சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Wednesday, November 30, 2005

கதை எண் 66 - வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.

அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.

இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.

ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.

மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.

சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.

ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது, இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.

சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.

குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும். தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்.

Tuesday, November 29, 2005

கதை எண் 65 - பெரியவங்க சொன்னா கேட்கணும்

அந்தியூர் என்ற காட்டில் புறாக்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஆலமரத்தில் வாழ்ந்து வந்தன, அவற்றில் ஒரு வயதான புறாவும் உண்டு, புறாக்கள் எல்லாம் இரை தேடி வந்து மரத்தில் அமரும். அப்போ வயதான புறா தன் அனுபவங்களை கூறும், அப்போ நிறைய புறாக்கள் பழங்கதைகள் சொல்லி எங்களுக்கு ஏன் வீணாக அறிவுரை சொல்லுறீங்க, நாங்களே யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கும் அறிவு இருக்குது என்று உதாசினப்படுத்துவார்கள். சிலருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்தால் அப்போ அந்த வயதான புறா தான் நல்ல வழி காட்டும்.

ஒரு நாள் அனைத்து புறாக்களும் சேர்ந்து உணவு தேடி சென்றன. அப்போ ஓரிடத்தில் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்திருந்தான், அதன் அடியில் பெரிய பெரிய நெல்மணிகளை கொட்டியிருந்தான்.

அப்போ புறாக்கள் அனைத்தும் அந்த நெல்மணிகளை சாப்பிட திட்டமிட்டன, ஆனால் வயதான புறா அது வேடம் விரித்த வலை, நாம் போய் நெல்லை சாப்பிட்டால் மாட்டிக் கொள்வோம், எனவே வேற இடத்தில் இரைத் தேடலாம் என்றது, ஆனால் மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. வலையில் மாட்டாமல் நெல்மணிகளை சாப்பிட போகிறோம் என்று கூறி வலையின் மீது சாமர்த்தியமாக அமர்ந்து சாப்பிட்டன, ஒரு புறாவும் வலையில் மாட்டவில்லை, அப்போ வயதான புறாவைப் பார்த்து கேலி செய்தன மற்ற புறாக்கள்.

திடிரென்று ஒரு குண்டு புறா நிலைத் தடுமாறி ஒரு புறா மேல் விழ, அனைத்தும் சரிந்து நிலை குலைய, அவற்றின் கால்கள் வலையின் பின்னிக் கொண்டன, அவ்வளவு தான் அனைத்து புறாக்களும் வலையில் மாட்டிக் கொண்டன.

அவ்வளவு தான் அனைத்தும் என்ன என்ன முயற்சியோ செய்தன, ஆனால் ஒன்றும் முடியவில்லை. வலையானது தரையோடு சேர்த்து அடிக்கப்படிருந்தது.

உடனே அனைத்துப் புறாக்களும் வயதான புறாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, தங்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றன.

வயதான புறா “என் ஒருவனால் உங்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது, அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னுடைய வயதான அனுபவத்தால் கிடைத்ததை வைத்து ஒரு வழி சொல்கிறேன், அதன்படி நடந்தால் தப்பிக்கலாம் என்றது.

மற்ற புறாக்கள் கண்டிப்பாக சொல்லுங்க, இதுவரை உங்கள் அனுபவங்களை உதாசினப்படுத்தியதற்கு மன்னியுங்க என்றன.

வயதான புறா “இன்னும் கொஞ்ச நேரத்தில் வேடன் வருவான், அவன் வரும் போது நீங்க யாரும் உயிரோடு இருப்பது போல் காட்டிக் கொள்ளக்கூடாது, மரணம் அடைந்த மாதிரி விழுந்து கிடக்க வேண்டும்.”

“அவனும் செத்துப் போன புறாக்கள் தானே என்று உங்களை தரையில் போடுவான், கடைசி புறாவை போடும் வரை அமைதி காக்க வேண்டும், கடைசி புறாவைப் போட்டதும், நான் வேகமாக வந்து வேடனை கொத்துவேன், அவன் நிலை குலைந்தவுடன் நீங்க அனைவரும் உடனே பறந்து தப்பிவிடுங்க”

அனைத்து புறாக்களும் வயதான புறாவை வணங்கி, அது சொன்னது போல் செத்துப் போனது போல் நடித்தன, அங்கே வந்த வேடனும் அனைத்தும் செத்து கிடப்பதைக் கண்டு, தண்ணீர் குடிக்காததால் ஒருவேளை அனைத்தும் இறந்து போயிருக்கும் என்று நினைத்து, ஒவ்வொரு புறாவையும் வலையில் விடுவித்து கீழே போட்டான். கடைசி புறாவையும் போட்டு நிமிர்ந்து நிற்கவும், நம்ம வயதான புறா வேகமாக பறந்து வந்து வேடனின் தலையில் கொத்தியது, திடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் வேடன் பயந்து கண்களை மூடிக் கொண்டு, தலையின் மேல் கைகளை வீசினான்.

அவ்வளவு தான் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து புறாக்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது போல் தப்பி பறந்தோடின.

பின்னர் அனைத்து புறாக்களும் ஆலமரத்தில் கூடி, வயதான புறாவை போற்றின, பெரியவங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும், அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் துன்பமே வராது என்பதை புரிந்துக் கொண்டோம், இனிமேல் உங்கள் அறிவுரைப் படியே நடப்போம் என்று உறுதி கூறின. தினமும் வயதான புறாவின் அறிவுரைகள் கேட்டு நடந்து,. ஆபத்தில்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

Monday, November 28, 2005

கதை எண் 64 - எத்தனுக்கு எத்தன்

வயல்நாடு என்ற ஊரில் கந்தன் என்ற உழவர் இருந்தார், அவரது மகன் இனியன் இருவரும் தங்கள் வயலில் விளைந்த நெல் மூட்டைகளை வண்டியில் ஏற்றினார்கள், பின்னர் கந்தன் மட்டும் அவற்றைப் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்பதற்காகப் புறப்பட்டார்.

ஊர்ச்சந்தைக்கு போகும் வழியில் அவரைச் சந்தித்த ஒரு வியாபாரி,

மூட்டை நெல் என்ன விலை? என்று கேட்டான்.

500 ரூபாய் என்றார் உழவர்.

விலை குறைத்துக் கொடுக்கக் கூடாதா என்று கேட்டான் வணிகன்.

நீங்கள் ஒரு மூட்டை நெல் வாங்கினாலும் சரி. வண்டியோடு எல்லா மூட்டை நெல்லையும் வாங்கி னாலும் சரி, ஐநூறுக்கு ஒரு ரூபாய் குறைத்து வாங்க மாட்டேன் என்று சொன்னார் கந்தன்.

ஏமாற்றுக்காரனான அந்த வணிகன், வண்டியோடு எல்லாவற்றையும் வாங்கிக் கொள்கிறேன் என்றான்.

மகிழ்ந்த உழவர் அவன் வீட்டில் நெல் மூட்டை களை இறக்கினார்.

பணம் தாருங்கள் என்றார்.

உழவர் கையில் வணிகன் 500 ரூபாய் தந்தான்.

என்ன ஐநூறு ரூபாய் மட்டும்தான் தருகிறீர்கள்? என்று கேட்டார் உழவர்.

நீ என்ன சொன்னாய்? ஒரு மூட்டை நெல் வாங்கினாலும் சரி. எல்லாவற்றையும் வண்டியோடு வாங்கி னாலும் சரி. ஐநூறு ரூபாய்தான் என்றாய். ஆகவே உன்னிடம் ஐநூறு ரூபாய் தந்துவிட்டேன். சொன்னபடியே வண்டியோடு நெல்லை வாங்கிக் கொண்டேன். நீ போய் வா என்றான்.

கந்தன் உடனே “என்ன வியாபாரி ஏமாற்ற பார்க்கிறீங்களா? நான் பேச்சு அப்படி சொன்னேன், அதுவும் ஒரு மூட்டை ஐநூறு என்றும், வண்டியோடு இருக்கும் அத்தனை மூட்டைகள் வாங்கினாலும் ஒரு மூட்டையின் விலை ஐநூறுக்கு குறையாது என்ற அர்த்தத்தில் சொன்னேன்” என்றார்.

ஆனால் அந்த வியாபாரி ஒத்துக் கொள்ளவில்லை, சொன்ன சொல்லை காப்பாற்று, வண்டியோடு ஐநூறு தான் வருவேன் என்று அடம்பிடித்தான்.

கோபம் கொண்ட கந்தன் அந்த ஊரில் இருந்த பெரியவர்களிடம் சென்று தனக்கு நீதி வழங்குமாறு வேண்டினார்.

அவன்தான் பெரிய ஏமாற்றுக்காரன் ஆயிற்றே, வண்டியோடு, நெல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாலும் ஐந்நூறு ரூபாய்தான் என்று ஏன் சொன்னாய்? உன் பேச்சை வைத்தே உன்னை ஏமாற்றி விட்டானே. நாங்கள் என்ன செய்ய முடியும்? இனியாவது கவனமாக இரு என்று சொல்லி கந்தனை அனுப்பி வைத்தார்கள்.

ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் கந்தன். நடந்ததை அறிந்த அவன் மகன் இனியன், அப்பா, கவலைப்படாதீர்கள். உங்களை ஏமாற்றியவனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடம் கற்றுத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு வண்டியில் நெல் மூட்டையை ஏற்றிக் கொண்டு அந்த ஊர் நோக்கிச் சென்றான்.

உழவனை ஏமாற்றிய வணிகன் தன் நான்கு வயது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். எதிரே வண்டி நிறைய நெல் மூட்டை வருவதை அறிந்து மகிழ்ந்தான்.

வண்டியோட்டியைப் பார்த்து,

ஒரு மூட்டை நெல் என்ன விலை? என்று கேட்டான்.

தன் தந்தையை ஏமாற்றியவன் இவன்தான் என்பதை அறிந்த இளைஞன், ஐயா, உங்களைப் பார்த்தாலே, பெரிய மனிதராகத் தெரிகிறது. என்னை ஏமாற்றவா போகிறீர்கள்? உங்கள் மகனின் பிஞ்சுக் கைகளில் சில நாணயங்களை வைத்துக் கொடுங்கள். அதுபோதும் என்று இனிமையாகப் பேசினான்.

இன்று யார் முகத்தில் விழித்தேனோ? என்று தன்னையே பாராட்டிக் கொண்ட வணிகன், சரி, நீ சொன்னபடியே தருகிறேன். நெல் மூட்டைகளை எல்லாம் வீட்டில் இறக்கி வை என்றான்.

அப்படியே செய்தான்.

இளைஞன். தன் மகனின் கைகளில் ஐந்து செப்பு நாணயங்களைத் தந்த வணிகன்,

இதை அவரிடம் தந்து விடு என்றான். அந்த மகனும் தன் கையை இளைஞனிடம் நீட்டினான்.

தன் பையில் கை விட்டு கத்தியை எடுத்தான் இளைஞன்.

எதற்காகக் கத்தியை எடுக்கிறாய? என்று கேட்டான் வணிகன்.

நான் என்ன சொன்னேன்? உங்கள் மகனின் கைகளில் வைத்து நான்கைந்து நாணயங்கள் தாருங்கள் என்றேன். அதன்படி உங்கள் மகனின் கைகளை வெட்டி எடுத்துச் செல்லப் போகிறேன் என்றான் இளைஞன்.

அப்பொழுதுதான் வணிகனுக்கு உண்மை புரிந்தது.

இளைஞன் சொன்ன சொற்களுக்குக் கைகளுடன் நாணயங்கள் என்ற பொருளும் உள்ளது. மகிழ்ச்சிப் பரபரப்பில் நான் அதைப் புரிந்து கொள்ளவில்லையே. வழக்கு ஊர்ப் பெரியவர்களிடம் சென்றால் சொன்னபடியே மகனின் கையை வெட்டிக் கொடுத்து விடு என்றுதான் தீர்ப்பு வழங்குவார்கள். என்ன செய்வது என்று சிந்தித்தான்.

நீ கொண்டு வந்த நெல் மூட்டைகளுக்கு உரிய விலைக்கு மேல் அதிகப் பணம் தருகிறேன். என் மகனின் கையை வெட்டி விடாதே என்று கெஞ்சினான் அவன்.

என் தந்தையை ஏமாற்றியது போல் என்னையும் ஏமாற்றப் பார்க் கிறாயா? உன் ஏமாற்றுத்தனங்களுக்கு எல்லாம் நல்ல பாடம் உன் ஒரே மகனின் கையை வெட்டுவதுதான். சொன்ன சொல் மாறாதே என்று கோபத்துடன் சொன்னான் இளைஞன்.
தன்னை விட திறமைசாலியிடம் சிக்கி இருக்கிறோம் என்பதை உணர்ந்தான் வணிகன். அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

நடந்ததை அறிந்த ஊர் மக்கள் எல்லோரும் அங்கே கூடி விட்டனர்.

இவனால் இந்த ஊருக்கே கெட்ட பெயர். மகனின் கையை வெட்டுவதுதான் இவன் செய்த தீமைகளுக்கு எல்லாம் தக்க தண்டனை என்றார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

இளைஞனின் கால்களில் விழுந்த வணிகன், இனி என் வாழ்நாளில் யாரையும் ஏமாற்ற கனவில் கூட நினைக்கவே மாட்டேன். உன் தந்தையார்க்கும் உனக்கும் ஏற்பட்ட இழப்பைப் போல நான்கு மடங்குத் தொகை தருகிறேன். என்னை மன்னித்து விடு. என் மகனின் கையை வெட்டாதே என்று அழுது புலம்பினான். உள்ளம் இரங்கிய இளைஞன்,

இனியாவது நேர்மையாக நடந்து கொள். எங்கள் இழப்பிற்கு உரிய தொகை மட்டும் கொடு என்று சொல்லிவிட்டு அவன் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினான் நம்ம புத்திச்சாலி இனியன்.

Thursday, November 24, 2005

கதை எண் 63 - மந்திர புல்லாங்குழல்

ஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார், அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார், கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார், சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார், ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார்.

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் அழகேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை, இருந்தாலும் போய் வா, இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார்.

அவரும் மனம் கோணாமல் தாயாரைப் பார்க்க போகிற மகிழ்ச்சியில் சந்தோசமாக வாங்கி, முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அழகேசன் இருந்தவரை அவனால் திருட முடியவில்லை, அழகேசன் ஊருக்கு கிளம்புவதையும், அவர் சம்பளம் வாங்கி சென்றதையும் பார்த்தான், கண்டிப்பாக நிறைய தங்கம் கொண்டு செல்வார் என்று நினைத்தான், அதற்கு முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான்.

பேராசை யாரை விட்டது, இது போதாது என்று நினைத்து, அழகேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான், எப்படி அழகேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார், எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி, இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான்.

அழகேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி.

“அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க”
“தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக”
“அ=ய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க”
‘தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுது, கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். எனக்கு சில மந்திர சக்திகள் இருக்குது, அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன், உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்”

அழகேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம், அதுவும் மந்திரசக்தியால், புரியவில்லையே என்று திகைத்தார்.

“தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள்”
“அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும்”

உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார்.

அழகேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார், திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான், மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். அழகேசனுக்கு பயம், ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு, உயிரை இழக்க வேண்டும், என்று நினைத்து, பையில் இருந்த 3 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார், தங்கம் கிடையாதா, கஞ்சப்பயல், அதான் அவன் வீட்டில் நான் இத்தனை தங்கம் இருந்ததா, ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன்”

“என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன்”
“நான், நம்ப மாட்டேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?”
அழகேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான், அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து “மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது, இரு, ஊதி எடுக்கிறேன்” என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார்.

அதிலிருந்து அருமையான இனிய இசை கிளம்பியது, அனைத்து பறவைகளும் மெய் மறந்து கேட்டன, திருடன் சும்மாவா இருக்க முடியும், திருடனும் ஆகா, ஓகோ என்று தை தைக்கா என்று குதிக்கத் தொடங்கினான், அழகேசன் விடாமல் இசைக்க, திருடன் அங்கே இங்கே ஆடத் தொடங்கினான், கீழே விழுந்தான், முள் செடியில் மாட்டிக் கொண்டான், தொடர்ந்து ஆட உடம்பு எல்லாம் அடிப்பட்டு, ரத்தக்களரியாகி, “அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லேன்னா, நான் செத்து போயிடுவேன், என்னால் வலி தாங்க முடியலை, ஆடாமலும் இருக்க முடியலை, நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்” என்றான்.

அழகேசனும் அவனிடமிருந்ததை எல்லாம் வாங்கி விட்டு, அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார்.

அங்கே ஜமிந்தார் “அய்யோ, எல்லாமே போயிட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போயிட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போயிட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன்” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அழகேசன் அவரை பார்த்து “அய்யா அழ வேண்டாம், திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனன காட்டில் கட்டி வைத்திருக்கிறேன், உடனே ஊர்க்காவலர்கல் போய் பிடியுங்க, இதோ உங்க நகைகள், பணம், சரி பாருங்க” என்றார்.

ஜமிந்தாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்ப்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

Monday, November 21, 2005

கதை எண் 62 - மூன்று மரங்களின் கதை

ஒரு அடர்த்தியான காட்டில் முன்று மரங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு கனவு இருந்தன.

முதல் மரம் தன் கனவை தன் நண்பர்களிடம் சொன்னது, " நான் ஒரு மாணிக்க பேழையாக மாறவெண்டும் என்பதே என் கனவு, என்னுள் அரசர்கள் தங்கள் வைரம், முத்து, மாணிக்கம் போன்ற விலைமதிக்கமுடியாத செல்வங்களை வைக்கவேண்டும், நான் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்"

இரண்டாவது மரம் தன் கனவை சொல்ல ஆரம்பித்தது, " நான் ஒரு மிக பெரிய போர் கப்பல் ஆக வேண்டும், நான் அரசர்களையும், மாமன்னர்களையும் சுமக்க வேண்டும், பலத்த புயல், கொடும் காற்று போன்ற எதுவாக இருந்தாலும், அவ்ர்கள் என்னில் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும்"என்ற தன் கனவை முடித்ததும்

மூன்றாவது மரம் சொன்னது "நான் நீண்டு உயர்ந்து வளர்ந்து மிக பெரிய மரமாவேன், அப்போது என்னை காணும் மக்கள் எல்லாம் வானையும், கடவுளையும் பார்த்து, நான் அவர்களுக்கு எவ்வளவு நெருங்கி விட்டேன் என்றும், எக்காலமும் நானே உலகின் சிறந்தமரம் என்றும் கூறவேன்டும்" என்று கூறியது...

பல வருடங்களாக தன் கனவு மேல் கொண்ட தவங்களுக்கு பிறகு, ஒரு நாள் சில மரவெட்டிகள் அந்த காட்டிற்க்கு வந்தனர். அவர்களில் ஒருவன் முதல் மரத்திடம் வந்து, " நான் இதை வெட்டி ஒரு தச்சனிடம் விலைக்கு கொடுப்பேன்" என்று கூறினான், இதை கேட்ட அந்த முதல் மரம் தான் மாணிக்க பேழையாக போவதாக நினைத்து மகிழ்ந்தது.

இரண்டாவது மரத்திடம் வந்த மரவெட்டி அதன் உறுதியை பார்த்து, "நான் இதை வெட்டி துறைமுகத்தில் விற்பேன்" என்றான். இதை கேட்ட மரம் தான் ஒரு மிக பெரிய போர் கப்பலாக போவதாக எண்ணி மகிழ்ந்தது.

மற்றொரு மரவெட்டி மூன்றாவது மரத்திடம் வந்ததும் அது பயந்தது, அது வெட்டபட்டால் அதன் கனவுகள் அழித்து போகும் என நினைத்தது. அவன் அம்மரத்தை பார்த்து "நான் இம்மரத்திடம் பெரியதாக எதுவும் எதிர் பார்க்கவில்லை, இருப்பினும் இதை நான் வெட்டி கொண்டு செல்லுவேன்" என்றான்.

முதல் மரம் தச்சனிடம் வந்தபோது, அவன் அதை ஒரு வைக்கோல் பெட்டியாக செய்தான், மாணிக்க பேழையாக வேண்டிய தன் கனவு ஒரு வைக்கோல் பெட்டியாக ஆகிபோனதை நினைத்து அது வருந்தியது.

போர் கப்பல் கனவுடன் துறைமுகம் நுழைந்த இரண்டாவது மரம் ஒரு மீன்பிடி படகாக செய்யபட்டது.

மூன்றாவது மரம் பெரிய பாளங்களாக வெட்டி ஒரு இருட்டறையில் இடப்பட்டது.

காலம், அவர்களது கனவுகளை மறக்கவைத்தது.

ஒரு கொடுங்குளிர் இரவில், ஒரு தம்பதியர் ஒரு மாட்டு தொழுவத்திற்க்கு வந்தனர், பெண்மணி ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.. அவர்கள் அந்த குழந்தையை முதல் மரத்தில் இருந்த செய்த வைக்கோல் பெட்டியில் வைத்தனர், அந்த மரம் அப்போது தான் உணர்ந்தது தான் உலகின் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தாங்கி பாதுகாத்திருப்பதை.

சில வருடஙளுக்கு பிறகு சிலர் இரண்டாவது மரத்தில் இருந்து செய்யப்பட்ட மீன்பிடி படகில் எறினர். படகு நடு கடலில் செல்லுகையில், பெரும் புயல் வீச துவங்கியது. அந்த மரம் படகில் உள்ளவர்களை பத்திரமாக கரை சேர்ப்பதை பற்றி கவலை கொண்ட பொழுது , படகில் இருந்தவர்கள் அங்கு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினர்., அவர் எழுந்து "அமைதி" என்றதும் புயல் அடங்கியது.

அந்த நேரத்தில் இரண்டாவது மரம் தான், அரசர்களின் அரசரை சுமந்ததை குறித்து மகிழ்ந்தது.

கடைசியாக, அந்த மூன்றாவது மரம் இருட்டறையில் இருந்த எடுத்து செல்லபட்டது. அது ஒரு மாமனிதரால் சுமந்து செல்லப்பட்டது, மக்கள் அதை சுமந்தவரை நிந்தித்தனர்.

அவரை அம்மரத்தில் ஆணியால் அறைந்து மலை உச்சியில் நட்டு வைத்தனர். ஞாயிறு வந்தபோது வாண்ணளவு உயர்ந்து கடவுளின் அருகில் மிக நெருக்கமாக இருந்ததை நினைத்து மகிழ்ந்தது, எனென்றால் அந்த மரத்தை சுமந்து, பின்னர்அதில் அறையப்பட்டவர் தான் தேவமைந்தன் இயேசு கிறிஸ்து......

Wednesday, November 16, 2005

கதை எண் 61 - அழியாத செல்வம்

சிங்காரப்பட்டிணத்தின் சின்னராணி சித்திரலேகாவின் அழகும், அறிவும் அவனி அம்பத்தாறு தேசங்களிலும் பிரபலம்.

சின்னராணியை திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரர்கள் "நீ, நான்" என்று ஒற்றைக் காலில் நின்றனர்.

சித்ரலேகாவின் தந்தை சித்திரசேனன் யாருக்கு அவளை திருமணம் செய்து கொடுப்பது என்று புரியாமல் குழம்பினார்.

புத்திசாலியான தன் மகளிடமே இதற்கு ஒரு நல்ல உபாயம் சொல்லுமாறு கேட்டார்.

சின்னராணியின் ஆலோசனைப்படி அரசன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான்.

"அழியாத செல்வம் உடையவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால் அதை சின்னராணியிடம் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்த ஆண் மகனுக்கு சின்னராணி மாலை இடுவார்". இப்படி அறிவிக்கப்பட்டது.

சின்னராணியின் சுயம்வரச் சேதி காட்டுத் தீ போலப் பரவியது.

ராஜகுமாரர்கள் சித்திரசேனனின் நாட்டை நோக்கி விரைந்தனர்.

சித்திரசேனனின் சிங்காரப்பட்டினம் விழாக் கோலம் பூண்டிருந்தது.

மக்கள் தங்கள் ராஜகுமாரியை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.

விழா மண்டபத்தில் மன்னன் சித்திரசேனன் நடுநாயகமாக வீற்றிருந்தான். அவன் பக்கத்தில் ஒருபுறம் பட்டத்து ராணியும் மறுபுறம் சின்னராணியும் அமர்ந்திருந்தனர்.

எப்போதும் இல்லாத அளவிற்கு ராஜப்பிரதானிகளும் பொது மக்களும் அரசவை மண்டபத்தில் திரண்டிருந்தனர்.

சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த ராஜகுமாரர்கள் முன் வரிசையில் ஆடம்பரமாக அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொரு ராஜகுமாரனும் தன்னுடைய நாட்டின் பரப்பு, செல்வ வளம், இவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு கொண்டு வந்து சித்திரசேனனிடம் கொடுத்தனர்.

உலகத்திலேயே விலை மதிப்பற்ற ஒரு அரிய வைரக்கல்லை கொண்டு வந்து சின்னராணியின் காலடியில் வைத்தான் ஒரு ராஜகுமாரன்.

இன்னொருவன் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட மிக அழகிய சிம்மாதனம் ஒன்றைக் கொண்டு வந்தான், தனது செல்வத்தின் அடையாளமாக.

இவை எதுவுமே ராஜகுமாரியை திருப்திப்படுத்தவில்லை. ராஜகுமாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அப்போது இளைஞன் ஒருவன் மண்டபத்திற்குள் வந்தான்.

அவன் கையில் ஓலைச்சுவடி கட்டு ஒன்றை வைத்திருந்தான். பார்ப்பதற்கு ஒரு ஏழைப்புலவன் போல இருந்தான்.

"புலவரே.. இன்று சுயம்வரம்.. நடக்கிறது நாளை வாருங்கள் சன்மானம் தருகிறேன்.." என்றார் மன்னர்.

"நான் சன்மானம் பெற வரவில்லை.. சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.." என்றான் இளைஞன்.

"நீ.. என்ன விலைமதிப்பற்ற செல்வம் கொண்டு வந்திருக்கிறாய்.." என்று சிரித்தபடியே கேட்டார் மன்னர்.

உடனே அந்த இளைஞன் தன் கையிலிருந்த ஓலைச்சுவடிக் கட்டை மன்னனிடம் கொடுத்தான்.

ஓலைச் சுவடிக் கட்டை சின்னராணியிடம் கொடுத்தார் மன்னர். சின்னராணி சுவடியைப் பிரித்தாள். திருக்குறள் அத்தனையும் அதில் எழுதப்பட்டிருந்தது.

"நான் கேட்டது விலை மதிப்பற்ற செல்வம்.. அழியாத செல்வம்.. ஆனால் நீ என்னிடம் கொடுத்திருப்பது.. திருக்குறள்.." என்றாள் சின்னராணி.

"ஆமாம் இளவரசி.. இரண்டும் ஒன்றுதானே திருக்குறள் கல்வியின் அடையாளம். எல்லாச் செல்வத்திலும் கல்விதான் அழியாத செல்வம். விலைமதிப்பற்ற செல்வம்"

"அது எப்படி அழியாத செல்வம் ஆகும்" என்றாள் சின்னராணி.

"நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கலாம். அள்ள அள்ள குறையாதது கல்வி ஒன்றுதான்" என்றான்.

"நீங்கள் போட்டியில் ஜெயித்துவிட்டீர்கள். நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றாள் சின்னராணி.

"அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரு ஆசிரியன் நான்" என்றான் அவன்.

கல்வி கேள்விகளில் சிறந்த ஆசிரியர் சின்னமணி அழகிற் சிறந்த சின்னராணிக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது.

சின்னமணியும் சின்னராணியும் சிங்காரப்பட்டினத்தில் பல ஆண்டுகள் அரசாண்டு பல பள்ளிகளைத் திறந்து மக்களின் கல்விக் கண்களைத் திறந்தனர்.

Monday, November 14, 2005

கதை எண் 60 - புத்திசாலி பூனை பிரபு

முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பூனையால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டில் விட்டு விடுவோம், என்று நினைத்தார் அவர். அப்படியே அதைக் காட்டில் விட்டுவிட்டு வந்தார். அந்த காட்டில் பூனையே கிடையாது. அங்கே உலவிக் கொண்டிருந்தது பூனை. பெண் நரி ஒன்று அதைப் பார்த்தது.

"ஐயா! தாங்கள் யார்? இப்பொழுது தான் தங்களை முதன் முறையாகப் பார்க்கிறேன்" என்று கேட்டது அது.

"நான் பூனை பிரபு" என்று கம்பீரமாகச் சொன்னது பூனை.

அதன் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கியது நரி. "ஐயா! என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவியாக நான் நடந்து கொள்வேன். உங்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பேன், ஒரு பிரபுவை கல்யாணம் செய்துக் கொண்ட பெருமை எனக்கு கிடடக்கும்" என்றது.

பூனையும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது. இரண்டிற்கும் திருமணம் நடந்தது.
தான் சொன்னபடியே நடந்தது நரி. தனியே சென்று கோழிக் குஞ்சுகளைப் பிடித்து வரும் பூனைக்கு உண்ணக் கொடுக்கும். சில சமயம் அது பட்டினியாகவே கிடக்கும்.

ஒரு நாள் உணவு தேடச் சென்றது நரி. வழியில் அதை முயல் ஒன்று சந்தித்தது.

"நண்பனே! உன் வீட்டிற்கு நான் வரலாம் என்று இருக்கிறேன். எப்பொழுது வருவது?" என்று கேட்டது முயல்.

"என் வீட்டிற்கு வரும் எண்ணத்தை விட்டுவிடு. அங்கே பூனை பிரபு இருக்கிறார். அவர் கொடூரமானவர். உன்னைக் கண்டால் ஒரு நொடியில் கொன்று தின்று விடுவார்" என்றது நரி.

அங்கிருந்து ஓடிய முயல் வழியில் ஓநாயைச் சந்தித்தது. "உனக்குச் செய்தி தெரியுமா? நரியின் வீட்டில் பூனை பிரபு இருக்கிறாராம். அவர் மிகக் கொடூரமானவராம். யாரையும் கொன்று தின்று விடுவாராம்" என்றது அது.

இந்த விந்தையான செய்தியைப் பன்றியிடம் சொன்னது ஓநாய். பன்றி இதைக் கரடியிடம் சொன்னது. முயல், ஓநாய், பன்றி, கரடி நான்கும் ஒன்றாகக் கூடின.

"எப்படியாவது பூனை பிரபுவை நாம் பார்க்க வேண்டுமே?" என்றது கரடி.

"உயிரின் மீது உனக்கு ஆசை இல்லையா?" என்று கேட்டது முயல்.

"எனக்கு நல்ல வழி ஒன்று தோன்றுகிறது நாம் நால்வரும் சேர்ந்து பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்வோம். பூனை பிரபுவையும் நரியையும் விருந்திற்கு அழைப்போம்" என்றது ஓநாய்.

எல்லோரும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.

மேசையின் மேல் விதவிதமான உணவுப் பொருள்கள் பரிமாறப் பட்டன.

"யார் சென்று பூனை பிரபுவை அழைப்பது?" என்ற சிக்கல் எழுந்தது.

"எனக்கு தூங்கி வழிகின்ற முகம். நான் சென்று எப்படி அழைப்பேன்?" என்று மறுத்தது பன்றி.

"எனக்கு அதிக வயதாகி விட்டது. உடல் நலமும் சரியில்லை" என்றது ஓநாய்.

"ஏதேனும் ஆபத்து என்றால் என்னால் வேகமாக ஓட முடியாது" என்றது கரடி.

மூன்றும் முயலைப் பார்த்து, "விருந்துச் செய்தியை நீதான் சொல்லிவர வேண்டும்" என்றன.
முயல் நடுங்கிக் கொண்டே நரியின் வீட்டை அடைந்தது. நீண்ட நேரம் வெலியிலேயே காத்திருந்தது. வெளியே வந்த நரி முயலைப் பார்த்து வியப்பு அடைந்தது.

"பன்றி, ஓநாய், கரடி மூன்றும் என்னை இங்கே அனுப்பின. நால்வரும் சேர்ந்து விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். உங்களுக்காகவே இந்த விருந்து நீங்களும் பூனை பிரபுவும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்" என்றது முயல்.

"நல்லது. நான் விருந்திற்கு வருகிறேன். பூனை பிரபுவும் என்னுடன் வருவார். நாங்கள் வரும் போது நீங்கள் நால்வரும் எங்காவது ஒளிந்து கொள்ளுங்கள் பூனை பிரபு உங்களைப் பார்த்தால் நீங்கள் செத்தீர்கள். விருந்து எங்கே நடக்கிறது?" என்று கேட்டது நரி.

இடத்தைச் சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தது முயல். தன் நண்பர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னது அது. பயந்து போன நான்கும் என்ன செய்வது என்று சிந்தித்தன.

"நான் அந்த மரத்தில் ஏறிக் கொள்கிறேன்" என்றது கரடி.

"அந்தப் புதரில் நான் ஒளிந்து கொள்கிறேன்" என்றது ஓநாய்.

"உன் அருகிலேயே நானும் பதுங்கிக் கொள்கிறேன்" என்றது முயல்

"அடர்ந்த அந்த மரங்களுக்குப் பின்னால் நான் மறைந்து கொள்கிறேன்" என்றது பன்றி.

பூனை பிரபுவும் நரியும் வரும் ஓசை கேட்டது. நான்கும் பதுங்கிக் கொண்டன.
பலவிதமான உணவுப் பொருள்களைப் பார்த்தது பூனை. அதற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. 'மியாவ், மியாவ்' என்று கத்திக் கொண்டே சாப்பிடத் தொடங்கியது.

புதரில் இருந்த ஓநாய், "எவ்வளவு பயங்கரமான விலங்கு? என்ன கொடூரமான குரல்? சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் நம் விருந்து அதற்குப் போதாது. நம்மையும் கொன்று தின்னும் போல இருக்கிறது" என்றது.

"ஆமாம்" என்று நடுங்கிக் கொண்டே சொன்னது முயல்.

மரத்தில் இருந்த கரடியும் மறைந்து இருந்த பன்றியும் நடுங்கின.

பூனை விருந்தை வயிறார உண்டது. மேடையின் மேல் படுத்துத் தூங்கத் தொடங்கியது.
மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த பன்றியின் வாலைக் கொசு ஒன்று கடித்தது. உடனே பன்றி தன் வாலை அசைத்தது.

சத்தம் கேட்டு விழித்தது பூனை. பன்றியின் வாலை எலி என்று தவறாக நினைத்தது அது.
"மாட்டிக் கொண்டாயா?" என்று கத்திக் கொண்டே எலியைப் பிடிக்கப் பாய்ந்தது. நேராகப் பன்றியின் முகத்தில் போய் மோதியது அது.

எதிர்பாராமல் நடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது பன்றி. அங்கிருந்து 'தப்பித்தேன்' என்று கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்தது.

பன்றியைக் கண்டு பயந்த பூனை ஒரே பாய்ச்சலில் அருகில் இருந்த மரத்தில் ஏறியது.
அங்கிருந்த கரடி தன்னைத்தான் பூனை பிரபு கொல்ல வருகிறார் என்று பயந்தது. விரைந்து மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்றது. அதன் எடை தாங்காமல் கிளை முறிந்தது. புதரில் மறைந்திருந்த ஓநாயின் மேல் விருந்தது அது.

அலறி அடித்துக் கொண்டு ஓநாயும் ஓட்டம் பிடித்தது. முயலும் அதைத் தொடர்ந்து ஓடியது. வலியைத் தாங்கிக் கொண்டு 'தப்பித்தோம் பிழைத்தோம்' என்று கரடியும் ஓடியது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு நான்கும் சந்தித்தன.

"பூனை பிரபு பார்ப்பதற்குச் சிறியவராக இருக்கிறார். நம் நால்வரையும் கொன்று தின்றிருப்பார். நல்ல வேளை தப்பித்தோம்" என்றது கரடி.

மற்ற மூன்றும் "ஆமாம்" என்றன.

அதன் பிறகு பூனை பிரபுவின் வழிக்கே அவை செல்லவில்லை. வயதானாலும், அதிஷ்டத்தாலும், தன் வாய்சொல் திறமையாலும் பூனையானது மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.

Saturday, November 12, 2005

கதை எண் 59 - சாத்தப்பனும், குண்டோதரன் பேயும்

சாத்தான் குளம் என்ற ஓர் ஊரில் உழவர் ஒருவர் இருந்தார். அவர் கடுமையான உழைப்பாளி என்பதால் நல்ல கடுமையான உடல் கட்டும், பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தார். அவரது பெயர் சாத்தப்பன். அவருக்கு என்று ஊரில் இருந்த கொஞ்ச நிலத்தில் உழுவு செய்து, சம்பாதித்து வந்தார். ஏழையானாலும் அவர் எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவர். ஒரு நாள் உழுவதற்காக அவர் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது.

புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தார் அவர். அங்கிருந்த பெரிய மரம் ஒன்றைத் தேர்ந்து எடுத்தார். "நல்ல வைரம் பாய்ந்த மரம். இதில் கலப்பை செய்தால் நீண்ட காலம் உழைக்கும்" என்று சொல்லிக் கொண்டே கோடரியால் அதை வெட்டத் தொடங்கினார்.

மரத்தை வெட்டும் போது பொழுது போக அவர் வேடிக்கையாக பாடத் தொடங்கினார்.

“வந்தேண்டா உழுவுக்காரன்
பேயைக் காட்டிலும் வலிமையானவன்
நான் ஆயிரம் பேயை பிடித்தவன்டா
அலாவுதின் பூதத்தை பார்த்தவன்டா
விக்கிரமாதித்தனின் வேதாளம் என் நண்படா
கொள்ளிவாய் பிசாசின் தலையில் தீயை வைத்தவன்டா
இன்றைக்கு நல்ல வேட்டை,
இனிமேல் பேய் பாடு பெறும் பாடு”

இப்படியாக அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் கர்ணகடுர குரலில் பாடினார்.
அந்த மரத்தில் நிறைய பேய்கள் குடி இருந்தன. சாத்தபன் அந்த மரத்தை வெட்டுவதையும், அத்துடன் அவர் பாடிய பாடலையும், அவரது உருவத்தையும் கண்டு அவை பயந்து நடுங்கின.

எல்லாம் பேய்களும் உடனே ஒன்றுடன் ஒன்று பேசின, மரத்தை விட்டுக் கீழே இறங்கிய எல்லாப் பேய்களும் அவர் காலில் விழுந்தன.

பேய்களைக் கண்ட அவருக்கு அச்சத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று உள்ளுக்குள் நடுங்கியபடியே இருந்தார். இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் இருந்தார்.

கிழப்பேய் ஒன்று, "ஐயா! இந்த மரத்தில் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எதற்காக இதை வெட்டுகிறீர்கள்? எங்களை ஏன் பிடிக்க வந்தீர்கள், நாங்க உங்க ஊர் மக்கள் யாருக்கும் கெடுதல் செய்யவில்லையே, எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்" என்று கெஞ்சியது.

இதைக் கேட்டதும் அவருக்குப் போன உயிர் திரும்பி வந்தது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டார்.

பேய்களைப் பார்த்து அதிகாரக் குரலில், "நிலத்தில் எள் விதைக்க வேண்டும் புதிய கலப்பை செய்வதற்காக இந்த மரத்தை வெட்டுகிறேன். நீங்கள் என் காலில் விழுந்ததால் பிழைத்தீர்கள். இல்லையேல் உங்களை எல்லாம் ஒழித்து இருப்பேன். என் வீட்டுத் தோட்டத்தில் பத்துப் பேய்களைக் கட்டி வைத்து இருக்கிறேன், அவை எனக்கு போதாது" என்று கதை அளந்தார் சாத்தப்பன்.

"ஐயா! எங்களை விட்டு விடுங்க, மேலும் இந்த மரத்தை வெட்டாதீர்கள். நாங்கள் வேறு எங்கே போவோம்? எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்" என்று எல்லாப் பேய்களும் அவர் காலைப் பிடித்துக் கொண்டு அழுதன.

"கலப்பை இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள். மரத்தை வெட்டியே தீருவேன்" என்றார் சாத்தப்பன்.

கிழப்பேய் அவனைப் பார்த்து, "ஐயா! உங்கள் நிலத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு எள் விளைகிறது?" என்று கேட்டது.

"ஐம்பது மூட்டை எள்?" என்றான் அவர்.

"ஆண்டிற்கு நூறு மூட்டை எள் நாங்கள் தருகிறோம். இந்த மரத்தை வெட்டாதீர்கள்" என்று கெஞ்சியது அது.

உங்கள் மீது இரக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாமல் விடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அறுவடை நேரத்தில் நூறு மூட்டை எள் வந்தாக வேண்டும். வரத் தவறினால் இந்த மரத்தை வெட்டுவதோடு நிற்க மாட்டேன். உங்களையும் அழித்து விடுவேன்" என்றார் அவர்.

"எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நாங்கள் சொன்ன சொல் தவற மாட்டோம்" என்றது அந்தப் பேய்.

மகிழ்ச்சியுடன் சாத்தப்பன் வீடு வந்து சேர்ந்தார். பேய்களை சந்தித்ததை யாரிடமும் அவர் சொல்லவில்லை. தன் நிலத்தில் எள்ளுக்குப் பதில் நெல் விளைவித்தார், கலப்பை ஒன்றை தச்சரிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இதுவரை சோம்பேறியாக மரத்தில் உறங்கிக்கிடந்த அந்த பேய்கள் எல்லாம் காட்டில் தரிசாக கிடந்த இடத்தில் கடுமையாக உழைத்தது, அந்த நிலத்தில் எள்ளை விதைத்தது.

அறுவடைக் காலம் வந்தது. பேய்கள் கடுமையாக உழைத்த காரணத்தால் நல்ல விளைச்சல் கிடைத்தது, நூறு மூட்டை எள்ளைச் சேர்த்து அவரிடம் கொண்டு வந்தன.

பேய்களைப் பார்த்து அவர், "சொன்னபடியே எள் கொண்டு வந்து இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற முயன்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன். ஆண்டு தோறும் இப்படியே வர வேண்டும்" என்று மிரட்டி அவற்றை அனுப்பி வைத்தார்.

நடுங்கியபடியே பேய்கள் அங்கிருந்து சென்றன.

அதே நேரம் சாத்தப்பனின் வயலில் நல்ல விளைச்சல். தன் குடும்பத்திற்கு போக மீதியை கோயிலுக்கும், ஏழை மக்களுக்கும் கொடுத்தார். பேய்களால் கிடைத்த 100 எள் மூட்டைகளள விற்று அந்த பணத்தில் புது வீட்டை கட்டத் தொடங்கினார்.

சில நாட்கள் கழிந்தன. வெகு தொலைவில் இருந்து குண்டோதரன் என்ற பெயருடைய பேய் தன் உறவினர்களைப் பார்க்க அங்கு வந்தது. எல்லாப் பேய்களும் இளைத்துத் துரும்பாக இருப்பதைக் கண்டது அது.

"சென்ற ஆண்டு உங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இன்றோ மெலிந்து சோகத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். என்ன நடந்தது? சொல்லுங்கள்" என்று கேட்டது அது.

சாத்தப்பனை பற்றியும், அவருக்கு உழைத்து கொடுக்கும் 100 எள் மூட்டைகளைப் பற்றியும், நடந்தது அனைத்தையும் சொன்னது ஒரு பேய்.

"நூறு மூட்டை எள்ளைத் விளைவித்து கொடுப்பதிலேயெ எங்கள் காலம் கழிகிறது" என்று எல்லாப் பேய்களும் வருத்தத்துடன் சொல்லின.

குண்டோதரன் பேயால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "நீங்கள் இவ்வளவு முட்டாள்களா? நாம் பேய்கள் அல்லவா? நமக்குத்தான் மனிதர்கள் பயப்பட வேண்டும். நாம் அவர்களுக்குப் பயப்படலாமா?" என்று கேட்டது.

"அவர் சாதாரண மனிதன் அல்ல. எத்தனையோ பெரிய பேய்களை வீட்டில் கட்டி வைத்து இருக்கிறார். எதற்கும் அஞ்சாத முரடர். அதனால்தான் நூறு மூட்டை எள் தர ஒப்புக் கொண்டோம்" என்றது ஒரு பேய்.

"போயும் போயும் ஒரு மனிதனுக்கா அஞ்சுகிறீர்கள்? வெட்கம்! வெட்கம்! இன்றே அவனைக் கொன்றுவிட்டுத் திரும்புகிறேன்" என்று புறப்பட்டது குண்டோதரன்பேய்.

"வேண்டாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ அவரிடம் மாட்டிக் கொண்டு துன்பப்படப் போகிறாய்" என்று எச்சரித்தன மற்ற பேய்கள்.

சாத்தப்பனின் வீட்டிற்குச் சென்றது குண்டோதரன். வாய்ப்பை எதிர்பார்த்து மாட்டுத் தொழுவத்தில் பதுங்கி இருந்தது அது.

கையில் இருந்த பணத்தில் சாத்தபன் வெளியூரில் இருந்து நல்ல கொழு கொழு மாடுகள் வாங்கி வந்து வீட்டில் கட்டியிருந்தார். அதில் ஒரு மாடு ரொம்பவும் கொழு கொழு என்று கொழுத்திருந்தது, அதற்கு ஏற்ப அது முரட்டு மாடாக இருந்தது, அதுவும் தொழுவத்தில் ஒரு ஓரத்தில் கட்டியிருந்தது, அது கட்டியிருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு, அங்கே இருந்த வைக்கோல் போரில் பின்னார் மறைந்து இருந்தது. அந்த கொழு கொழு முரட்டு மாட்டை, சாத்தபன் மற்றும் குடும்பத்தார் குண்டோதரன் என்றே அழைப்பார்கள்

அங்க குண்டோதரனுக்கு லாடம் கட்டி, முக்கணாங்கயிறு கட்டினால் கொழுப்பு அடங்கும், வயலில் உழவு செய்ய பயன்படுத்தலாம் என்று நினைத்தார். அவர் தொழுவத்திற்கு வந்து பார்த்தால் கயிறு அறுந்து, குண்டோதரன் மறைவில் நின்றதை பார்த்து விட்டு, “டேய், பெரிய பையா, உடனே அந்த பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை எடுத்துக் கொண்டு வா, இந்த குண்டோதரன் என்னையே மிரட்டப் பார்க்கிறான், எல்லோரும் சொல்லியும் அடம்பிடித்து, என்னையே எதிர்க்க துணிந்து விட்டான், அவனை என்ன செய்கிறேன் பார், அந்த இரும்பு துண்டால் பெரிய சூடு போட வேண்டும். வெளியூர் என்பதால் நம்மைப் பற்றித் தெரியாமல் ஆட்டம் போடுகிறது. சூடு போட்டவுடன் அதுவும் இங்குள்ளவை போல ஆகிவிடும். ஒழுங்காகப் பணிந்து நடக்கும்" என்று உரத்த குரலில் கத்தினார் சாத்தப்பன்.

பதுங்கி இருந்த குண்டோதரன்பேய் இதை கேட்டு நடுங்கியது. "ஐயோ! எல்லாப் பேய்களும் தடுத்தனவே! என் ஆணவத்தால் அவற்றை மீறி வந்தேனே! பெரிய மீசையுடன் இருக்கும் இவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே. சிறிதும் இரக்கம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். நாம் நன்றாக மாட்டிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. நமக்குப் பெரிய சூடு போடத்தான் போகிறான். என்ன செய்வது?" என்று குழம்பியது அது.

பின்னர் எப்படியாவது உயிர் தப்பினால் போதும், அதற்கு ஒரே வழி சாத்தப்பனை மனம் குளிரச் செய்வது தான் என்று நினைத்து சாத்தப்பனின் கால்களில் விழுந்த குண்டோதரன்பேய், "ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் நான் இங்கே வந்து விட்டேன். எனக்குச் சூடு போட்டு விடாதீர்கள், என்னை கொன்று விடாதீர்கள்" என்று கெஞ்சியது.

குண்டான புதுப்பேயைக் கண்டதும் சாத்தபனுக்கு பயம் வந்தது, ஆனாலும் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

"என் எதிரில் வர உனக்கு என்ன துணிச்சல்? அதான் 100 மூட்டை எள் கிடைத்து விட்டது தானே, அடுத்த அறுவடைக்கு தானே இங்கே வரவேண்டும், அதற்குள் ஏன் வந்தாய், உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபத்துடன் கத்தினார்.

இவரிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது அது, "எல்லாப் பேய்களும் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தன" என்று பொய் சொன்னது.

"எதற்காக அனுப்பினார்கள்? உண்மையைச் சொல். இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்" என்று இடிக்குரலில் முழங்கினார்.

"அய்யா, பேய்கள் உங்களுக்கு ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. நீங்கள் அவற்றை எண்ணெய் ஆக்குவதற்காக ஏன் துன்பப்பட வேண்டும்?" எள்ளுக்குப் பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாக அவை முடிவு எடுத்தன.

உங்களுக்கு எள் வேண்டுமா? எண்ணெய் வேண்டுமா? இதைத் தெரிந்து வருவதற்காக என்னை அனுப்பி வைத்தன. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்" என்று நடுங்கியபடியே கேட்டது அது.

"இனிமேல் எனக்கு எள் வேண்டாம். எண்ணெயாகவே தாருங்கள். ஏதேனும் தவறு நடக்குமானால் உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். உன்னை நான் எப்போ எப்போ அழைக்கிறேனோ அப்போ எல்லாம் என் முன்னால் வரவேண்டும், நான் இடும் கட்டளைகளை செய்ய வேண்டும், அதற்கு ஒத்துக் கொண்டு, இங்கிருந்து தப்பி ஓடு." என்று விரட்டினார்.

எப்படியோ தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடியது அது. மூச்சு வாங்கக் காட்டை அடைந்தது. அதன் நிலையைப் பார்த்த மற்ற பேய்களும் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது.

"என்ன குண்டோதரா? வீரம் பேசிவிட்டுச் சென்றாயே? அவரைக் கொன்று விட்டாயா?" என்று கேலியாகக் கேட்டது ஒரு பேய்.

"உங்கள் பேச்சைக் கேட்காதது தப்புதான். முரடனான அவனிடம் நான் நன்றாகச் சிக்கிக் கொண்டேன். எனக்குப் பெரிய சூடு வைத்து இருப்பான். அதை இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது" என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி விட்டேன்? என்றது புதுப்பேய்.

"அவர் பெரிய ஆளாயிற்றே! அவரிடம் என்ன சொல்லித் தப்பினாய்?" என்று கேட்டது ஒரு கிழப் பேய்.

"நூறு மூட்டை எள்ளாகத் தருவதா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெயாகத் தருவதா? என்று கேட்டு வர நீங்கள் அனுப்பியதாகச் சொன்னேன். அவனும் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெயே தருமாறு கட்டளை இட்டான்" என்று நடந்ததைச் சொன்னது புதுப்பேய்.

"என்ன காரியம் செய்துவிட்டாய். நூறு மூட்டை எள்ளைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தோம் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாகச் சொல்லி விட்டு வந்திருக்கிறாய். அவ்வளவு எண்ணெயைச் சேர்ப்பதற்காக நாங்கள் தூக்கம் இல்லாமல் துன்பப்பட வேண்டும். நாங்கள் தடுத்தும் நீ கேட்கவில்லையே. இனி என்ன செய்வது" என்று வருத்தத்துடன் புலம்பின அங்கிருந்த பேய்கள்.

குண்டோதரனும் மற்ற பேய்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு, விளைச்சல் மட்டும் செய்யாது, அதன் பின்னர் கடுமையாக உழைத்து எள்ளை எல்லாம் எண்ணைய் ஆக்கி ஆண்டுதோறும் சாத்தப்பனுக்கு நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன.

சாத்தப்பனும் அவற்றை விற்று பணக்காரர் ஆனார், மேலும் அந்த குண்டோதரனை அடிக்கடி அழைத்து, ஊருக்கு நல்ல நல்ல காரியங்கள் செய்தார். மழைக்காலம் வருவதற்கு முன்னர் ஊரில் இருக்கும் ஏரி, குளங்களில் தூர் வாரி எடுக்கச் செய்தார், நல்ல பாதைகள் போட வைத்தார். ஊர் முழுவதும் வேப்பமரம், ஆலமரம், தேக்கு, கொய்யா, போன்ற மரங்கள் நட்டு தண்ணீர் விடச் சொன்னார். மருத்துவமனை, நூலகம் போன்ற கட்டடங்களை பேய்களை வைத்து கட்டவைத்தார். இவ்வாறாக எல்லோரும் பயப்படும் பேய்களை தன் புத்திசாலித்தனத்தால் அனைவருக்கும் பயன்படும் வகையில் செய்தார். ஊராரும் அவரைப் போற்றி வந்தார்கள்.

Thursday, November 10, 2005

கதை எண் 58 - முல்லாவும் மூன்று அறிஞர்களும்

நம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி போடுவார்கள், அதனால் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்கள் தெரிய வரும். சில நேரங்களில் போட்டி கடுமையாக இருக்கும், வெற்றி பெற்றவருக்கு பட்டமும், பணமும் கிடைக்கும்.

ஒருமுறை மூன்று மெத்த படித்தவர்கள், எல்லாமே தெரிந்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்பார்கள். அவர்கள் போட்டி அழைத்தாலே, ஏன் வீணாக அவமானப்பட வேண்டும் என்று நினைத்து நிறைய பேர் போட்டியை புறக்கணிப்பார்கள்.

அப்படி பட்ட அந்த மூன்று பேரும் நம்ம முல்லா இருந்த நாட்டிற்கு வந்து அரசனிடம் எங்களுடன் போட்டிப் போட உங்கள் நாட்டில் புத்திசாலிகள் இருந்தால் வரச் சொல்லுங்க என்றார். உடனே அரசர் தன்னுடைய அரண்மனை அறிஞர்களைப் பார்க்க அவர்களோ தலையை தொங்கப் போட்டு விட்டார்கள், யாரும் போட்டிப் போட விருப்பம் தெரிவிக்கவில்லை,

உடனே அந்த மூன்று பேரும், சப்தமாக சிரித்து, உங்கள் நாட்டில் அனைவரும் முட்டாள்களா? எங்களுடன் போட்டிப்போட யாருமே இல்லையா? ஹா ஹா, அப்படியே போட்டி போட்டு எங்களை வென்றால் நாங்கள் இந்த நாட்டுக்கு அடிமை, இல்லை என்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை, போட்டிக்கு தயாரா? என்று கிண்டலாக கேட்க, அரசனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.

நாளை நாட்டின் நடுவில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டி நடைபெறும், யார் வேண்டும் என்றாலும் கலந்துக் கொள்ளலாம், இந்த மூன்று பேரையும் வெற்றிக் கண்டால் நிறைய பரிசுகள் கிடைக்கும், இல்லை என்றால் கடுமையான தண்டனை என்று அறிவிப்பு செய்தார். அன்றைய இரவே புத்திசாலிகள் என்று சொல்லித் திரிந்த நிறைய பேர் ஊரை விட்டு போய் விட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தார்கள், அவர்களோடு போட்டி போட்டு தோற்றவர்கள் தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். யாருமே அவர்களை வெற்றிக் கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அரசன் அமர்ந்திருந்தான்.

அந்த பக்கமாக நம்ம முல்லா பக்கத்து நாட்டில் வியாபாரம் செய்து முடித்து தன்னுடைய கழுதையுடன் ஊருக்கு வந்தார், என்னடா இங்கே இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே, என்று வேடிக்கை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி. அவரது மச்சான் வேறு கையை கட்டி தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தான்.

மக்களிடம் என்ன ஏது என்று கேட்டு தெரிந்துக் கொண்டார், மச்சானின் தொந்தரவு இனி இருக்காது என்று நினைத்தார். சிறிது நேரத்திலேயே தன் நாட்டு மக்கள் யாருமே பதில் சொல்லவில்லை, அப்படி செய்தால் தன் நாட்டிற்கு பெருத்த அவமானம் ஆகுமே என்று நினைத்ததோடு இல்லாமல் இந்த அறிஞர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

தன்னுடைய கழுதையோடு கூட்டத்தின் நடுவே சென்று, அரசனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, தான் போட்டியிடப் போவதாக சொன்னார்.

அரசனும் சரி என்றார், ஆனால் அந்த மூன்று பேரும் முல்லாவின் ஆடை, கழுதையோடு நின்ற நிலையை பார்த்து ஏளனமாக சிரித்து, உன்னிடம் நாங்கள் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்போம், நீ சொல்லும் பதிலை நாங்க சரி, தவறு என்று சொல்வோம், அப்படி நாங்க பதில் சொல்லவில்லை என்றால் உனக்கும் இந்த நாட்டுக்கும் அடிமை. நீ தோற்றால் இந்த நாடும், மற்றவர்களும், நீயும் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு அடிமை.

முல்லா: அது எல்லாம் சரி, கேள்வியை கேளுங்கப்பா, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்?

முதல் அறிஞர் முல்லாவிடம், "இந்த உலகின் மைய இடம் எது?'' என்று கேட்டார்.

அதற்கு முல்லா, ""என் கழுதை நிற்குமிடம் தான் உலகின் மையம்,'' என்றார்.

அந்த அறிஞர், "அதை உண்மை என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்,'' என்றார்.

உடனே முல்லா, "அது உங்க வேலை, நான் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள். உலகை அளந்து பாருங்கள். அப்போது என் கழுதை நிற்குமிடம் உலகின் மையம் என்று தெரியும்,'' என்றார்.

முதல் அறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தார்.

அடுத்து இரண்டாம் அறிஞர், "ஆகாயத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?'' என்று கேட்டார்.

அதற்கு முல்லா, "என் கழுதையின் உடலில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை நட்சத்திரங்கள் ஆகாயத்தில் உள்ளன. வேண்டுமானால் எண்ணிப் பாருங்கள்,'' என்றார்.

இரண்டாம் அறிஞர் பேசாமல் இருந்துவிட்டார்.

மூன்றாவது அறிஞர் முல்லாவிடம், "மக்கள் கடைபிடிப்பதற்காகச் சான்றோர்கள் வகுத்த நெறிகள் எவ்வளவு?'' என்றார்.

அதற்கு முல்லா, "அறிஞர்களே உங்கள் மூவருடைய தாடியிலும் எவ்வளவு உரோமங்கள் உண்டோ அத்தனை நெறிகளைச் சான்றோர்கள் மக்களுக்காக வகுத்துள்ளனர்.

"இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மூவருடைய தாடியிலும் உள்ள உரோமங்களைப் பிடுங்கி எண்ணிக்கை சரியானது என்று நிரூபிக்கிறேன்,'' என்றார்.

இவ்வாறு முல்லா கூறியதும், "வேண்டாம், வேண்டாம். நீங்கள் சொன்ன பதிலை ஒப்புக் கொள்கிறோம்'' என்று கூறி அந்த அறிஞர்கள் தாங்கள் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டு தங்கள் பரிசுகளை முல்லாவிடம் சமர்ப்பித்தனர், தங்களை அந்த நாட்டின் அடிமை என்று அறிவித்தார்கள்.

போட்டியில் வென்றதால் அரசன் முல்லாவை கட்டிப்பிடித்து, நன்றி சொன்னார். என்ன கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார், உடனே “அந்த மூன்று அறிஞர்களையும் தங்கள் நாட்டிற்கு போக அனுமதிக்க வேண்டும், இனிமேல் அவர்கள் இது போல் போட்டியிட மாட்டார்கள்” என்றார்.

அந்த மூவரும் முல்லாவுக்கு நன்றி சொல்லி தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி போனார்கள். முல்லாவின் புகழ் மேலும் பரவியது.

Wednesday, November 09, 2005

கதை எண் 57 - வினை விதைத்தவன்

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவர் கொடுர மனம் படைத்தவர், யாருக்கும் உதவி செய்ய மாட்டார், பணம், பணம் என்று பேராசையில் வாழ்பவர்.

அவரிடம் நல்லதம்பி என்ற உழவர் வேலை பார்த்து வந்தார். அவருக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவர், " ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன், அது வளர்ந்து அறுவடை செய்ததும், உங்களுக்குரிய பணத்தை கொடுத்து விடுகிறேன், மீதி என் பிள்ளைகள் படிப்பிற்கு உதவியாக இருக்கும் " என்றார்.

" என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு, உன் பிள்ளைகள் ஒன்றும் படிக்க வேண்டாம், அவர்களும் இங்கேயே வேலைக்கு வரச் சொல். அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்" என்று கோபத்துடன் சொன்னார் அவர்.

சோகத்துடன் வீடு திரும்பினார் அவர். தன் மனைவியிடம், " நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான், நம் பிள்ளைகள் கூட படிக்க முடியாது போலிருக்குது. இதுதான் நம் தலைவிதி" என்று வருத்தத்துடன் கூறினார்.

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று ஏற்கனவே கூடு கட்டி இருந்தது, அந்த குருவிக்கு தினமும் கொஞ்சம் தானியங்கள் உழவரின் மனைவியும், குழந்தைகளும் கொடுப்பார்கள்.
சின்னஞ்சிறு குடிசையில் குருவிக்கும் தங்க இடம் கொடுத்து மகிழ்ந்தார்கள், கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.

அந்த குஞ்சுகளின் சப்தம் இனிமையாக இருந்தது, தினமும் குருவியானது வெளியே சென்று பூச்சிகளை பிடித்து கொண்டு வந்து குஞ்சுகளுக்கு கொடுக்கும், ஒரு நாள் சரியான புயல், மழை பெய்தது, வெளியே சென்ற குருவி வீட்டிற்கு வரவே இல்லை.

பாவம் குஞ்சுகள் பசியால் கத்தியது, அதைக் கண்ட உழவரும், குழந்தைகளும் தங்களுடைய உணவில் கொஞ்சம் கொடுத்தது, குஞ்சுகளின் பசியைப் போக்கினார்கள்.

திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடச் சென்றது, உடனே அங்கு வந்த உழவர் பாம்பை அடித்துக் கொன்றார். கொஞ்ச நேரத்தில் தாய் குருவி வீட்டிற்கு வந்தது, குஞ்சுகள் சொன்னதைக் கேட்டது, தாய்க்குருவி ஆனந்தக் கண்ணீர் விட்டது.

அடுத்த சில நாட்களில் உழவரும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள். குஞ்சுகள் வளர்ந்ததும், தாய் குருவியும், குஞ்சுகளும் உழவர் மற்றும் குடும்பத்தினரிடம் நன்றி கூறி வானில் பறந்து போயின.

சில நாட்களில் உழவரின் வீட்டில் சாப்பிடவே தானியங்கள் இல்லை என்ற நிலை ஏற்ப்பட்டது, "இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?" என்றாள் மனைவி.

அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தார் உழவர். அங்கே அவர்கள் வீட்டில் கூடு கட்டிய தாய் குருவி இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவர் கையில் வைத்தது. " இதை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நடுங்கள். சிறிது நேரத்தில் வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.

மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது. " இதை உங்கள் வீட்டின் முன்புறத்தில் நடு" என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது " இதை சன்னல் ஓரம் நடுங்கள். எங்கள் மீது காட்டிய அன்பிற்கு நன்றி" என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நல்லதம்பி நட்டார் .

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தார்.

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தார். அதை இரண்டு துண்டாக வெட்டினார் நல்லதம்பி.

என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசனிக் காய் ஆனது.

மகிழ்ச்சி அடைந்த அவர், " இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை, நாம் குருவிகளுக்கு செய்த உதவிக்கு இத்தனை பெரிய உதவியாக செய்திருக்கிறது, அவற்றை நாம் மறக்கக்கூடாது” என்றார்.

"வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்" என்றார் மனைவி.

அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக் கொண்டு வந்தார் அவன். கத்தியால் அதை வெட்டினார். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.

அதற்குள் அவரது குழந்தைகள் சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து கொடுக்க, நல்லதம்பி அதை வெட்டினார். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.

அதன் பிறகு அவரும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள். பெரிய பள்ளியில் படிக்க அவரது குழந்தைகள் சென்றார்கள். நல்லதம்பி தன்னைப் போல் ஊரில் கஷ்டப்பட்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்யத் தொடங்கினார்.

உழவர் சில நாள்களில் பெருஞ்செல்வனானதையும், தன்னை விட பெரும் புகழ் பெற்றதையும் அறிந்தார் பண்ணையார்.

உழவரின் வீட்டிற்கு வந்த அவர், " டேய்! நல்லதம்பி! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்" என்று கேட்டார். அவரும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னார்.

பண்ணையார் தன் மாளிகைக்கு வந்தார் . தன்னை விட நல்லதம்பி பெரிய பணக்காரன் ஆனதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, பொறாமை குணம் படைத்த அவர் எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அவரும் அதில் தங்கும் என்று எதிர்பார்த்தார்.

அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.

'பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஊரில் இருந்த பாம்பாட்டியிடம் சொல்லி, பெரிய கருநாகப்பாம்பை வீட்டில் கொண்டு வந்து குருவி கூட்டிற்கு அருகில் விட்டார், அந்த பாம்போ பசியில் இருந்ததால் ஓடி போய் 3 குஞ்சுகளை சாப்பிட்டு, ஏப்பம் விட்டது.

“அய்யோ, நான் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிவிட்டதே என்று ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார், பாம்பை அடித்து நொறுக்கி வெளியே போட்டார், மீதி இருந்த ஒரு குஞ்சை காப்பாற்றியது போல் நடித்தார். . வேளை தவறாமல் உணவு அளித்தார்.

சில நாட்களில் தாய் குருவியும், ஒரு குஞ்சும் கூட்டை விட்டு வெளியேறியது.

"மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட செல்வன் ஆவேன்" என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.

அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. " ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு" என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது. எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார். மறுநாளே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன.

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை வெட்டினார்.
அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன.

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார். அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அந்த மாளிகையை ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது. இத்தனை நடந்தும் அந்த பண்ணயார் திருந்தவில்லை.

அய்யோ எல்லாமே போய் விட்டதே, மூன்றாவது பூசணியிலாவது செல்வங்கள் இருக்கும் என்று எண்ணிய பண்ணையார், அதை வெட்ட, அதிலிருந்து கிளம்பிய பெரிய பூதம் அவரை தூக்கிக் கொண்டு பறந்தது. அதை அறிந்ததும் எல்லோரும் கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று மகிழ்ந்தனர்.

பணம், பணம் என்று பேராசையால் ஏழை மக்களுக்கு துன்பம் உண்டாக்கிய பண்ணையார் இறந்து போனப்பின்பு, நல்லதம்பி ஊர் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தார், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டிக் கொடுத்தார். அவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல பெயர் பெற்று விளங்கினார்கள்.

Tuesday, November 08, 2005

கதை எண் 56 - அறிவழகியின் அறிவுக்கூர்மை

சோலையூர் என்ற செழிப்பான ஊர், அங்கே அருகில் இருந்த மலையில் இருந்து ஓடிய சிற்றாறு உதவியால் மக்கள் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்கள். அதே ஊரில் விரைவில் பணம் சம்பாதிக்க நினைத்த சிலர், காட்டில் இருந்த மரங்களை தொடர்ந்து வெட்டியதால் சில ஆண்டுகளில் மழை பெய்யவே இல்லை, அதனால் சிற்றாறு வரண்டு போய் விட்டது, விவசாயம் செய்தவர்கள் எல்லாம் கஷ்டப்படத் தொடங்கினார்கள். மக்கள் பிழைப்பு தேடி வெளியூர்களுக்குச் செல்லத் தொடங்கினார்கள்.

அதே ஊரில் அறிவழகி என்ற பெண் இருந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவரது கணவர் ஊரில் விவசாயம் செய்ய முடியவில்லை, எனவே இருக்கும் பணத்தைக் கொண்டு வணிகம் செய்வதாக கூறி வெளியூர் சென்றிருந்தார்.

பல நாட்களுக்குப் பிறகு அறிவழகிக்கு அவரது கணவரிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது.

உடனே அறிவழகி தன் வீட்டை பூட்டி அண்டை வீட்டாரிடம் சாவியை கொடுத்து விட்டு, வெளியூரில் வசிக்கும் கணவன் அழைத்திருப்பதாகவும், அங்கே செல்வதாகும், பணம் நிறைய சம்பாதித்ததும், மீண்டும் சோலையூர் வருவோம் என்று சொல்லிவிட்டு, குழந்தைகளுடன் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் வணிகர்களின் ஒரு மாட்டு வண்டியில் ஏறினார்.

அடர்ந்த காட்டில் இரவு நேரத்தில் தங்கி காலையில் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள். விடியற்காலையில் குழந்தைகள் அழ, அறிவழகி தன் குழந்தைகளுக்கு அங்கே இருந்த குரங்குக்கூட்டத்தை வேடிக்கை காட்ட, குரங்குகள் அங்கேயும் இங்கேயும் ஓட, அவரும் அவற்றை தொடர்ந்து போய் விட்டார். அதற்குள் புறப்பட தயார் ஆகி, அறிவழகியை வியாபாரிகள் மறந்து போய் காட்டிலேயே விட்டு விட்டு, சென்று விட்டார்கள்.

குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தப் பின்னர் அமைதியாகிவிட, அறிவழகி, இரவில் தங்கிய இடத்திற்கு வந்தார், அங்கே யாரையும் காணவில்லை, எல்லோரும் சென்று விட்டார்கள்.

ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினார் அவர். சிறிது நேரம் யோசித்த அவர், பின்னர் அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தார். எப்படியும் இன்று மாலையில் மீண்டும் ஒரு வியாபாரிகள் கூட்டம் வெளியூர் செல்லும், அல்லது வெளியூர் கூட்டம் வரும், அவர்களோடு சென்று விடலாம். அதுவரை இந்த மரத்தின் மேல் இருப்பது தான் கொடிய மிருகங்களிடமிருந்து தப்பிக்க வழி என்று நினைத்தார்.

சிறிது நேரத்தில் மனித வாசனையை அறிந்த பயங்கரமான புலி ஒன்று அவர்கள் ஏறி இருந்த மரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அறிவழகி அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தார். எப்படியும் அந்த புலியிடமிருந்து தப்பிக்க வேண்டும், அதற்கு அறிவை உபயோகித்தால் தான் முடியும் என்று யோசித்ததில் நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.

இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினார். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள்.

குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் புலிக்கு கேட்கும் வகையில் சொன்னார்.

இதைக் கேட்ட புலி நடுங்கியது, இந்த பெண் ஒரு வேளை ராட்சசியாக இருப்பாளோ, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பார், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது. ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது.

தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தார் அறிவழகி.

பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது.

நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி.

இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது.

அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.

அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி.

ஒரு பக்கம் பயம், ஒரு பக்கம் பசி, ஆகையால் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி.

இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.

மரத்தில் இருந்த அறிவழகி நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவரின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தார் அவர்.

மீண்டும் தன் புத்திசாலித்தனத்தை உபயோகித்தார், கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாய் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினார்.

இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது.

அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.

நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது.

உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி.

வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி அந்த காட்டையே விட்டு எங்கோ ஓடி மறைந்தது.
ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு வெளியூர் செல்லும் வியாபாரிகள் வண்டிகள் வர, அவர்களிடம் பேசி, நடந்ததைக்கூறிய அறிவழகி தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவன் இருந்த ஊரை அடைந்தார்.

தொழிலில் நல்ல நிலையில் இருந்த கணவரோடு இணைந்து, குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்.

Monday, November 07, 2005

கதை எண் 55 - மதியழகனும் பூதமும்

முன்னொரு காலத்தில் வீரபாண்டியபுரம் என்ற நாட்டில் மதியழகன் என்ற இளைஞன் இருந்தான். உடல் அளவில் பலசாலி இல்லை என்றாலும் புத்திசாலியான அவன் வேடிக்கையானவன், வினோதமான செயல்களை செய்வான். அவன் என்ன செய்கிறான் என்பது நிறைய பேருக்கு புரியாது.

அந்த ஊரின் எல்லையில் இருந்த அடர்ந்த காட்டில் திடிரென்று ஒரு பெரிய பூதம் வந்தது, அது நரமாமிசம் சாப்பிடும் பூதம், அங்கே காட்டுவழியாக செல்பவர்களை பிடித்து சாப்பிடத் தொடங்கியது. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் ஊரின் எல்லைக்குள் இருக்கும் கிராமத்தில் புகுந்து ஆட்களை சாப்பிடத் தொடங்கியது. வியாபாரம் செய்யவோ, மற்றும் உறவினர்களை சந்திக்க வேற ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டது.

அரசரும் பூதத்தை கொல்ல எத்தனையோ வீரர்களை அனுப்பினார், யாரும் உயிரோடு திரும்பவில்லை. அந்நிலையில் அரசர் ஒரு அறிவிப்பு செய்தார் “யார் அந்த பூதத்தை கொன்று, அதன் நகங்களை கொண்டு வருகிறார்களோ அந்த வீரனுக்கு தன் மகள் எழிழரசியை திருமணம் செய்து வைத்து, தனக்கு பின்னர் அந்த நாட்டின் அரசராக்கவும் முடிவு செய்துள்ளேன்”.

அதன் பின்னர் நிறைய பேர் காட்டிற்கு சென்றார்கள், ஆனால் யாருமே உயிரோடு திரும்பவில்லை.

அறிவிப்பு கேட்டு சில நாட்களுக்குப் பின்னர் மதியழகன் கடைக்குச் சென்று ஒரு கட்டி வெண்ணெய் வாங்கினான். அதைத் தன் மேசையின் மேல் வைத்தான். நான்கு நாட்கள் சென்றன. அந்த வெண்ணெயைப் பார்த்தான் அவன். அது நிறைய ஈக்கள் இருந்தன.

ஒரு பலகையை எடுத்து அந்த வெண்ணெயில் ஓங்கி அடித்தான். நிறைய ஈக்கள் செத்தன. ஏராளமான ஈக்கள் துடிதுடித்தன. அவற்ளை எண்ணினான் அவன். இறந்த ஈக்களின் எண்ணிக்கை இருநூறாக இருந்தது. அடிபட்டவற்றின் எண்ணிக்கை முந்நூறாக இருந்தது.

மதியழகனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கடைத் தெருவிற்குச் சென்ற அவன் வீரர்கள் அணியும் சீருடை வாங்கினான்.

அதை அணிந்து கொண்டு கம்பீரமாகத் தலை நகரத்துக்குச் சென்றான்.

அரசவைக்குள் நுழைந்த அவன், அரசர் பெருமானே! என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன். என் பெயர் மதியழகன், நான் சிறந்த வீரன். சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த போரில் நான் ஒருவனே இருநூறு பேரைக் கொன்றேன். முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன், என்றான்.

அவனை மேலும் கீழும் பார்த்தார் அரசர். உன்னைப் பார்த்தால் வீரனைப் போலத் தெரியவில்லை. தோற்றத்தை வைத்து முடிவுக்கு வரக் கூடாது. உன்னால் எனக்கு ஒரு வேலை ஆக வேண்டும், என்றார்.

கட்டளை இடுங்கள் அரசே! இந்த வாளும் என் உயிரும் இனி உங்களுடையது, என்று வீரமாகப் பேசினான் மதியழகன். எப்படியாவது அரசரிடம் வேலை வாங்கி விட வேண்டும் என்பது அவனது எண்ணம்.

வீரனே! தலைநகரை அடுத்து உள்ள காட்டில் ஒரு பூதம் உள்ளது அது அவ்வப்பொழுது நாட்டிற்குள் நுழைந்து மனிதர்களைத் தூக்கிச் சென்று சாப்பிடுகிறது. எத்தனையோவீரர்கள் அதைக் கொல்லப் புறப்பட்டார்கள். யாருமே உயிருடன் திரும்பவில்லை. இந்த நாட்டு மக்கள் எல்லோரும் அஞ்சி அஞ்சி வாழ்கிறார்கள், என்றார் அரசர்.

அரசர் சொன்னதை கேட்டதும் மதியழகனுக்கு உள்ளுக்குள் பயம் தோன்றியது, வேலைத் தேடி வந்தால் இவர் நம்ம உயிருக்கே உலை வைக்கிறாரே, என்ன செய்யலாம் என்று யோசித்தான், பின்னர் தைரியமாக “அரசே என் வீரத்திற்கு இதைப் போன்ற பெரிய வேலையைத்தான் எதிர்பார்த்தேன். நான் அந்தப் பூதத்தை கொன்று அதன் நகங்களை கொண்டு வருகிறேன். பரிசாக எனக்கு இளவரசியைத் திருமணம் செய்து வைப்பீர்களா?” என்று கேட்டான் மதியழகன்.

“யாராலும் செய்ய இயலாத செயல் இது. நீ சொன்னபடி செய்து முடித்தால் இளவரசியை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்”, என்றார் அரசர்.

நான் அந்தப் பூதத்தைக் கொன்றுவிட்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டுக் கையில் பிடித்த வாளுடன் காட்டிற்குள் நுழைந்தான் அவன்.

எவ்வளவு பெரிய கூர்மையான வாளும் பூதத்தை ஒன்றும் செய்ய முடியாது. எவ்வளவு வேகமாக வலிமையாக வெட்டினாலும் அதற்குச் சிறு காயம்தான் ஏற்படும், என்பதும் அவனுக்குப் புரிந்தது.

தன் கையில் இருந்த வெண்ணெயை மாவில் உருட்டிப் பந்து போலச் செய்து கொண்டான் அவன். பார்ப்பதற்கு அது உருண்டையான கூழாங்கல் போல இருந்தது. அதைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.

குருவி ஒன்றைப் பிடித்த அவன் அதையும் தன் பைக்குள் வைத்துக் கொண்டான். அருகே இருந்த பெரிய மரம் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் பெரிய பூதம் ஒன்று அங்கே வந்தது. மூக்கை உறிஞ்சிய அது, இன்று எனக்கு நல்ல வேட்டை, மனித வாடை வீசுகிறதே! எங்கே இருக்கிறாய்? என்னிடம் இருந்து தப்ப முடியாது, என்று மகிழ்ச்சியுடன் கத்தியது.

தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், ஏ! பூதமே! என்னையா தேடுகிறாய்? நான் இந்த மரத்தை விட்டுக் கீழே இறங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த உலகத்திலேயே நான் தான் வலிமையானவன். சென்ற வாரம் கூட ஒரே அடியில் இருநூறு பேரை கொன்று முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன். உன்னைவிட நான் வலிமையானவன். என் ஒரு அடியைக் கூட நீ தாங்க மாட்டாய், என்று பெருமை பேசினான் அவன்.

நீ வலிமையானவன் என்றால் நிரூபித்துக் காட்டு, என்றது பூதம்.

அப்படியா? என்ற அவன் தன் சட்டைப் பையிலிருந்த கூழாங்கல் உருண்டையை எடுத்தான். அந்த உருண்டையை வானத்தில் தூக்கிக் போட்டுப் போட்டுப் பிடித்தான். இது என்ன சொல் பார்ப்போம், என்று கேட்டான், அவன்.

உருண்டையான கூழாங்கல், என்றது பூதம்.

என் வலிமையைப் பார், என்ற அவன் அந்த வெண்ணெய் உருண்டையைக் கைக்குள் வைத்து அழுத்தினான். அது பொலபொலவென்று தூள் தூளாகிக் கீழே விழுந்தது.

உண்மையை உணராத அந்த முட்டாள் பூதம் அவனை மிகுந்த வலிமையானவன் என்று நினைத்தது. கீழே வா. உனக்கு இன்னும் ஒரு சோதனை, என்றது அது.

எப்படியும் பூதத்தை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் கீழே குதித்தான் அவன்.

தரையில் கிடந்த சிறு கல்லை எடுத்தது அது. என் வலிமையைப் பார், என்று சொல்லி அந்தக் கல்லை உயரே வானத்தை நோக்கி வீசியது. அரை மணி நேரம் கழித்து அந்தக் கல் கீழே விழுந்தது.

எங்கே இதைப் போலச் செய்து உன் வலிமையைக் காட்டு, என்றது பூதம்.

நான் கல்லை மேலே வீசினால் கீழே விழவே விழாது. வான் உலகத்தைக் கிழித்துக் கொண்டு சென்று விடும். என்று பெருமையுடன் சொன்ன அவன் தன் பைக்குள் இருந்த சிட்டுக் குருவியை எடுத்தான். அதை மேலே தூக்கி எறிந்தான். அப்படியே பறந்து சென்றது அது.

பூதம் நீண்ட நேரம் காத்திருந்தது. மேலே எறிந்த கல் கீழே விழவே இல்லையே. இவனிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் என்னைக் கொன்று விடுவான், என்று நினைத்தது அது.

நீ என் விருந்தினன். என் மாளிகைக்கு வா. விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம், என்று அன்புடன் அழைத்தது அது.

இருவரும் பூதத்தின் மாளிகையை அடைந்தனர். அந்த மாளிகைகளைச் சுற்றிலும் தோட்டம் இருந்தது.

சமையல் செய்ய விறகு இல்லை. காட்டிற்குச் சென்று சிறிது விறகு கொண்டு வா, என்று அவனைப் பார்த்துச் சொன்னது பூதம். உடனே அவன், எதற்காக விறகு? நான் அந்தப் பெரிய மரத்தை அப்படியே இழுத்து வருகிறேன், என்றான்.

அந்தப் பெரிய மரத்தைப் பார்த்தது பூதம். அது கீழே விழுந்தால் தன் தோட்டம் பாழாகி விடும். மாளிகைச் சுவரும் இடிந்து விடும் என்று நினைத்தது அது. பயந்து போன அது நானே, சென்று விறகு கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது. சிறிது நேரத்தில் விறகுடன் அங்கே வந்தது அது.

இன்னும் எப்படி எல்லாம் அதை ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன்.
பூதம் அவனைப் பார்த்து. சமைப்பதற்கு நீர் வேண்டுமே. கிணற்றுக்குச் சென்று இந்தப் பாத்திரத்தில் நீர் கொண்டு வா, என்றது-

பாத்திரத்தில் நீர் கொண்டு வருவதா? எனக்கு எவ்வளவு கேவலம், வலிமை உடைய நான் அந்தக் கிணற்றையே இங்கே இழுத்து வந்து விடுகிறேன். அதைக் கட்டி இழுக்க உறுதியான கயிறு ஒன்றைக் கொடு, என்று கேட்டான் அவன்.

இதைக் கேட்ட பூதம் மேலும் பயந்தது. நீ நீர் கொண்டு வர வேண்டாம். நானே கொண்டு வருகிறேன், என்றது அது.

இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அங்கிருந்த கட்டிலில் அவன் படுத்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த இன்னொரு கட்டிலில் பூதம் படுத்துக் கொண்டது.

தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைத்த மதியழகன் தூங்காமலே இருந்தான். பூதம் தூங்கி விட்டதை அறிந்த அவன் கட்டிலிலிருந்து மெல்ல இறங்கினான். ஒரு பூசனிக் காயைத் தன் கட்டிலில் வைத்தான். அதன் மீது போர்வையைப் போட்டு மூடினான். பார்ப்பதற்குக் கட்டிலில் யாரோ படுத்திருப்பது போலத் தோன்றியது. பிறகு பூதத்தின் கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டான் அவன்.

நள்ளிரவு நேரம், பூதம் கட்டிலை விட்டு எழுந்தது. பக்கத்தில் இருந்த பெரிய இரும்புத் தடியைத் தூக்கியது.
கட்டிலில் படுத்திருந்த அவன் மண்டையில் தன் வலிமை கொண்ட மட்டும் அந்தத் தடியால் அடித்தது. போர்வைக்குள் இருந்த பூசனிக் காய் உடைந்து சிதறியது.

மதியழகன் இறந்து விட்டான் என்று மகிழ்ந்தது அது. தன் கட்டிலில் படுத்த அது குறட்டை விடத் தொடங்கியது. கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த அவன் எழுந்தான். பூசனிக் காய்த் துண்டுகளை எடுத்து வெளியே வீசினான். மீண்டும் அந்தக் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினான்.

பொழுது விடிந்தது. விழித்த பூதம் கட்டிலில் அவன் உயிருடன் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான் அவன்.

இரவு நன்றாகத் தூங்கினாயா? உன் தூக்கத்திற்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டதா? என்று கேட்டது அது. நள்ளிரவிலே ஏதோ கொசு ஒன்று என் காதில் கடித்தது போல இருந்தது. புரண்டு படுத்தேன். இங்கே கொசு அதிகமா? என்று கேட்டான் அவன்.

என் வலிமை எல்லாம் பயன்படுத்தி இருமூபுத் தடியால் இவன் மண்டையில் ஓங்கி அடித்தேன். யாராக இருந்தாலும் இறந்திருக்க வேண்டும். இவனோ கொசு கடித்தது போல இருந்தது என்கிறான். இவனிடம் நன்றாக மாட்டிக் கொண்டோமே. எப்படித் தப்பிப்பது? என்று பயந்து நடுங்கியது அது.

நமக்குள் இன்னொரு போட்டி வைத்தால் என்ன? என்று கேட்டான் அவன்.
என்ன போட்டி? என்று கேட்டது அது.

ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி வைப்போம். அதில் பாதியை நான் சிறிது கூட மென்று தின்னாமல் அப்படியே குடித்து விடுகிறேன், என்றான் அவன்.

நான் நம்ப மாட்டேன். நீ மென்றுதான் தின்றிருப்பாய். நீ மெல்லாமல் விழுங்கி இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது? அதை நான் என் வயிற்றுக்குள் இறங்கியா பார்க்க முடியும்? என்று கேட்டது அது. உன்னால் பார்க்க முடியும். நான் கஞ்சியைக் குடித்ததும் வயிற்றில் ஒரு பகுதியைக் கிழித்துக் காட்டுகிறேன். பிறகு

உனக்கே நான் மென்று தின்றேனா இல்லையா என்பது விளங்கும், என்றான் அவன்.
சரி என்ற பூதம் கஞ்சி சமைக்கத் தொடங்கியது.

வேறு அறைக்குச் சென்ற அவன் தோல் பையை எடுத்துத் தன் வயிற்றில் கட்டிக் கொண்டான். அதன் வாய்ப்பகுதி தன் தொண்டைக்கு நேராக இருக்குமாறு வைத்தான். உள்ளே பை இருப்பது தெரியாத வண்ணம் மேலே சட்டையை போட்டுக் கொண்டான்.

பூதம் கஞ்சி வைத்திருந்தது. அதைப் பாத்திரத்தோடு எடுத்தான் அவன். தன் தொண்டைக்கு அருகே இருந்த பைக்குள் அதைச் சிறிது சிறிதாக ஊற்றினான். குடிப்பது போல நடித்தான்.
சூழ்ச்சியை அறியாத பூதம் அவன் குடிப்பதாகவே நினைத்தது.

பூதத்தைப் பார்த்து அவன், நான் கஞ்சியை எப்படிக் குடித்து இருக்கிறேன் என்று பார். சிறிது கூட மெல்ல வில்லை. அப்படியே அரிசிச் சோறு இருக்கும். என்று சொல்லி கொண்டே கத்தியால் தன் வயிற்றைக் கிழித்தான். உண்மையில் அவன் கிழித்தது வயிற்றுக்குள் கட்டப்பட்டிருந்த தோல்பையையே. அவன் வயிற்றிலிருந்து கொட்டிய கஞ்சியைப் பூதம் பார்த்தது.

உன்னைப் போல நானும் செய்கிறேன், என்ற அது. இன்னொரு பாத்திரத்தில் இருந்த கஞ்சியை அப்படியே குடித்தது.

நான் எதையும் மெல்லவில்லை. அப்படியே குடித்து இருக்கிறேன் பார், என்று சொல்லிக் கொண்டே தன் வயிற்றைக் கத்தியால் கிழித்தது அது. குருதீ கொட்ட குடல் வெளியே வந்து துடிதுடித்து அங்கேயே இறந்தது அது.

பூதம் இறந்த செய்தி அறிந்ததும் நாடே உற்சாகத்தில் விழாக்கோலம் கண்டது, வெற்றி வீரனாகத் திரும்பிய மதியழகனுக்கும் இளவரசி எழிழரசிக்கும் ஒரு நல்ல நாளில் திருமணம் நடந்தது. அரசருக்குப் பின்னர் மதியழகன் தன் புத்திசாலித்தனத்தால் நாட்டை சிறப்பாக ஆண்டார்.

Sunday, November 06, 2005

கதை எண் 54 - மனிதனின் பேராசை

மனிதனுக்கு கிடைத்த ஆயுள்

எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர்.
தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.

அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர்.

கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.

முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று கேட்டார்.

கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை. எப்பொழுதும் பசியால் துன்பப் படுகிறேன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி.

மகிழ்ச்சி கொடுமைகளை இல்லை. என் வாழ்க்கையே நரகம். இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று கெஞ்சியது.

சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.

இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.

அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்ன? என்று கேட்டார்.

கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோருமே என்னை வெறுக்கின்றனர். எனக்கு உணவும் கிடைப்பதில்லை, என்றது நாய்.

உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய். குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.

மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது.

குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது.

உனக்கு என்ன குறை? என்று கேட்டார், கடவுள்.

பல்லைக் காட்டியக் குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம் ஆயிற்றே. அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்கள் தான்.
முதுமை அடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங்கள், என்று வேண்டியது.

இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவுள்.

குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.

கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள்.

உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டார்.

கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.
நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அது. இந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான் அவன்.

இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே, என்று கேட்டார் கடவுள்.

மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான்.

எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார்.

கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான்.
முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால் கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இது.

அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள். அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் வாடினான்.

நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இந்தக் காலத்தில் அவன், தான் சேர்த்த பொருள்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான்.

அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கைதான். தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்ட வேண்டியதாயிற்று. கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல வேண்டியதாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.

Tuesday, November 01, 2005

கதை எண் 53 - பீர்பாலும் அக்பரும்

டில்லி வந்து சேர்ந்த பீர்பால், புரோகிதர் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார்.

நாளடைவில் நகைச்சுவை கலந்த தன் பேச்சுத் திறத்தாலும், அறிவாற்றலாலும் டில்லி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார்.

இவரது புகழ் அக்பர் சக்கரவர்த்தியின் காதிலும் விழுந்தது.

ஒரு நாள் அக்பரது பணியாள் அக்பருக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலையில் சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்து விட்டான். அதை வாங்கி மென்ற சக்கரவர்த்தியின் வாயும், நாக்கும் எரிச்சலாகி புண்ணாகிவிட்டது. இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி பணியாளுக்கு ஒரு விசித்திரமான தண்டனை வழங்கினார்.

பணியாளன் தானே கடைக்குப் போய் கால் படி சுண்ணாம்பு வாங்கி, அதை நீரில் கரைத்து முழுவதையும் அவன் குடிக்க வேண்டும் என்பதே அவனுக்கிடப்பட்ட ஆணை.

மன்னரின் உத்தரவை மறுக்க வழியின்றி கண் கலங்கி, நொந்து போய் கடைக்குச் சென்று சுண்ணாம்பு வாங்கிக் கொண்டிருந்த பணியாளை அவ்வழியாக வந்த பீர்பால் கண்டார்.

அவனுடைய வருத்தமுற்ற முகத்தைக் கண்ட பீர்பால் அதற்கான காரணத்தை விசாரித்தார். அவனும் விபரம் கூறினான். அவனுக்கு ஆறுதல் கூறி அவனைத் தேற்றிய பீர்பால், மன்னரின் தண்டனை மிகக் கொடுமையானது என்றாலும் அதிலிருந்து மீண்டு விடுவதற்கான வழி ஒன்று இருக்கிறது என்று கூறி, அரசரின் எதிரில் சுண்ணாம்பு நீரைக் குடித்த பிறகு வெளியே வந்து, குடித்த நீரின் அளவுக்கு நெய்யைக் குடித்து விடும்படி யோசனை கூறி அனுப்பினார்.

பீர்பாலின் யோசனைப்படியே நடந்து கொண்டான் பணியாள். காரமான சுண்ணாம்பு நீரைக் குடித்த பின், அம்மா, அப்பா என்று அலறுவான். தன் நாக்கை வேக வைத்ததற்கு அதுவே தண்டனை என்றும் எண்ணிய அக்பருக்கு அவன் சிரித்த முகத்துடன் உலாவியதைக் கண்டு திகைப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது.

அவனைக் கூப்பிட்டு, அவனுக்குச் சுண்ணாம்பு நீர் தீங்கு விளைவிக்காததன் காரணத்தைக் கேட்டார் அக்பர்.

அவனும் அரசர் முன் மண்டியிட்டு வணங்கி, பீர்பாலின் மதிநுட்பத்தால் தான் பெருந்துன்பத்திலிருந்து தப்பியதாகக் கூறினான்.

பீர்பாலின் மதிநுட்பத்தை உணர்ந்த அக்பர் அப்பணியாளை விட்டு பீர்பாலை அழைத்து வரச் செய்து, அவருக்குப் பாராட்டும் பரிசும் கொடுத்து, அவர் தன் அவையில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அது முதல் பீர்பால் அக்பரின் அரசவையில் பணியாற்றியதுடன் அக்பரின் உற்ற நண்பராகவும்விளங்கினார்.