சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, November 24, 2005

கதை எண் 63 - மந்திர புல்லாங்குழல்

ஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார், அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார், கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார், சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார், ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார்.

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் அழகேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை, இருந்தாலும் போய் வா, இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார்.

அவரும் மனம் கோணாமல் தாயாரைப் பார்க்க போகிற மகிழ்ச்சியில் சந்தோசமாக வாங்கி, முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அழகேசன் இருந்தவரை அவனால் திருட முடியவில்லை, அழகேசன் ஊருக்கு கிளம்புவதையும், அவர் சம்பளம் வாங்கி சென்றதையும் பார்த்தான், கண்டிப்பாக நிறைய தங்கம் கொண்டு செல்வார் என்று நினைத்தான், அதற்கு முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான்.

பேராசை யாரை விட்டது, இது போதாது என்று நினைத்து, அழகேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான், எப்படி அழகேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார், எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி, இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான்.

அழகேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி.

“அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க”
“தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக”
“அ=ய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க”
‘தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுது, கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். எனக்கு சில மந்திர சக்திகள் இருக்குது, அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன், உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்”

அழகேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம், அதுவும் மந்திரசக்தியால், புரியவில்லையே என்று திகைத்தார்.

“தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள்”
“அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும்”

உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார்.

அழகேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார், திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான், மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். அழகேசனுக்கு பயம், ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு, உயிரை இழக்க வேண்டும், என்று நினைத்து, பையில் இருந்த 3 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார், தங்கம் கிடையாதா, கஞ்சப்பயல், அதான் அவன் வீட்டில் நான் இத்தனை தங்கம் இருந்ததா, ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன்”

“என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன்”
“நான், நம்ப மாட்டேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?”
அழகேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான், அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து “மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது, இரு, ஊதி எடுக்கிறேன்” என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார்.

அதிலிருந்து அருமையான இனிய இசை கிளம்பியது, அனைத்து பறவைகளும் மெய் மறந்து கேட்டன, திருடன் சும்மாவா இருக்க முடியும், திருடனும் ஆகா, ஓகோ என்று தை தைக்கா என்று குதிக்கத் தொடங்கினான், அழகேசன் விடாமல் இசைக்க, திருடன் அங்கே இங்கே ஆடத் தொடங்கினான், கீழே விழுந்தான், முள் செடியில் மாட்டிக் கொண்டான், தொடர்ந்து ஆட உடம்பு எல்லாம் அடிப்பட்டு, ரத்தக்களரியாகி, “அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லேன்னா, நான் செத்து போயிடுவேன், என்னால் வலி தாங்க முடியலை, ஆடாமலும் இருக்க முடியலை, நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்” என்றான்.

அழகேசனும் அவனிடமிருந்ததை எல்லாம் வாங்கி விட்டு, அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார்.

அங்கே ஜமிந்தார் “அய்யோ, எல்லாமே போயிட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போயிட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போயிட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன்” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அழகேசன் அவரை பார்த்து “அய்யா அழ வேண்டாம், திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனன காட்டில் கட்டி வைத்திருக்கிறேன், உடனே ஊர்க்காவலர்கல் போய் பிடியுங்க, இதோ உங்க நகைகள், பணம், சரி பாருங்க” என்றார்.

ஜமிந்தாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்ப்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

9 மறுமொழிகள்:

At 2:33 PM, November 24, 2005, Blogger ஜயராமன் மொழிந்தது...

பரஞ்சோதி மாமா!

உங்கள் கதைகள் ரொம்ப ஜோர்.

உங்களிடமும் நிறைய கதை சொல்லும் ஒரு புல்லாங்குழல் இருக்கா?

இன்று ஸ்கூல் லீவு. (மழையாம்!)

தேங்க் யூ!

நிரஞ்சன்

 
At 4:53 PM, November 24, 2005, Blogger ENNAR மொழிந்தது...

அந்த காலங்களில் சோற்றுக்குழைப் பார்கள் அந்த அளவிற்கு நாட்டில் பற்றாகுறை. எந்த பொருள் மீதமிருந்தாலும் அதை பயன் படுத்துவார் எனது தந்தை கூறுவார் வேட்டி கிழிந்தால் துண்டு; துண்டு கிழிந்தால் கோவணம் என. இன்று அப்படியா?

 
At 6:17 PM, November 24, 2005, Blogger யோசிப்பவர் மொழிந்தது...

ஐ! கதை சொல்ல நல்ல தாத்தா கிடைச்சுட்டார். இனிமே என்ன மாதிரி குட்டீஸ்க்கு ஜாலிதான்!!!

 
At 8:14 PM, November 24, 2005, Blogger கலை மொழிந்தது...

பரஞ்சோதி அங்கிள்! உங்களுடைய சிறுவர் பூங்காவிலிருந்து வாசித்து அம்மா எனக்கு நிறைய கதை சொல்லுகிறா.

 
At 10:58 PM, November 24, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க, வாங்க நிரஞ்சன் செல்லம்.

ஆமாம், என்னிடம் அப்படி ஒரு புல்லாங்குழல் இருக்குது, அது என்னுடைய நினைவு சக்தி.

அது மட்டும் இல்லாமல் எங்க வீட்டில் இருக்கும் 11 மாத குட்டி சக்தி.

அப்புறம் இணையம்

இந்த மூன்றும் சேர்ந்து இருப்பதால் நிறைய கதைகள் கொடுக்க முடிகிறது.

உங்க அப்பா, நிறைய இராமாயணக்கதைகள் சொல்லுவாங்க தானே. நல்லா கதைகள் கேட்டு அதன் படி நடக்க வேண்டும் சரியா.

 
At 11:02 PM, November 24, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

அய்யா என்னார்,

மிகச்சரியாக சொன்னீங்க, அந்த காலத்தில் (குருட்டு) எஜமான விசுவாசம் நிறையவே இருந்தது.

இன்று அப்படி இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே.

இன்றோ விசுவாசம் என்றாலே கிலோ என்ன விலை என்று கேட்கிறாங்க.

வருங்கால சந்ததியனராவது கடவுளுக்கு, தாய், தந்தைக்கு, உதவிய உற்றார் உறவினருக்கு, நண்பர்களுக்கு, சம்பளம் கொடுக்கும் எஜமானருக்கு விசுவாசமாக இருக்க வைக்க வேண்டியது நம் கடமை.

 
At 11:03 PM, November 24, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க வாங்க யோசிப்பவர் அவர்களே!
உங்க வருகை நல்வரவாகுக.

நீங்க ரொம்பவே யோசித்து என்னை தாத்தா என்று அழைத்து இருக்கீங்க.

தா-தா என்று சொன்னால் போதாதா, கதை கொடுக்காமலா இருப்பேன், பின்ன ஏன் த் சேர்த்தீங்க.

 
At 11:29 PM, November 24, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

அஞ்சலி செல்லம்,

உங்க வருகைக்கு மிக்க நன்றி. நீங்க நல்லா படிச்சு, நல்ல பிள்ளையாக வளரவும், படிப்பு, விளையாட்டு, இசை, கதை சொல்வது அனைத்திலும் பரிசுகள் பெற்று, அதைக் கண்டு பெற்றோர் பெருமையடைய வாழ்த்துகள்.

அம்மா சொல்லும் கதைகள் கேட்டப்பின்பு அதில் என்ன அறிவுரை இருக்குது என்று கேளுங்க, அதை புரிந்துக் கொண்டு அதன் படி நடந்து வாங்க.

அப்புறம், நான் மட்டும் கதை சொன்னால் போதாது, நீங்களும் சொல்லுங்க, நீங்க சொல்வதை படிக்க இனிமையாக இருக்குது.

 
At 5:22 AM, November 26, 2005, Blogger Unknown மொழிந்தது...

ஏம்பா எல்லாரும் பரஞ்ச்சோதிய மாமா, தாத்தான்னு கூப்பிட்டு வயசக்கூட்டுறீக? கதை சொன்னா தாத்தாவா என்ன? பரஞ்சோதி குதிரையில ஒக்காந்து சவாரி போறது நீங்கதானே? நல்ல முகம் தெரியுற மாதிரி போட்டோவாப் போடுங்க :-))

 

Post a Comment

<<=முகப்பு