சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Sunday, October 09, 2005

கதை எண் 44 - தெனாலியின் விளக்கம்

கிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது.
"நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை?' என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர்.

""ராமா! இதற்கு என்ன காரணம்? உனக்கு தெரியுமா?''

""அரசே! இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை புரியும்,'' என்றான்.

அரசர் உடனே பனித்துண்டு ஒன்றை கொண்டு வர ஏற்பாடுச் செய்தார்.
பனிக்கட்டியும் வந்தது. அதனை வாங்கின தெனாலிராமன் மன்னரிடம், ""அரசே! நீங்கள் இந்த பனிக்கட்டியை நிதி அமைச்சரிடம் கொடுங்கள். பின் அவர் அவரது உதவியாளரிடம் கொடுக்கட்டும். அதன் பிறகு பனிகட்டி அலுவலர்களிடம் போய்ச் சேரட்டும். அப்பொழுது உங்களுக்கு விஷயம் புரியும்,'' என்றான் தெனாலிராமன்.

பனிக்கட்டி கிட்டத்தட்ட 15 அலுவலர்களை தாண்டி கடைசியில் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று சேர்ந்தது. அப்பொழுது அவர் கையில் பனிக்கட்டி இல்லை. சிறிது நீர் தான் இருந்தது. பனிக்கட்டி உருகி அப்படி ஆகிவிட்டது. இப்பொழுது ராமன் சொன்னான்:

""புரிந்ததா! மன்னா இதுதான் காரணம். பணம் இவ்வளவு பேரையும் தாண்டி கடைசி அலுவலரிடம் செல்லும் பொழுது கரைந்து விடுகிறது.

""இதுதான் ஏழை மக்கள் படும் கஷ்டங்களுக்கு காரணம்,'' என்றான்.

மன்னன் புரிந்து கொண்டு நிர்வாகத்தை சீர்படுத்த முனைந்தார்.

6 மறுமொழிகள்:

At 4:40 AM, October 10, 2005, Blogger b மொழிந்தது...

தெனாலிக் கதைகளை இன்றைக்கும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். சிறு பிள்ளைகளுக்கு படிப்பினைகளைத் தரும் கதைகளை வழங்கும் உங்களுக்கு என் சிறப்பு நன்றி.

 
At 1:16 PM, October 11, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி மூர்த்தி அண்ணா.

தெனாலியின் கதைகள் படித்தால் அதில் நகைச்சுவையோடு நல்ல கருத்துகளும் உண்டு.

 
At 5:30 PM, October 11, 2005, Blogger யாத்ரீகன் மொழிந்தது...

:-))) ஹா ஹா ஹா...

பரஞ்சோதி.. இந்த கால ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல... மெத்த படித்த அரசாங்க அலுவலர்கள் பலருக்கும் பொருந்த்தும் கதை..

 
At 8:41 PM, October 11, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க செந்தில்,

உங்க கருத்திற்கு நன்றி.

சரியாக சொன்னீங்க, இந்த கதை இன்றைய நிலையை தெளிவாக விளக்குகிறது.

 
At 1:03 AM, October 12, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

பரஞ்சோதி,
"ஈட்டி எட்டு முழம் பாயும், பணம் பாதளம் வரைக்கும் பாயும் என்பார்கள்", ஆனால் பாய்கின்ற பணத்தினை பலரும் சாப்பிட்டு விடுகிறார்கள் என்பதனையும், இந்தக் கதையில் சேர வேண்டியவர்களிடம் உரிய முறையில் பணம் சேரவில்லை என்பதனையும் நாசுக்காக எடுத்துக் கூறிய தென்னாலி ராமனை பாராட்டத் தான் வேண்டும்.

 
At 12:17 AM, October 13, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

பரஞ்சோதி,
உங்களது இன்றையக் கதைக்கு கருத்தினை கூறுவதற்கு உங்களது பதிவு இடம் கொடுக்க வில்லை. அதனால் இங்கே பதிந்துள்ளேன்.

"வல்லவன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்" என்பார்கள், அது போல பீர்பாலின் புத்திச்சாலித்தனம் புலப்பட்ட கதைகளில் இதுவும் ஒன்றாகும். "நெஞ்சிலே நஞ்சும், உதட்டிலே தேனும்" வைத்துக் கொண்டு காரியமாற்றிய அரசனுக்கு நன்றாக கரியையும் பூசி தன்னுடைய சாமர்த்தியத்தையும் காட்டி விட்டார் பீர்பால்.

 

Post a Comment

<<=முகப்பு