சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Sunday, July 24, 2005

கதை எண் 20 - வல்லவனுக்கு வல்லவன்

மன்னர் மகிபாலனின் அரசவையில் பாலா என்ற விகடகவி இருந்தார். விகடகவியின் புத்திக்கூர்மை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவரை தனது அரசாங்க ஆலோசகராகவும் நியமித்துக் கொண்டார்.

விகடகவி பாலா அரசாங்க ஆலோசகராக இருப்பது அரண்மனை அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பொறாமையை உண்டு பண்ணியது. விகடகவியை
எப்படியாவது அரண்மனையை விட்டே ஒழித்துவிட வேண்டும் என அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்களுக்குள் முடிவெடுத்தனர்.

அன்று மன்னர் சபையில் அறிஞர் பெருமக்கள் பலரும் வீற்றிருந்தனர். அப்போது அரசபை மன்றத்திற்கு அயல்நாட்டு அறிஞர் ஒருவர் வந்தார்.

அவரைக் கண்டதும் அமைச்சர்களும், அதிகாரிகளும் சந்தோஷத்தால் துள்ளி எழுந்தனர். ஏனென்றால் அவர்கள் தான் தங்கள் திட்டத்தின்படி அந்த அறிஞரை வரவழைத்திருந்தனர்.

""அரசே! நான் சாஸ்திரங்களையும், பல கலைகளையும் கற்று சேர்ந்தவன். மேலும் நான் ஒரு சிறந்த விகடகவி. என்னோடு யாருமே போட்டியிட முடியாது. எனது திறமையை நிரூபிக்கவே உங்களைத் தேடி வந்துள்ளேன்,'' என்று கூறினார்.


இவர்களின் கபட நாடகத்தை அறியாத மன்னரும், ""வாருங்கள் விகடகவியே! எங்கள் அரசபையிலும் உங்களைப் போன்று ஒரு விகடகவி இருக்கிறார். இருந்தாலும் உங்கள் திறமையை இந்த சபையினில் காட்டுங்கள்,'' என்று கூறினார்.

""அரசே! உங்கள் நாட்டு விகடகவியோடு நான் போட்டியிட வேண்டும். அதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும்,'' என்று பணிவுடன் வேண்டி நின்றார்.

அதைக் கேட்ட மன்னரும் ஹ... ஹா... ஹா... என்று பலமாக சிரித்தார்.

""அரசபை விகடகவியே நீங்கள் மிகச் சிறந்த அறிவாளி என்று கேள்விப்பட்டேன். கணிதத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்று அறிந்தேன். அதனால் உங்கள் தலைமுடியை ஒவ்வொன்றாக எண்ணி அதன் மொத்த எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா?'' என்றார்.

அயல்நாட்டு அறிஞரின் கேள்வி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ""தலைமுடியை எப்படி எண்ண முடியும்?'' என்று ஒருவருக்கொருவர் தங்களை கேட்டுக் கொண்டனர்.

""ஐயா! அறிஞரே! நான் மொத்த முடியை எண்ணி முடிப்பதற்கு ஒரு நாள் கால அவகாசம் வேண்டும். நாளை என் தலைமுடியின் எண்ணிக்கையை இந்த அரசபையில் தெரிவிக்கிறேன்'' என்று கூறினார் பாலா.

அதைக் கேட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும், ""ஒரு நாள் என்ன பத்து நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும் பாலா தன் தலைமுடியை எண்ண முடியாது,'' என்று தங்களுக்குள் கூறிக் கொண்டனர்.

அடுத்த நாள் சபை கூடியது—

அனைவரும் விகடகவி பாலாஎன்ன செய்யப் போகிறார் என்ற ஆவலோடு இருந்தனர்.

""அறிஞர் பெருமானே! நீங்கள் விதித்தப்படி நான் எனது தலைமுடியை எண்ணி முடித்துவிட்டேன். ஆனால் அதற்குள் ஒரு நிபந்தனை. அந்த நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டாக வேண்டும்.

""எனது எண்ணிக்கை தவறாக இருந்தால் நான் எனது தலையை இழக்க தயாராக இருக்கிறேன். ஆனால், சரியாக இருந்தால் நீங்கள் உங்கள் தலையை இழக்க வேண்டும். சம்மதமா?'' என்றார்.

""பாலா! உமது நிபந்தனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீர் உமது தலைமுடியின் எண்ணிக்கையை கூறும்,'' என்று கம்பீரமாக குரல் கொடுத்தார்.

பாலாவின் பதிலைக் கேட்க எல்லாரும் ஆவலாக இருக்க, அவர் மவுனமாக நின்றபடி தன் தலையின் மேலிருந்த தலைப்பாகையை கழற்றி எடுக்க, அவர் தலையை கண்ட அனைவரும் "கொல்' என்று சிரித்து விட்டனர்.

பாலா மொட்டை தலையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் தலையின் முன்னே இரண்டு முடிகள் மட்டும் நீண்டு கொண்டிருந்தன.

""அறிஞர் பெருமானே! என் தலையில் இரண்டு முடிகள் தான் இருக்கின்றன. நீங்களும் நன்றாக எண்ணிப் பாருங்கள்,'' என்று கூறினார்.

பாலாவை ஒழிப்பதற்கு திட்டம் போட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் வெட்கத்தால் தலை குனிந்தனர். தன் தலைக்கு ஆபத்து வந்துவிட்டதை நினைத்த அயல்நாட்டு அறிஞரின் உடலெல்லாம் நடுங்கியது.

""அறிஞரே! நீங்கள் அச்சத்தால் நடுங்குவது நீங்கள் கற்ற கல்விக்கு அழகல்ல! உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. இனிமேலாவது என்னை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அலைபவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த மாதிரி செயல்களில் ஈடுபடாதீர்கள்,'' என்று கூறினார்.

மன்னர் விகடகவி பாலாவுக்கு பல பரிசுகள் கொடுத்து தனது பாராட்டையும் தெரிவித்தார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<<=முகப்பு