சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Monday, December 26, 2005

கதை எண் 72 - இரக்கமில்லா கம்சனும், இதயமில்லா கபீஷூம்

பயங்கரமான மிருகங்கள் வசிக்கும் ஒரு அடர்ந்த காடு, அங்கே இருந்த உயரமான மலையில் இருந்து விழும் நீர் அருவியானது ஆறாக மாறி ஓடிக் கொண்டிருந்தது, ஆற்றின் இருபக்கங்களிலும் நிறைய பழம் தரும் மரங்கள். அந்த மரங்களின் மேலே பறவைகள், குரங்கு கூட்டங்கள் வாழ்ந்து வந்தன.

அங்கே கபீஷ் என்ற புத்திச்சாலி குரங்கு இருந்தது, அது ரொம்பவும் நல்ல குரங்கு, அந்த ஆற்றில் ஒரு கம்சன் என்ற முதலை இருந்தது, அந்த முதலையானது கபீஷ் குரங்கோடு பேசி, நட்பு உண்டாக்கிக் கொண்டது. கபீஷ் குரங்கு மரத்தின் மேலிருந்து நன்கு பழுத்த கொய்யா, பலா, மாம்பழங்களை பறித்து போடும், அந்த முதலையும் அவற்றை உண்டு மகிழும்.

கம்சன் கபீஷிடம் ஆற்றின் அடுத்த பக்கம் இருக்கும் ஊரின் சிறப்புகளை கதை கதையாக சொல்லும், கபீஷீம் ஆச்சரியமாக கேட்டு மகிழும், அதற்கு ஒரு நாள் எப்படியும் அந்த பக்கம் போய் ஊரை சுற்றிப் பார்க்க ஆசை. கம்சனும் அழைத்துச் செல்வதாக சொன்னது.

தினமும் காலையில் கம்சன், கபீஷ் இருக்கும் மரங்கள் அருகில் வரும், பழங்களை சாப்பிட்டு, பேசி விட்டு மாலையில் வீடு திரும்பும். அவ்வாறு வீடு செல்லும் போது கபீஷ் கொடுத்த பழங்களையும் எடுத்துச் செல்லும்.

கம்சன் வீட்டில் அதன் மனைவி குழந்தைகள் இருந்தார்கள். குழந்தைகள் தந்தை தரும் இனிப்பாக பழங்களை சாப்பிட்டு மகிழும். தினமும் தன் கணவர் கொண்டு வரும் பழங்களை சாப்பிட்ட பெண் முதலை, ஒரு நாள் “ஆமாம், உங்களுக்கு எப்படி தினமும் இத்தனை பழங்கள் கிடைக்கிறது” என்று கேட்டது.

அதற்கு அந்த முதலை “எனக்கு கபீஷ் என்ற ஒரு குரங்கு நண்பன் இருக்கிறான், அவன் ரொம்பவும் நல்லவன், அவன் தான் எனக்கு தினமும் நிறைய பழங்களை தேடி பறித்து கொடுப்பான், அவனுக்கு தான் நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்” என்றது.

உடனே குட்டி முதலைகள் “அப்பா, அப்பா, நாளை கபீஷ் மாமாவுக்கு எங்களது நன்றியை சொல்லுங்க” என்றன.

பெண் முதலைக்கு ரொம்ப நாட்களாக குரங்கு கறி சாப்பிட ஆசை, அதிலும் குரங்கின் இதயம் என்றால் ரொம்ப ருசியாக இருக்கும் என்று பக்கத்து வீட்டு முதலை சொல்லக் கேட்டப் பின்பு, அதன் ஆசை அதிகமாகி விட்டது.

தன் கணவனுக்கு ஒரு குரங்கு நண்பன் இருக்கும் போது அதை எளிதாக வீட்டிற்கு வரவழைத்து சாப்பிட்டு விடலாம் என்று எண்ணியது.

பெண் முதலை பல முறை குரங்குகளை படிக்க தரைக்கு போனாலும் பிடிக்க முடியவில்லல. காரணம் குரங்குகள் வேகமாக ஓடி, மரத்தின் மேல் ஏறிவிடும். முதலையால் மரத்தில் ஏற முடியாது தானே.

இப்படி பலமுறை ஏமாந்த அந்த பெண் முதலை, இந்த முறை கணவன் உதவியால் குரங்கின் கறி சாப்பிடலாம் என்று நம்பியது. தான் நேரிடையாக சொன்னால் தன் கணவன் தனக்கு உதவ மாட்டார், எனவே ஏதாவது நாடகம் ஆட வேண்டும் என்று திட்டம் போட்டது.

அடுத்த நாள் பெண் குரங்கு திடிரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டது, எழுந்திருக்கவே இல்லை, ஆண் குரங்கு பயந்து போய் மருத்துவரை அழைக்க போனது, வீட்டில் சமையலே செய்யவில்லை, குட்டி முதலைகள் பசியால் துடித்தன.

மருத்துவர் ஒரு பெண் முதலை, அதுவும் அந்த முதலையின் நண்பி, வந்த மருத்துவ முதலை, பெண் முதலையை சோதித்து பார்த்து, “உங்க மனைவிக்கு கடுமையான இதய நோய், இதை சரி செய்ய மருந்தே கிடையாது, ஆனால் ஒரு வழி இருக்கிறது, அதை செய்தால் சரியாகி விடும்” என்றது.

கம்சன் முதலை “உடனே சொல்லுங்க, என்ன செய்ய வேண்டும்”.

மருத்துவ முதலை “அது ஒன்றும் இல்லை, உயிரோடு இருக்கும் குரங்கின் ரத்தமும், இதயமும் சாப்பிட்டால், உடனே உங்க மனைவியின் இதய நோய் தீர்ந்து விடும், இல்லை என்றால் இன்னும் ஒரு வாரத்தில் உங்க மனைவி இறந்து விடுவார்” என்றது.

அதை கேட்டதும் கம்சன் முதலைக்கு இதயமே நின்று விடுவது போலிருந்தது “மூலிகை, வேர், காய், கனி இப்படி ஏதாவது என்றால் எப்படியாவது தேடி கொண்டு வந்து விடலாம், ஆனால் குரங்கின் இதயம் என்றால் எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியவில்லையே?”.

அப்போ கண் விழித்த மனைவி முதலை “உங்களுக்கு தெரிந்த குரங்கு ஒன்று இருக்கிறதே, அதை எப்படியாவது ஏமாற்றி அழைத்து வாங்க”

“அய்யோ, என் நண்பன் கபீஷா, அது பாவமில்லையா, அவன் நமக்கு எத்தனையோ முறை உதவி செய்திருக்கிறானே, அவனையா கொல்வது, என்னால் முடியது” என்றது கம்சன் முதலை

“அப்போ, நான் செத்து போனால் உங்களுக்கு கவலை இல்லையா, நம் குழந்தைகள் பட்டினியால் செத்து போகப் போறாங்க, அப்புறமும் நீங்க உங்க நண்பனோடு இருங்க” என்று புலம்பியது. குட்டி முதலைகளும் என்ன என்று சரியாக புரியாமல் அம்மாவோடு சேர்ந்து அழுதன.

அவர்களின் அழுகுரல் கேட்ட சகிக்காமல் ஆண் முதலை வீட்டை விட்டு வெளியே வந்தது, அதற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கபீஷை பார்க்க சென்றது, கபீஷை கண்டதும், கபீஷின் அன்பை கண்டு மனைவியின் கோரிக்கையை மறந்தது. வழக்கம் போல் கபீஷிடம் பேசி விட்டு, அது கொடுத்த பழங்களை வீட்டிற்கு எடுத்து சென்றது.

மாலையில் மீண்டும் வீட்டில் ஒரே ரணகளம், அழுகை. இறுதியாக மனைவியிடம் “சரி! நான் என் நண்பனை அழைத்து வருகிறேன், நம் வீட்டில் நல்ல விருந்து தயாரித்து வை, கபீஷ் கடைசியாக பாயாசம் குடிக்கும் போது அதில் மயக்க மருந்து கலந்து கொடு, கபீஷ் மயங்கியதும், நீ அவன் ரத்தம் குடித்து, இதயத்தை சாப்பிட்டு விடு, நான் அப்போ அங்கே இருக்க மாட்டேன்” என்றது.

பெண் முதலையும் மிகவும் மகிழ்ந்து கபீஷிக்கு என்று பெரிய விருந்தே தயார் செய்தது, குட்டி முதலைகளும் விபரம் தெரியாமல் வீட்டிற்கு விருந்தாளி கபீஷ் மாமா வரப்போறாங்க என்று சந்தோசமாக இருந்தது.

அன்று இரவு சரியான மழை, இடி மின்னலோடு கனத்த மழை பெய்தது, அடுத்த நாள் கபீஷைப் பார்த்த முதலை “இன்று எனக்கு திருமண நாள், நீ கட்டாயம் எங்க வீட்டிற்கு வர வேண்டும், உனக்கு மத்தியானம் சிறப்பு விருந்து தயாராக உள்ளது, உன் வரவை என் மனைவி, குழந்தைகள் ஆவலோடு எதிர் பார்க்கிறாங்க”

அதை கேட்டதும் கபீஷ் குரங்கு மகிழ்ச்சி அடைந்து கம்சனுக்கு திருமண நாள் வாழ்த்துகள் கூறியது, உடனே அங்கே இங்கே என்று ஓடி நல்ல சுவையான பழங்கள் நிறைய பறித்து வந்தது, இன்னும் கிழங்கு வகைகள், தானியங்கள் என்று நிறைய கொண்டு வந்து கொடுத்தது.

கபீஷ் கம்சனிடம், “ஆமாம் நான் எப்படி உங்க வீட்டிற்கு வர முடியும்” என்றது,
உடனே கம்சன் சொன்னது, “நீ என் முதுகில் ஏறி அமர்ந்துக் கொள், நான் உன்னை பத்திரமாக அழைத்துச் சென்று, மீண்டும் இங்கே கொண்டு வந்து விடுகிறேன்”.

கபீஷீம் கம்சனின் முதுகில் ஏறி அமர்ந்துக் கொள்ள, கம்சன் மெதுவாக சென்றது. கம்சனின் வீட்டை அடைந்ததும், கம்சனின் மனைவி வரவேற்று சூடாக காப்பி கொடுத்தது, குட்டு குழந்தை முதலைகள் பயங்கரமான குதுகுலமடைந்து, கபீஷிடம் பேசி மகிழ்ந்தன.

சிறிது நேரத்தில் கம்சனும் மனைவியும் சமையல் அறைக்கு செல்ல, கபீஷ் குட்டி முதலைகளுக்கு கதை சொன்னது, ஜெய் அனுமானின் வீரபிரதாபங்களை சுவையாக சொன்னது, அதை கேட்டு குட்டி முதலைகள் மகிழ்ந்தன, அப்போ அனுமான் தன் இதயத்தை திறந்து அதில் இராமர் சீதை இருப்பதை சொன்னது, அதை கேட்டதும் குட்டி முதலைகள் “மாமா! உங்க இதயத்தை திறந்து காட்டினாலும் அதில் இராமர் சீதை இருப்பாங்களா, அதையா எங்க அம்மா சாப்பிட போறாங்க, பாவமில்லையா?” என்று கூறின.

அதைக் கேட்டதும் கபீஷ் திடுக்கிட்டது, இங்கே ஏதோ சதி நடக்குது, அதை யாருக்கும் தெரியாமல் அறிய வேண்டும், குழந்தைகள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நினைத்து குட்டி முதலைகளிடம் ஏன் அப்படி சொல்லுறீங்க என்று கேட்டது, அதற்கு குட்டி முதலைகள் “இன்று காலையில் எங்க அம்மா, பக்கத்து வீட்டு பாட்டியிடம் இன்று எங்க வீட்டிற்கு கபீஷ் குரங்கு வருது, அதான் விருந்து தயார் ஆகுது, பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயங்கியப் பின்பு அதன் இதயத்தை சாப்பிட போகிறேன், இன்று என்னால் உங்களிடம் கதை பேச நேரமில்லை” என்று பேசியதை நாங்க கேட்டோம்.

“மாமா, உங்க இதயத்தை சாப்பிட்டா, நீங்க செத்து போக மாட்டீங்களா?” என்று கவலையாக கேட்டது, அதற்குள் கபீஷ் குரங்கு பிரச்சனையை சமாளிக்க தயார் ஆகிவிட்டது. குட்டி முதலைகளைப் பார்த்து “குழந்தைகளா, நீங்க ரொம்ப நல்லவங்க, நான் இன்று என் இதயத்தை இங்கே கொண்டு வரவில்லை, அதனால் பிரச்சனை இல்லை, பயப்பட வேண்டாம், வாங்க விருந்து சாப்பிடலாம்” என்றது.

கம்சனும், அதன் மனைவியும் அறுஞ்சுவையான விருந்து படைத்தார்கள், கபீஷீம் கவலைப்படாமல் சாப்பிட்டது, இறுதியாக பாயசம் கொண்டு வைக்க அதை கபீஷ் தொடவில்லை.

கம்சனின் மனைவி கபீஷை பார்த்து “இந்த பாயாசம் ரொம்ப சுவையானது, அதில் பாதாம், பிஷ்தா, முந்திரி, திராட்சை, நெய் எல்லாம் போட்டு செய்திருக்கிறேன், சாப்பிடுங்க” என்றது.

உடனே கபீஷ் “என்னை விட என் இதயத்திற்கு தான் பாயாசம் ரொம்ப பிடிக்கும், இன்றைக்கு பார்த்து என் இதயத்தை கொண்டு வரவில்லையே, நேற்று இரவு பெய்த கடும் மழையில் நானும் என் இதயமும் நனைந்து விட்டோம், நனைந்த இதயத்தை காயப்போடவே மரத்தில் தொங்க விட்டு வந்தேன், நீ காலையில் வந்த போது கூட நான் காயப்போடுவதை பார்த்திருப்பாயே?” என்று அப்பாவியாக சொன்னது.

குட்டி குழந்தை முதலைகளும் “ஆமாம் அப்பா, மாமா இங்கே வந்ததும் எங்க கூட பேசும் போது கூட அவர் இதயத்தை கொண்டு வரவில்லை, கொண்டு வந்திருந்தால் இராமர் சீதையை காட்டியிருப்பேன்னு சொன்னாங்க, பரவாயில்லை அடுத்த முறை கண்டிப்பாக கொண்டு வருவதாக சொல்லியிருக்காங்க”.

கபீஷ் உடனே கம்சனைப் பார்த்து “நண்பா, உன் குழந்தைகள் மிகவும் ஆர்வமாக இருக்காங்க, மேலும் என் இதயமும் பாயாசம் சாப்பிட ஆசைப்படும், வேண்டும் என்றால் நாம் இருவரும் போய், மரத்தில் இருக்கும் இதயத்தை கொண்டு வரலாமே, எப்படி வசதி?” என்று கேட்டது.

உடனே கம்சன் தன் மனைவியை பார்க்க, பெண் முதலை, சீக்கிரமாக போயிட்டு வாங்க என்று கண் சிமிட்டு சொன்னது.

உடனே கம்சன் கபீஷ் குரங்கை தன் முதுகில் ஏற்றி கபீஷ் வசிக்கும் மரத்தின் அருகே இறக்கி விட்டது, உடனே கபீஷீம் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது.

கீழே கம்சன் காத்திருந்தது, ஆனால் கபீஷோ அதே இடத்தில் அமர்ந்திருக்க “ஏன் நண்பா, உன் இதயத்தை இன்னமும் எடுக்கவில்லை, நேரமாகிறது வா, வீட்டிற்கு போகலாம்” என்றது.

உடனே கபீஷ் “ஏய் முட்டாள் முதலை நண்பா! எங்கேயாவது, யாராவது தன் இதயத்தை உடலில் இருந்து பிரித்து எடுக்கப் பார்த்திருக்கிறாயா, இதயத்தை எடுத்த உடனே இறந்து போயிடுவாங்கன்னும் உனக்கு தெரியாதா? நண்பன் என்றும் கூட பார்க்காமல் என் இதயத்தை உன் மனைவி சாப்பிட என்னை அழைத்து சென்றாயே, இதுவா நட்பு. எந்த நிலையிலும் கை விடாமல் காப்பது தானே நட்பு, எனக்கு கெடுதல் செய்ய நினைத்த நீ இன்று முதல் எனக்கு நண்பன் கிடையாது, இனிமேல் என்னிடம் பேசாது, இங்கே வராதே, வந்தால் உன் தலையில் பெரிய கல்லாக பார்த்து தூக்கிப் போட்டு கொன்று விடுவேன்” என்று ஆத்திரமாக கூறியது.

முட்டாள் கம்சன் முதலையும் மனம் நொந்து போனது, தன் அவசர புத்தியால் தனத்தால் நல்ல நண்பனை இழந்து விட்டோமே. மனைவி பேச்சை கேட்டு நல்ல நட்பை இழந்து விட்டோமே, எத்தனையோ நாட்கள் கஷ்டப்பட்டு கிடைத்த நட்பு, ஒரு நாளில் வீணாகி விட்டதே, என்று மனம் வருந்தி கபீஷிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, சோகமாக வீட்டிற்கு திரும்பியது.

இனியும் இயற்கைக்கு மாறாக நட்பு பாராட்டக்கூடாது, தீய எண்ணம் படைத்தவர்களோடு சேரக்கூடாது, அவ்வாறு செய்தால் என்றாவது ஒரு நாள் ஆபத்தாக முடியும் என்பதை அறிந்த கபீஷ் மீண்டும் அந்த தவற்றை செய்யவில்லை, மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

Sunday, December 25, 2005

கதை எண் 71 - இயேசுபிரான் சொன்ன கதைகள்

இன்று புனித கிறிஸ்துமஸ் திருநாள்.

குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.


உலகில் எத்தனையோ மகான்கள், அறிவாளிகள், நல்லவர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நமக்கு நல்ல நல்ல பாடங்களாக அமைகிறது, நம் வாழ்க்கையை நல்லவழியில் நடத்த உதவுகிறது, அத்தகையோரின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு முதன்மை பெற்றது.

இயேசு கிறிஸ்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவம், அவர் சொன்ன கதைகளை பார்ப்போம்.

இயேசு அவர்கள் கெட்டவர்கள் அனைவரையும் நல்ல போதனைகளின் மூலமாக நல்ல வழியில் நடத்தினார். தவறு செய்பவர்களை மன்னித்தார், யாருமே தொடவோ, அருகில் செல்லவே அருவருப்பாக நினைக்கும் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்தார், பல அதிசயங்கள் நிகழ்த்தினார்.

ஒரு நாள் அவர் போதனை செய்து கொண்டிருக்கும் போது சிலர் ஒரு பெண்ணை இழுத்து வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் “இயேசு அவர்களே! இப்பெண் பெரிய தவறு செய்து விட்டால், இவளை தண்டியுங்கள், நாங்கள் தவறு செய்தவர்கள் மீது கல் எறிந்து கொல்வது வழக்கம், நீங்களும் அதே தண்டனை கொடுங்க” உரக்க கத்தினார்கள்.

இயேசுவோ தலை நிமிராமல் தரையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார், வந்தவர்களோ மீண்டும் மீண்டும் வற்புறுத்த, கடைசியில் இயேசு சொன்னார் “நண்பர்களே! இப்பெண் தவறு செய்தவள் என்றால், உங்களில் இதுவரை தவறே செய்யாத, பாவக்காரியங்கள் செய்யாத உத்தமர் இருந்தால் இப்பெண் மீது முதலில் கல் எறியுங்க” என்று கூறி தலை குனிந்துக் கொண்டார். அவ்வளவு தான், அதுவரை அங்கே இருந்த கும்பல் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போய் விட்டது, காரணம் அங்கே நின்ற அனைவரும் ஏதாவது ஒரு பாவக்காரியம் செய்தவர்கள்.

பின்னர் இயேசு அங்கே அழுது கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து “அம்மா, எங்கே எல்லோரும், உன்னை குற்றவாளி என்று யாரும் சொல்லவில்லையா, அப்போ நானும் உன்னை குற்றவாளி என்று கூறவில்லை, இனிமேல் நீ பாவக்காரியங்கள் செய்யாமல் இருப்பாயாக” என்று சொல்லி அப்பெண்ணை அனுப்பி வைத்தார்.

இயேசு மக்களுக்காக போதித்த போதனைகள் எக்கச்சக்கம். அவை அனைத்தையும் ஒருமுறையாவது படிக்க வேண்டும்.

தீயவர்கள் மனம் திருந்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நன்மை செய்யுமாறு சீடர்களிடம் அறிவுறுத்தினார்.

பாவச் சோதனை வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் அதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு மிகப்பெரிய கெடுதல் ஏற்படும். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். உங்களுடைய சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரை கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராக பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் வந்து, நான் மனம் மாறி விட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.

ஏனெனில், நேர்மையாளர்களை குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட மனம் மாறிய ஒரு பாவியை குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என்று கூறிய இயேசு, பின் வரும் உவமையை உதாரணமாக தெரிவித்தார்.

நல்ல வசதி படைத்த விவசாயி ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள், முத்தவர் மிகவும் நல்லவர், தந்தை சொல் கேட்டு நடப்பவர், இறைவனிடம் பயம் கொண்டவர். இளையவரோ தீயவர்களின் நட்பு கொண்டு, மிகவும் கெட்டவராக இருந்தார். தந்தையில் சொல் கேட்காமல் தான் தோன்றித்தனமாக திரிந்தார்.

வீட்டில் விருந்து படைத்தால் இது என்ன விருந்தா இது, இதை பன்றி கூட திங்குமா என்று ஏளனம் செய்வார். ஒரு நாள் இளையவர் தந்தையிடம், அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கை பிரித்து தாரும் என்றார்.. தந்தை எவ்வளவு சொல்லியும் கேளாமல், சொத்தை பிரித்து வாங்கிக் கொண்டார். அதிலும் நல்ல செல்வசெழிப்பானவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டார். நிலங்களையும், தங்கம் முதலியானவற்றை விற்று காசாக்கி நண்பர்களோடு வேறு ஒரு நாட்டிற்கு சென்றான். அங்கே கெட்ட நண்பர்களோடு பணத்தை இஷ்டம் போல் செலவு செய்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக கையில் இருந்த பணம் குறைய குறைய நண்பர்களும் விட்டு விலகினர், இறுதியில் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்ட்ப்படும் நிலைக்கு போக, ஒருவரும் அவனிடம் இல்லை, அவனது உடைகளைக் கூட திருடிக் கொண்டு, அவனது நண்பர்கள் ஓடி விட்டார்கள். பசி, கடும் பசி, சாப்பிட ஒன்றும் இல்லை, கையில் பணமும் இல்லை.

அங்கே இங்கே என்று அழைந்து இறுதியில் ஒருவரிடம் வேலை கேட்டு, அவரிடம் வேலைக்கு சேர்ந்தான். அந்த இளைய மகனின் வேலை என்ன தெரியுமா? தினமும் பன்றிகளை மேய்ப்பது, இரவில் மட்டுமே அவனுக்கு உணவு கிடைக்கும், அதுவும் மிகவும் குறைவான, பழைய சாப்பாடே கிடைக்கும்.

ஒரு சில நாட்களில் அவனுக்கு காலையிலும், மத்தியானமும் பசி கடுமையாக எடுத்தது, அதனால் அவன் செய்த காரியம் என்ன தெரியுமா? பன்றிகளுக்காக வைக்கப்பட்ட கெட்டு போன உணவுகளை சாப்பிடத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் தந்தையார் கொடுத்த அருஞ்சுவையான உணவை எட்டி உதைத்ததையும், உதாசினப்படுத்தியதையும் நினைத்து கண்ணீர் விட்டான்.

ஒருநாள் அவன் பன்றிக்காக வைத்திருந்த உணவை சாப்பிடுவதை கண்ட முதலாளி, அவனை கடுமையாக அடித்து, உதைத்தார். மீண்டும் அவன் வேலை இல்லாதவனாகி விட்டான். கடைசியில் கஷ்டப்பட்டு ஒருவழியாக தன் தந்தையார் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

அப்போதுதான் அவனது அறிவு தெளிவடைந்தது. என் தந்தையிடம் மீண்டும் சென்று, அப்பா, உங்களுக்கு எதிராக பாவம் செய்து விட்டேன். உங்கள் மகன் என்று கூற எனக்கு எந்த தகுதியும் இல்லை. உங்கள் வேலையாட்களில் ஒருவனாக பணியாற்ற அனுமதியுங்கள் என்று கேட்டு கொள்வதாக மனதிற்குள் கூறிவிட்டு தந்தையின் வீட்டிற்கு புறப்பட்டான்.

தொலை தூரத்தில் இளைய மகன் வந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் தந்தை ஓடிச் சென்று அவனை கட்டி தழுவி முத்தமிட்டார். தந்தையின் செயல்களால் வெட்கமடைந்த இளைய மகன் அவரிடம், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று கூற நான் தகுதியற்றவன் என்றார்.

ஆனால் தந்தை தனது வேலையாட்களை அழைத்து, முதல் தரமான ஆடையை கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமல் போயிருந்தான். மீண்டும் கிடைத்துள்ளான் என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாட தொடங்கினர்.

அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூத்த மகன் வீட்டிற்கு திரும்பி வந்த போது, ஆடல் பாடல்களை கேட்டு என்ன நடக்கிறது என்று வேலையாட்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள், உங்க தம்பி வந்திருக்கிறார். அவர் நலமாக திரும்பி வந்ததால் உங்க தந்தை விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றனர். இதனால் கோபமடைந்த மூத்தவன், வீட்டிற்குள் செல்லாமல் வெளியே நின்று கொண்டிருந்தான். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து மூத்தவனை வீட்டிற்குள் வருமாறு அழைத்தார். அதற்கு மூத்தவன், தந்தையிடம் உங்க கட்டளைகளை ஒருபோதும் நான் மீறியதில்லை. இருப்பினும் எனது மகிழ்ச்சிக்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் உங்க சொத்துக்களையெல்லாம் அழித்து விட்ட இந்த மகனுக்கு விருந்து வைப்பது தேவையா? என்றார்.

அதற்கு தந்தை, மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில், உன் தம்பி இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்றுள்ளான் என்றார்.

கதையை சொல்லி முடித்த இயேசு, தன் சீடர்களை நோக்கி “தவறு செய்து மனம் திருந்தினால், நமக்கும் இத்தகைய வரவேற்புதான் இறைவனிடமிருந்து கிடைக்கும்” என்று சொன்னார்.

Saturday, December 24, 2005

கதை எண் 70 - நந்தனின் புத்திச்சாலித்தனம்

பொன்னி வளநாடு என்ற நாட்டை குஷன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். இவரது ஆட்சியில் மக்களின் செழிப்புக்கு குறையேதுமில்லை.

மன்னன் குதிரைகள் மீது அதிக பற்று வைத்திருப்பதால் அவரை "குதிரை பைத்தியம்' என்று மக்கள் அழைத்தனர்.

உலகில் எந்த மூலையில் அழகான, ஆரோக்கியமான குதிரைகள் இருப்பதாக அறிந்தாலும் உடனே ஏகப்பட்ட பணத்தை செலவழித்து அக்குதிரைகளை வாங்குவார். அரண்மனையில் குதிரைகளுக்கு என்றே தனி இடம் அமைத்தார் மன்னர். தனக்குப் பிடித்த குதிரை மீது சவாரி செய்து மகிழ்வது அவருடைய பொழுது போக்கு.

குதிரைப் பித்து பிடித்து அலைவதால் மன்னனுக்கு ஆட்சிப் பொறுப்பை சரியாக கவனிக்க முடியவில்லை. எனவே, அமைச்சர் குணாளன் அனைத்தையும் கவனித்து வந்தார். மன்னனும் அமைச்சரிடம் அதிக பொறுப்புகளை வழங்கிவிட்டு குதிரைகளை பராமரிப்பதில் முழு கவனத்தை செலுத்தி வந்தார்.

அரசன் அதிக பொறுப்புகளை அமைச்சர் குணாளனுக்கு வழங்கி உள்ளதை கண்டு பலர் கவலைப்பட்டனர். அமைச்சரோ தனக்கு கிடைத்த பதவியை வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டே இருந்தார்.
அமைச்சரின் சில செயல்களை கண்ட அரசனுக்கும் கவலையும் ஆத்திரமும் ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொறுமையுடன் அடக்கிக் கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல நடித்துக் கொண்டிருந்தார்.

அரசனே தன்னை கவனிக்கவில்லை என்ற உணர்வால் மேலும் கர்வத்துடன் செயல்படத் தொடங்கினார் அமைச்சர்.

அரசனின் குதிரைப் பித்து அதிகரித்துக் கொண்டே போனது. யார் குதிரைகளை விற்க வந்தாலும் வாங்காமல் இருப்பது இல்லை. அரசனின் குதிரைப் பித்து பற்றி கேள்விப்பட்டு ஏகப்பட்ட குதிரை வியாபாரிகள் அரண்மனை நோக்கி வந்து கொண்டே இருந்தனர். அமைச்சர் குணாளனின் போக்கு எப்படி என்பதை உளவாளிகள் மூலம் கண்காணித்து வந்தார் அரசர்.

அரசனுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய உளவாளிகள் அளித்த தகவல் அரசனை திடுக்கிட வைத்தது. அமைச்சர், நாட்டு பணத்தை பெருமளவில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார். குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தார். தனக்கு கிடைத்த தகவல்கள் நிஜம்தானா என்பதை நேரில் பார்த்து அறிந்தார் அரசன். எப்படியாவது அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்.

அரசரின் கண்காணிப்பு பற்றி எதுவும் அறியாத அமைச்சர் தன்னை அறிஞன் என்று அடிக்கடி பெருமையுடன் கூறுவதுண்டு. இவர் அறிவுக்கு ஒரு சோதனை வைத்து அமைச்சர் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அரசர்.

ஒரு நாள் வழக்கம் போல் அரண்மனை தர்பாரில் அமர்ந்து இருந்தார் அரசர்.
அப்போது சிப்பாய் ஒருவன் வந்து பணிவுடன் வணங்கிவிட்டு, ""மன்னா, தங்களை காண அரபு நாட்டில் இருந்து ஒரு குதிரை வியாபாரி வந்திருக்கிறார். அவர் தங்களை காண விரும்புகிறார்,'' என்று கூறினார்.

குதிரை பித்தனான அரசன் அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். ""உடனே அழைத்து வா,'' என்று கட்டளையிட்டார் மன்னர். அதை கேட்டு அமைச்சர் முகம் ஆத்திரத்தால் கறுத்துவிட்டது. அரசர் அதை கவனித்தார்.

அரபு வியாபாரி அரசர் முன் சென்று பணிவுடன் வணங்கினார். ""மன்னா, என்னிடம் இரண்டு பெண் குதிரைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் தங்களுக்கு விற்க விரும்புகிறேன்,'' என்றார் வியாபாரி.

""ஏன் இரண்டையும் எனக்கு விற்க கூடாது?'' என்று கேட்டார் மன்னர்.

""மன்னா, மன்னிக்கவும், ஒரு குதிரை ஏற்கெனவே ஒருவருக்கு அளிப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன். வார்த்தையை மீறுவது தவறு அல்லவா?'' என்றார் வியாபாரி.

""சரி ஆகட்டும்... நான் உடனே குதிரையை பார்க்க வேண்டும்,'' என்று கூறிவிட்டு அரண்மனை தோட்டத்துக்கு நடந்தார் அரசர். அமைச்சரும் வெறுப்புடன் அரசரை பின் தொடர்ந்து சென்றார்.

குதிரைகளை கண்ட அரசர் வியப்படைந்தார். ""என்ன அழகு? என்ன ஆரோக்கியம்! வியாபாரி இந்த இரண்டையும் எனக்கு தருவதில் ஏதாவது மாற்றம் உண்டா?'' என்று மீண்டும் கேட்டார்.

""மன்னிக்க வேண்டும் மகாராஜா,'' என்று தலைகுனிந்தபடி கூறினார் வியாபாரி.

""மன்னா, இந்த குதிரைகளில் ஒன்று தாய், மற்றது மகள். இவைகளில் யார் தாய்? யார் குட்டி? என்பதை தங்களால் கூற முடியுமா?'' என்றார் வியாபாரி.

இது என்ன சோதனை? அரசர் எவ்வளவு முயன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை.

""அமைச்சரே, தாங்கள் அறிஞர் ஆயிற்றே... இந்த குதிரைகளில் தாய் எது, சேய் எது என்று கூறுங்கள்,'' என்றார் மன்னர்.

இவ்வளவுதானே? என்று ஏளனமாக கேட்டபடி குதிரைகளை நெருங்கினார் அமைச்சர். அவர் இரு குதிரைகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்தார்.
ஆனால், எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அமைச்சர் குழப்பமடைந்தார். என்ன செய்வது என்று அறியாமல் தவித்தார். அத்தோடு நில்லாமல், "மன்னா! என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நம் நாட்டில் யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது, அப்படி யாராவது கண்டுபிடித்தால் நீங்க என்ன பரிசு கொடுத்தாலும் எனக்கு சரியே" அதை கேட்ட அரசர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

அடுத்த நாள் நாடு முழுவதும் ஒரு அறிவிப்பு வந்தது. "அரண்மனையில் இரண்டு பெண் குதிரைகள் உள்ளன. இவைகளில் தாய் எது, குட்டி எது என்பதை கண்டுபிடித்து கூறுபவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி கவுரவிக்கப்படும்,' என்ற செய்தி கேட்டு அமைச்சர் திடுக்கிட்டார்.

அரசு விளம்பரம் பார்த்து ஏகப்பட்டவர்கள் போட்டிக்கு முன் வந்தனர். ஆனால், யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. விளம்பரம் பார்த்த கிராமத்து இளைஞன் நந்தன் அரண்மனைக்கு சென்று தன்னால் குதிரைகளில் தாய் எது, சேய் எது என்று கூற முடியும் என்றான். ""ஆகட்டும்!'' என்று அனுமதி அளித்தார் மன்னர்.

குதிரைகளை நதிக்கரைக்கு கூட்டி வரும்படி கேட்டுக் கொண்டான் நந்தன். உடனே வியாபாரி குதிரைகளை ஆற்றங்கரைக்கு ஓட்டிச் சென்றார்.

இளைஞன் நந்தன் இரு குதிரைகளையும் ஆற்று தண்ணீரில் தள்ளினான்.

தண்ணீரில் விழுந்த குதிரைகள் நீச்சலடிக்கத் தொடங்கின. நெடுநேரம் அவை நீச்சலடித்தன. அப்போது ஒரு குதிரையின் கால்கள் தள்ளாடின. அதனால் தொடர்ந்து நீச்சலடிக்க முடியவில்லை. அதை கவனித்த மற்ற குதிரை தொடர்ந்து நீந்துவதை விட்டு விட்டு தத்தளித்த குதிரைக்கு உதவி செய்வது போல் அதை கரை நோக்கி தள்ளியது.

அதை கண்ட இளைஞன் நந்தன், ""மன்னா, தத்தளிப்பது குட்டி, உதவுவது தாய்,'' என்று உரக்க கத்தினான். அதைக் கேட்டு அரசன் வியப்படைந்தார்.

இளைஞனின் புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டினர்.

அமைச்சர் மட்டும் தலை குனிந்து நின்றார். அரசர் அறிவித்தபடி நந்தன், கலகபுரி நாட்டுக்கு அமைச்சர் ஆனான். அமைச்சர் குணாளன் மாஜி அமைச்சர் ஆகிவிட்டார். நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நந்தனும் அரசனை திருத்தி, நல்ல படியாக நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் மாற்றினார்.

Saturday, December 10, 2005

கதை எண் 69 - முல்லாவும் முரட்டு தளபதியும்

நம்ம முல்லா நஸ்ருதீன் அவர்கள் ஒருமுறை அரச சபையில் பக்கத்து நாட்டைச் சேர்ந்த அறிவாளிகளுடன் போட்டி போட்டு வென்று, தன் நாட்டின் மானத்தை காத்தார், அதனால் மகிழ்ந்த மன்னர் முல்லாவுக்கு இரண்டு மாடி வீட்டை அன்பளிப்பாக கொடுக்க வந்தார்.

அப்போ முல்லா சொன்னார் “மன்னரே! இப்போ நானும் என் மனைவி மட்டுமே இருக்கிறோம், எங்களுக்கு ஏன் இரண்டு மாடி பங்களா, தேவைக்கு அதிகமாக எதை வைத்திருந்தாலும் ஆபத்து, எனவே கீழ் பாகத்தை நான் எடுத்துக் கொள்கிறேன், மேல் பாகத்தை வேண்டும் என்றால் நம்ம படைத்தளபதி அவர்களுக்கு கொடுக்கலாமே என்றார்.

படைத்தளபதி, சில நாட்களுக்கு முன்பு தான் எதிரி நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்களை பிடித்து வந்தார்.

மன்னரும் அவருக்கு பரிசு கொடுப்பதாக சொன்னார், பின்னர் மறந்து போயிட்டார், தளபதிக்கும் கேட்க பயம்.

, முல்லா சொல்லி மன்னர் சேனாதிபதி மன்னர் முல்லாவுக்கு பங்களாவின் கீழ் பாகத்தையும், தளபதிக்கு மேல் பாகத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார்.

படைத்தளபதிக்கு ஏற்கனவே முல்லா மீது கோபமுண்டு, பைத்தியக்காரத் தனமாக ஏதோ எதோ பேசினால் மன்னர் மகிழ்ந்து பரிசு கொடுக்கிறார், நாமோ உடல் வருந்த கடுமையாக போராடி எதிரிகளையும், கொள்ளையர்களையும் விரட்டுகிறோம், ஆனால் மன்னர் பரிசு தரவில்லையே என்ற வருத்தம் கொண்டார். ஏற்கனவே தளபதி முரட்டு ஆசாமி, யாரையும் மதிக்க மாட்டார். இப்போ இருவரும் ஒரு பங்களாவில். முல்லாவின் மனைவி அவரைப் போல் அமைதியானவர், தளபதியும் மனைவி சொல்லவே வேண்டாமே.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பார்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லாவின் மனைவி மேலே சென்று “நீங்க கீழே வந்து எங்க வீட்டில் மாவு இடிக்கலாமே, ஏன் மேலேயே இடிக்கிறீங்க, நானும் உங்களுக்கு உதவுகிறேன்” என்றார். ஆனால் தளபதியின் மனைவி அதை ஏற்கவில்லை.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

“இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்போ வேண்டும் என்றாலும், எப்படி வேண்டுமானாலும், மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? “ என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் தூங்கிக் கொண்டிருந்த தளபதி, தன் கட்டடம் அதிர்வதைக் கண்டு எழுந்து கீழே எட்டிப் பார்த்தார், அங்கே முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

“கீழே என்ன செய்கிறாய் ? “ என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

“கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக சின்னதாக ஒரு வீட்டைக் கட்டத் தீர்மானித்திருக்கிறேன் “ என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி “என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? “ என்று கோபத்தோடு கேட்டார்.

“மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை, நீர் கீழ்வீட்டைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டீரா?” என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

அதைக் கேட்டதும் பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். “நீர் பெரிய அறிவாளி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன், அதனால் தான் மன்னர் உம்மை ரொம்பவே நேசிக்கிறார், நான் உங்க மீது பொறாமை கொண்டேன், என்னை மன்னிக்கவும், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்” என்றார் தளபதி.

“நான் எப்போதுமே எல்லோருக்கும் நண்பன்தான் “ என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

Thursday, December 08, 2005

கதை எண் 68 - தெனாலியா? கொக்கா!

ஒரு முறை தெனாலி ராமன் வாழ்கின்ற நாட்டு மன்னருக்கு அண்டை நாட்டு அரசன் ஒருவர் ஓலை அனுப்பியிருந்தார்.

அதில் மதிப்புக்குறிய ராஜாவுக்கு.

உங்கள் நாட்டின் மேல் நான் போர் தொடுக்க உத்தேசித்துள்ளேன். மூன்றாவது பெளர்ணமி அன்று உங்கள் நாட்டிற்கு எதிராக போர் முரசு கொட்டப்படும். எனது நாட்டுப்படையைப் பற்றி நீங்கள் அறியாததா? நீங்கள் போருக்கு சம்மதமா? கத்தியின்றி இரத்தமின்றி போர் முடிய வேண்டும் என்றால், நீங்களும், உங்கள் நாடும் என்னிடம் தோல்வியை ஏற்றுக் கொண்டு, நாட்டினை என்னிடம் கொடுக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்து நாட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில் நீங்கள் வாழ்ந்து கொள்ளலாம்.

இப்படிக்கு
ராஜ ராஜ சிம்மன்.

மன்னர் உடனே அரச சபையினை நோக்கி அவர்களது கருத்துக்களை கூறச் சொன்னார்.

சேனாதிபதி முதல் மந்திரிகள் வரை ராஜ ராஜ சிம்மனின் படையை வெல்ல முடியாது என்பதை ஆணித்தனமாக கூறினார்கள். மன்னனுக்கும் தெரியும் அந்தப் படையை வெல்லமுடியாது. மேலும் போர் ஏற்ப்பட்டால் எண்ணற்ற மக்கள் உயிரை இழப்பார்கள், பெரும் சேதம் ஏற்ப்படும். இதற்கு என்ன தான் வழி என்று கேட்டார் மன்னர்.

உடனே அனைவரும் ஆளுக்கு ஒன்றாக பேசினார்கள். அனைவரின் கருத்தும் போரிடாமல் எதிரிக்கு தலை வணங்கலாம் என்பதே.

இவ்வளவு நேரமும் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த தெனாலிராமன் பேசத் தொடங்கினார். “மன்னா! எதிரி மன்னன் ராஜ ராஜ சிம்மனிடம் நீங்கள் மண்டியிட்டு விட்டால், நாளைய வரலாறு நம் நாட்டையே கேலி செய்யும், இத்தனை நாள் நீங்க பெற்றிருந்த புகழ் எல்லாம் மங்கி போயிடும், மக்களுக்கும் பெரிய அவமானமாகை விடும்.. அதற்கு பதில் போரிட்டு மடிந்தாலும், மாபெரும் படையுடன் போரிட்டு செத்து மடிந்தார்கள் என்று வரலாறு இருக்கும்"

அரசரை தவிர அனைவரும் தெனாலிக்கு பித்து பிடித்து விட்டது என்று கூறி, அவருடன் வாக்குவாதப் பட்டார்கள். முடிவில் மன்னர் சொன்னார்

“தெனாலிராமன் சொல்வதில் உண்மை இருக்கின்றது. அடிமையாக வாழ்வதை விட போர் செய்து மடியவே விரும்புகின்றேன்: என்றார்.

அத்தோடு அரச சபை கலைந்து விட்டது. அதன் பின்னர் மன்னரும் தெனாலியும் நீண்ட நேரம் தனிமையில் உரையாடினார்கள். இதற்கு மாற்று வழி உண்டா என்று ஆய்வு செய்தார்கள்.ஐந்து நாள்களுக்குப் பின் மீண்டும் அரச சபை கூடியது.

அரசரைப் பார்த்து “மன்னா உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருந்தால், இந்த விசயத்தை என்னிடம் விடுங்கள். நான் பார்த்துக் கொள்கின்றேன். எனது உயிரை கொடுத்தாவது இந்த நாட்டினை காப்பாற்றுகின்றேன்”. என்றார் தெனாலி.

அதற்கு மன்னர் சம்மதம் தெரிவித்தார். தெனாலி கூறுவதைப் போன்று ஒரு ஓலை எழுதி மோதிர முத்திரை பதித்து கொடுத்தார் தெனாலியிடம்.

அந்த ஓலையை எடுத்துக் கொண்டு தெனாலி எதிரி நாட்டு மன்னர் ராஜ ராஜ சிம்மம் முன்னால் போய் நின்றார், அரசர் கொடுத்த ஓலையை உரக்கப் படித்தார் .

மதிப்புக்குறிய மன்னர் ராஜ ராஜ சிம்மனுக்கு.உங்கள் படைக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல எம் வீரர்கள். போருக்கான நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். உங்களை படையின் மனபலம் உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்று நினைக்கின்றேன். அவர்கள் எங்கள் படையோடு போர் செய்வதற்கு பயந்து நடுங்குகின்றார்கள். எதற்கு கோழைகளின் உயிரை கொல்லவேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த ஓலையை எடுத்து வந்த வீரர் எங்கள் படையில் மருத்துவ உதவி செய்பவர். இவரை உங்கள் நாட்டு சேனாதிபதி சண்டையிட்டு வென்று விட்டால், எனது நாட்டை உங்களுக்கு பரிசாக கொடுத்துவிடுகின்றேன்”.


ஓலையில் எழுதியிருப்பதை கேட்ட ராஜ ராஜ சிம்மன், தெனாலியை மாறி, மாறிப் பார்த்தார்.

மெலிந்த ஒருவம் கொண்ட தெனாலியை கேலியாகப் பார்த்தார். “யார் அங்கே இவனை பிடித்து சிறையில் அடையுங்கள் என்றார் மன்னர்.

“மன்னிக்கவும் மன்னா, ஒரு நாட்டின் தூதுவனாக வந்தவரை சிறையில் அடைப்பது போர் மரபுகளை மீறும் செயல் அல்லவா?” என்றார் தெனாலி.

“உமது மன்னர் உம்மை எமது சேனாதிபதியுடன் சண்டை செய்யும் படி அனுப்பியுள்ளதாக இந்த ஓலையில் எழுதியிருக்கின்றார், இது தெரியுமா உனக்கு”.

தெனாலி “அப்படியா மன்னா. எங்கள் மன்னர் இதைப் பற்றி எனக்கு எதும் கூறவில்லை. ஆனாலும் எங்கள் மன்னார் உத்தரவுக்கு கட்டுப்படுகின்றேன். ஆனால் ஒரு வேண்டுக்கோள் எங்கள் நாட்டு சட்டம், சண்டை செய்யும் முன், சண்டை செய்யும் இருவரும் மூன்று நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டும் என்பதே, அதன் படி என்னையும், உங்க சேனாதிபதியையும் சிறையில் அடையுங்க, நான்காம் நாள் நான் அவருடன் போட்டி போடுகிறேன்”

அப்போது தான் தெனாலி சேனாதிபதியைக் கண்டார். ஏழு அடி உயரத்தில் ஒரு மாமிச மலை போன்று இருந்தான் அவன்.தெனாலியும், சேனாதிபதியும் சிறையில் அடைக்கப் பட்டார்கள். இருவரும் அடுத்தடுத்த சிறையில் அடைக்கப் பட்டார்கள்.

இருவருக்கும் இடையில் ஒரு சுவர் இருந்தது. இருவரும் பார்த்துக் கொள்ள முடியாது ஆனால் பேசிக் கொள்ளலாம்.

இருவருக்கும் நன்றாக சாப்பாடு கொடுத்தார்கள். சாப்பாடு முடிந்ததும், இப்போ சாப்பிட்டதைப் போல் தான் சண்டையில் உன்னை கொன்று, உன்னை சாப்பிடுவேன் என்று கத்தியபடி இருப்பான் சேனாதிபதி.

சரி சரி அப்போது பார்த்துக் கொள்வோம் என்று மாத்திரம் பதில் சொல்வார் தெனாலி.சேனாதிபதி நித்திரையானது இருவருக்கும் இடையில் இருந்த சுவரை தண்ணீர் ஊற்றி மெல்ல மெல்ல கரண்டியால் சுரண்ட ஆரம்பித்தார் தெனாலி. விடியும் போது ஒரு அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட சுவரை சுரண்டி மெல்லியதாக ஆக்கிவிட்டார்.

இது ஏதும் சேனாதிபதிக்கு தெரியாது.மறுநாள் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும், சேனாதிபதி கத்த ஆரம்பித்து விட்டான். உன்னை கொல்வேன், தின்னுவேன் என்று.சரி,சரி சேனாதிபதி. நாளை சண்டையின் போது அதைப் பார்ப்போம். இப்போ நான் வெற்றிலை சாப்பிடுகின்றேன் உன்னிடம் சுண்ணாம்பு இருந்தால் தா.

சுண்ணாம்பு இருக்கின்றது எப்படி தருவது என்றான் சேனாதிபதி.

இதோ விரலில் பூசி விடு என்று தான் சுரண்டிய சுவரில் கையால் குத்தினார். தெனாலியின் கை அடுத்த பக்கம் வந்து விட்டதை பார்த்து பயந்து விட்டான் சேனாதிபதி.

சேனாதிபதி சுண்ணாம்பை பூசிவிடும் போது அவன் கை நடுங்குவது கவனித்த தெனாலி, “என்ன சுவரை உடைத்ததற்கே இப்படி பயப்படுகின்றார்? எங்கள் நாட்டில் நான் ஒரே அடியில் ஒரு யானையைக் கொன்று இருக்கின்றேன் தெரியுமா? நான் எல்லாம் சும்மா தான். எங்கள் சேனாதிபதி யானையை தனது ஒரு கையால் தூக்கி சுற்றுவதை நீ பார்க்கவேண்டும். யாரிடமும் சொல்லிவிடாதே எங்கள் நாட்டிற்கு வந்த ஒரு முனிவர், எங்கள் படையில் இருக்கும் வீரர்கள் அனைவருக்கும் அசுர பலம் கிடைக்க வரம் தந்தார். அதன் பின்னர் தான் எங்களுக்கு இப்படி அசுர கிடைத்தது என்றார் தெனாலி.

எல்லாவற்றையும் கேட்ட சேனாதிபதி நன்றாக பயந்து விட்டான்.மறு நாள் நாட்டு மக்கள் அனைவரும் சண்டையைக் காண வந்திருந்தார்கள்.

மன்னர் தனது வாளை சேனாதிபதிக்கு கொடுத்து தலையை கொய்து விடு என்றார். தெனாலியைப் பார்த்து உமக்கு என்ன ஆயுதம் வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்ளும் என்றார். மன்னா எனக்கு ஆயுதம் வேண்டாம். வெற்றிலை மாத்திரம் கொடுங்கள் போதும் என்றார்.

மன்னர் சிரித்துக் கொண்டு ஆகட்டும் என்றார். இரண்டு வீரர்கள் ஓடிவந்து, ஒருவர் வெற்றிலை கொடுத்தார். மற்றவர் சுண்ணாம்பு கொடுக்க போனார்.

“சுண்ணாம்பை சேனாதிபதியின் நெற்றியில் வையுங்கள் நான் எடுத்துக் கொள்கின்றேன்"சேனாதிபதியின் நெற்றில் சுண்ணாம்பு வைத்ததும் தனது கை முட்டியை முறுக்கினார். அவ்வளவும் தான். ஐயோ என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று தெனாலியின் காலில் விழுந்து விட்டார் சேனாதிபதி.

மன்னா! இவர்கள் நாட்டின் மேல் ஆசைபடுவதை விட்டுவிடுங்கள். இவர் ஒருவரே நம் படையை அழித்து விடுவார். என்று எல்லாவற்றையும் சொன்னான். சுவரை போய் பார்த்த மன்னனும் உண்மை என்றே நினைத்து விட்டார்.

ஒரு குதிரை வண்டியில் நிறைய பொற்காசுகளை தெனாலியின் மன்னருக்கு பரிசாக கொடுப்பதாகவும், தன்னை மன்னித்து விடும் படியும் மன்னர் ஓலை எழுதி தெனாலியிடம் கொடுத்துவிட்டார். வெற்றியோடு நாடு திரும்பும் தெனாலியை வரவேற்க மன்னரும் மக்களும் எல்லையில் காத்திருந்தார்கள்.

Thursday, December 01, 2005

கதை எண் 67 - குழந்தை இயேசுவும், கொடியவன் யூதாஸீம்

ரோமாபுரியில் பிரபல இளம் ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் எதை வரைந்தாலும் தத்ரூபமாக வரைவார். ஒரு நாள் அவர் இயேசு கிருஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரையலாம் என்று முடிவு செய்தார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஓவியத்தையும் அதற்குப் பொருத்தமான மாடலை வைத்தே ஓவியங்களை வரைந்து வந்தவர்.

ஒரு முறை குழந்தை இயேசுவை ஓவியமாக வரைய அழகான, கலங்கமில்லாத, தெய்வீக அம்சம் பொறுந்திய குழந்தையைத் தேடி பல இடங்களுக்கும் சென்று அலைந்து திரிந்தார்.

முடிவில் ஒரு கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் அவர் எதிர்பார்ப்புக்கு பொருத்தமான குழந்தை ஒன்று கிடைத்தது. அந்த குழந்தையின் பெற்றோரிடம் தன் எண்ணத்தை சொல்லி, அக்குழந்தையை மாடலாக வைத்து குழந்தை இயேசுவின் ஓவியத்தை சிறப்பாக வரைந்து முடித்தார்.

குழந்தை இயேசுவை வரைந்தப் பின்பு அக்குழந்தையானது பிற்காலத்தில் மிகப் பெரிய பதவிகள் அடையும் என்று ஆசிர்வாதம் செய்து விட்டு போனார்.
அந்த ஓவியரும் நேரம் கிடைக்கும் போது இயேசு காவியத்திற்கு ஏற்ற மாடல்கள் கிடைக்கும் போதும் ஓவியங்களை வரைந்து குவித்தார்.

இப்படியாக இருந்த அவருக்கு வயதும் ஆகி முதுமை அடைந்து விட்டார்.

இவ்வாறு இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைத் தக்க மாடல்களை வைத்து வரைந்து வந்தபோது, இயேசுவானவரை காட்டிக் கொடுத்த "யூதாஸ்' உருவத்தை வரைய வேண்டியிருந்தது. அதற்கு கொடூரமான முகம் கொண்ட மனிதனைத் தேடி அலைந்தார்.

வருஷக்கணக்காகத் தேடியும் ஓவியரால் கொடூர முகம் கொண்ட மனிதனை காண இயலவில்லை.

ஒருநாள் ஒரு சிறைச்சாலைக்கு அருகில் சென்ற போது அங்கே ஒருவனை காவலர்கள் கட்டிப் போட்டு உதைப்பதை பார்த்தார். அவனைக் கண்டதும் ஓவியருக்கு மிக்க சந்தோசம், யூதாஸ் ஓவியத்திற்கு ஏற்ற முகமாக இருக்கிறதே என்று சந்தோசப்பட்டார். பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து, அவனை இந்த முறை மட்டும் மன்னித்து தன்னுடன் அனுப்ப வேண்டினார், அதிகாரியும் சரி என்று சொல்லி அவனை விடுதலை செய்து ஓவியருடன் அனுப்பி வைத்தார்.

பல கொள்ளைகளையும், கொடிய செயல்களையும் செய்த கொடியவன் அவன். வீட்டில் அவனை அழைத்து வந்து தான் ஒரு ஓவியம் செய்ய இருப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நிறைய பணம் தருவதாகவும் சொன்னார். அவனும் ஒத்துக் கொள்ள, ஓவியர் எதிர்பார்த்தபடியே அவனது முகம் கொடூரமாக இருந்ததால், அவனை வைத்து யூதாஸ் ஓவியத்தைத் தத்ரூபமாக வரைந்து முடித்தார்.

ஓவியம் வரைந்து முடித்ததும், திருடன் ஓடி வந்து அந்த ஓவியத்தைப் பார்த்தான், பின்னர் ஓவியரைப் பார்த்து, இது நானா, இத்தனை கொடிய முகமா, ஆமாம் என்னை யாராக வரைந்தீங்க என்று கேட்க, ஓவியர் "தவறாக நினைக்காதே, நான் தேவமைந்தன் இயேசு பிரானை காட்டிக் கொடுத்த யூதாஸாக உன்னை வரைந்தேன்" என்றார்.

அதைக் கேட்டதும் அந்த கொடியவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது, கதறி கதறி அழுதான். ஓவியருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

நீ எத்தனையோ கொடிய செயல்களை தெரிந்தே செய்திருக்கிறாய், அப்படி இருந்தும் ஏன் அழுகிறாய்?

அப்போ அவன் சொன்னான் "அய்யா! நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது ஒரு ஓவியர் எங்க வீட்டிற்கு வந்து என்னை குழந்தை இயேசுவாக வரைந்தாராம், அதைப் பற்றி என் பெற்றோர் பலமுறை சொல்லியிருக்காங்க, அன்று அப்படி தெய்வாம்சம் மிக்க குழந்தையாக தெரிந்த நான் இன்றோ கொடிய முகத்தை கொண்ட யூதாஸாக உங்களுக்கு தெரிகிறேனே, என்று நினைத்து வருந்துகிறேன்"

உடனே ஓவியருக்கு தாங்க முடியாத அதிர்ச்சி "என்ன, நான் அன்று வரைந்த இயேசுவின் மாடலாக தெரிந்த குழந்தையா நீ, ஏன் இப்படி மாறினாய்" என்று கேட்டார்.

அதற்கு அவன் சொன்னான் "அய்யா! நீங்க தான் அந்த ஓவியரா?, நான் நல்லப்பிள்ளையாகத் தான் இருந்தேன், ஆனால் என் நண்பர்கள் நல்லவர்களாக இருக்கவில்லை, என் பெற்றோர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் நான் கேட்கவில்லை, கெட்டவர்களோடு நட்பு கொண்டிருந்ததால் நான் அனைத்து வகையான கெட்ட செயல்களை செய்தேன், திருடினேன், குடித்தேன், சூதாடினேன், எளியவர்களை அடித்தேன், பெரியவர்களை நிந்தித்தேன், அதனாலேயே என் மனமும், முகமும் கொடியனாக ஆகிவிட்டது, என்னை மன்னிக்கவும், நான் இத்தனை கொடியவனாக இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இனிமேல் நான் நல்லவனாக, உங்களுக்கு உதவியாளனாகவே இருக்க விரும்புகிறேன்" என்றான்.

மனம் திருந்திய அவனை கட்டிப்பிடித்து அரவணைத்தார் அந்த ஓவியர். அதன் பின்னர் ஓவியரிடம் ஓவியங்கள் தயார் செய்வதை கற்றுக் கொண்டு அவருக்கு உதவியாளனாக இருந்து வந்தான்.

குழந்தைகளா! இக்கதையானது நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் நம் நண்பர்கள் நல்லவர்களாக அமையவில்லை என்றால் நம்மால் நல்லவர்களாக இருக்க முடியாது. ஓவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது தெய்வத்தின் குழந்தை, பின்னர் வளர்க்கப்படும் விதமும், சூழ்நிலையும், நண்பர்களும் சேர்ந்தே, நம்மை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறார்கள். எனவே நல்ல நண்பர்களுடன் சேர்ந்திருங்க, யாராவது கெட்டவர் என்று தெரிந்த நிமிடமே அவர்களை விட்டு விலகுங்கள். அப்போ தான் நீங்க சாதனையாளராக முடியும். உங்க பெற்றோரும் பெருமை அடைவார்கள்.