கதை எண் 23 - பீர்பால் - ஏமாற்றாதே, ஏமாறாதே
கபாலிபுரம் என்ற மாநகரில் கபிலன் என்ற ஓவியன் இருந்தான். ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை உடையவன். யாரைப் பார்த்தாலும் அவர்களை அப்படியே ஓவியம் வரைந்து விடுவான். ஓவியத்திற்கும் அந்த ஆளுக்கும் சிறு வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பொருத்தமாக ஓவியம் வரைவான்.
பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொடுப்பான். அந்த ஓவியத்தை நல்ல விலை கொடுத்து வாங்குவர். அதைத் தங்கள் வீட்டில் அழகாக மாட்டி வைப்பர்.
அந்த ஊரில் ராஜன் என்ற செல்வன் இருந்தான். யாருக்கும் எதையும் தராத கருமி அவன். அவனுடைய பிறந்த நாள் விழா வந்தது. நிறைய உறவினர்கள் விழாவிற்கு வந்திருந்தனர்.
ராஜனின் இயல்பை அறியாத கபிலன் அந்த விழாவிற்குச் சென்றான். ராஜனை வணங்கிய அவன், ""ஐயா! நான் சிறந்த ஓவியன். உங்களை அப்படியே ஓவியமாக வரைந்து தருகிறேன். உங்களையே நேரில் பார்ப்பது போல இருக்கும். அதை வரவேற்பு அறையில் அழகாக மாட்டி வைக்கலாம். அந்த ஓவியத்திற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?'' என்று கேட்டான்.
"உறவினர்கள் தன்னைப் பெருமையாக நினைக்க வேண்டும். பிறகு பணம் தராமல் இவனை ஏமாற்றலாம்' என்று நினைத்தான் ராஜன்.
""நீ வரையும் ஓவியம் என்னைப் போலவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஆயிரம் பணம் தருகிறேன். இல்லாவிட்டால் பணம் எதுவும் தரமாட்டேன்,'' என்றான்.
""உங்களைப் போலவே ஓவியம் வரைந்து ஒரு வாரத்தில் தருகிறேன். குறை ஏதும் இருந்தால் பணம் தர வேண்டாம்,'' என்றான் ஓவியன்.
ராஜனைப் போலவே ஓவியம் வரைந்து எடுத்து வந்தான். அந்த ஓவியத்தை மேலும் கீழும் பார்த்தான் ராஜன்.
""இந்த ஓவியம் என்னைப் போலவா இருக்கிறது? நீயே பார். இவ்வளவு நரையா என் தலையில் உள்ளது? என்னைக் கிழவனாக்கிவிட்டாயே... நான் இருப்பது போல இளமையாக ஓவியத்தை வரைந்து கொண்டு வா,'' என்றான்.
அந்த ஓவியத்தை எடுத்துச் சென்றான் கபிலன். அதில் சில மாற்றங்கள் செய்தான். அந்த ஓவியத்தை மீண்டும் ராஜனிடம் கொண்டு வந்தான்.
""என்னைத் தானே ஓவியம் வரையச் சொன்னேன். நீ எவனோ ஓர் இளைஞனை வரைந்து உள்ளாயே... இளமையும் முதுமையும் கலந்தது போல உன்னால் வரைய முடியாதா?'' என்று கேட்டான்.
அந்த ஓவியத்தில் மேலும் சில மாற்றங்களைச் செய்தான் கபிலன்.
""இந்த ஓவிய மும் என்னைப் போல இல்லை. வேறு ஓவியம் வரைந்து கொண்டு வா,'' என்றான் ராஜன்.
"எப்படி வரைந்தாலும் இவன் ஓவியத்தை வாங்கப் போவது இல்லை. ஏதேனும் குறை சொல்லித் திருப்பி அனுப்பப் போகிறான். என்ன செய்வது?' என்று சிந்தித்தான் கபிலன்.
பீர்பாலிடம் வந்து நடந்ததை சொன்னான், ""அந்தச் செல்வன் ஓவியம் வாங்காமல் என்னை ஏமாற்றுகிறான். என் உழைப்பிற்கு நீங்கள்தான் ஊதியம் வாங்கித் தர வேண்டும்,'' என்று வேண்டினான்.
ராஜனை வரவழைத்தார் பீர்பால்.
""ஏன் இந்த ஓவியனை ஏமாற்ற நினைக்கிறீர். பலமுறை திருத்தம் செய்தும் ஓவியத்தை வாங்க மறுக்கிறீராமே?'' என்று கேட்டார்.
""அமைச்சரே! நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் போல ஓவியம் வரைந்து தா. ஆயிரம் பணம் தருகிறேன் என்று இவனிடம் சொன்னேன். இவன் வரைந்த ஓவியம் என்னைப் போல இல்லை. அதனால்தான் பணம் தரவில்லை. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். ஆயிரம் பணத்திற்குப் பதில் இரண்டாயிரமே தருகிறேன்,'' என்றான் ராஜன்.
""ஓவியம் என்றாலே சிறு சிறு குறைகள் இருக்கத்தானே செய்யும். இது உங்களுக்குத் தெரியாதா?'' என்று கேட்டார் பீர்பால்.
""அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். இரண்டு பங்கு பணம் தருகிறேன். குறை இருந்தால் ஒரு பணமும் தரமாட்டேன்,'' என்று அடாவடியாகப் பேசினான் அவன்.
""ஒரு வாரம் சென்று வாருங்கள். உங்களைப் போலவே ஓவியம் இங்கு இருக்கும். அதில் குறை இருந்தால் பணம் தரவேண்டாம்,'' என்றார் பீர்பால்.
"அந்த ஓவியத்திலும் எப்படியும் குறை கண்டுபிடித்து பணம் தராமல் தப்பிக்கலாம்' என்று புறப்பட்டான் ராஜன்.
""நீ ஓவியம் ஏதும் வரைய வேண்டாம். அடுத்த வாரம் இங்கு வா. பணத்துடன் செல்லலாம்,'' என்றார்.
ஒரு வாரம் சென்றது.
பீர்பாலின் மாளிகைக்கு ஓவியன் முதலில் வந்தான். பிறகு ராஜன் வந்தான்.
""உங்களைப் போலவே வரையப்பட்ட ஓவியம் இது. திரைச் சீலையால் மூடப்பட்டுள்ளது. சீலையை விலக்கிப் பாருங்கள். சிறு குறையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது,'' என்றார்.
"எப்படியும் வரைந்து இருக்கட்டும். குறை கண்டுபிடித்து விடலாம்' என்று திரையை விலக்கினான் அவன்.
அங்கே அவனைப் போலவே ஓவியம் இருந்தது. ஆனால், அந்த ஓவியம் அசைந்தது; கண்களை இமைத்தது.
"அது ஓவியம் அல்ல. எதிரே உள்ளவர் வடிவத்தை அப்படியே காட்டும் நிலைக்கண்ணாடி. அதில் தன் வடிவம் தெரிகிறது' என்பது அவனுக்குப் புரிந்தது.
""அமைச்சரே! இது ஓவியம் அல்ல. முகம் பார்க்கும் கண்ணாடி,'' என்றான் அவன்.
""கண்ணாடியில்தான் நம் வடிவம் அப்படியே தெரியும். குறை எதுவும் காணமுடியாது. ஓவியம் என்றால் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்தக் கண்ணாடியை எடுத்துச் செல்லுங்கள். ஓவியனுக்கு இரண்டாயிரம் பணம் தாருங்கள்,'' என்றார் பீர்பால்.
""அமைச்சரே! இது நியாயம் அல்ல!'' என்றான் அவன்.
""நியாயத்தைப் பற்றி நீங்கள் பேசாதீர்கள். குறையே இல்லாமல் யாராலும் ஓவியம் வரைய முடியாது. இதை அறிந்த நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த ஓவியங்களை எத்தனை முறை வரையச் சொன்னீர்கள்?
""நம் வடிவம் கண்ணாடியில்தான் குறை இன்றித் தெரியும். இரண்டாயிரம் பணம் தந்து இதை வாங்கிச் செல்லுங்கள். இல்லையேல் ஏமாற்ற முயன்றதற்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்,'' என்றார் பீர்பால்.
"ஆயிரம் பணம் கொடுத்து அந்த ஓவியத்தையே வாங்கி இருக்கலாம். வீட்டில் அழகாக மாட்டி வைத்து இருக்கலாம். எல்லாரும் பார்த்து மகிழ்ந்து இருப்பர். பத்துப் பணம் பெறாத கண்ணாடி இது. இதற்கு இரண்டாயிரம் பணம் தர வேண்டி வந்ததே' என்று தன்னையே நொந்து கொண்டான் அவன். ஓவியனிடம் இரண்டாயிரம் பணம் தந்தான். அந்தக் கண்ணாடியை எடுத்துக் கொண்டு வருத்தத்துடன் சென்றான் பணக்காரன்.