சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, December 10, 2005

கதை எண் 69 - முல்லாவும் முரட்டு தளபதியும்

நம்ம முல்லா நஸ்ருதீன் அவர்கள் ஒருமுறை அரச சபையில் பக்கத்து நாட்டைச் சேர்ந்த அறிவாளிகளுடன் போட்டி போட்டு வென்று, தன் நாட்டின் மானத்தை காத்தார், அதனால் மகிழ்ந்த மன்னர் முல்லாவுக்கு இரண்டு மாடி வீட்டை அன்பளிப்பாக கொடுக்க வந்தார்.

அப்போ முல்லா சொன்னார் “மன்னரே! இப்போ நானும் என் மனைவி மட்டுமே இருக்கிறோம், எங்களுக்கு ஏன் இரண்டு மாடி பங்களா, தேவைக்கு அதிகமாக எதை வைத்திருந்தாலும் ஆபத்து, எனவே கீழ் பாகத்தை நான் எடுத்துக் கொள்கிறேன், மேல் பாகத்தை வேண்டும் என்றால் நம்ம படைத்தளபதி அவர்களுக்கு கொடுக்கலாமே என்றார்.

படைத்தளபதி, சில நாட்களுக்கு முன்பு தான் எதிரி நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்களை பிடித்து வந்தார்.

மன்னரும் அவருக்கு பரிசு கொடுப்பதாக சொன்னார், பின்னர் மறந்து போயிட்டார், தளபதிக்கும் கேட்க பயம்.

, முல்லா சொல்லி மன்னர் சேனாதிபதி மன்னர் முல்லாவுக்கு பங்களாவின் கீழ் பாகத்தையும், தளபதிக்கு மேல் பாகத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார்.

படைத்தளபதிக்கு ஏற்கனவே முல்லா மீது கோபமுண்டு, பைத்தியக்காரத் தனமாக ஏதோ எதோ பேசினால் மன்னர் மகிழ்ந்து பரிசு கொடுக்கிறார், நாமோ உடல் வருந்த கடுமையாக போராடி எதிரிகளையும், கொள்ளையர்களையும் விரட்டுகிறோம், ஆனால் மன்னர் பரிசு தரவில்லையே என்ற வருத்தம் கொண்டார். ஏற்கனவே தளபதி முரட்டு ஆசாமி, யாரையும் மதிக்க மாட்டார். இப்போ இருவரும் ஒரு பங்களாவில். முல்லாவின் மனைவி அவரைப் போல் அமைதியானவர், தளபதியும் மனைவி சொல்லவே வேண்டாமே.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பார்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லாவின் மனைவி மேலே சென்று “நீங்க கீழே வந்து எங்க வீட்டில் மாவு இடிக்கலாமே, ஏன் மேலேயே இடிக்கிறீங்க, நானும் உங்களுக்கு உதவுகிறேன்” என்றார். ஆனால் தளபதியின் மனைவி அதை ஏற்கவில்லை.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

“இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்போ வேண்டும் என்றாலும், எப்படி வேண்டுமானாலும், மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? “ என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் தூங்கிக் கொண்டிருந்த தளபதி, தன் கட்டடம் அதிர்வதைக் கண்டு எழுந்து கீழே எட்டிப் பார்த்தார், அங்கே முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

“கீழே என்ன செய்கிறாய் ? “ என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

“கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக சின்னதாக ஒரு வீட்டைக் கட்டத் தீர்மானித்திருக்கிறேன் “ என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி “என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? “ என்று கோபத்தோடு கேட்டார்.

“மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை, நீர் கீழ்வீட்டைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டீரா?” என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

அதைக் கேட்டதும் பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். “நீர் பெரிய அறிவாளி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன், அதனால் தான் மன்னர் உம்மை ரொம்பவே நேசிக்கிறார், நான் உங்க மீது பொறாமை கொண்டேன், என்னை மன்னிக்கவும், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்” என்றார் தளபதி.

“நான் எப்போதுமே எல்லோருக்கும் நண்பன்தான் “ என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

10 மறுமொழிகள்:

At 3:02 PM, December 10, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

Nalla kadhai. Nayamaaga sollappatta vidham ennai kavarnthathu

 
At 8:31 PM, December 10, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

I appreciate your concern about children and writing stories for them.Way of telling the story is good. Keep it up
Sujatha Subramanian

 
At 8:38 PM, December 10, 2005, Blogger சிவா மொழிந்தது...

பரஞ்சோதி! கதை நல்லா இருக்கு. ஏற்க்கனவே இந்த கதை தெரியும். மீண்டும் ஒரு முறை படித்து இன்புற்றேன். இப்போ வழக்கமா உங்க எல்லா கதைகளையும் படித்து விடுகிறேன். தொடருங்கள்.

 
At 10:46 AM, December 12, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

பூங்காவிற்கு வருதை தந்த நண்பர் ஸ்ரீதர், சகோதரி சுஜாதா சுப்பிரமணியன், மற்றும் நண்பர் சிவாவிற்கு எனது நன்றிகள்.

 
At 7:58 AM, December 13, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

Welldone p.jothi, you are doing good job. keep it up.

 
At 11:38 PM, December 13, 2005, Blogger குமரன் (Kumaran) மொழிந்தது...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் பரஞ்சோதி.

 
At 1:50 PM, December 14, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

கருத்து சொன்ன புதிய நண்பருக்கு எனது நன்றிகள்

 
At 1:51 PM, December 14, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

அன்பு குமரன்,

உங்க கருத்திற்கு மிக்க நன்றி.

நீங்க பிடிஎப் கோப்பு தயாரிப்பது பற்றி கேட்டிருந்தீங்க, இன்னமும் சரியாக பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன், விரைவில் சொல்கிறேன். நன்றி.

 
At 10:42 PM, December 22, 2005, Blogger சிவா மொழிந்தது...

Enna Paranjothi, adutha kathai eppo..romba naalaache..

 
At 12:53 PM, December 23, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க சிவா,

ஆமாம் ரொம்ப நாள் ஆச்சுது.

வருட கடைசி, அடுத்த ஆண்டிற்கான வேலைகள், மகளின் பிறந்த நாள் இப்படி எக்கசக்கமான வேலைகள்.

விரைவில் அடுத்த கதை சொல்கிறேன். உங்க தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

 

Post a Comment

<<=முகப்பு