சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Monday, August 01, 2005

கதை எண் 24 - நன்றி மறந்த சிங்கம்

Image hosted by Photobucket.com

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

""மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,'' என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.


அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், ""மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.

""நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

""மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், ""சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,'' என்றான்.

""என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

""கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?'' உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,'' என்றான் மனிதன்.

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

""இதனிடம் நியாயம் கேட்போம்,'' என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

""எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.

அனைத்தையும் கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

""நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,'' என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

""நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''

""எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.

""அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,'' என்றது சிங்கம்.

""எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

""நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

""நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,'' என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

குட்டீஸ்... ஒருவர் செய்த நன்றியை மறப்பது மிகப் பெரிய பாவம். அப்படி செய்பவர்களை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டார்.

4 மறுமொழிகள்:

At 5:46 PM, August 01, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

பரஞ்சோதி மிகவும் அருமையான கதை..

உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்தது..
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
திருவள்ளுவர் - அதிகாரம் 11. செய்நன்றி அறிதல்

 
At 7:29 AM, August 02, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி கங்கா,

உங்கள் கருத்துகள் என்னை ஊக்கப்படுத்துகிறது.

நன்றி கொன்றால் அடையும் தண்டனை என்ன என்பதை சொல்ல நிறைய கதைகள் உண்டு, சிறுவயதில் பெரியவர்கள் சொல்லக் கேட்டப்பின்பு நான் திருந்தியதுண்டு.

அத்தோடு மன்னிக்கும் மனப்பான்மையும் உண்டானது. நன்பர்களுக்குள் கண்டிப்பாக சண்டை சச்சரவுகள் வரும் தானே, அப்போ மற்றவர்கள் தூண்டி விட்டாலும், அவர்கள் செய்த நன்றியை நினைத்து பொறுமை காத்து, மீண்டும் அவர்கள் நட்பை பெற்றதுண்டு.

 
At 8:01 PM, April 08, 2006, Anonymous Anonymous மொழிந்தது...

superb........Migavum arumai.......kathaigal nandrai ullana

 
At 7:34 AM, April 09, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க பிரியதர்ஷினி,

உங்க வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

தொடர்ந்து படித்து கருத்துகள் கூறுங்கள். மற்றவர்களுக்கும் கதைகள் சொல்லி மகிழுங்கள்.

 

Post a Comment

<<=முகப்பு