சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Friday, September 30, 2005

கதை எண் 42 - ஆறாவது முட்டாள்அரசர் கிருஷ்ணதேவராயருக்கு அன்று விபரீதமான ஓர் ஆசை ஏற்பட்டது. அவர் அப்பாஜியிடம், ""அமைச்சரே, இன்று மாலை ஆறு மணிக்குள் நம் தலைநகரான விஜயநகரை நீர் நன்றாகச் சுற்றிப் பார்த்து, ஆறு முட்டாள்களின் விலாசத்தைக் குறித்துக் கொண்டு வாருங்கள்,'' என்று ஆணையிட்டார்.

""முட்டாள்களின் முகவரி எதற்கு?'' என்று பணிவுடன் கேட்டார் அப்பாஜி.

""வீணாக விளக்கம் கேட்க வேண்டாம். சொன்னதைச் செய்யும்!'' என்று அரசர் கண்டிப்பாகக் கூறினார்.

அரசர் விருப்பப்படி முட்டாள்களைத் தேடி அலைந்தார் அப்பாஜி. அந்தி நேரத்திற்குள் ஆறு முட்டாள்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் விலாசத்தைக் குறிக்க வேண்டுமே! எங்கே போவது? எப்படி முட்டாள்களைச் சந்திப்பது?

அப்பாஜி இரண்டு மணி நேரம் மாறு வேடமணிந்து முட்டாள்களைத் தேடினார். யாரையும் காணோம். நகர எல்லையை ஒட்டிய மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்றார்.

அப்போது ஒருவன் கழுதை மீது ஏறி வந்தான். அவன் தலை மீது ஒரு புல்கட்டினைச் சுமந்து கொண்டிருந்தான்.

""ஐயா, கழுதை மீது இருக்கும் நீர் ஏன் புல்கட்டினைச் சுமந்துக் கொண்டிருக்கிறீர்?'' என்று கேட்டார் அப்பாஜி.

""உமக்கு அறிவு இருக்கா? என் கழுதைக்கு வயதாகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து விட்டது; அதனால், என்னை மட்டுமே சுமக்க இயலும். இந்தப் புல்கட்டினையும் சேர்த்துச் சுமக்க இயலாது. ஆகவே, நான் புல்கட்டினைச் சுமந்து செல்கிறேன்,'' என்றான்.

அப்பாஜிக்கு ஒரே மகிழ்ச்சி. தான் தேடி வந்த முட்டாள்களில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டானே! அவனிடம் சாமர்த்தியமாகப் பேசி அவனது விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார்.

சிறிது துõரம் சென்றதும் அருகில் உள்ள ஒரு மரத்தின் நுனி கிளையில் ஒருவன் உட்கார்ந்துக் கொண்டு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அப்பாஜி,

""ஐயா! இப்படி உட்கார்ந்துக் கொண்டு வெட்டினால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள்.
அந்த பக்கமா உட்கார்ந்து வெட்டுங்க,'' என்றார்.

""ஏன்யா... நான் என்ன மடயன்னு நெனச்சியா... நான் இப்படி உட்கார்ந்துகிட்டு மரத்தை வெட்டினா இந்த மரக்கிளை கீழே விழும். நீ உடனே துõக்கிகிட்டு ஓடலாம்னு பார்த்தியா? அதுக்காகத் தானே நான் இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டுறேன்,'' என்றான்.

""சே! உங்க புத்திசாலித்தனம் யாருக்கு வரும்... உங்க வீட்டு முகவரியை கொடுங்க...'' என்று வாங்கிக் கொண்டார். அடுத்து பாட்டி ஒருத்தி அடுப்பை பற்றவைக்க மிகவும் போராடிக் கொண்டிருந்தார்.

""பாட்டி என்ன பிரச்னை? என்றார் அப்பாஜி, ""அய்யா! இது நல்லா காய்ஞ்ச விறகு தான். மண்ணென்ணெய் இல்லை. தண்ணியும், மண்ணென்ணெயும் ஒரே மாதிரி தானே இருக்கு அதனால இந்த விறகுகள்ல நல்லா தண்ணிய ஊத்தி எரிய வைக்க முயற்சி செய்றேன் எரியவே மாட்டேங்குது,'' என்றாள். சிரித்துக் கொண்டே அவளது முகவரியையும் குறித்துக் கொண்டார் அப்பாஜி.

அடுத்த முட்டாள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று முட்டாளைத் தேடியாக வேண்டும்! ஒரு மணி நேரமே உள்ளது.

அலுத்துப் போய் ஆற்றங்கரைக்குச் சென்றார் அப்பாஜி. அங்கே ஒருவன் குளித்து முடித்துவிட்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்பாஜி அவனிடம்,

""தாங்கள் எதைத் தேடிக் கொண்டு அலைகிறீர்கள்?'' என்று விசாரித்தார்.

அவன், ""ஐயா, நான் என் உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டுக் குளித்தேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் பணத்தையும், உடைகளையும் காணோம்,'' என்று கவலையுடன் கூறினான்.

""ஏதாவது அடையாளம் வைத்து இருந்தாயா?''

""ஆமாம், அடையாளத்தையும் காணோம்.''

""என்ன அடையாளம்?''

""வானத்தில் வெண்மேகம் ஒன்றிருந்தது. அதை அடையாளமாகக் கொண்டு அதன் அடியில் அவற்றை வைத்தேன்.''

அவனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்ட அப்பாஜி அவன் பெயரோடு விலாசத்தையும் குறித்துக் கொண்டார்.

மாலை ஆறு மணி அப்பாஜி அரசனிடம் விரைந்து சென்றார். நான்கு முட்டாள்களுடைய விலாசத்தையும் கொடுத்தார்.

கிருஷ்ணதேவராயர் அவற்றைப் பார்த்தார். முட்டாள்களின் விபரங்களை அறிந்து ரசித்து சிரித்த அரசன், ""அமைச்சரே, இன்னும் இரண்டு முட்டாள்களின் விலாசம் எங்கே?'' என்று கேட்டார்.

அப்பாஜி, ""அரசே, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மந்திரி நாள் முழுவதும் முட்டாள்களைத் தேடிக் கொண்டு அலைந்தது முட்டாள்தனமல்லவா! ஆகவே, எனது விலாசத்தை ஐந்தாவதாக எழுதிக் கொள்ளுங்கள்,'' என்று பணிவோடு வேண்டினார். அரசரும் அப்பாஜியின் முகவரியை எழுதிக் கொண்டார்.

பிறகு, ""அமைச்சரே, ஆறாவது முட்டாளின் விலாசம் எங்கே?'' என்று அரசர் ஆர்வத்துடன் கேட்டார்.

""அரசே, கோபித்துக் கொள்ளாதீர்கள்! உங்கள் விலாசம் உங்களுக்குத் தெரியாதா? ஒரு நாட்டின் அமைச்சருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று ஒரு ஒழுங்கு கிடையாதா? நாம் அறிவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களால் பல நன்மைகளைப் பெற வேண்டுமே தவிர, முட்டாள்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களது தொடர்பால் நம்மையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாதல்லவா!'' என்று உருக்கமாகக் கூறினார்.

அரசனுக்குத் தான் செய்த தவறு புரிந்து விட்டது. தன் கையிலிருந்து நான்கு முட்டாள்களின் விலாசத்தையும் உடனே கிழித்து எறிந்தார். அப்பாஜியின் அறிவுக் கூர்மையையும் துணிச்சலையும் பாராட்டி அவருக்குப் பரிசு அளித்தார்.

Wednesday, September 28, 2005

கதை எண் 41 - பேயால் வந்த வாழ்வு

Image hosted by Photobucket.com

முன்னொரு காலத்தில் மதின் என்ற இளைஞன் பொன்னேரி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தான். இவனது பெற்றோர் இறந்துவிட்டனர். இனி அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் பக்கத்திலுள்ள ஊருக்கு வேலை தேடிச் சென்றான். உச்சி வெயில் அதிகமானது.

அப்போது ஆலமரத்தடியில் படுத்து துõங்கினான். அவனை யாரோ தட்டி எழுப்புவது போல் இருந்தது. துõக்கம் கலைந்து விழித்த போது ஒரு பேய் மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. பேய்... பேய்... என்று அலறினான்.

""தம்பி பயப்படாதே... நானும் உன்னைப் போல் மனிதன் தான். தற்சமயம் பேயாக இருக்கிறேன்.''

மதினுக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

""உன் பெயரென்ன தம்பி?''

""மதின்!''

""எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?''

""வேலைத் தேடி நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.''

""நானும் உன்னைப் போல் இருந்தவன் தான். நுõறு வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் இந்த காட்டிற்கு வந்தேன். இங்கே தவம் செய்த முனிவரைப் பார்த்து கேலியாக சிரித்தேன். ஆத்திரம் அடைந்த முனிவர் என்னை பேயாகும்படி சபித்துவிட்டார்.

""பிறகு நான் அவரைப் பார்த்து மன்றாடினேன்.

""ஐயா, தயவு செய்து இந்தச் சாபத்திற்கு ஏதேனும் விமோசனம் சொல்லுங்கள். இப்படி மனித பேயாய் நான் எத்தனை நாட்கள் திரிவது?'' என்று கேட்டான்.

""சரி, நீ கெஞ்சிக் கேட்டுக் கொள்வதால் உனக்கு விமோசனம் தருகிறேன். உன் கதையை எந்த மனிதன் பொறுமையோடு கேட்கிறானோ அன்று நீ மீண்டும் மனிதனாவாய். பிறகு விண்ணுலகுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இம்மனிதப் பிறவியிலிருந்து விடுதலை அடைவாய்...'' என்றார்.

""பல காலம் நான் மற்றவர்களிடம் என் கதையை சொல்ல முயன்றேன். அவர்கள் என்னைப் பார்த்ததும் ஓடிவிடுகிறார்கள்'' என்று கூறிய பேய் மறைந்து போய் அழகான வாலிபன் தோன்றினான். சிறிது நேரத்தில் அவன் மேல் எழுந்து வானத்தை நோக்கிச் சென்றான். என்னை ""எப்போது நினைத்துக் கொண்டாலும் உனக்கு நல்லதே நடக்கும். நீ எடுத்த காரியத்திலும் வெற்றி அடைவாய்,'' என்ற பேய் மேகத்தின் நடுவில் மறைந்து போனது.

மதினுக்கு எல்லாமே கனவு போல் இருந்தது.

புதிய நகரை அடைந்தான். அங்கே நாடே விழாக்கோலம் கொண்டது. என்ன விஷயம் என்று கேட்டான்.

""உனக்குத் தெரியாதா? அரசரின் பிறந்த நாள் விழாவை நாளை கொண்டாட இருக்கின்றனர். வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அரண்மனை உபசரிப்பும் கொடுப்பார்கள்,'' என்றான்.

சிலம்பம், மல்யுத்தம் என நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரசரின் சிறப்பு விருந்தினராக விரும்பிய மதின் பேயை மனதில் நினைத்துக் கொண்டான். பேயின் உதவியால் எல்லா போட்டிகளிலும் வென்றான்.

அவனுக்கு ஓர் அறை கொடுக்கப்பட்டது. அரண்மனை உணவும் வழங்கப்பட்டது. ஒரு வாரம் தங்கி விருந்துண்டு தன் அறைக்குச் சென்றான் மதின்.

அங்கிருந்த அழகிய மஞ்சத்தில் படுத்தவுடன் உறக்கம் வந்துவிட்டது. நடு இரவில் விழித்த மதின், தன் அறையில் சிறிது நேரம் உலாவினான். அப்போது சுவற்றில் காட்டெருமையின் கொம்பு பதிக்கப்பட்டுள்ளதைக் கண்டான். அதைப் பிடித்துப் பார்த்தபோது "கிர்ர்...' என்ற சப்தம் கேட்டது.

அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அதைப் பிடித்துத் திருகிய போது, தரையில் ஒரு சுரங்க வழி ஏற்பட்டது. ஒரு தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான்.

கீழே பெரிய அறை ஒன்று இருந்தது. எங்கு பார்த்தாலும் போர் ஆயுதங்களும் முத்து மாலைகளும் தங்க மாலைகளும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன.

துõரத்தில் யார் நின்று கொண்டிருப்பது? அமைச்சர் ராஜசேகர்... இங்கு என்ன செய்கிறான்? உற்றுப் பார்த்தான். நகைகள், பணத்தை திருடி பையில் போட்டுக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த வாளை உருவி, அவனை வெட்டச் சென்றான் மதின்.

அதற்குள் ரகசிய வழியில் தப்பி விட்டான் அமைச்சன்.
பிறகு மதின் தன் இருப்பிடத்திற்குச் சென்று காட்டெருமைக் கொம்பைத் திருகி தரையை முன்பு போல மூடச் செய்தான்.

இதை எப்படியாவது அரசரிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டான்.

இரவோடு இரவாக அமைச்சரை பற்றி மன்னனிடம் கூறினான்.
பல நாட்களாக பொக்கிஷ அறையில் திருடு போவதை அறிந்திருந்த அரசர், எத்தனையோ காவல் போட்டும் கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தை மதின் சொன்னதும் மகிழ்ந்தார். உடனே அமைச்சரை கைது செய்ய ஆட்களை அனுப்பினார் மன்னர்.

குடும்பத்துடன் தப்ப இருந்த அமைச்சரை கைது செய்து சிறையில் அடைத்தான் அரசன். அரசனது முன்னோர்கள் வைத்திருந்த இந்த ரகசிய வழி அரசனுக்கே தெரியவில்லை. இதை எப்படியோ அறிந்த அமைச்சன், இத்தனை நாட்களாக ரகசிய வழியில் நுழைந்து நகை திருடிய விஷயம் இப்போது தான் புரிந்தது. மதினை பாராட்டிய மன்னன் அவனையே தன் அமைச்சனாக்கிக் கொண்டான். பேயால் தனக்கு கிடைத்த வாழ்வை எண்ணி மகிழ்ந்தான் மதின்.

Tuesday, September 27, 2005

கதை எண் 40: குருவின் நல்ல உள்ளம்

Image hosted by Photobucket.com

ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார்.

குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர்.

மலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது.

ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார்.

சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை.

செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி.

ஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

""ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்,'' என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள்.

தட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார்.
ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர்.

திராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர்.

சீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. "இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய்த் தானே உண்டது ஏன்?' எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது.
சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். ""நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே... ஏன்?''

""அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்,'' என்றார் குரு.

""உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா?''

""என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், "இந்தப் பழம் புளிக்கிறது' என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை,'' என்று சொன்னார் முனிவர்.

எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.

Monday, September 26, 2005

கதை எண் 39 - அண்ணல் நபி (ஸல்) ஏன் அழுதார்

ஒரு நாள் மாலை நேரம் அண்ணல் நபி (ஸல்) தன் நண்பளுடன் பேசிக் கொண்டிருந்தார், அப்போ அங்கே ஒரு இளைஞன் வந்தார், வந்தவரை உபசரித்து, என்ன விசயம் என்று கேட்டார்.

உடனே அதற்கு அந்த இளைஞன் "எனது தந்தையார், என்னுடைய பொருட்களையும், செல்வங்களையும் எனக்குத் தெரியாமல் உபயோகிக்கிறார், செலவு செய்கிறார், அவருக்கு அறிவுரை கூறுங்கள்" என்று முறையிட்டார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவரது தந்தையாரை அழைத்து வர ஆள் அனுப்பினார்.

சிறிது நேரத்தில் ஒரு முதியவர் தன் ஊன்று கோல் துணையுடன் நடக்கவே சிரமப்பட்டு பெருமானார் முன்னால் வந்து நின்றார்.


பெரியவரின் மகன் கொடுத்த புகாரை அந்த முதியவரிடம் கூறிய அண்ணல் நபி (ஸல்), முதியவரின் விளக்கம் கேட்டார்.

அப்போ அந்த முதியவர் "இறைத்தூதர் அவர்களே!.. என் மீது புகார் கொடுத்த என் மகன் பிறந்த போதும் சரி, குழந்தையாக, பெரியவனாக வளர்ந்த போதும் சரி, அவன் பலவீனமாகவும், ஒன்றுமே தெரியாதவனாகவும், ஒன்றும் இல்லாதவனாகவும் இருந்தான், நான் அப்போ வலிமையாகவும், செல்வந்தனாகவும் இருந்தேன், என்னுடைய உழைப்பு, செல்வம், என் வாழ்நாள் முழுவதையும் அவனுக்கு என்று செலவு செய்தேன், அவன் செய்த செலவுகளை கொஞ்சம் கூட கணக்கு பார்த்தது இல்லை.

கால சுழற்சினால் நான் பலவீனப்பட்டு, வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு ஆளாகி விட்டேன்.என் மகன் வலிமை படைத்தவனாக, ஆரோக்கியமானவனாக, செல்வந்தனாக இருக்கிறான், அவன் என்னிடம் ஒரு பைசா கூட தருவது இல்லை, மேலும் நான் உபயோகிக்கக் கூடாது என்பதற்காக ஒளித்து வைக்கிறான். என்று தன் ஆதங்கத்தை கூறினார்.

உடனே அங்கே ஒரு அரிய சம்பவம் நடந்தது, பெரியவரின் வார்த்தைகளை கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, அவர் அழுதே விட்டார்.

பின்னர் அந்த இளைஞனை நோக்கி அழுத்தமாக இவ்வாறு கூறினார்

"தோழரே! நீயும், உனது செல்வமும் உன் தந்தைக்குரிய உடமைகள் என்பதை மறவாதே".

அந்த இளைஞன் மனம் திருந்தி தந்தையை அணைத்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். முதியவரை ஒரு குழந்தையைப் போல் போற்றினான்.

செல்லங்களா "நம்ம தாத்தா, ஆச்சிகள் எல்லாம் ஒரு காலத்தில் நம் அப்பா, அம்மாவை எத்தனை அருமையாக கவனித்து வளர்த்திருப்பாங்க, என்ன என்ன கஷ்டங்கள் அனுபவத்த்திருப்பாங்க, அப்படிபட்ட அவங்களை நாம் போற்ற வேண்டும், அவர்கள் அறிவுரைகள் கேட்டு நடக்க வேண்டும். அன்பாக இருக்கவேண்டும், சரியா..."

Saturday, September 24, 2005

கதை எண் 38 - பீர்பாலின் புத்திசாலித்தனம்

பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.

அதனால ஒரு கடிதத்துல, மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர்.

கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு.

பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு. அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினாரு.

அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?னு விசாரிச்சாரு.

அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்னாரு.

பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு.

நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.

இப்போ அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்னு. பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்பினாரு.

அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தாராம்.

குழந்தைகளா! நம்முடைய வாழ்க்கையிலும் கூட நம் புத்திசாலித்தனத்தை நிருபிக்க வாய்ப்பு கிடைக்கும், அப்போ அருமையாக நிருபித்தால் நல்ல பெயர் எடுக்கலாம்.

Friday, September 23, 2005

கதை 37 - குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்

சின்ன வயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்லி மறக்காத கதைகளில் இதுவும் ஒன்று.

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டிய கதைகளில் இதுவும் ஒன்று.

இனி கதைக்கு போவோம்.


ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு அப்பத்தை எடுத்தன. அந்த அப்பத்தைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப் பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது.

இரண்டு பூனைகளும் சண்டை பிடித்துக் களைத்துப் போயின. அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல், யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.

அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது.

அப்பத்தை இரண்டாக வெட்டித் தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது.

இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.

இப்படியே அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது.

ஒற்றுமையற்ற பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன.

குழந்தைகளே! ஒரு பூனையாவது கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் இத்தனை நஷ்டம் ஏற்பட்டிருக்குமா? விட்டுக் கொடுத்தல் பிறரிடம் நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும், இறைவனுக்கும் அதுவே பிடிக்கும்.

Thursday, September 22, 2005

கதை எண் 36 - துணிச்சலான சிறுவன்விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி.

சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

விபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.

அவர்கள் வந்ததும், " இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்" என்று பயமுறுத்தினார்.

இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.

அவனது நண்பர்கள், "ஐயையோ...ஏறாதே....பேய் உன்னை அடித்துவிடும்" என்று கத்தினார்கள். " இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்...சரிதான். ஆனாலப்படிப் பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்." என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான்.

அதற்கு மற்ற சிறுவர்கள், " அது சரி...உன் தாத்தா சொன்னபோது...சரி என்று தலையை ஆட்டினாயே...அது ஏன்?" என்று கேட்டதற்கு, "எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்".


குழந்தைகளா, மரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா?.....

எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச் சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார் தானே, அவரே தான். அவரைப் பற்றி நிறைய கதைகல் இருக்கின்றன, விரைவில் சொல்கிறேன்.

Wednesday, September 21, 2005

கதை எண் 35 - புத்திசாலி பெலிக்ஸ்

Image hosted by Photobucket.com

ஒரு ஊரிலே ஏழைத் தாய் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் அன்பானவள். அவளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் பெலிக்ஸ். அம்மாவைப் போலவே அன்பான குணங்கள் நிறைந்தவன். ஆனால், நல்ல பலசாலி. நாளுக்கு நாள் பலம் மிக்கவனாக அவன் வளர்ந்து வந்தான்.

அந்த ஊர் அரசன் மிகவும் கர்வம் பிடித்தவன்; இரக்கமில்லாதவன். ஏழைகளைத் துன்புறுத்துவதில் இன்பங் காண்பவன்.

எல்லாவிதமான போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்து கொண்டான். அங்கிருந்த எல்லா வீரர்களையும் அவன் சண்டையிட்டுத் தோற்கடித்தான். அதனால் அங்குள்ள மக்கள் எல்லாரும் அவனுக்கு "மகாவீரன்' என்ற பட்டத்தைச் சூட்டினர். மகாவீரன் பெலிக்ஸ் தன்னுடைய பலத்தையும் ஆற்றலையும் தவறான விஷயங்களுக்காக ஒரு போதும் பயன்படுத்தவில்லை. மக்களின் நன்மைக்காகவே தன் வீரத்தை பயன்படுத்தி வந்தான். கொடிய காட்டு மிருகங்கள் அந்த ஊரின் வயல்களுக்குள் புகுந்து நாசஞ் செய்த போது அவன் அவற்றை வேட்டையாடிக் கொன்றான். இதனால் மக்கள் அவன் மீது மேலும் அன்பு கொண்டனர்.

இவனது வீரச்செயல் அரசனின் காதுகளில் வீழ்ந்தது. அரசனுக்கு அவன் மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்படியே இவனது புகழை வளரவிட்டால் தனக்கும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணினான். எனவே, பெலிக்ஸ்சை எப்படியும் அழித்துவிட நினைத்தான் அரசன்.
பெலிக்ஸ்சை எப்படி அழிப்பது என்று அவன் யோசித்தான். பெலிக்ஸ்சை போன்ற பலசாலியோடு மோதுவதற்கு யாரும் முன்வர மறுத்துவிட்டனர். அரசனுக்கு இதனால் மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.


தந்திரத்தாலும், வஞ்சனையாலுந்தான் இவனை வெற்றி கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு அரசன் வந்தான்.

பெலிக்ஸை அரசன் கொல்ல நினைத்த விஷயம் அவனுக்கு தெரிய வந்து கொஞ்சமும் தாமதியாது அவன் தன்னுடைய தாயையும் அழைத்துக் கொண்டு மாயமாக அங்கிருந்து மறைந்து விட்டான். அங்குள்ள தன் பிரியமான தோழர்களான சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து போவது தான் பெலிக்ஸ்க்கு மிகவும் கவலையை அளித்தது.

ஒரு நாள்—
அந்த ஊருக்கு ஒரு பூதம் வந்தது. அந்த பூதம் மிகவும் பிரமாண்டமானதாயிருந்தது. அது மூச்சுவிட்டால் புகை புஸ்புஸ்ஸென்று கிளம்பிற்று. வாயைத் திறந்தாலோ நெருப்புக் கக்கிற்று. பெரிய முட்கள் நிறைந்த பனைமரம் போல அதன் வால் நீண்டிருந்தது. தனது அச்சமூட்டும் வாலினால் அது மிருகங்களையும் சுழற்றிப் பிடித்து அடித்துக் கொன்றது.
இதனால் ஊர் மக்கள் வெளியே வர அஞ்சினர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டனர்.


அவர்கள் வயலுக்குப் போகாததால் பயிர் செய்ய முடியவில்லை. இதனால் அந்த ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பெலிக்ஸ் ஒருவனாலேயே அந்த விலங்குப் பூதத்தைக் கொல்ல முடியும் என நினைத்த அரசன் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க ஒற்றர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்பி வைத்தான். அவர்களும் பெலிக்ஸ் இருக்குமிடத்தை அறிந்து கொண்டனர். அரசனுக்குச் செய்தியை உடனே அறியப்படுத்தினர்.

உடனே அரசன், பெலிக்ஸ்சை தனது அரண்மனைக்கு இழுத்து வரும்படி கட்டளையிட்டான். படை வீரர்கள் அவனைக் கைது செய்ய முயன்றனர். பெலிக்ஸ் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் வீசி எறிந்தான். படை வீரர்கள் எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்து திரும்பி ஓடிப் போய் அரசனிடம் நடந்தவற்றைக் கூறினர்.
அரண்மனையில் எல்லாரும் ஒன்றாகக் கூடி யோசித்தனர். கடைசியில் பெலிக்ஸ்சிடம், விலங்கு பூதத்திடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி கேட்க குழந்தைகளை அனுப்பி வைப்பதென்று முடிவாயிற்று. அப்படியே அவன் இருந்த வீட்டிற்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தாங்கள் பூதத்திற்குப் பயந்து வாழ்வதை குழந்தைகள் பயத்தோடு அழுதபடியே கூறியதைக் கேட்க பெலிக்ஸ் மிகவும் இரக்கம் கொண்டான். அந்தக் குழந்தைகளின் கண்ணீரை அவன் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னான். விலங்குப் பூதத்தோடு தான் சண்டையிட்டு அதை வெல்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தான்.
பின்னர் அவன் பனிரெண்டு பீப்பாய் நிறையத் தாரையும், பனிரெண்டு வண்டியில் வைக்கோலையும் சேகரித்தான். பெரியதொரு தண்டாயுதத்தையும் எடுத்துக் கொண்டான். பூதத்தின் குகை வாசலிலே இவற்றோடு போய் நின்ற அவன், பூதத்தை தன்னோடு சண்டைக்கு வரும்படி சவால் விட்டான்.


பூதம் ஆவென்று வாயைப் பிளந்து சீறியபடி அவனைக் கடிக்க வந்தது. உடனே கொதிக்க வைத்த தார்க் குழம்பை அதன் வாயினுள்ளே ஊற்றினான். அந்தத் திரவம் பூதத்தின் பற்களையும் வாயையும் கெட்டியாகப் பிடித்து, அது வாயைத் திறக்காமல் செய்துவிட்டது. தனது கையில் தண்டாயுதத்தை எடுத்து அதன் முகம், உடலெங்கும் ஓங்கி அடிக்கத் தொடங்கினான். ஏதும் செய்ய முடியாத பூதம் தனக்கு இரக்கம் காட்டும்படி மன்றாடியது. தீமைக்கு ஒருபோதும் இரக்கம் காண்பிக்கக் கூடாது என்று எண்ணினான் பெலிக்ஸ். பெரிய ஏரை அந்த பூதத்தின் மேல் பூட்டி, நகரத்தின் வயல் முழுவதையும் நன்றாக உழுது முடித்தான் பெலிக்ஸ்.

இவ்வளவு நாளும் வீட்டுக்குள் அடைந்து கிடந்த மக்கள், வெளியே வந்தனர். பெலிக்ஸ்சை வாழ்த்தினர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் பெலிக்ஸ்சை சுற்றி நின்று மகிழ்ந்தனர்.
பிறகு பூதத்தை மன்னித்து அதை அந்த ஊரை விட்டே போய்விடும்படி கூறினான்.


பூதமும் அங்கிருந்து போய்விட்டது. இவ்வளவு காலமும் கொடியவனாக நடந்து வந்த அரசன் தனது குணத்தை மாற்றிக் கொண்டான். பெலிக்ஸை மிகவும் போற்றினான். மீண்டும் அவனையும் அவனது தாயாரையும் தனது ஊருக்கே வரச் செய்தான். பெலிக்ஸை அரசன் தனது படைத் தளபதியாக நியமித்து ஆனந்தமாக வாழ்ந்து வரலானான்.

Monday, September 19, 2005

கதை எண் 34 - தன்னலமற்ற சேவை

Image hosted by Photobucket.com

முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம்.
இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார்.

சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான்.

பல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. மன்னன் இதனைக் கண்டு பூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான்.

அன்று இரவு அரசன் துõங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும் இருந்தது.

இறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.

மன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரே கோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் துõக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. "இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே!' என்று வேதனையடைந்தான். காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

காவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், ""அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?'' என்று கேட்டான்.

கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, ""ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்... தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது!''

""இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,'' என்றான் அரசன்.

""நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை... அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது?'' என்று வியப்புடன் கேட்டாள் கிழவி.

""தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்!'' என்றான் அரசன்.

நெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, ""மன்னா! இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது,'' என்றாள் கிழவி.

""தாயே! நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்!'' என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.

Sunday, September 18, 2005

கதை எண் 33 - கடவுளின் கருணை

கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான்.

இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர்.

கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா?


நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.

அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான். இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.

ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.

வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். ""என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?'' என்று நக்கல் செய்தான்.

வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.

""அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும்
கிண்டல் செய்யாதே,'' என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது துõரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோ பயங்ரமாக துரத்தியது.

குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா.

Thursday, September 15, 2005

கதை எண் 32 - சிங்கம் - அசிங்கம்

Image hosted by Photobucket.com

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அதனுடைய மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டது. அதனால் அது மிகவும் கவலையுடன் காணப்பட்டது. சிங்கத்தி டம் நரி, புலி, கரடி, சிறுத்தை போன்ற மிருகங் கள் வந்து துக்கம் விசாரித்து சென்றன. சிங் கம் முன்போல் காட்டில் அதிகமாக நடமாடாமல் தன்னுடைய உணவிற் காக மட்டும் வெளியே செல்லும். மற்றபடி தன்னுடைய குகையி லேயே இருக்கும். எப் பொழுதும் அது தன்னு டைய மனைவியைப் பற்றியே நினைத்துக் Ù

இப்படியே நாட்கள் பல ஆகிவிட்டன.

சிங்கத்தின் நடமாட்டம் அதிகமாக இல்லாததால் ஒருநாள் புலியும், நரியும் சிங்கத்தை காணச் சென் றன. சிங்கம் மிகவும் சோர்ந்து போய் வேட் டைக்கு கூடச் செல்லாமல் கண்ணீருடன் காணப் பட்டது.

புலியும், நரியும் சிங்கத் திடம், ``இன்னும் அழுது கொண்டிருந்தால் என்ன பயன் அத னால் மனதை திடப்படுத்திக் கொண்டு வாழ பழகி கொள்ள வேண்டும்'' என்றன.

அதற்கு சிங்கம் என்னு டைய மனைவி இல்லாமல் என்னுடைய பலம் அனைத் தையும் நான் இழந்து விட் டேன். என்னுடைய மனைவி தான் நான் வேட்டைக்குச் செல்லும் போது உற்சாக மும், ஊக்கமும் கொடுத்து வழியனுப்புவாள். அதனால் அவள் இல்லாமல் என்னால் வேட்டைக்கு செல்ல மனமே இல்லை. சாப்பிடவும் பிடிக்க வில்லை என்றது. புலியும், நரியும் சிங்கத்திடம் சிறிது நேரம் பேசி விட்டு குகையை விட்டு வெளியே வந்து தங்க ளுடைய இருப்பிடம் நோக் கிச் சென்றன.

நரி தன்னுடைய இருப் பிடத்திற்கு செல்லும் வழி யில் கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்களைச் சந்தித்தது. நரி அந்த மிரு கங்களிடம் சிங்கம் அது தன்னுடைய முழு பலத்தை யும் இழந்து விட்டது என்று அதன் வாயாலேயே சொன் னது என்றும் வேண்டு மானால் புலியிடம் கேட்டுப் பாருங்கள் என்றது.

புலியும் தற்செயலாக அவ்வழியே வந்தது. கரடி, சிறுத்தை, ஓநாய் ஆகியோர் புலியிடம் நரி சொல்வது உண்மையா என்று கேட்டன. புலியும் அதற்கு ஆமாம் தானும் நரியும் சிங்கத்தை சந்திப்பதற்காக சென்ற போது சிங்கம் அதன் வாயா லேயே தன்னுடைய மனைவி இறந்த பின் தன்னுடைய பலம் அனைத்தையும் இழந்து விட்டதாக சொன் னது என்று புலி மற்ற மிருகங் களிடம் கூறியது.

இதைக் கேட்ட உடன் மற்ற மிருகங்களுக்கு ஆச் சரியம் தாங்க முடியவில்லை. ஏனென்றால் சிங்கத்தின் பலத்தை வைத்து தான் காட்டில் உள்ள மற்ற மிரு கங்கள் அதற்கு பயந்து மரியாதைக் கொடுத்தன. ஆனால் சிங்கமே தன்னு டைய பலம் அனைத்தையும் தான் இழந்து விட்டதாக ஒப்புக் கொண்டதால் தாங் கள் இனி சிங்கத்திற்கு பயப் பட வேண்டாம் என்று புலி, கரடி, நரி, சிறுத்தை, ஓநாய் முதலான மிருகங்கள் தங்க ளுக்குள் பேசி முடிவெடுத் தன.

நான்கு நாட்கள் கழித்து புலி, கரடி, நரி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள் சிங்கம் அதன் குகைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந் தன. அப்பொழுது அவ் வழியே சிங்கம் வந்தது. சிங்கம் அமைதியாக அவ் வழியே அவர்களை கடந்து செல்கையில் புலியும், நரியும் தாங்கள் இனி யாரும் சிங் கத்திற்கு பயப்பட மாட் டோம் என்று அதன் காதில் விழு மாறு சற்று சத்த மாகவே சொன்னார்கள்.

சிங்கம் அதைக் கேட்டு ஒன்றும் சொல்லாமல் அமை தியாக சென்று விட்டது.

புலியும், நரியும் இப்படி சொல்லியும் சிங்கம் அமைதி யாக சென்றதால் சிங்கம் உண்மையிலேயே தன்னு டைய பலத்தை இழந்து விட் டது என்றும் அது பயந்து தான் அமைதியாக செல் கிறது என்றும் தங்களுக் குள் பேசிக் கொண்டன.

சிங்கத்தை அடிக்கடி புலி, நரி, கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள் கேலி செய்து வந்தன. சிங்கமும் அமைதியாக அவர்களின் பேச்சை காதில் வாங்காமல் சென்று விடும்.

ஒருநாள் சிங்கம் வேட் டைக்குச் சென்று ஒரு மானைக் கொன்று அதைத் தன்னுடைய வாயில் கவ்விக் கொண்டு குகையை நோக்கி வந்து கொண்டிருந் தது. சிங்கம் வழக்கம் போல் குகைக்கு செல்லும் வழியில் நரி, புலி, கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள் நின்று கொண்டிருந்தன.

சிங்கம் தூரத்தில் இருந்தே அவர்களை பார்த்து விட்டபடியால் அமைதியாக நடந்து வந் தது. நரி மற்ற மிருகங்களிடம் தான் சிங்கத்தின் வாயில் கவ்விக் கொண் டிருக்கும் மானை பறித்து வருவதாக கூறி சிங்கம் வரும் வழியில் குறுக்கே சென்று நின்றது.

சிங்கமும் நரியின் அருகே வந்து விட்டது.

நரி சிங்கத்திடம் சிங்கத்தின் வாயில் உள்ள மானை தன்னிடம் கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி விடு மாறு கூறியது .இல்லாவிட்டால் தான் சிங்கத்தை அடித்தே கொன்று விடுவ தாக மிரட்டியது. சிங்கத்தின் வாயில் கவ்விக் கொண்டிருக்கும் மானை பிடித்து இழுத்தது. சிங்கம் ஏற்கனவே பசியில் வேறு இருந்தது. தான் கஷ்டப் பட்டு வேட்டையாடி விட்டு தனக்காக கொண்டு வரும் இரையை மற்றொரு வர் அபகரிக்க நினைப்பதால் அது இவ்வளவு நாட்கள் காத்த தன்னு டைய பொறுமையை இழந்து விட்டது. கவ்வியிருந்த மானை கீழே வைத்து விட்டு மிகக் கடுமையான கோபத்து டன் நரியை பிடித்து இழுத்து அதை இரண்டே அடியில் அதனுடைய உடலை இரண்டாக கிழித்து எறிந்து விட்டது.

Image hosted by Photobucket.com
இவற்றை எல்லாம் மரத்தடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த புலி, ஓநாய், கரடி, சிறுத்தை ஆகியோர் அங்கிருந்து நாங்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி மறைந்து விட்டனர்.

சிங்கம் மானை தன்னுடைய வாயில் கவ்வி தன்னுடைய குகையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றது. சிங்கம் சொன்னதை தவறாக எடுத் துக் கொண்ட நரி சிங்கத்திடம் வாலாட்டி தன்னுடைய முடிவை தானே தேடிக் கொண்டது. நரிக்கும் மற்ற மிருகங்களுக்கும் தெரியாமல் போய் விட்டது, சிங்கத்தின் வீரமும் பலமும் எப்பொழுதும் அதை விட்டுப் போகாதென்று.

Tuesday, September 13, 2005

கதை எண் : 31 - ஒற்றுமை

ஒரு வயல் வரப்பில் மூன்று கொக்குகள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தன. எங்கு சென்றாலும், ஒற்றுமையுடன் சென்றன. இரை தேடச் சென்றாலும் கிடைத்த இரையை கூடி பகிர்ந்து உணவு உண்டு வாழ்ந்து வந்தன.

இந்த ஒற்றுமை மற்ற விலங்கினத்துக்கும், பறவைகளுக்கும் பொறாமையாக கூட இருந்தது.


நரி ஒன்று, அந்த மூன்று கொக்குகளையும் பிரித்தே தீருவேன் என்று சபதமிட்டபடி களம் இறங்கியது.

ஒரு நாள் மூன்று கொக்குகளும் வயல் வரப்பில் இரை தேடிக்கொண்டிருந்தன. நரி தன் சூழ்ச்சியை பயன்படுத்த திட்டமிட்டது.

அதன்படி முதலில் மூன்று கொக்கு களிடமும் நட்பை ஏற்படுத்திக் கொண்டது. சிறிது நாட்கள் சென்ற பிறகு, தனிமையில் இருந்த ஒரு கொக்கிடம் சென்றது. "கொக்கு நண்பரே! இவ்வளவு அழகாக இருக்கும் நீங்கள், அவலட்சணத்தின் ஒட்டு மொத்த உருவமாக திகழும் உங்கள் நண்பர் கொக்குகளுடன் எப்படி நட்பு பாராட்ட முடிகிறது? உங்கள் அழகுக்கும் அந்தஸ்துக்கும் இது ஏற்ற காரியமா?" கேட்டது.

இதனை கேட்ட கொக்குவிற்கு நரி சொன்னது உண்மையோ என்ற சந்தேகம் ஏற்பட, "என்ன செய்வது! எல்லாம் என் நேரம்" என்றது. வந்த காரியம் முடிந்த திருப்தியில் உடனே நரி அவ்விடம் விட்டு சென்றது.

நரி இப்போது இரண்டாவது கொக்குவிடம் சென்றது. "கொக்கு நண்பரே எப்படி உள்ளீர்?" வினாவியது நரி.

"நலம் நரி நண்பரே", என்று பதிலுக்கு கூறியது கொக்கு. இரண்டாவது கொக்குவிடம் இப்போது தன் சூழ்ச்சியை தொடங்கியது நரி. "கொக்கு நண்பரே! நீர் எவ்வளவு அறிவு உடையவர். எந்த குளத்தில் எவ்வளவு மீன்கள் உள்ளன என்பதை உம் அறிவால் கண்டுபிடித்து விடக் கூடியவர் நீர். அவ்வளவு அறிவு உடைய நீர் ஒன்றும் தெரியாத உங்கள் நண்பர் கொக்குகளுடன் நட்பு கொள்வதா?" என்று சூழ்ச்சியை கிளப்பிவிட்டது.

நரி கூறிய வார்த்தைகளால், இரண்டாவது கொக்குவிற்குள் சிந்தனை எட்டிப்பார்க்க நரி தான் வந்த வேலை முடிந்த திருப்தியில் கிளம்பிப் போனது.

இதோடு நில்லாமல் மூன்றாவது கொக்குவிடம் சென்றது நரி. வழியில் மூன்றாவது கொக்கிடம், "கொக்கு நண்பரே! நீங்கள் எவ்வளவு வீரம் படைத்தவர். இரை பிடிப்பதிலும்! பறப்பதிலும், எவ்வளவு வீரம் படைத்தவர். இவ்வளவு வீரம் உடைய ஒன்றுக்கும் உதவாத உமது மற்ற 2 நண்பர் கொக்குகளுடன் சுற்றித் திரிந்ததில் உமது வீரமே உமக்கு மறந்திருக்குமே" என்று கொக்கிடம் கேட்டது.

நரியின் சூழ்ச்சியால் அந்த மூன்று கொக்கு களுக்குள் நாளடைவில் பகைமையும், யார் பெரியவன் என்ற சண்டையும் ஏற்பட்டது. ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டன. இதனால் ஒற்றுமையுடன் இருந்த மூன்று கொக்குகள் தனித்தனியே பிரிந்தன.

நடந்ததை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த கிளி ஒன்று, மூன்று கொக்குகளையும் சந்தித்து நரியின் சதித் திட்டத்தை சொல்லி முடித்தது. `அடப்பாவி!' எங்கள் ஒற்றுமைக்கு உலை வைத்து விட்டானே! நல்ல நட்பை இழந்தோமே! என்று வருந்தின.

"முன்பின் தெரியாதவர் வந்து திடீரென தேவையில்லாமல் புகழ்ந்தால் அதற்கு மயங்கி விடக்கூடாது. அப்படி மயங்கும் பலவீனம் ஒருவருக்குள் இருந்தால் அவரை மற்றவர்கள் விரைவில் தங்கள் வசப்படுத்திவிட முடியும். உங்கள் மூவர் விஷயத்தில் அதுதான் நடந்தது. இனியாவது இப்படி திடீர் புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்" என்று அறிவுறுத்தியது கிளி.

அதற்கு பின் மூன்று கொக்குகளும் மறுபடியும் நட்புடன் இருந்து வந்தன.

Sunday, September 04, 2005

கதை எண் 30 - இளம் விஞ்ஞானிகள்

Image hosted by Photobucket.com


மச்சு ரொம்ப ரொம்ப குறும்புக்காரப் பையன். அதேசமயம் பயங்கர புத்திசாலி. பாரதி வித்யாலயாவுல லெவன்த் படிச்சுட்டிருந்தான். அவனோட ஃப்ரெண்ட் பிந்து.

இன்னும் ஒரு மாசத்தில் அவங்க ஸ்கூல்ல ஒரு பெரிய சயின்ஸ் எக்ஸிபிஷன் நடக்கப்போகுது. இந்தியா முழுவதிலும் இருந்து புதுப்புது கண்டு பிடிப்புகளோடு அந்தப் போட்டியில் கலந்துகொள்ள வெகுவேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

போட்டிக் கண்டுபிடிப்புகளைக் காட்சிப் பொருளாக வைக்கவேண்டியது பாரதி வித்யாலயாவில்தான். அதனால், ஒவ்வொரு ஸ்கூலிலிருந்தும் அவங்க மாணவர்கள் என்ன கண்டுபிடிப்பை வைக்கப் போறாங்கங்கற பட்டியலை அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் பாரதி வித்யாலயாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

பாரதி வித்யாலயா சார்பில் மிச்சுவும் பிந்துவும் கலந்துக்கறதா இருந்தாங்க. அவங்க எலெக்ட்ரானிக் பெல்ட் ஒண்ணு தயாரிக்கறதுல இருந்தாங்க. அது சாதாரண பெல்ட் இல்லை. அதில் ப்ரோக்ராம் செட் பண்ணினால், ஒரு இடத்தில் இருந்து ரொம்ப வேகமா இன்னொரு இடத்துக்கும் போக முடியும், அதுவும் யாரோட கண்களுக்கும் தெரியாமல்!

பெல்ட்டின் பக்கிள் பகுதி ஒரு மினி கம்ப்யூட்டராக வேலை பார்த்தது.

பெல்ட்டில் உள்ள பட்டன்கள் மூலம் போக வேண்டிய இடத்தை செட் செய்து, பக்கிளில் இருக்கும் சிவப்பு வண்ண பட்டனை அழுத்தினால், நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களது பார்வையிலிருந்து Ôஜூட்Õ விட்டு, நாம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்லலாம்.

இதற்காக இன்ஃப்ராரெட் கதிர்களை பெல்ட்டினுள் செலுத்திக் கொண்டிருந்தாள் பிந்து. அப்போது வேகமாக உள்ளே நுழைந்தான் மிச்சு.

"பிந்து, நம்மளோட கண்டுபிடிப்பு ப்ரைஸ் வாங்குமா?" என்றான்.


"கண்டிப்பா கிடைக்கும்..." என்றாள் பிந்து.

"இல்லே பிந்து! நமக்குப் போட்டியா வந்திருக்கிற கண்டுபிடிப்புகள்ல ரெண்டு என்னை ரொம்ப பய முறுத்துது... ஹைதராபாத்தில உள்ள மதர் தெரஸா ஸ்கூல், ஒரு சாட்டிலைட் எக்ஸிபிட் பண்ணுது!

கிட்டத்தட்ட மூணு கோடி ரூபா செலவழிச் சிருக்காங்க. நெனச்ச நேரத்தில் அதன் மூலமா எந்த காலேஜ்ல, ஸ்கூல்ல, நாட்டுல, வீட்டுல இருக்கிற எந்த சப்ஜெக்ட் ஸ்பெஷலிஸ்டா இருந்தாலும் உடனடியா வீடியோ கான்ஃப்ரென்ஸிங் மூலமா பாடம் நடத்துவாங்க. இதுமாதிரி இன்னும் நிறைய உபயோகம் இருக்கு அதுக்கு!

மும்பையின் மேத்தா ஃபவுண்டேஷன் ஸ்கூலோட கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? ஒரே ஒரு டம்ளர் தண்ணியை ரொட்டேட்டிங் வீலில் விட்டு, அதைப் படுவேகத்தில் சுழற்றி, அது மூலமா ஒரு தொழிற்சாலைக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கிறது!ÕÕ மிச்சு சொன்னதைக் கேட்டு பிந்துவும் மிரண்டாள்.

போட்டி நாள். பிந்துவைக் காணவில்லை. பெல்ட் டையும் காணவில்லை! மிச்சுவுக்கு மட்டுமல்ல... அவங்க ஆசிரியருக்கும் அதில் பயங்கர வருத்தம். சாயந்திரம்தான் ஸ்டாஃப் ரூமுக்கு பிந்து வந்தாள்.

"நீ என்ன காரியம் பண்ணியிருக்கே, தெரியுமா?"னு மிச்சு கத்தினான். "தெரியும். அதுக்கு முன்னாடி, நீ என்ன செஞ்சேன்னு நினைச்சுப் பார். அந்த ரெண்டு கண்டுபிடிப்புகளையும் நாம கண்டுபிடிச்ச இந்த பெல்ட்டைப் போட்டுப் பாழாக்க முயற்சி செஞ்சே...

நேற்றிரவு இதைப் போட்டு, யார் கண்ணுக்கும் தெரியாமல் லாப்புக்கு வந்தே... ரெண்டுலயும் உள்ளே பேசிக் ப்ரோக்ராம்களில் மாற்றங்கள் செஞ்சே! இப்படி நீ மாத்தி வெச்சிருக்கிற குறை உள்ள கண்டுபிடிப்புகளோட நம்மளோடது போட்டி போட்டா, ஈஸியா ஜெயிச்சிருக்க முடியும்! எனக்கு அது பிடிக்கலை.

அதான் பெல்ட்டை உன்னிடமிருந்து எடுத்துட்டுப் போயிட்டேன். ஆனால், நான் இங்கே தானிருக்கேன். உன் கண்ணுக்குத் தெரியாம! நீ மனசு திருந்தி வந்தா, இந்தக் கண்டுபிடிப்பை இன்னும் மெருகேத்தி, அடுத்த வருஷம் வைக்கலாம். நான் சொல்றது சரிதானே மிச்சு!" என்றாள் பிந்து.


விஞ்ஞானத் தகவல்கள்!

சிறியதாக ஒரு செயற்கைக்கோளை தயாரிக்கும் பொறுப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் தரப்பட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை சுமார் ஒரு கோடி ரூபாய்.

நீரிலிருந்து மின்சாரம் எடுப்பது பல காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதிகமான நீர்வரத்து உள்ள ஆறுகளின் நடுவே அணைகளைக் கட்டி அதிலிருந்து வேகமாக வரும் நீரிலிருந்து பெரிய பெரிய டர்பைன்கள், ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது. உலகத்தின் உபயோகிக்கப்படும் மின்சாரத்தில் 20% இந்த வகை.


ஒரு மனிதனை மாயமாகச் செய்யும் பொருளன்றைக் கண்டுபிடிப்பது விஞ்ஞானிகளின் நெடுநாள் கனவு. அதைவிட விஞ்ஞானப் புனைக்கதைகள் எழுதுவோருக்கு மிகவும் பிடித்த கரு இது. இதை வைத்துப் பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இதுவரை இது சாத்தியமாக வில்லை என்பதுதான் உண்மை.