சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Friday, September 23, 2005

கதை 37 - குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்

சின்ன வயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்லி மறக்காத கதைகளில் இதுவும் ஒன்று.

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டிய கதைகளில் இதுவும் ஒன்று.

இனி கதைக்கு போவோம்.


ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு அப்பத்தை எடுத்தன. அந்த அப்பத்தைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப் பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது.

இரண்டு பூனைகளும் சண்டை பிடித்துக் களைத்துப் போயின. அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல், யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.

அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது.

அப்பத்தை இரண்டாக வெட்டித் தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது.

இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.

இப்படியே அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது.

ஒற்றுமையற்ற பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன.

குழந்தைகளே! ஒரு பூனையாவது கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் இத்தனை நஷ்டம் ஏற்பட்டிருக்குமா? விட்டுக் கொடுத்தல் பிறரிடம் நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும், இறைவனுக்கும் அதுவே பிடிக்கும்.

3 மறுமொழிகள்:

At 11:24 AM, September 25, 2005, Blogger ENNAR மொழிந்தது...

இந்தக்கதையைப்படித்தும் இன்னமும் மக்கள் திருந்தாமல் ஏன் இருக்கின்றனர்
ஒரு கட்டைப்பஞ்சாயத்தாரிடம் இருவர் பணவிவகாரமாக போய் புகாரிட, "அப்படியபணத்தைக்கொண்டா நான் பார்த்துக்கிறேன் எனச் சொல்லி இவர் பணத்தை வாங்கி சொந்த செலவு செய்து கொண்டார்.

என்னார்

 
At 9:06 PM, September 26, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

அருமையாக சொன்னீங்க என்னார்.

தற்போது குரங்காக அமெரிக்காவும், ஒற்றுமையற்ற பூனைகளாக அரபு நாடுகளும் இருக்கின்றன, பெட்ரோல் என்ற அப்பத்தை அப்படியே விழுங்கி வருகிறது குரங்கு.

 
At 5:20 PM, September 27, 2005, Blogger G.Ragavan மொழிந்தது...

எனக்கு மிகவும் பிடித்த கதை பரஞ்சோதி...அதிலும் குரங்கு அப்பத்தைத் தின்றது என்று சொல்லும் போதே எனக்கும் அப்பம் தின்ன ஆசை வரும்.

அதுக்குதான் நம்ம முன்னோர்கள்...சாச்சிக்காரன் காலில் விழுறத விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்று.

 

Post a Comment

<<=முகப்பு