சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Monday, September 26, 2005

கதை எண் 39 - அண்ணல் நபி (ஸல்) ஏன் அழுதார்

ஒரு நாள் மாலை நேரம் அண்ணல் நபி (ஸல்) தன் நண்பளுடன் பேசிக் கொண்டிருந்தார், அப்போ அங்கே ஒரு இளைஞன் வந்தார், வந்தவரை உபசரித்து, என்ன விசயம் என்று கேட்டார்.

உடனே அதற்கு அந்த இளைஞன் "எனது தந்தையார், என்னுடைய பொருட்களையும், செல்வங்களையும் எனக்குத் தெரியாமல் உபயோகிக்கிறார், செலவு செய்கிறார், அவருக்கு அறிவுரை கூறுங்கள்" என்று முறையிட்டார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவரது தந்தையாரை அழைத்து வர ஆள் அனுப்பினார்.

சிறிது நேரத்தில் ஒரு முதியவர் தன் ஊன்று கோல் துணையுடன் நடக்கவே சிரமப்பட்டு பெருமானார் முன்னால் வந்து நின்றார்.


பெரியவரின் மகன் கொடுத்த புகாரை அந்த முதியவரிடம் கூறிய அண்ணல் நபி (ஸல்), முதியவரின் விளக்கம் கேட்டார்.

அப்போ அந்த முதியவர் "இறைத்தூதர் அவர்களே!.. என் மீது புகார் கொடுத்த என் மகன் பிறந்த போதும் சரி, குழந்தையாக, பெரியவனாக வளர்ந்த போதும் சரி, அவன் பலவீனமாகவும், ஒன்றுமே தெரியாதவனாகவும், ஒன்றும் இல்லாதவனாகவும் இருந்தான், நான் அப்போ வலிமையாகவும், செல்வந்தனாகவும் இருந்தேன், என்னுடைய உழைப்பு, செல்வம், என் வாழ்நாள் முழுவதையும் அவனுக்கு என்று செலவு செய்தேன், அவன் செய்த செலவுகளை கொஞ்சம் கூட கணக்கு பார்த்தது இல்லை.

கால சுழற்சினால் நான் பலவீனப்பட்டு, வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு ஆளாகி விட்டேன்.என் மகன் வலிமை படைத்தவனாக, ஆரோக்கியமானவனாக, செல்வந்தனாக இருக்கிறான், அவன் என்னிடம் ஒரு பைசா கூட தருவது இல்லை, மேலும் நான் உபயோகிக்கக் கூடாது என்பதற்காக ஒளித்து வைக்கிறான். என்று தன் ஆதங்கத்தை கூறினார்.

உடனே அங்கே ஒரு அரிய சம்பவம் நடந்தது, பெரியவரின் வார்த்தைகளை கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, அவர் அழுதே விட்டார்.

பின்னர் அந்த இளைஞனை நோக்கி அழுத்தமாக இவ்வாறு கூறினார்

"தோழரே! நீயும், உனது செல்வமும் உன் தந்தைக்குரிய உடமைகள் என்பதை மறவாதே".

அந்த இளைஞன் மனம் திருந்தி தந்தையை அணைத்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். முதியவரை ஒரு குழந்தையைப் போல் போற்றினான்.

செல்லங்களா "நம்ம தாத்தா, ஆச்சிகள் எல்லாம் ஒரு காலத்தில் நம் அப்பா, அம்மாவை எத்தனை அருமையாக கவனித்து வளர்த்திருப்பாங்க, என்ன என்ன கஷ்டங்கள் அனுபவத்த்திருப்பாங்க, அப்படிபட்ட அவங்களை நாம் போற்ற வேண்டும், அவர்கள் அறிவுரைகள் கேட்டு நடக்க வேண்டும். அன்பாக இருக்கவேண்டும், சரியா..."

0 மறுமொழிகள்:

Post a Comment

<<=முகப்பு