சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Wednesday, August 03, 2005

கதை எண் 26 - மகாத்மா காந்தியின் வாழ்க்கையில்

Image hosted by Photobucket.com


காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் ஒரு வாலிபன் அங்கு தங்கி பணிவிடைகள் செய்வதற்காக வந்து சேர்ந்தான்.

அந்த வாலிபன் மிகவும் நல்லவன்; ஒழுக்கமானவன். ஆசிரமத்தில் இருந்த அத்தனை குழந்தைகளின் மீதும் அன்பு கொண்டிருந்தான்.

ஒரு நாள் அந்த வாலிபன் ஒரு ஆசிரமச் சிறுமியுடன் சபர்மதி நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது கையில், ஒரு எலுமிச்சம்பழம் இருந்தது. அந்த எலுமிச்சம் பழத்தை அந்தச் சிறுமியிடம் துõக்கிப் போட்டு அவள் பிடிப்பதற்குள் அவன் அதைப் பிடித்து, அவள் கையில் எலுமிச்சம்பழம் சிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தான். அந்தச் சிறுமியும் சளைக்காமல் அந்த எலுமிச்சம் பழத்தைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தாள்.

ஒரு சந்தர்ப்பத்தில் அந்த இளைஞன் எலுமிச்சம் பழத்தை நதியில் வீசி எறிவது போல் பாவனை செய்து, எலுமிச்சம் பழத்தை தனது கால்சட்டைப் பையிற்குள் போட்டுக் கொண்டான்.

எலுமிச்சம் பழத்தை காணாத சிறுமி விழித்தாள்.

""எங்கே பழம்?'' என்று கேட்டாள்.

""நதிக்குள் எறிந்துவிடடேன்!'' என்றான் இளைஞன்.

""நான் போய் தேடி எடுத்து வரட்டுமா?'' என்று கேட்டாள் சிறுமி.

""அது வீண் வேலை. பழம் கிடைக்காது!'' என்றான் வாலிபன்.

சிறுமியும் அதை நம்பிவிட்டாள்.

""சரி! விளையாடியது போதும். பாபுஜி தேடுவார். ஆசிரமத்திற்கு செல்லுவோம்!'' என்று சொன்னாள் சிறுமி.

இளைஞனும், சிறுமியும் ஆசிரமத்தை நோக்கி சென்றனர். சட்டென்று அந்த வாலிபன் தனது கால்சட்டைப் பையிற்குள்ளிருந்து கைக்குட்டையை எடுத்தான். அப்போது அந்தப் பையிற்குள் ஒளித்து வைத்திருந்த எலுமிச்சம்பழம் கீழே விழுந்தது.

அதை அந்தச் சிறுமி பார்த்துவிட்டாள். அவளுக்கு கோபம் வந்தது.

""ஏய்! பழம் ஆற்றில் விழுந்துவிட்டது என்று பொய்தானே சொன்னாய். இரு... இரு... பாபுஜியிடம் சொல்லுகிறேன்!'' என்ற சிறுமி, ஆசிரமத்திற்கு சென்று காந்திஜியிடம் அந்த விஷயத்தை கூறிவிட்டாள்.

காந்திஜி பிரார்த்தனைக் கூட்டம் முடிந்ததும் அந்த வாலிபனை அழைத்து, ""நதிக்கரையில் என்ன நடந்தது?'' என்று விசாரித்தார்.

வாலிபன் நடந்ததைக் கூறினான்.

""பார் தம்பி! எலுமிச்சம் பழம் நதிக்குள் விழுந்துவிட்டது என்று பொய்தான் சொல்லியிருக்கிறாய். குழந்தைகளுடன் விளையாடும் போது விளையாட்டுக்கு கூடப் பொய் சொல்லக்கூடாது. இன்று விளையாட்டிற்கு சொல்லும் பொய்தான், நாளடைவில் நிஜப் பொய் சொல்லுவதற்கும் வழி வகுக்கும்!'' என்றார் காந்திஜி.

அந்த அறிவுரையை கேட்ட வாலிபன் மனம் வருந்தித் தலை கவிழ்ந்தான்.

காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வசித்தபோது, நகரத்தில் உள்ள ஒரு தெருவின் வழியாக அவர் தினமும் நடந்து செல்வது வழக்கம். அந்த தெருவில் வெள்ளைப் போலீஸ்காரர்கள் ரோந்து சுற்றுவது வழக்கம். அந்தத் தெரு வழியே தினமும் காந்திஜி சென்று வருவது வெள்ளை போலீஸ்காரர்கள் அனைவருக்கும் தெரியும்.

ஒரு நாள், அந்தத் தெருவில் ஒரு புதிய வெள்ளைப் போலீஸ்காரர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை ஒரு ஆப்பிரிக்கக் கறுப்பர் என்றே அவர் நினைத்து விட்டார். உடனே அவருக்கு ஆத்திரம் வந்தது.

"வெள்ளைப் போலீஸ் இருக்கும் பகுதிக்குள் ஒரு கறுப்பர் வருவதா?' என்று நினைத்து
ஆத்திரம் கொண்ட அந்த வெள்ளைப் போலீஸ் அதிகாரி, தடதடவென்று ஓடி வந்து பூட்ஸ் கால்களால் காந்திஜியை உதைத்து கீழே தள்ளினார்.

கீழே விழுந்த காந்திஜிக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தப் போலீஸ் அதிகாரி தன்னை உதைக்கும் அளவுக்குத்தான் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று எண்ணியபடி தடுமாறி எழுந்தார்.

"ஏன் இப்படி செய்தீர்கள்?' என்று அந்தப் போலீஸ் அதிகாரியை அவர் கேட்க நினைத்தபோது—

காந்திஜியின் கிறிஸ்தவ நண்பரான குரோட்ஸ் என்பவர் குறுக்கிட்டார்.

தற்செயலாக அந்தப் பக்கம் வந்த அவர், காந்திஜியை அந்த வெள்ளைப் போலீஸ் உதைத்துக் கீழே தள்ளும் காட்சியைக் கவனித்து விட்டுத்தான் அருகே ஓடி வந்தார்.

""மிஸ்டர் காந்தி! இந்தப் போலீஸ்காரர் ஒரு தவறும் செய்யாத உங்களை உதைத்துக் கீழே தள்ளியதை என் கண்களால் பார்த்தேன். இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடருங்கள். நான் வந்து சாட்சி சொல்லுகிறேன்!'' என்றார் நண்பர் குரோட்ஸ்.

அதற்கு காந்திஜி, ""டியர் குரோட்ஸ்! என் சொந்த விஷயங்களுக்காக நான் கோர்ட்டிற்கு போகக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். என்னைப் பற்றி இந்தப் போலீஸ்காரருக்கு எதுவும் தெரியாது. ஆகவே என்னையும் ஒரு கறுப்பர் என்றே நினைத்து தனது ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டார். நிறவெறியை இவர்கள் எப்போது நிறுத்துகிறார்களோ அன்றுதான் இவர்களே நிம்மதியுடனும், சந்தோஷமுடனும் இருப்பர்,'' என்று கூறினார்.

அதைக் கேட்ட அந்தப் போலீஸ் அதிகாரி, காந்திஜியின் உன்னதமான குணத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் வெட்கித் தலைகுனிந்தார். அதோடு தன்னை மன்னிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

காந்திஜியும் மன்னித்துவிட்டார்.

யாருக்கு வரும் இந்த உன்னத குணம்?

3 மறுமொழிகள்:

At 5:22 PM, August 03, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

பரஞ்சோதி,
இந்தக் குறள் தான் சட்டென நினைவுக்கு வந்தது.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

திருவள்ளுவர்- திருக்குறள் அதிகாரம் 32. இன்னா செய்யாமை

 
At 2:29 AM, August 05, 2005, Blogger யாத்ரீகன் மொழிந்தது...

Poi patriya.. andha sambhavam arumai..

indraya kulandhaikaluku arivurai kooruvadhai vida.. adhan padi naam nadandhaalay podhumay..

 
At 10:25 AM, August 07, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி நண்பர் கங்கா,

நல்ல திருக்குறள் எடுத்துக்காட்டு.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற இயேசு பெருமானுக்கு பின்னர் அதே போல் அகிம்சை போதித்தவர் நம்ம அண்ணல் காந்தியடிகள். குழந்தைகளுக்கு சொல்ல அண்ணலின் கதைகள் நிறையவே இருக்கின்றன.


நண்பர் செந்தில் அவர்களே!

மிக அருமையாக சொன்னீங்க, சொல்வதை வாழ்ந்து காட்டுவது தான் மிகச்சரியான உதாரணமாக இருக்க முடியும். அப்படி நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்.

தற்போது கூட தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம், சின்ன பெண் குழந்தை தொலைபெசியை எடுப்பார், உடனே அவரது தாயார் தான் இல்லை என்று சொல்லச் சொல்வார், குழந்தையும் "என் அம்மா வீட்டில் இல்லை என்று சொல்லச் சொன்னாங்க" என்று சொல்லும், சிறிது நேரத்தில் அடுத்து உடனே வரும் தொலைபேசிக்கு குழந்தை உடனே இவ்வாறு கூறும் "நானும் வீட்டில் இல்லை", அதை பார்த்து தாயார் பெருமையாக சிரிப்பார்.

இந்த விளம்பரத்தை எடுத்தவரை என்ன என்று சொல்வது? சின்னஞ்சிறுவர்களை இப்படி கெடுப்பவர்களை எப்படி தண்டிப்பது?

 

Post a Comment

<<=முகப்பு