கதை எண் 70 - நந்தனின் புத்திச்சாலித்தனம்
பொன்னி வளநாடு என்ற நாட்டை குஷன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். இவரது ஆட்சியில் மக்களின் செழிப்புக்கு குறையேதுமில்லை.
மன்னன் குதிரைகள் மீது அதிக பற்று வைத்திருப்பதால் அவரை "குதிரை பைத்தியம்' என்று மக்கள் அழைத்தனர்.
உலகில் எந்த மூலையில் அழகான, ஆரோக்கியமான குதிரைகள் இருப்பதாக அறிந்தாலும் உடனே ஏகப்பட்ட பணத்தை செலவழித்து அக்குதிரைகளை வாங்குவார். அரண்மனையில் குதிரைகளுக்கு என்றே தனி இடம் அமைத்தார் மன்னர். தனக்குப் பிடித்த குதிரை மீது சவாரி செய்து மகிழ்வது அவருடைய பொழுது போக்கு.
குதிரைப் பித்து பிடித்து அலைவதால் மன்னனுக்கு ஆட்சிப் பொறுப்பை சரியாக கவனிக்க முடியவில்லை. எனவே, அமைச்சர் குணாளன் அனைத்தையும் கவனித்து வந்தார். மன்னனும் அமைச்சரிடம் அதிக பொறுப்புகளை வழங்கிவிட்டு குதிரைகளை பராமரிப்பதில் முழு கவனத்தை செலுத்தி வந்தார்.
அரசன் அதிக பொறுப்புகளை அமைச்சர் குணாளனுக்கு வழங்கி உள்ளதை கண்டு பலர் கவலைப்பட்டனர். அமைச்சரோ தனக்கு கிடைத்த பதவியை வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டே இருந்தார்.
அமைச்சரின் சில செயல்களை கண்ட அரசனுக்கும் கவலையும் ஆத்திரமும் ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொறுமையுடன் அடக்கிக் கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல நடித்துக் கொண்டிருந்தார்.
அரசனே தன்னை கவனிக்கவில்லை என்ற உணர்வால் மேலும் கர்வத்துடன் செயல்படத் தொடங்கினார் அமைச்சர்.
அரசனின் குதிரைப் பித்து அதிகரித்துக் கொண்டே போனது. யார் குதிரைகளை விற்க வந்தாலும் வாங்காமல் இருப்பது இல்லை. அரசனின் குதிரைப் பித்து பற்றி கேள்விப்பட்டு ஏகப்பட்ட குதிரை வியாபாரிகள் அரண்மனை நோக்கி வந்து கொண்டே இருந்தனர். அமைச்சர் குணாளனின் போக்கு எப்படி என்பதை உளவாளிகள் மூலம் கண்காணித்து வந்தார் அரசர்.
அரசனுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய உளவாளிகள் அளித்த தகவல் அரசனை திடுக்கிட வைத்தது. அமைச்சர், நாட்டு பணத்தை பெருமளவில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார். குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தார். தனக்கு கிடைத்த தகவல்கள் நிஜம்தானா என்பதை நேரில் பார்த்து அறிந்தார் அரசன். எப்படியாவது அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்.
அரசரின் கண்காணிப்பு பற்றி எதுவும் அறியாத அமைச்சர் தன்னை அறிஞன் என்று அடிக்கடி பெருமையுடன் கூறுவதுண்டு. இவர் அறிவுக்கு ஒரு சோதனை வைத்து அமைச்சர் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அரசர்.
ஒரு நாள் வழக்கம் போல் அரண்மனை தர்பாரில் அமர்ந்து இருந்தார் அரசர்.
அப்போது சிப்பாய் ஒருவன் வந்து பணிவுடன் வணங்கிவிட்டு, ""மன்னா, தங்களை காண அரபு நாட்டில் இருந்து ஒரு குதிரை வியாபாரி வந்திருக்கிறார். அவர் தங்களை காண விரும்புகிறார்,'' என்று கூறினார்.
குதிரை பித்தனான அரசன் அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். ""உடனே அழைத்து வா,'' என்று கட்டளையிட்டார் மன்னர். அதை கேட்டு அமைச்சர் முகம் ஆத்திரத்தால் கறுத்துவிட்டது. அரசர் அதை கவனித்தார்.
அரபு வியாபாரி அரசர் முன் சென்று பணிவுடன் வணங்கினார். ""மன்னா, என்னிடம் இரண்டு பெண் குதிரைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் தங்களுக்கு விற்க விரும்புகிறேன்,'' என்றார் வியாபாரி.
""ஏன் இரண்டையும் எனக்கு விற்க கூடாது?'' என்று கேட்டார் மன்னர்.
""மன்னா, மன்னிக்கவும், ஒரு குதிரை ஏற்கெனவே ஒருவருக்கு அளிப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன். வார்த்தையை மீறுவது தவறு அல்லவா?'' என்றார் வியாபாரி.
""சரி ஆகட்டும்... நான் உடனே குதிரையை பார்க்க வேண்டும்,'' என்று கூறிவிட்டு அரண்மனை தோட்டத்துக்கு நடந்தார் அரசர். அமைச்சரும் வெறுப்புடன் அரசரை பின் தொடர்ந்து சென்றார்.
குதிரைகளை கண்ட அரசர் வியப்படைந்தார். ""என்ன அழகு? என்ன ஆரோக்கியம்! வியாபாரி இந்த இரண்டையும் எனக்கு தருவதில் ஏதாவது மாற்றம் உண்டா?'' என்று மீண்டும் கேட்டார்.
""மன்னிக்க வேண்டும் மகாராஜா,'' என்று தலைகுனிந்தபடி கூறினார் வியாபாரி.
""மன்னா, இந்த குதிரைகளில் ஒன்று தாய், மற்றது மகள். இவைகளில் யார் தாய்? யார் குட்டி? என்பதை தங்களால் கூற முடியுமா?'' என்றார் வியாபாரி.
இது என்ன சோதனை? அரசர் எவ்வளவு முயன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை.
""அமைச்சரே, தாங்கள் அறிஞர் ஆயிற்றே... இந்த குதிரைகளில் தாய் எது, சேய் எது என்று கூறுங்கள்,'' என்றார் மன்னர்.
இவ்வளவுதானே? என்று ஏளனமாக கேட்டபடி குதிரைகளை நெருங்கினார் அமைச்சர். அவர் இரு குதிரைகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்தார்.
ஆனால், எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அமைச்சர் குழப்பமடைந்தார். என்ன செய்வது என்று அறியாமல் தவித்தார். அத்தோடு நில்லாமல், "மன்னா! என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நம் நாட்டில் யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது, அப்படி யாராவது கண்டுபிடித்தால் நீங்க என்ன பரிசு கொடுத்தாலும் எனக்கு சரியே" அதை கேட்ட அரசர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
அடுத்த நாள் நாடு முழுவதும் ஒரு அறிவிப்பு வந்தது. "அரண்மனையில் இரண்டு பெண் குதிரைகள் உள்ளன. இவைகளில் தாய் எது, குட்டி எது என்பதை கண்டுபிடித்து கூறுபவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி கவுரவிக்கப்படும்,' என்ற செய்தி கேட்டு அமைச்சர் திடுக்கிட்டார்.
அரசு விளம்பரம் பார்த்து ஏகப்பட்டவர்கள் போட்டிக்கு முன் வந்தனர். ஆனால், யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. விளம்பரம் பார்த்த கிராமத்து இளைஞன் நந்தன் அரண்மனைக்கு சென்று தன்னால் குதிரைகளில் தாய் எது, சேய் எது என்று கூற முடியும் என்றான். ""ஆகட்டும்!'' என்று அனுமதி அளித்தார் மன்னர்.
குதிரைகளை நதிக்கரைக்கு கூட்டி வரும்படி கேட்டுக் கொண்டான் நந்தன். உடனே வியாபாரி குதிரைகளை ஆற்றங்கரைக்கு ஓட்டிச் சென்றார்.
இளைஞன் நந்தன் இரு குதிரைகளையும் ஆற்று தண்ணீரில் தள்ளினான்.
தண்ணீரில் விழுந்த குதிரைகள் நீச்சலடிக்கத் தொடங்கின. நெடுநேரம் அவை நீச்சலடித்தன. அப்போது ஒரு குதிரையின் கால்கள் தள்ளாடின. அதனால் தொடர்ந்து நீச்சலடிக்க முடியவில்லை. அதை கவனித்த மற்ற குதிரை தொடர்ந்து நீந்துவதை விட்டு விட்டு தத்தளித்த குதிரைக்கு உதவி செய்வது போல் அதை கரை நோக்கி தள்ளியது.
அதை கண்ட இளைஞன் நந்தன், ""மன்னா, தத்தளிப்பது குட்டி, உதவுவது தாய்,'' என்று உரக்க கத்தினான். அதைக் கேட்டு அரசன் வியப்படைந்தார்.
இளைஞனின் புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டினர்.
அமைச்சர் மட்டும் தலை குனிந்து நின்றார். அரசர் அறிவித்தபடி நந்தன், கலகபுரி நாட்டுக்கு அமைச்சர் ஆனான். அமைச்சர் குணாளன் மாஜி அமைச்சர் ஆகிவிட்டார். நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நந்தனும் அரசனை திருத்தி, நல்ல படியாக நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் மாற்றினார்.
5 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
நல்ல கதைகள், தொடர வாழ்த்துக்கள்.
நன்றி பிருந்தன்,
அது என்ன நீங்க இப்படி ஒரு குழந்தை படத்தை வைத்திருக்கீங்க.
ஏதாவது காரணம் உண்டா?
நல்ல கதை
தாய்ப்பாசம் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டுதானே. தாய்மையின் சிறப்பு இது.
அன்புடன்
கீதா
நல்ல கதை பரஞ்சோதி! வாயில்லா ஜீவன்களிடம் காணப்படும் நம்மை போல ஒற்றுமை, இந்த தாய் பாசம். ஊர்ல கோழி பாத்தீங்கன்னா, பருந்து தன் குஞ்சுகளை தூக்க வந்தால் அதன் தைரியத்தை பார்க்க வேண்டுமே. அதுவரை பறக்காத கோழி கூட, தன் குஞ்சுகளை காக்க,10 அடி பறந்து பருந்தை விரட்டும்.
வருகை தந்து கருத்து சொன்ன சகோதரி கீதா, நண்பர் சிவாவுக்கு எனது நன்றிகள்.
தலைப்பை தாய் பாசம் என்று வைத்திருக்கலாமோ?
Post a Comment
<<=à®®à¯à®à®ªà¯à®ªà¯