டிதான் அதற்கு ஏற்றது. மிகவும் மெதுவாக, சோம்பேறித்தனமாக நடந்து செல்லும். அதை வேண்டுமானால் ஓட்டிப் போங்கள்...'' என்றான்.

கழுதைக்குட்டிக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைந்தால் போதாதா! கழுதை பரிவோடு மரியாவைப் பார்த்தது. சாந்தமும் கருணையும் நிறைந்த அந்த முகத்தில் சோர்வும் களைப்பும் நிறைந்திருந்தன. 'ஒரு ஏழைப் பெண்ணுக்கு தன்னாலும் உதவ முடிந்ததே!' என்ற எண்ணம் அதன் உடலில் புத்துணர்வையும் புதுப்பொலி வையும் ஏற்படுத்தின.

குதிரைகள், கழுதைக்குட்டியை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தன. கழுதைக்குட்டி மிகப் பெருமையுடன் மரியாவைச் சுமந்துகொண்டு சந்தோஷத்துடன் நடக்கத் தொடங்கியது. நீண்ட நடைப்பயணத்துக்குப் பிறகு நடுஜாமம் நெருங்கும் வேளையில், அவர்கள் பெத்தலஹேமுக்கு வந்து சேர்ந்தனர்.

கழுதைக்குட்டிக்குக் களைப்பே தெரியவில்லை... மாறாக, உற்சாகமே மேலிட்டது! சத்திரங்கள் எல்லாம் நிறைந்துவிட்டன. தங்குவதற்கு அவர்களுக்கு இடமே கிடைக்கவில்லை. இறுதியில் ஒரு கொட்டிலில் அடைக்கலமாக அவர்கள் தங்கினார்கள்.

கர்ப்பிணியான மரியா, கழுதைக் குட்டியை அன்புடன் தடவிக் கொடுத்து, அதன் முகத்தில் முத்தமிட்டாள். கழுதைக் குட்டியின் உடலெல்லாம் பரவசம் ஏற்பட்டது. பிறவிப்பயன் அடைந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஜோசப் அதற்குத் தீனியும் தண்ணீரும் வைத்தார். கழுதை மிகவும் மகிழ்ச்சியுடன் தின்றுவிட்டுத் தூங்கிவிட்டது.

சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்த கழுதைக்குட்டிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சூரிய ஒளி போன்ற சின்னஞ்சிறு மலர் ஒன்று மரியாவின் மடியில் தவழ்வதை அது கண்டது. ஆடுகளும் மாடுகளும் சூழ்ந்து நின்று, அவர்களைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.

சிறிய ரோஜா மலர் போலிருந்த பிஞ்சுக் குழந்தை மெதுவாகக் கண்களைத் திறந்து, கழுதைக் குட்டியைப் பார்த்தது. அதைத் தொட முயற்சித்தது. கழுதைக்குட்டி மிகவும் நெருங்கி வந்து, அவர்களை குளிர் தாக்காதவண்ணம் பாதுகாத்தது.

தான் ஒரு குதிரையாகப் பிறவி எடுக்காமல், அவலட்சணமான கழுதைக் குட்டியாகப் பிறந்ததற்கு அது மிகவும் சந்தோஷப்பட்டது. பிறந்திருப்பது உலகை ரட்சிக்க வந்த தேவமைந்தன் என்பதை அது அறியவில்லை. தான் ஓர் அதிர்ஷ்டப் பிறவியாக எண்ணி மகிழ்ந்தது!

2 மறுமொழிகள்:

At 5:54 PM, July 21, 2005, Blogger கோபி(Gopi) மொழிந்தது...

பிறப்பினில் உயர்வு தாழ்வில்லை என்று வலியுறுத்தும் நல்ல கதை..

படித்து முடித்ததும் முதன்முறையாய்க் இந்தப் பாடலை கேட்ட போது உண்டான அதே உணர்வு மீண்டும் தோன்றியது

"அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே

விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே

கண்­ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே

நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே

இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே

முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே"

 
At 8:14 AM, July 23, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி கோபி,

மிக அருமையான பாடல்.

சின்ன வயதில் பள்ளியில் தேவ மைந்தனின் கதைகளை ஆசிரியர்கள் சொல்லக் கேட்டு அதிசயித்து போயிருக்கிறேன்.

அவர் மனித சமுதாயத்தின் மீது காட்டிய இரக்கத்தை நாம் நினைத்து பார்த்தாலே போதும், உலகம் வன்முறையற்றதாகி விடும்.

 

Post a Comment

இப்பதிவுக்கு தொடுப்புகள்:

Create a Link

<<=முகப்பு