சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, September 24, 2005

கதை எண் 38 - பீர்பாலின் புத்திசாலித்தனம்

பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.

அதனால ஒரு கடிதத்துல, மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர்.

கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு.

பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு. அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினாரு.

அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?னு விசாரிச்சாரு.

அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்னாரு.

பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு.

நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.

இப்போ அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்னு. பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்பினாரு.

அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தாராம்.

குழந்தைகளா! நம்முடைய வாழ்க்கையிலும் கூட நம் புத்திசாலித்தனத்தை நிருபிக்க வாய்ப்பு கிடைக்கும், அப்போ அருமையாக நிருபித்தால் நல்ல பெயர் எடுக்கலாம்.

3 மறுமொழிகள்:

At 8:16 PM, October 12, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

அருமையான கதைங்க.
பீர்பாலின் புத்திசாலித்தனத்தை விளக்கும் இன்னொரு கதையும் இருக்கு.

--

பீர்பாலின் புத்திசாலித்தனம் எட்டுத் திக்கிலும் பரவி இருந்துச்சு. பக்கத்து ஊரு ராஜாவுக்கு ரொம்ப பொறாமை.. இப்படி ஒரு ஆள் நம்ம தேசத்துல இல்லயேன்ணு..

எப்படியாவது இந்த பீர்பாலை அவமானப்படுத்தணுனு யோசிச்சிட்டிருந்தான்.

ஒரு யோசனை தோணுச்சு.. உடனே தன்னோட நாட்டில இருக்கும் அனைத்து வகை அபூர்வ ரோஜா செடிகளையும் அக்பருக்கு பரிசா அனுப்பினார்.

கூடவே ஒரு வேண்டுகோலும் விடுத்தார். என்ன தெரியுமா..

" பிரியமான ராஜாவே இதோ என்னோட சிறிய பரிசுகளை ஏத்துக்கங்க. எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருக்கு. உங்க ஊரு முட்டை கோஸ் சுவை ரொம்ப அருமையா இருக்குமாமே எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க. கூடவே உங்க பீர்பாலையும் அனுப்புங்க.. அப்படி ஒரு புத்திசாலி எங்க நாட்டுக்கு வரணும்னு நாங்க ஆசைப்படுறோம்"

இப்படி ஒரு கடிதமும் அனுப்பினார்

அக்பருக்கு ஒரே தர்ம சங்கடமாப் போச்சு. முட்டை கோஸ் அவங்க ஊருக்கு போய் சேரதுக்குள்ள அழுகிடுமே. என்ன செய்யறதுனு யோசிச்சார்.

உடனே பீர்பால் வந்தார். நான் கொண்டு போறேன் அரசே. எனக்கு ஒரு 10 மாட்டு வண்டி மட்டும் கொடுங்க அப்படின்னார்.

அக்பரும் பீர்பால் கேட்டதெல்லாம் கொடுத்தார். பீர்பால் பயணத்தை தொடங்கினார்.

சில காலம் கழிச்சு அந்த ராஜாவோட அரண்மனைக்கு போனாரு பீர்பால்.

'ராஜா நீங்க கேட்ட பரிசில் கொண்டு வந்திருக்கேன் ஆனா நீங்க கொஞ்சம் அரண்மனைக்கு வெளிய வரணும்னு' சொன்னாரு நம்ம பீர்பால்.

ராஜாவுக்கு ஒரே சந்தோஷம்.. எப்படியும் முட்டை கோஸெல்லாம் அழுகி போயிருக்கும்.. பீர்பால் அவமானப்படப்போரார்னு நெனச்சிக்கிடே வெளிய வந்தார்..

வந்தவர் அசந்து போயிட்டாரு.. பின்ன

பீர்பால் என்ன பன்னார் கெரியுமா.. அந்த மாட்டு வண்டியிலவே முட்டை கோஸ் விதைச்சு எடுத்து வந்துட்டார்.

அது இந்த தேசத்துக்கு வரதுக்குள்ள நல்லா விளைஞ்சு சமைக்க தயாரா இருந்தது.

அந்த ராஜா நம்ம பீர்பால் கிட்ட மன்னிப்பு கேட்டு அவருக்கு நிறைய பரிசில் கொடுத்து அனுப்பினார்.

----

எப்படி நம்ம பீர்பாலோட அறிவு.

 
At 10:40 PM, October 12, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

ஆகா, எல்லோரும் கருத்து மட்டுமே சொல்லுவாங்க, நீங்க என்னடா என்றால் அருமையான கதையும் சொல்லியிருக்கீங்க, மிக்க நன்றி சகோதரி.


நான் இந்த கதையை தனிப்பதிவாகவே கொடுக்கிறேன், மற்றவர்களுக்கு படிக்க எளிதாக இருக்கும்.

 
At 6:18 PM, October 13, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

:) நன்றிங்க.

எனக்கும் கதை ரொம்ப பிடிக்கும். உங்க பதிவும் பிடிச்சிருக்கு.

 

Post a Comment

<<=முகப்பு