சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Sunday, December 25, 2005

கதை எண் 71 - இயேசுபிரான் சொன்ன கதைகள்

இன்று புனித கிறிஸ்துமஸ் திருநாள்.

குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.


உலகில் எத்தனையோ மகான்கள், அறிவாளிகள், நல்லவர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நமக்கு நல்ல நல்ல பாடங்களாக அமைகிறது, நம் வாழ்க்கையை நல்லவழியில் நடத்த உதவுகிறது, அத்தகையோரின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு முதன்மை பெற்றது.

இயேசு கிறிஸ்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவம், அவர் சொன்ன கதைகளை பார்ப்போம்.

இயேசு அவர்கள் கெட்டவர்கள் அனைவரையும் நல்ல போதனைகளின் மூலமாக நல்ல வழியில் நடத்தினார். தவறு செய்பவர்களை மன்னித்தார், யாருமே தொடவோ, அருகில் செல்லவே அருவருப்பாக நினைக்கும் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்தார், பல அதிசயங்கள் நிகழ்த்தினார்.

ஒரு நாள் அவர் போதனை செய்து கொண்டிருக்கும் போது சிலர் ஒரு பெண்ணை இழுத்து வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் “இயேசு அவர்களே! இப்பெண் பெரிய தவறு செய்து விட்டால், இவளை தண்டியுங்கள், நாங்கள் தவறு செய்தவர்கள் மீது கல் எறிந்து கொல்வது வழக்கம், நீங்களும் அதே தண்டனை கொடுங்க” உரக்க கத்தினார்கள்.

இயேசுவோ தலை நிமிராமல் தரையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார், வந்தவர்களோ மீண்டும் மீண்டும் வற்புறுத்த, கடைசியில் இயேசு சொன்னார் “நண்பர்களே! இப்பெண் தவறு செய்தவள் என்றால், உங்களில் இதுவரை தவறே செய்யாத, பாவக்காரியங்கள் செய்யாத உத்தமர் இருந்தால் இப்பெண் மீது முதலில் கல் எறியுங்க” என்று கூறி தலை குனிந்துக் கொண்டார். அவ்வளவு தான், அதுவரை அங்கே இருந்த கும்பல் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போய் விட்டது, காரணம் அங்கே நின்ற அனைவரும் ஏதாவது ஒரு பாவக்காரியம் செய்தவர்கள்.

பின்னர் இயேசு அங்கே அழுது கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து “அம்மா, எங்கே எல்லோரும், உன்னை குற்றவாளி என்று யாரும் சொல்லவில்லையா, அப்போ நானும் உன்னை குற்றவாளி என்று கூறவில்லை, இனிமேல் நீ பாவக்காரியங்கள் செய்யாமல் இருப்பாயாக” என்று சொல்லி அப்பெண்ணை அனுப்பி வைத்தார்.

இயேசு மக்களுக்காக போதித்த போதனைகள் எக்கச்சக்கம். அவை அனைத்தையும் ஒருமுறையாவது படிக்க வேண்டும்.

தீயவர்கள் மனம் திருந்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நன்மை செய்யுமாறு சீடர்களிடம் அறிவுறுத்தினார்.

பாவச் சோதனை வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் அதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு மிகப்பெரிய கெடுதல் ஏற்படும். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். உங்களுடைய சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரை கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராக பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் வந்து, நான் மனம் மாறி விட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.

ஏனெனில், நேர்மையாளர்களை குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட மனம் மாறிய ஒரு பாவியை குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என்று கூறிய இயேசு, பின் வரும் உவமையை உதாரணமாக தெரிவித்தார்.

நல்ல வசதி படைத்த விவசாயி ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள், முத்தவர் மிகவும் நல்லவர், தந்தை சொல் கேட்டு நடப்பவர், இறைவனிடம் பயம் கொண்டவர். இளையவரோ தீயவர்களின் நட்பு கொண்டு, மிகவும் கெட்டவராக இருந்தார். தந்தையில் சொல் கேட்காமல் தான் தோன்றித்தனமாக திரிந்தார்.

வீட்டில் விருந்து படைத்தால் இது என்ன விருந்தா இது, இதை பன்றி கூட திங்குமா என்று ஏளனம் செய்வார். ஒரு நாள் இளையவர் தந்தையிடம், அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கை பிரித்து தாரும் என்றார்.. தந்தை எவ்வளவு சொல்லியும் கேளாமல், சொத்தை பிரித்து வாங்கிக் கொண்டார். அதிலும் நல்ல செல்வசெழிப்பானவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டார். நிலங்களையும், தங்கம் முதலியானவற்றை விற்று காசாக்கி நண்பர்களோடு வேறு ஒரு நாட்டிற்கு சென்றான். அங்கே கெட்ட நண்பர்களோடு பணத்தை இஷ்டம் போல் செலவு செய்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக கையில் இருந்த பணம் குறைய குறைய நண்பர்களும் விட்டு விலகினர், இறுதியில் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்ட்ப்படும் நிலைக்கு போக, ஒருவரும் அவனிடம் இல்லை, அவனது உடைகளைக் கூட திருடிக் கொண்டு, அவனது நண்பர்கள் ஓடி விட்டார்கள். பசி, கடும் பசி, சாப்பிட ஒன்றும் இல்லை, கையில் பணமும் இல்லை.

அங்கே இங்கே என்று அழைந்து இறுதியில் ஒருவரிடம் வேலை கேட்டு, அவரிடம் வேலைக்கு சேர்ந்தான். அந்த இளைய மகனின் வேலை என்ன தெரியுமா? தினமும் பன்றிகளை மேய்ப்பது, இரவில் மட்டுமே அவனுக்கு உணவு கிடைக்கும், அதுவும் மிகவும் குறைவான, பழைய சாப்பாடே கிடைக்கும்.

ஒரு சில நாட்களில் அவனுக்கு காலையிலும், மத்தியானமும் பசி கடுமையாக எடுத்தது, அதனால் அவன் செய்த காரியம் என்ன தெரியுமா? பன்றிகளுக்காக வைக்கப்பட்ட கெட்டு போன உணவுகளை சாப்பிடத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் தந்தையார் கொடுத்த அருஞ்சுவையான உணவை எட்டி உதைத்ததையும், உதாசினப்படுத்தியதையும் நினைத்து கண்ணீர் விட்டான்.

ஒருநாள் அவன் பன்றிக்காக வைத்திருந்த உணவை சாப்பிடுவதை கண்ட முதலாளி, அவனை கடுமையாக அடித்து, உதைத்தார். மீண்டும் அவன் வேலை இல்லாதவனாகி விட்டான். கடைசியில் கஷ்டப்பட்டு ஒருவழியாக தன் தந்தையார் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

அப்போதுதான் அவனது அறிவு தெளிவடைந்தது. என் தந்தையிடம் மீண்டும் சென்று, அப்பா, உங்களுக்கு எதிராக பாவம் செய்து விட்டேன். உங்கள் மகன் என்று கூற எனக்கு எந்த தகுதியும் இல்லை. உங்கள் வேலையாட்களில் ஒருவனாக பணியாற்ற அனுமதியுங்கள் என்று கேட்டு கொள்வதாக மனதிற்குள் கூறிவிட்டு தந்தையின் வீட்டிற்கு புறப்பட்டான்.

தொலை தூரத்தில் இளைய மகன் வந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் தந்தை ஓடிச் சென்று அவனை கட்டி தழுவி முத்தமிட்டார். தந்தையின் செயல்களால் வெட்கமடைந்த இளைய மகன் அவரிடம், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று கூற நான் தகுதியற்றவன் என்றார்.

ஆனால் தந்தை தனது வேலையாட்களை அழைத்து, முதல் தரமான ஆடையை கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமல் போயிருந்தான். மீண்டும் கிடைத்துள்ளான் என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாட தொடங்கினர்.

அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூத்த மகன் வீட்டிற்கு திரும்பி வந்த போது, ஆடல் பாடல்களை கேட்டு என்ன நடக்கிறது என்று வேலையாட்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள், உங்க தம்பி வந்திருக்கிறார். அவர் நலமாக திரும்பி வந்ததால் உங்க தந்தை விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றனர். இதனால் கோபமடைந்த மூத்தவன், வீட்டிற்குள் செல்லாமல் வெளியே நின்று கொண்டிருந்தான். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து மூத்தவனை வீட்டிற்குள் வருமாறு அழைத்தார். அதற்கு மூத்தவன், தந்தையிடம் உங்க கட்டளைகளை ஒருபோதும் நான் மீறியதில்லை. இருப்பினும் எனது மகிழ்ச்சிக்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் உங்க சொத்துக்களையெல்லாம் அழித்து விட்ட இந்த மகனுக்கு விருந்து வைப்பது தேவையா? என்றார்.

அதற்கு தந்தை, மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில், உன் தம்பி இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்றுள்ளான் என்றார்.

கதையை சொல்லி முடித்த இயேசு, தன் சீடர்களை நோக்கி “தவறு செய்து மனம் திருந்தினால், நமக்கும் இத்தகைய வரவேற்புதான் இறைவனிடமிருந்து கிடைக்கும்” என்று சொன்னார்.

6 மறுமொழிகள்:

At 10:50 PM, December 25, 2005, Blogger பிருந்தன் மொழிந்தது...

சிறுவயதில் படித்த கதைகள், அப்படியே உள்ளத்தில் இருக்கிறது, உங்கள் வரிகளில் படித்தபோது அவ்நினைவுகள் வந்து போயின.
நன்றிகள் உங்களுக்கு.

 
At 10:15 AM, December 26, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

பிருந்தன், உங்க வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

இக்கதைகளை நான் சிறுவயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்லக் கேட்டது. இது மாதிரி நிறைய பைபிள் நீதிக்கதைகள் இருக்கின்றன.

 
At 11:17 AM, December 26, 2005, Blogger மதுமிதா மொழிந்தது...

நல்ல சமயத்தில் நல்ல கதை நன்றி பரஞ்சோதி

பிருந்தன் என்னதிது
குழந்தை கையில என்னத்தை கொடுத்திருக்கீங்க
மொதல்ல தூக்கி கீழே போடச்சொல்லுங்க
விளையாட்டுக்குக்கூட வேணாம்.

 
At 2:22 PM, December 26, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

சகோதரி மதுமிதா அவர்களையும்,ரூபா அவர்களையும் வருக வருக என்று வரவேற்கிறேன்.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

சகோதரி, நானும் பிருந்தனிடம் அதை கீழே போடச் சொல்லி விட்டேன், கேட்கவில்லை என்றால் காதை திருக்கி விடுங்க. அப்போ தான் திருந்துவார்.

 
At 5:03 PM, December 26, 2005, Blogger பிருந்தன் மொழிந்தது...

நானும் சொல்லிப்பாக்கிறேன் மாட்டேன் என்று அடம்பிடிக்கிறான். சின்னப்பயல்தானே கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.

 
At 1:44 PM, December 27, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

பிருந்தன் நீங்க சொன்னதை படித்தால் சிரிப்பு தான் வருது.

சொன்னதை கேட்கவில்லை என்றால் உதை கொடுத்தால் கேட்டுத் தானே ஆக வேண்டும்.

 

Post a Comment

<<=முகப்பு