சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Wednesday, November 16, 2005

கதை எண் 61 - அழியாத செல்வம்

சிங்காரப்பட்டிணத்தின் சின்னராணி சித்திரலேகாவின் அழகும், அறிவும் அவனி அம்பத்தாறு தேசங்களிலும் பிரபலம்.

சின்னராணியை திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரர்கள் "நீ, நான்" என்று ஒற்றைக் காலில் நின்றனர்.

சித்ரலேகாவின் தந்தை சித்திரசேனன் யாருக்கு அவளை திருமணம் செய்து கொடுப்பது என்று புரியாமல் குழம்பினார்.

புத்திசாலியான தன் மகளிடமே இதற்கு ஒரு நல்ல உபாயம் சொல்லுமாறு கேட்டார்.

சின்னராணியின் ஆலோசனைப்படி அரசன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான்.

"அழியாத செல்வம் உடையவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால் அதை சின்னராணியிடம் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்த ஆண் மகனுக்கு சின்னராணி மாலை இடுவார்". இப்படி அறிவிக்கப்பட்டது.

சின்னராணியின் சுயம்வரச் சேதி காட்டுத் தீ போலப் பரவியது.

ராஜகுமாரர்கள் சித்திரசேனனின் நாட்டை நோக்கி விரைந்தனர்.

சித்திரசேனனின் சிங்காரப்பட்டினம் விழாக் கோலம் பூண்டிருந்தது.

மக்கள் தங்கள் ராஜகுமாரியை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.

விழா மண்டபத்தில் மன்னன் சித்திரசேனன் நடுநாயகமாக வீற்றிருந்தான். அவன் பக்கத்தில் ஒருபுறம் பட்டத்து ராணியும் மறுபுறம் சின்னராணியும் அமர்ந்திருந்தனர்.

எப்போதும் இல்லாத அளவிற்கு ராஜப்பிரதானிகளும் பொது மக்களும் அரசவை மண்டபத்தில் திரண்டிருந்தனர்.

சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த ராஜகுமாரர்கள் முன் வரிசையில் ஆடம்பரமாக அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொரு ராஜகுமாரனும் தன்னுடைய நாட்டின் பரப்பு, செல்வ வளம், இவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு கொண்டு வந்து சித்திரசேனனிடம் கொடுத்தனர்.

உலகத்திலேயே விலை மதிப்பற்ற ஒரு அரிய வைரக்கல்லை கொண்டு வந்து சின்னராணியின் காலடியில் வைத்தான் ஒரு ராஜகுமாரன்.

இன்னொருவன் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட மிக அழகிய சிம்மாதனம் ஒன்றைக் கொண்டு வந்தான், தனது செல்வத்தின் அடையாளமாக.

இவை எதுவுமே ராஜகுமாரியை திருப்திப்படுத்தவில்லை. ராஜகுமாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அப்போது இளைஞன் ஒருவன் மண்டபத்திற்குள் வந்தான்.

அவன் கையில் ஓலைச்சுவடி கட்டு ஒன்றை வைத்திருந்தான். பார்ப்பதற்கு ஒரு ஏழைப்புலவன் போல இருந்தான்.

"புலவரே.. இன்று சுயம்வரம்.. நடக்கிறது நாளை வாருங்கள் சன்மானம் தருகிறேன்.." என்றார் மன்னர்.

"நான் சன்மானம் பெற வரவில்லை.. சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.." என்றான் இளைஞன்.

"நீ.. என்ன விலைமதிப்பற்ற செல்வம் கொண்டு வந்திருக்கிறாய்.." என்று சிரித்தபடியே கேட்டார் மன்னர்.

உடனே அந்த இளைஞன் தன் கையிலிருந்த ஓலைச்சுவடிக் கட்டை மன்னனிடம் கொடுத்தான்.

ஓலைச் சுவடிக் கட்டை சின்னராணியிடம் கொடுத்தார் மன்னர். சின்னராணி சுவடியைப் பிரித்தாள். திருக்குறள் அத்தனையும் அதில் எழுதப்பட்டிருந்தது.

"நான் கேட்டது விலை மதிப்பற்ற செல்வம்.. அழியாத செல்வம்.. ஆனால் நீ என்னிடம் கொடுத்திருப்பது.. திருக்குறள்.." என்றாள் சின்னராணி.

"ஆமாம் இளவரசி.. இரண்டும் ஒன்றுதானே திருக்குறள் கல்வியின் அடையாளம். எல்லாச் செல்வத்திலும் கல்விதான் அழியாத செல்வம். விலைமதிப்பற்ற செல்வம்"

"அது எப்படி அழியாத செல்வம் ஆகும்" என்றாள் சின்னராணி.

"நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கலாம். அள்ள அள்ள குறையாதது கல்வி ஒன்றுதான்" என்றான்.

"நீங்கள் போட்டியில் ஜெயித்துவிட்டீர்கள். நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றாள் சின்னராணி.

"அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரு ஆசிரியன் நான்" என்றான் அவன்.

கல்வி கேள்விகளில் சிறந்த ஆசிரியர் சின்னமணி அழகிற் சிறந்த சின்னராணிக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது.

சின்னமணியும் சின்னராணியும் சிங்காரப்பட்டினத்தில் பல ஆண்டுகள் அரசாண்டு பல பள்ளிகளைத் திறந்து மக்களின் கல்விக் கண்களைத் திறந்தனர்.

8 மறுமொழிகள்:

At 12:52 PM, November 16, 2005, Blogger b மொழிந்தது...

செல்வத்துள் செல்வம் பெருஞ்செல்வம் அச்செல்வம்
செல்வதுள் எல்லாம் தலை.

கல்விச் செல்வம் பற்றிய கதை அருமை பரம்ஸ்.

 
At 10:00 PM, November 16, 2005, Blogger குமரன் (Kumaran) மொழிந்தது...

மிக நல்ல எளிமையான கதை பரஞ்சோதி. இன்னைக்கே போய் என் பொண்ணுகிட்ட இந்தக் கதையை சொல்லிட வேண்டியதுதான். :-) நீங்க தான் இன்னும் ஒரு வருடம் காத்திருக்கணும் சக்திகிட்ட கதைகளைச் சொல்ல...இல்லையா?

 
At 11:14 PM, November 16, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

மூர்த்தி அண்ணா,

உங்க கருத்திற்கு நன்றி.

கொடுக்க கொடுக்க அழியாத செல்வமாச்சே கல்விச் செல்வம். அதன் சிறப்பை போற்ற நிறைய கதைகள் இருக்கின்றன.

 
At 11:18 PM, November 16, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

குமரன் அவர்களே உண்மை தான் நான் சக்திக்கு கதை சொல்ல இன்னமும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும், ஆனால் சக்தி தினமும் என்னிடம் என்ன என்னவோ சொல்கிறார். ஒரு வேளை கதை சொல்கிறாரோ தெரியவில்லை.

உங்க வீட்டு தேவதையின் பெயர், வயது என்ன?

 
At 5:16 PM, November 17, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

அருமையான கதை.
அதுசரி அரசர் மகளை 'சின்னராணி' என்றா அழைப்பர்? இளவரசி என்றுதானே.

 
At 7:57 PM, November 17, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

சகோதரி கீதா, உங்க வருகைக்கு நன்றி.

சின்னராணி, இளையராணி, இளவரசி என்றும் சொல்லலாம்.

ஒருவேளை அந்த ஊரில் அப்படி அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.

அய்யா, சின்ன அய்யா என்று அழைக்கிறோம் இல்லையா அது மாதிரி தான்.

 
At 8:00 AM, November 18, 2005, Blogger மாதங்கி மொழிந்தது...

பரஞ்சோதி,

சகதியிடம் கதை சொல்ல காக்க வேண்டாம். இன்றே, இப்போதே சொல்லத்தொடங்கிவிடுங்கள். இந்தக் கதையை ஒரு இரண்டு வயதுக் குழந்தைக்கு எப்படிச் சொல்வீர்களோ அப்படியே சொல்லுங்கள். சக்திக்கு புரியுமா என்ற ஐயமெல்லாம் தேவையேயில்லை. குழந்தையின் முகத்தைப் பார்த்தவாறு சிறு புன்னகையுடனும், தேவைப்படும்போது நாடக அபிநயங்களுடன், மென்மையான குரலில் சொல்லுங்கள்.
சொல்லும்போது இடையில் வேறு யாரிடமாவது பதில் சொல்லநேர்ந்தால், இதோ ஒரு நிமிஷம் சக்தி, என்று சொல்லி பின் கதவைத்திறந்தோ அல்லது வேறு எதுவோ- அதன் பின் இதோ அப்புறம் என்னாச்சுனா என்று தொடருங்கள்.

பிறந்து சில நாட்களே ஆன குழந்தையிடம் கூட தாராளமாக கதை சொல்லலாம்.
சக்தி, அப்பா இதோ ஆபீஸிலிருந்து வந்துவிட்டேன், நீ எப்படி இருக்கிறாய், மத்தியானம் என்ன சாப்பிட்டாய், நான் சப்பாத்தி - உருளைக்கிழங்கு சாப்பிட்டேன் *அல்லது வேறு எதாவது

அப்பா இப்போது உனக்கு ஒரு குட்டிக்கதை சொல்லப்போகிறேன், என்று நீங்கள் உங்களுக்கு பேசத் தோன்றுவதையெல்லாம் குழந்தையின் முகத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சம் வினாடிகள் இடைவிட்டு பேசுங்கள். அப்படியே நீங்கள் நல்லதொரு குட்டிக்கதையை தினமும் சொல்லி வாருங்கள். மழலை மொழியில் குழந்தையுடன் பேசலாம் ஆனால் அதைவிட கூட சரியான மொழியில் பேசுவது குழந்தைக்கு நல்ல மொழி வளத்தையும் உச்சரிக்கும் திறனையும் கொடுக்கும்.

எ-டு
தச்சி, தோத்தோ, பிச்சி என்று அடிக்கடி சொல்வதை விட தயிர், நாய்க்குட்டி, பிஸ்கெட் என்று சொல்லுவது குழந்தைக்கு நல்ல மொழித்திறனைக் கொடுக்கும்.
பத்து மாதத்தில் குழந்தை அழகாகப் பேசும்.
கிடைக்கும் நேரம் சில நிமிடங்கள் என்றாலும் அதை நன்றாக குழந்தையுடன் பயன்படுத்துவீர்கள் என்று தோன்றுகிறது.

 
At 7:50 AM, November 19, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

சகோதரி மாதங்கி,

ஆகா, அற்புதமாக சொல்லியிருக்கீங்க.

நீங்க சொன்னதை அனைத்தையும் குழந்தைகள் பகுதியில் அப்படியே சொல்ல இருக்கிறேன்.

ஆமாம், நீங்க சொன்ன மாதிரியே நான் செய்கிறேன். சக்தி அவங்க அம்மா வயிற்றில் இருக்கும் போதே நான் என் அம்மா, என் மனைவி, கிரண்பேடி, சானிய மிர்சா, அருந்ததி ராய், பி.டி. உஷா, இந்திரா காந்தி போன்ற சாதனை பெண்மணிகள் பற்றி சொல்லியிருக்கிறேன், எப்படி எல்லாம் சாதிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.

பிறந்த 3வது மாதத்திலேயே என் பேச்சை, செய்கையை கவனிக்கத் தொடங்கியது, தினமும் கதை சொல்லுவேன், அதுவும் அனைத்து வகையான மிருகங்கள், பறவைகள், போன்றவற்றின் பெயரை சொல்லி, அவை எப்படி சப்தம் போடும் என்றும் சொல்லி இருக்கிறேன். அவர் அதை நன்றாக கவனிப்பார், சிரிப்பார். அவருக்கு மிகவும் பிடித்த சப்தம் கிளியின் கிக் கீ கிக் கீ தான்.

இப்போ நான் தினமும் வெளியே அழைத்துச் செல்கிறேன், கண்ணில் படும் மிருங்களை காட்டி, அவற்றைப் பற்றி சொல்கிறேன்.

நீங்க சொன்னதை இன்று முதல் செய்யத் தொடங்குகிறேன். தொடர்ந்து உங்கள் அனுபவங்கள், கருத்துக்களை கூறுங்கள், அனைவரும் பயன் பெறுவோம்.

 

Post a Comment

<<=முகப்பு