சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, October 27, 2005

கதை எண் 52 - விவேகமான வெள்ளாடு

உழவர் ஒருவர் வீட்டில் வெள்ளாடும், செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன.

உழவருக்கு அவை நன்றாகவே உழைத்தன, ஆனாலும் அவன் சரியாக சப்பாடு போடுவதில்லை, ஒரு நாள் தோட்டத்தில் விளையும் சுவையான செடிகளை அவை கடித்து சாப்பிட்டன், அதை கண்டு கோபம் கொண்ட உழவர், ஆத்திரமாக “நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள்” என்று விரட்டினார்.

இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன.

செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது.
மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது.
சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது.

அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு.

என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு.

இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன.

சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன.

அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு.

இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன.

அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன.

ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள்.

நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு.

அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின.

நண்பர்களா நாங்களா? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய்.

இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு.

செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது.
செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.

ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு.

அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது. கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது.

அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு.
இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின.

இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன.

ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.

சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது.

பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது.

செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு.

இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன. ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன.

ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய்.

நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய்.

மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது. மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.

புத்திசாலித்தனத்தால் ஆடுகள் உயிர் தப்பியதை கண்டு ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?

உயிர்தப்பிய ஆடுகள் தன் எஜமானனை நினைத்துப் பார்த்தன, அவரிடம் இருந்தவரை உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை, எனவே அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் சேர்ந்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தன, அதே நேரத்தில் ஆடுகளை பிரிந்த உழவர் தன் தவற்றை உணர்ந்து ஆடுகளுக்கு நன்றாக தீனி போடுவது என்று தீர்மானித்து ஆடுகளை தேடி காட்டிற்கு வந்தார், எதிரே வந்த ஆடுகள் ஓடி போய் உழவரிடம் மன்னிப்பு கேட்டது, உழவரும் மன்னிப்பு கேட்டு, ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து ருசியான இலைகளை கொடுத்தார்.

Wednesday, October 26, 2005

கதை எண் 51 - அனகோண்டனும் ஊர்மிளாவும்

அனகோண்டன் என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும்.

மலைப்பாம்பு இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது.

மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.

ஆனால் அனகோண்டன் சற்று வித்தியாசமானது. காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது அனகோண்டன் பிடியில நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு அனகோண்டன் என்று பெயர் வழங்கி வந்தது.

அனகோண்டன் தனது தலையை ஒரு கிளையின் மீது வைத்தபடி ஆற்றங்கரையையே பார்த்துக் கொண்டு இருந்தது.

மிரண்டு மிரண்டு ஆற்றங்கரையில் வரும் ஊர்மிளா மான் குட்டி அதன் கண்ணில் பட்டது. நீண்டு கிடந்த தனது உடலை வேகமாக தன்னை நோக்கி இழுத்தது.

அநேகமாக அந்த மான்குட்டி மிகவும் குறுகலாக ஓடும், அந்த ஆற்றைக் கடந்து வரலாம். அப்படிக் கடந்து வந்தால் அனகோண்டன் இருக்கும் வழியாகத்தான் வரவேண்டும்.

அந்த ஊர்மிளாமான் ஆற்றில் இறங்கியது. அனகோண்டன்யில் வாயில் நீர் சுரந்தது. அனகோண்டன் மீதமுள்ள தனது உடலை கிளையில் சுற்றி தனது தலையை மட்டும் தொங்க வைத்தபடி அசையாமல் இருந்தது. பார்வை மட்டும் ஆற்றில் இறங்கிய மான் மீது இருந்தது.
ஆற்றில் மான் நீந்தியது.

இதே மரத்திலிருந்துதான் அனகோண்டன் ஒரு நாள் ஒரு சிறுத்தையை மடக்கிப் பிடித்தது. ரப்பர் போன்ற தனது உடம்பை கயிறு போல் பாவித்து இறுக்கிய வேகத்தில் சிறுத்தையின் எலும்புகள் மடமடவென்று முறிந்தன.

மான் கரையேறி விட்டது. அனகோண்டன் அசையாமல் இருந்தது. அந்த மரத்திற்கு அருகாமையில வந்த பாதையில் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தது ஊர்மிளா மான்குட்டி, அது குழப்பத்தில் இருந்தது. சொல்லி வைத்ததுபோல் அந்த மரத்தடியில் வந்து நின்றது, மேலே இருந்த அனகோண்டனை பார்கக்வில்லை. அனகோண்டன் மான்குட்டியில் கழுத்தில் மாலையாய் விழுந்தது.

"அம்மா" என்று கதறியது மான்குட்டி. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போனது. அப்படி இப்படி கூட அசையாமல் நின்றது.

அனகோண்டனுக்குக் கூட ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஊர்மிளாவின் முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது. அதற்குள் அனகோண்டன் ரப்பர் போன்ற நீண்ட தனது உடலால் மானைச் சுற்றிது. மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அனகோண்டன் இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் இதனிடம் தப்பிக்க போராட்டம் நடத்துமே தவிர இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது.

"ஆமாம்.... ஏன் அழுகிறாய்" என்றது அனகோண்டன்.

ஊர்மிளா மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு உறுதியான குரலில் சொன்னது.

"இப்போது சாவு என்பது நிச்சயமாகி விட்டது. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் மனது வைத்தால் எனக்கு உதவலாம்" என்றது.

"நான் எப்படி உதவ முடியும்?" என்றது.

"மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று சில மூலிகைகளை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு மீண்டும் இங்கு வந்து சேருகிறேன். பின்னர் உங்கள் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடுங்கள்" என்றது மான்.

“மூலிகையா? அது ஏன், அதுவும் உன் அம்மாவுக்கு, உன் அம்மாவுக்கு என்ன ஆச்சு” என்றது அனகோண்டன்.

“என் தாயார் இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை காப்பாற்ற ஒரு கழுதைப்புலியிடம் மோதியது, அதில் சரியான காயம், என் அம்மாவால் எழுந்து நடக்க முடியவில்லை, கபீஷ் மாமா தான், அந்த மூலிகையைப் பற்றி சொன்னார், அது சாப்பிட்டால் காயம் எல்லாம் விரைவில் குணமடையுமாம், அதான் அந்த மூலிகையைத் தேடி வந்தேன், உங்களிடம் மாட்டிக் கொண்டேன்”

"சரி, நான் உன்னை விடுவித்தால் நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?" அனகோண்டன்.

"நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்க என் கூடவே வாங்க.. மூலிகைகளை பறித்து என் தாயிடம் சேர்த்ததும் நீங்க என்னைக் கொன்று சாப்பிடுங்க"

"உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன?" என்றது அனகோண்டன்.

"என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீங்க என்ன சொல்கிறீர்களோ அதற்கு நான் கட்டுப்படுகிறேன்"

"நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும்" என்று சொன்னது அனகோண்டன். அது அதற்கு ஒத்துக் கொண்டது. அனகோண்டனன சுமந்தபடியே சென்றது மான்.

மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்றது. கபீஷ் சொன்ன மூலிகைகளை சேகரித்துக் கொண்டது. மலைப்பாம்பு தன் உடலைச் சுற்றியிருக்க, அந்த பாரம் கூட தெரியாமல், மூலிகை கிடைத்த உற்சாகத்துடன் ஊர்மிளா மான் நடந்தது. தன் உயிர் போகும் முன்னர் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த அம்மாவுக்கு உதவுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது அதற்கு சந்தோஷமாக இருந்தது.

மான் தன் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்தது. தன் இருப்பிடத்தையும் படுத்துக்கிடக்கும் அம்மாவையும் காட்டியது. அனகோண்டன் அதன் உடம்பிலிருந்து மெல்ல இறங்கியது.

"மூலிகைகளை பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால்.... அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும்" என்றது அனகோண்டன்.

"நீங்க செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன்" என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடியது ஊர்மிளா மான் குட்டி. அனகோண்டன் மெல்ல ஊர்ந்து மரங்களின் ஊடே மறைந்து கொண்டது. அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன.

அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விட முடியும். இப்படித்தான் சென்ற வாரம் ஒரு மலைப்பாம்பை இரண்டு பெரிய மான்கள் கொம்பினால் நசுக்கி எடுத்துவிட்டன. அந்த மாலைப் பாம்பு அங்கேயே உயிரை விட்டது.

அதை நினைத்து பார்த்த பின்பு, பயம் என்றால் என்னவென்று தெரியாத அனகோண்டன்க்குக் கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.

"கையில் கிடைத்ததை விட்டு விட்டோமோ?" என்று கூட ஆதங்கமாக இருந்தது.

எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அனகோண்டன் பெரிய தனது உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர ஏதோ அரவம் கேட்டது.

அதே ஊர்மிளா மான்குட்டி தனியாக வந்தது.

"என் கடமை முடிந்தது... எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன்.....உங்களுக்கு எனது நன்றிகள்" என்று சொன்னவாறு அனகோண்டனின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி.

அனகோண்டனின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது.

"என்னைப் பற்றி அங்கே இருக்கும் மான்களிம் ஏதாவது சொன்னாய்" என்றது அனகோண்டன்

"இல்லை எனக்கு உதவி செய்த உங்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்."

"உன்னை கொன்று தின்னப் போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்?"

"நீங்க உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?"

அனகோண்டன் தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது.

"சொன்ன வாக்கை காப்பாற்றிய, தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்கினாலே ....எனக்குப் பெருமை, உன்னை உன் தாயாரோடு போய் இருக்கவே விரும்புகிறேன், இனிமேல் உனக்கு எந்த ஆபத்து வந்தாலும் நான் காப்பாற்றுவேன், நாம் இருவரும் நண்பர்கள்" என்று உறுதி கூறியது அனகோண்டன்.

ஊர்மிளா மான்குட்டி அனகோண்டனை ஆச்சரியமாகப் பார்த்துது. ஊர்மிளாவை வாழ்த்தி விட்டு, மரக்கிளைகளில் தவழ அதன் உடம்பின் கரும்புள்ளிகள் வைரமாக மின்னின.

Monday, October 24, 2005

கதை எண் 50 - அறிவுமதியின் திட்டம்

ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள், வான்மதி, மதுமதி, அறிவுமதி இருந்தனர். அனைவருமே அழகிகளாக விளங்கினார்கள்.

எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ஒருவன் வந்தான்.

அம்மா! நான் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். செல்வனாக இருக்கிறேன். என் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண் தேவை. உங்கள் மகள்களில் ஒருத்தியை அனுப்பி வையுங்கள். நான் அவளை அரசி போல வைத்துக் கொள்கிறேன், என்று இனிமையாகப் பேசினான்.

இதைக் கேட்ட மூத்த மகள் வான்மதி, அம்மா! இங்கு நாம் வறுமையில் வாடுகிறோம், நான் இவருடன் செல்கிறேன், என்றாள்.

அவர் சொல்கின்ற வேலைகளைச் செய்து நல்ல பெயர் வாங்கு, என்று அவளை அனுப்பி வைத்தாள் தாய்.

அவளை அழைத்துக்கொண்டு நடந்தான் இளைஞன். நீண்ட தூரம் சென்ற பிறகு அவர்கள் ஒரு மாளிகையை அடைந்தார்கள்.

இதுதான் என் மாளிகை. இங்கு நீ உன் விருப்பம் போல இருக்கலாம் எந்த அறையை வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம். ஆனால் அந்தக் கடைசி அறையை மட்டும் நீ திறந்து பார்க்கக் கூடாது. என் கட்டளையை நீ மீறினால் நான் பொல்லாதவனாகி விடுவேன். எல்லா அறைகளின் சாவியும் இங்கே உள்ளது, என்றான் அவன்.

நான் ஏன் உங்கள் கட்டளையை மீறப் போகிறேன். அந்த அறையைத் திறந்து பார்க்க மாட்டேன், என்றாள் வான்மதி.

தோட்டத்தில் இருந்த ஒரு சிவப்பு ரோசாப் பூவைப் பறித்து வந்தான் அவன். அதை அவள் தலையில் சூடினான்.

நான் வெளியே செல்கிறேன். எப்பொழுது வருவேன் என்று எனக்குத் தெரியாது. அந்த அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் வான்மதி. ஒவ்வொரு அறையிலும் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. ஒரு அறையில் நவரத்தினங்களும் பொற்காசுகளும் கொட்டிக் கிடந்தன.

எவ்வளவு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது? நாம் இங்கேயே மகிழ்ச்சியாக இருக்கலாம், என்று நினைத்தாள் அவள்.

பூட்டி இருந்த கடைசி அறை அவள் கண்ணில் பட்டது. அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

அந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கும்? ஏன் நம்மைப் பார்க்க வேண்டாம் என்று தடுக்கிறார்? மெல்லத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடி விடுவோம். கண்டிப்பாக அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை என்று நினைத்தாள் வான்மதி.

சாவியைப் போட்டு மெதுவாக அந்தக் கதவைத் திறந்தாள். உள்ளிருந்து அழுகுரலும் ஓலமும் கேட்டன. உள்ளே நுழைந்தாள்.

அங்கே கொடிய தீயில் பல உயிர்கள் வெந்து கொண்டிருந்தன. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அவை கெஞ்சின.

தன்னை அழைத்து வந்திருப்பது பிசாசு என்ற உண்மை அவளுக்குப் புரிந்தது. அவசரமாக அந்தக் கதவை மூடிப் பூட்டுப் போட்டாள்.

எதுவுமே நடவாதது போலத் தன் அறைக்குள் வந்து அமர்ந்தாள் அவள். அந்தத் தீயின் வெப்பத்தால் அவள் தலையில் இருந்த பூ வாடி விட்டது. இதை அவள் கவனிக்கவில்லை.

மீண்டும் அங்கு வந்த இளைஞன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

என் கட்டளையை மீறி விட்டாய். அந்த அறையைத் திறந்து பார்த்து இருக்கிறாய். உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கோபத்துடன் கத்தினான் அவன்.

நான் திறக்கவில்லை, என்று நடுங்கிக் கொண்டே சொன்னாள் வான்மதி.

உன் தலையில் உள்ள ரோசாப் பூ எப்படி வாடியது? என்னிடமா பொய் சொல்கிறாய்? நீயும் அந்தத் தீயில் கிடந்து புலம்ப வேண்டியதுதான், என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவன்.

என்னை மன்னித்து விடுங்கள், இனி மேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன், என்று கதறினாள் வான்மதி.

அவளை அந்தத் தீயில் தள்ளிவிட்டு அறையைப் பூட்டினான் அவன்.

துணி வெளுப்பவளின் வீட்டிற்கு மீண்டும் வந்தான் அவன், அம்மா! உங்கள் பெண் எங்கள் வீட்டில் நன்றாக இருக்கிறாள். அங்கே அவளுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தங்கையையும் அழைத்து வரச்சொன்னாள். அதனால்தான் வந்தேன், என்றான்.

மதுமதியும் அவனுடன் புறப்பட்டான்.

இருவரும் மாளிகையை அடைந்தார்கள். வழக்கம் போல அவளுக்கும் சிவப்பு ரோசாப் பூவை சூடினான் அவன்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடைசி அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அவளும் அந்த அறையைத் திறந்தாள். திரும்பிவந்த அவன் மதுமதியையும் தீக்குள் தள்ளினான்.

துணிவெளுப்பவளின் வீட்டிற்கு மூன்றாம் முறையாக வந்தான் அவன், உங்கள் இரு மகள்களும் என் மாளிகையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவளுக்கு அங்கே வேலை அதிகமாக இருக்கிறதாம். கடைசித் தங்கை அறிவுமதியையும் அழைத்து வரச் சொன்னார்கள். அதற்காகத்தான் வந்தேன், என்றான் அவன்.

என் மகள்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குப் போதும் இவளையும் அழைத்துச் செல், என்றாள் தாய்.

கடைசி மகளை அறிவுமதியையும் அழைத்து கொண்டு அவன் புறப்பட்டான், இருவரும் மாளிகையை அடைந்தனர்.

வழக்கம் போல அவள் தலையிலும் ரோசாப் பூவை அணிவித்தான் அவன். என் அக்கா ரெண்டு பேரும் எங்கே? என்று கேட்டாள் அறிவுமதி.

வேறு வேலையாக வெளியே சென்று இருக்கிறார்கள். வர ஒரு வாரம் ஆகும். நீ இந்த மாளிகையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் கடைசி அறையை மட்டும் திறக்கக் கூடாது மீறினால் உனக்குக் கடுந்தண்டனை கிடைக்கும். நான் வெளியே செல்கிறேன். திரும்பி வர நேரம் ஆகும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

அக்கா இருவரையும் காணவில்லை, வந்தவுடன் தலையில் ரோசாப் பூவைச் சூடுகிறான். ஒரு அறைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்கிறான். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது, என்பது அவளுக்குப் புரிந்தது.

அறிவுக்கூர்மை, உடைய அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். திறக்கக் கூடாது என்று தடுத்த அறைக்கும் ரோசாப் பூவிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது, என்று அவளுக்குத் தோன்றியது.

தலையில் இருந்த ரோசாப் பூவை எடுத்தாள். அருகில் இருந்த கிண்ணத்தில் அதை வைத்து மூடினாள்.

மெதுவாக நடந்து அந்த அறைக் கதவைத் திறந்தாள். உள்ளே தீயில் பலர் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களில் தன் இரண்டு அக்காவும் இருப்பதைக் கண்டு திகைத்தாள்.

எங்களால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. தங்கையே! நீதான் எப்படியாவது எங்களைக் காப்பாற்ற வேண்டும். புத்திசாலியாகிய நீ ரோசாப் பூவை சூடாமலேயே வந்து இருக்கிறாய். நீ வந்திருப்பது அந்தப் பிசாசிற்குத் தெரிய வாய்ப்பே இல்லை, என்றாள் வான்மதி.

கவலைப் படாதீர்கள் நான் உங்களை எப்படியும் காப்பாற்றுகிறேன், என்று வெளியே சென்றாள் அவள். பழையபடி அந்த அறையைப் பூட்டினாள். ரோசாப் பூவை எடுத்துத் தலையில் மீண்டும் அணிந்து கொண்டாள்.

இரவு நேரம், அவன் வந்தான். ரோசாப் பூ வாடாததைக் கண்டான். அவள் அந்த அறைக்குள் நுழைந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள்.

நாள்தோறும் அவள் தலையில் புதிய ரோசாப் பூவை சூடிவிட்டுச் சென்றான் அவன். தன் இரண்டு அக்காவையும் எப்படித் தப்பிக்க வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் அவள். நான்கு நாட்கள் சென்றன.

இளைஞனைப் பார்த்து அறிவுமதி, இங்கே எனக்கு ஏராளமான வேலை இருக்கிறது. துணி துவைக்க நேரமே இல்லை. அழுக்குத் துணிகளை எல்லாம் பெரிய மூட்டையாகக் கட்டி வைத்து இருக்கிறேன். என் அம்மாவின் வீட்டில் தந்துவிட்டு வாருங்கள், என்றாள்.

நாளை மாலை அந்த மூட்டையைத் தூக்கிச் செல்கிறேன், என்றான் அவன்.
பொழுது விடிந்தது. அவன் வழக்கம் போல வெளியே சென்றான். அறைக்குள் சென்ற அவள் மூத்த அக்கா வான்மதியை வெளியே கொண்டு வந்தாள்.

நீ நம் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். நான் சொல்கின்றபடி நடந்து கொள். எல்லோரும் தப்பிக்கலாம் என்றாள் அறிவுமதி.

பெரிய சாக்கிற்குள் அக்காவை நுழைத்தாள் அவள். சுற்றிலும் அழுக்குத் துணிகளை வைத்தாள். சாக்கை இறுகக் கட்டினாள்.

இளைஞன் வந்தான். அவனிடம் அவள், அழுக்குத் துணி மூட்டை தயாராக உள்ளது. அதைத் தூக்கிச் செல்லுங்கள். வழியில் எங்கும் மூட்டையை வைக்கக் கூடாது. வைத்தால் எனக்குத் தெரிந்து விடும். என்னை ஏமாற்ற முடியாது. மூட்டையைக் கீழே வைத்தால் வைக்காதே என்று குரல் கொடுப்பேன்.

இருட்டுவதற்குள் இந்த மூட்டையை என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள். அவரிடம் அடுத்த வாரம் வேறு அழுக்கு மூட்டை கொண்டு வருகிறேன். இதைத் துவைத்து வையுங்கள். அப்பொழுது எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லுங்கள். அங்கே அதிக நேரம் தங்காதீர்கள் உடனே புறப்பட்டு விடுங்கள் என்றாள் அறிவுமதி.

சூழ்ச்சியை அறியாத அவன் மூட்டையை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. அழுக்கு மூட்டையா இவ்வளவு கனம்? கீழே வைத்து விட்டு இளைப்பாறலாம் என்று நினைத்தான் அவன்.
தோளில் இருந்து மூட்டையைக் கீழே இறக்க முயற்சி செய்தான்.

அதற்குள் இருந்தவள், நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். மூட்டையைக் கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். மாளிகைக்குள் இருக்கும் பெண்தான் பேசுகிறாள். எவ்வளவு தொலைவில் நடப்பதும் அவள் கண்களுக்குத் தெரிகிறதே? இறக்கி வைத்தால் நம்மைப் பற்றித் தப்பாக நினைப்பாளே, என்று நினைத்தான் அவன். மூட்டையைத் தூக்கிக் கொண்டே நடந்தான்.

ஒரு வழியாக வீட்டை அடைந்தான் அவன். கதவைத் தட்டி, அம்மா! உங்கள் பெண் அழுக்குத் துணி மூட்டையை அனுப்பி இருக்கிறாள். நன்கு துவைத்து வையுங்கள். அடுத்த வாரம் வேறு துணி மூட்டையுடன் வருகிறேன். அப்பொழுது இதை எடுத்துச் செல்கிறேன். எனக்குத் தங்க நேரம் இல்லை. உடனே வீடு திரும்ப வேண்டும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

அடுத்த வாரம், தன் இரண்டாவது அக்கா மதுமதியை மூட்டைக்குள் வைத்துக் கட்டினாள் அவள்.

வழக்கம் போல அவளையும் தூக்கிச் சென்றான் அவன். வழியில் மூட்டையை வைக்க அவன் முயற்சி செய்தான். மூட்டையைக் கீழே வைக்காதே நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன், என்ற குரல் கேட்டது. எப்படியோ ஒரு வழியாக அவள் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலிலேயே அவனுக்காகத் துணி வெளுப்பவள் காத்திருந்தாள்.

அவளைப் பார்த்து அவன், அம்மா! உன் மகள் அழுக்குத் துணி அனுப்பி இருக்கிறாள். ஒரு வாரத்திற்குள் எப்படித்தான் இவ்வளவு துணி சேர்கின்றதோ தெரியவில்லை. இதையும் வெளுத்து வையுங்கள். அடுத்த முறை வரும்போது இரண்டு மூட்டை துணிகளையும் எடுத்துச் செல்கிறேன். இப்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

தன் இரண்டாவது மகளும் வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தாள் அவள். களைப்புடன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான் அவன். என் வீட்டில் துணி மூட்டையைச் சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டாள் அவள்.

துணி மூட்டையா அது? என்ன கனம்? என்னால் தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை. நான் கீழே வைக்க முயன்றால் போதும். எப்படித்தான் உனக்குத் தெரியுமோ? உடனே நீ கீழே வைக்காதே, என்று குரல் கொடுக்கிறாய். அதைத் தூக்கிச் செல்ல நான் படும் துன்பம் எனக்குத்தான் தெரியும். இனிமேல் அழுக்குத் துணி மூட்டையை நான் எடுத்துச் செல்ல மாட்டேன், என்றான் அவன்.

இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். அதன் பிறகு நானே இங்கு துவைத்துக் கொள்கிறேன். துணியைக்கூட நீங்கள் அங்கிருந்து கொண்டு வர வேண்டாம். இந்த முறை மூட்டை அதிக கனமாக இருக்கும், என்றாள் அவள்.

இதுதான் கடைசி முறை, இனிமேல் முட்டையைத் தூக்கிச் செல்ல மாட்டேன், என்றான் அவன். பிறகு வெளியே சென்று விட்டான். அந்த மானிகைக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் திரட்டினாள் அவள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைக்குள் போட்டாள்.

புறப்படும் நாள் வந்தது. இளைஞனிடம் அவள், எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் அறைக்குள் படுத்திருப்பேன். என்னை எழுப்ப வேண்டாம். இன்று மட்டும் இருட்டியதும் அந்த மூட்டையை எடுத்துச் செல்லுங்கள். வழியில் எங்கும் கீழே வைக்காதீர்கள். என்னை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். இங்கிருந்தபடியே எங்கும் நடப்பதை என்னால் சொல்ல முடியும், என்றாள் அறிவுமதி.

நீ மூட்டை கட்டி வை. நான் திரும்பி வந்ததும் எடுத்துச் செல்கிறேன், என்று வழக்கம் போல வெளியே புறப்பட்டான் அவன்.

உடனே அவள் தன் படுக்கையில் தலையணைகளை வைத்தாள். மேலே போர்வையைப் போட்டு மூடினாள். சிறிது தூரத்தில் இருந்து படுக்கையைப் பார்த்தாள். யாரோ படுத்திருப்பதைப் போன்று தோன்றியது.

சாக்கு மூட்டைக்குள் நுழைந்தாள் அவள். தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்தாள். வெளியே ஒரு கையை மட்டும் நீட்டி சாக்கைக் கட்டினாள். பிறகு கையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் இளைஞன் உள்ளே வந்தான். படுக்கையில் அவள்தான் படுத்து இருக்கிறாள் என்று நினைத்தான்.

சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. தள்ளாடிக் கொண்டே நடந்தான் அவன். பாதி தூரம் கூடக் கடக்கவில்லையே, மூட்டையைக் கீழே வைத்து விட்டு இளைப்பாறுவோம் என்று நினைத்தான் அவன், தோளில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தான்.

உடனே அறிவுமதி, நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். அவனும் பலமுறை கீழே வைக்கலாம் என்று நினைத்தான், ஒவ்வொரு முறையும் அவள் குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.

எப்படியோ முயன்று அவர்கள் வீட்டை அடைந்தான் அவன். கடைசி மகளின் வருகைக்காகத் தாய் வெளியேயே காத்திருந்தாள். பெரிய மூட்டையுடன் அவனைப் பார்த்ததும் துணி வெளுப்பவளுக்கு மகிழ்ச்சிதாங்கவில்லை.

மூட்டையை இறக்கி வைத்தான் அவன். அப்பாடா! தொல்லை ஒழிந்தது. இனி மூட்டை தூக்கி வரும் வேலை எனக்கு இல்லை, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

சாக்கை அவிழ்த்தாள் அவள். விலை உயர்ந்த பொருள்களுடன் அறிவுமதி வெளியே வந்தாள்.

மகளைக் கட்டித் தழுவிக் கொண்ட அவள், உள் அறிவுக் கூர்மையால் எல்லோரும் அந்தப் பிசாசிடம் இருந்து தப்பி விட்டோம். நிறைய பொருளும் கொண்டு வந்தாய். இனி நமக்கு வறுமையே இல்லை, என்றாள்.

அம்மா! என் திறமையை அந்தப் பிசாசு இந்நேரம் அறிந்து கொண்டிருக்கும். இனி அது நம் வழிக்கே வராது. கவலை இல்லாமல் நாம் இருக்கலாம், என்றாள் மகள்.

மிகுந்த களைப்புடன் தன் மாளிகையை அடைந்தான் அவன். நீ சொன்னபடியே மூட்டையைச் சேர்த்து விட்டேன். மூட்டையா அது? என்ன கனம்? என்று படுக்கையைப் பார்த்துப் பேசினான்.

படுக்கையில் எந்த அசைவும் இல்லை. போர்வையை நீக்கிப் பார்த்தான். தலையணைதான் இருந்தது. பரபரப்புடன் சென்று கடைசி அறையைத் திறந்தான். அந்தப் பெண்கள் இருவரையும் காணவில்லை.

மூவரும் எப்படித் தப்பித்து இருப்பார்கள் என்று குழம்பினான் அவன். மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை விளங்கியது.

நானே ஒவ்வொருவராகச் சுமந்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு வந்திருக்கிறேன். நன்றாக ஏமாந்து விட்டேன், என்று வருந்தினான் அவன். நம் உண்மை உருவத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது, அங்கே சென்றால் ஊர்மக்கள் தன்னை சிறையில் அடைக்கலாம் என்று நினைத்தான் அவன், அவர்கள் வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தையே விட்டு விட்டான்.

புத்திசாலி அறிவுமதியால், செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள்.

Sunday, October 23, 2005

கதை எண் 49 - புது சட்டை

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. நல்ல மனுசாளுக்கு ஒரு சொல்லு. ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச்.." என்றார் ஆறாம் வகுப்பு ஆசிரியர் தணிகாசலம்.

பாஸ்கர் முணுமுணுத்துக் கொண்டே பெஞ்சின் மீது ஏறி நின்றான்.

பாஸ்கருக்கு இது ஒன்றும் புதிது இல்லை. எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இப்படி ஏறி நிற்பான்.

பாஸ்கர் கொஞ்சம் முரட்டு சுபாவம். மூக்கு நுனியில் கோபம் எப்போதும் உட்கார்ந்திருக்கும். ஒரு நாளைக்கு ஒரு பையனிடமாவது வம்பு வளப்பான்.

இப்போது பாஸ்கரின் கோபம் ராஜூவின் மீது இருந்தது.

ராஜூ கிளாஸ் லீடர். அவன்தான் இவனைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் வகுப்பில் இல்லாத நேரத்தில் அடித்த கொட்டத்திற்கு எப்படி தண்டனை கொடுப்பார்?.

பள்ளிக் கூடம் விடட்டும் என்று காத்திருந்தான் பாஸ்கர். வீட்டுக்கு பெல் அடித்தது. மாணவர்கள் திபுதிபுவென்று வகுப்பிலிருந்து வெளியேறினர்.

பாஸ்கர் மட்டும் ராஜூவின் பின்னாலேயே போனான். ராஜூ பள்ளிக்கூடக் கேட்டைத் தாண்டியதும் அவனைத் தோளைப் பிடித்து இழுத்தான்.

"டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்னே..?" என்று கோபமாய் கேட்டான்.

"நான் ஒண்ணுமே.......... உன்னப்பத்தி சொல்லலடா...." என்றான் அமைதியாக ராஜூ.

அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான். ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

ராஜூ நிலை குலைந்து கீழே விழுந்தான்.

ராஜூவின் கிழிந்த சட்டை பாதிக்குமேல் பாஸ்கரின் கையில் இருந்தது.

அந்த சட்டைக் கந்தலை அவன்மீது தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவனைத் தாக்க ஆயத்தமானான்.

பாஸ்கர் எதிர்பார்த்ததைப் போல் இவனைத் திருப்பி அடிக்க முயற்சிக்கவில்லை.

ராஜூவின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. நாளைக்கு எப்படி இவன் பள்ளிக்கு வருவான்...? எந்த சட்டையைப் போட்டுக் கொண்டு வருவான்?

ராஜூ செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான்.

மிச்ச கொஞ்சமாய் கிழிந்துபோன சட்டையை கழட்டி எறிந்தான்.

சிதறிக் கிடந்த புத்தகங்களை சேகரித்தான். எழுந்து நடந்தான்.

ராஜூ வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து கொண்டிருந்தது பாஸ்கருக்கு என்னவோ போல் இருந்தது.

பாஸ்கர் வீட்டிற்குத் திரும்பினான். அன்று முழுக்க அவனுக்கு மனசு என்னவோ போல் இருந்தது.

ஒருவாரம் கழிந்தது. ராஜூ பள்ளிக்கு வரவே இல்லை.

ராஜூவின் வீடு ஊர்க்கோடியில் இருந்தது. ஒரு சின்ன குடிசை.

அதில் அவனும், அவன் அம்மாவும் இருந்தனர். பாஸ்கரின் வீட்டு மாட்டுத் தொழுவம் கூட ராஜூவின் வீட்டை விட பத்து மடங்கு பெரியதாக இருக்கும்.

அன்று மாலை பள்ளியிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தான் பாஸ்கர். சட்டென்று ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொன்னான்.

காரை விட்டு இறங்கினான்.

ரோட்டு ஓரத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது.

அங்கு ராஜூ தலையில் செங்கல் சுமந்தபடி சென்று கொண்டிருந்தான்.

பாஸ்கர் மெல்ல வேலை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

"என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா....? வேலைக்கு வந்திட்டே..." அந்தப் பக்கமாக வந்த ஒருவர்.

"போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும்." என்றான் ராஜூ.

"ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்பொறமா பள்ளிக்கூடம் போகப் போறீயா?" என்று சிரித்தபடி போனார் அவர்.

"இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்?" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் பாஸ்கர்.

முட்டாள்தனமான கோபம். அவனுக்கே அவன் மீது வெறுப்பாய் இருந்தது.

பாஸ்கர் தனது வீட்டிற்குத் திரும்பி வந்தான். அப்பா தனது பிறந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக் கொண்டு ராஜூவின் வீட்டிற்குச் சென்றான்.

"உள்ள வாடா" என்று அன்புடன் அவனை வரவேற்றான் ராஜூ

இவன் தயங்கியபடி உள்ளே போனான். அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தான்.

"என் மீது உனக்கு கோபம் இல்லையா" என்றான் பாஸ்கர்.

"வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா?" என்றான் ராஜூ.

"கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு" என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான் திருந்திய பாஸ்கர்.

"எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது, நானே சம்பாதித்து வாங்கியிருக்கிறேன்.. உன் அன்புக்கு நன்றி" என்றான் ராஜூ. பாஸ்கர் எவ்வளவோ வற்புறுத்தியும் ராஜூ அதை வாங்கிக் கொள்ளவில்லை.

அடுத்தநாள் புதுச்சட்டையுடன் வகுப்பிற்குள் நுழையும் ராஜூவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

Saturday, October 22, 2005

கதை எண் 48 - முல்லா நஸ்ருத்தீன்

முல்லா பற்றிய சிறிய விபரம்

முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் - கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கி ஷஹர் என்பது அவருடைய பிறந்த ஊர் எனக் கூறப்படுகின்றது. அந்த ஊரில் முல்லாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தது.

முல்லாவின் உடைவாள் *

முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.

அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும்.

முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு. முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார்.

அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டீரா ? என்று கேட்டார்.

“கள்வன் என்னை என்ன செய்வான் ? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே ? “ என்றார் முல்லா.

“கள்வனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உம்மிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப் பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய முடியும் ? “ என்று அண்டை வீட்டுக்காரர் கேட்டார். அவர் சொன்னதில் இருந்த உண்மையை முல்லா உணர்ந்து கொண்டார்.

“நீங்கள் சொல்வது சரிதான் நான் என்ன செய்வது ? பிரயாணத்தைத் தவிர்க்க முடியாதே ? “ எனக் கவலையுடன் கூறினார் முல்லா.

“கவலைப்படாதீர்கள் என்னிடம் நல்ல உடைவாள் ஒன்று இருக்கிறது. அதைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். திருடன் எதிர்ப்பட்டால் இந்த உடைவாளைப் பயன்படுத்தி அவனை விரட்டிவிட்டுக் கழுதையைக் காப்பாற்றுங்கள் “ என்ற கூறி உடைவாளையும் அவரிடன் அளித்தார்.

முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார். ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்.

“கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் “ என்று திருடர்கள் கேட்டனர்.

“என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை” என்றார் முல்லா.

“அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் “ என்ற கள்வர்கள் மிரட்டினர்.

“கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல முடியுமா ? “ என்று கூறிச் சிறிது யோசனை செய்தார் முல்லா.

“ஒரு ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு திருப்பதியாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார் முல்லா.

“என்ன யோசனை ? “ என்று கள்வர்கள் கேட்டனர்.

“என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா ? “ என்றார் முல்லா.

கள்வர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர் விலை மதிப்புள்ள அருமையான வாள் அது. கள்வர்களின் தொழிலுக்கும் அது பயன்படும். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உடை வாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர்.
பிரயாணத்தை முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார்.

வீட்டுக்கு வந்த முல்லாவை அண்டை வீட்டுக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்று “பிராயணம் எவ்வாறு இருந்தது” என விசாரித்தார்.

“எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது” என்றார் முல்லா.

“வழியில் கள்வர் தொல்லை ஏதாவது ஏற்ப்பட்டதா ? “ என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

“அதை ஏன் கேட்கிறீர்கள். நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள்.

நல்ல வேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதை உபயோகித்து நிலமையைச் சமாளித்து விட்டேன் “ என்றார் முல்லா.

“உடைவாளைப் பயன்படுத்தி அந்தக் கள்வர்களை விரட்டி அடித்திருப்பீர் என்று நினைக்கிறேன் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.

“உங்கள் உடைவாள் தான் என் உயிரைக் காப்பாற்றி கழுதையை மீட்டுத் தந்தது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் “ என்று முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு நன்றி கூறினார்.

“உடைவாள் உங்களிடம் பத்திரமா இருக்கிறதல்லவா ? இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. கொடுத்து விடுங்கள் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.

“உடைவாள் என்னிடம் ஏது ? “ அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே என்றார் முல்லா.

“கள்வனிடம் கொடுத்து விட்டீரா ? அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும். உடைவாளைக் கொண்டு சண்டைபோட்டு கள்வர்களை விரட்டியிருப்பீர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்று வியப்பும் திகைப்பும் தோன்றக் கேட்டார் அண்டை வீட்டுக்காரர்.

காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

Saturday, October 15, 2005

கதை எண் 47 - ஜனாதிபதி அப்துல்கலாம்

குழந்தைகளா, இன்று தன் 75வது பிறந்த நாள் கொண்டாடும் நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துகளை தெரிவிக்கலாமா.

நேரு மாமா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாமா, அன்பான மாமா. நம்ம ஜனாதிபதி மாமாவும் குழந்தைகளுக்கு மிக மிக பிடித்தவர், அவருக்கும் குழந்தைகள் மிகவும் பிடிக்கும். பள்ளி மாணவர்களுக்கு நல்ல நல்ல அறிவுரைகளையும், நம்பிக்கையையும், சாதனை படைக்க வழியும் காட்டுகிறார்.

அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பார்க்கலாமா?

ராமேஸ்வரம் தீவில் ஜைனுல்லாபுதீன், ஆஷியம்மா என்போருக்கு அருமை புதல்வனாக 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தேதி அப்துல்கலாம் அவர்கள் பிறந்தார்கள்.

அவரது தந்தையார் அனைவராலும் விரும்பப்பட்டவர், தினமும் பிரார்த்தனை செய்து, நோயாளிகளை குணப்படுத்துவார்.

அவரது குடும்ப நண்பராக இருந்தவர் பஷி லட்சுமண சாஸ்திரி அவர்கள். அவரது புதல்வர் பெயர் ராம்நாத சாஸ்திரி. அப்பாவைப் போலவே அப்துல் கலாம் ராமநாத சாஸ்திரிக்கு நல்ல நண்பர். பள்ளியில் இருவரும் பக்கத்தில் தான் அமர்ந்திருப்பார்கள். சாஸ்திரி நெற்றியில் விபூதியுடன் குடுமி வைத்திருப்பார், அப்துல் கலாம் தலையில் குல்லா வைத்திருப்பார்.

ஒரு நாள் அங்கே வந்த புதிய ஆசிரியர், எப்படி ஒரு இந்துவும், முஸ்லீமும் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்து, அப்துல் கலாமை கடைசி பெஞ்சில் உட்கார சொல்லிவிட்டார்.

அப்துல் கலாமும் ஒன்றும் சொல்லாமல் கடைசி பெஞ்சில் போய் அமர்ந்துக் கொண்டார், ராமநாத சாஸ்திரிக்கு அழுமை அழுமையாக வந்தது.

இருவரும் மாலையில் வீட்டிற்கு சென்றதும் தங்கள் அப்பாக்களிடம் சொல்ல, உடனே அவர்கள் இருவரும் புதிய ஆசிரியரை வரவழைத்து, "சின்ன வயது பிள்ளைகள் மனதில் இப்படி பாகுபாடு எல்லாம் ஏற்ப்படுத்தக்கூடாது" என்று அறிவுரை சொல்லி, யார் தடுத்தாலும் எங்க புள்ளைகள் ஒரே பெஞ்சில் தான் அமர்வார்கள். இனிமேல் ஏதாவது இது மாதிரி செய்தால், வேலையே போய் விடும் என்று சொன்னப் பின்பு புதிய ஆசிரியர் மனம் திருந்தினாராம்.

நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அப்துல் கலாம் ஏதோ தெரியாத்தனமாக வேறு வகுப்பில் நுழைய, அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ராம கிருஷ்ண ஐயர் என்ற வாத்தியார், கடும் கோபம் கொண்டு, அப்துல் கலாமின் கழுத்தை பிடித்து குனிய வைத்து, பிரம்ப்பால் அடித்து விட்டார். அப்துல் கலாமோ அழுதுக் கொண்டு, மன்னிப்பு கேட்டு வந்து விட்டார்.

கொஞ்ச நாளிலேயே அப்துல் கலாம் நன்றாக படித்து கணக்கு பாடத்தில் 100க்கு 100 வாங்கினார். அடுத்த் நாள் அசெம்பிளியில் அனைத்து மாணவர்கள் முன்னாலிலும் அப்துல் கலாமைப் பற்றி சொல்லி, அடி கொடுத்ததையும் சொல்லி, இன்றோ 100க்கு 100 மதிப்பெண் வாங்கியிருக்கிறார், எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆளாக வருவார் , நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்று பாராட்டினார்.

அடி கொடுத்து, திட்டியவரையே பாராட்ட வைத்த அப்துல் கலாமின் முயற்சியும், நம்பிக்கையும் மகத்தானது.

குழந்தைகளா! நாமும் தேர்வில் தோல்வி கண்டாலோ, தெரியாமலோ அல்லது தெரிந்தோ செய்த தவறான நடத்தையால் தண்டிக்கப்பட்டாலோ, நாம் அதனை உடனே சரி செய்யப் பாடுபட வேண்டும், மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டும். அப்போ தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும்.

Thursday, October 13, 2005

கதை எண் 46 - புத்திசாலி ஜெரி

அந்திமந்தாரை காட்டில் ஜெரி என்ற எலி சர்வ சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தது. அது நன்றாக விளைந்திருந்த தானியங்களையும், கனிகளையும், இளங்குருத்துக்களையும் தின்று தின்று கொழு கொழுவென்று வளர்ந்திருந்தது.

எந்நேரமும் விளையாட்டும். ஆட்டம் பாட்டமும் அதன் சொத்தாக இருந்தன. ஒரு சமயம் ஜெரி தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த பூனை டாம் பார்த்துவிட்டது.

அது கொழுகொழுவென்ற ஜெரியின் உடலைக் கண்டு மயங்கி, அதன் மேல் பாய்ந்தது. தற்செயலாக இதைக் கவனித்த ஜெரி, டாமை விட அதிவேகமாகப் பாய்ந்து சென்று, தன் வளையில் ஒளிந்து கொண்டது.


டாம், ஜெரியைப் பிடிக்கப் பாய்ந்த இடத்தில், பறவைகளைப் பிடிப்பதற்காக வேடன் ஒருவன் வலையைப் பரப்பி வைத்திருந்தான். இதைக் கவனிக்காத பூனை டாம் வலையில் சிக்கிக் கொண்டது. சிறிது நேரத்தில் நிலவரத்தைக் கவனிக்க வந்த ஜெரி எலி, டாம் பூனையானது வேடனின் வலையில் சிக்கி இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டது.

அது இப்போது வலையை விட்டு வெளியே வந்து, ""நீ என்னைப் பிடிக்க வலையை உன் பார்வையாலே போட்டாய். விதி உன்னை உண்மையான வலையில் சிக்க வைத்து விட்டது. பார்த்தாயா?'' என்று கேலி பேசியது.
பூனை டாம் தலை குனிந்து கொண்டது. டாம் பூனையை பயங்கரமாக வெறுப்பேற்றியது. அந்த நேரத்தில் பருந்து கஜாவின் கண்களில் பட்டது எலி.

சரியான நேரத்தில் ஒரே தாவலாக அந்த ஜெரி எலி மீது பாய்ந்து அதை அமுக்கி விட வேண்டும் என்பது கஜாவின் திட்டம். இதை ஜெரி கவனித்துவிட்டது. அது தன் வளையை விட்டு வெகு துõரம் வந்துவிட்டதால் திரும்ப வளைக்குச் செல்வது சிரமம் என்று கண்டு கொண்டது.

மின்னல் வேகத்தில் ஜெரியின் மூளை வேலை செய்தது. அது டாமைப் பார்த்து, ""டாம் பூனையாரே, வானில் கழுகு கஜா வட்டமிடுகிறது. அது எந்நேரத்திலும் என் மீது பாய்ந்து விடலாம். நீ மட்டும் சம்மதித்தால் நான் உன் மடியில் வந்து உட்கார்ந்து கொள்கிறேன். இதற்கு நீ என்னை அனுமதித்தால் கஜா சென்றவுடன் இந்த வலையை என் கூர்மையான பற்களால் அறுத்து உன்னை விடுதலை செய்து விடுகிறேன். எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள். எனக்கு உதவு!'' என்றது.

டாம் சம்மதித்தது. கஜா ஜெரியைப் பிடிக்க இறங்கிய அதே வேளையில் ஜெரி துள்ளிக் குதித்துப் டாமின் மடியில் சென்று அமர்ந்தது.

இதைக் கண்ட கஜா, சரி, நமக்கு இன்று கொடுப்பினை அவ்வளவு தான் என்று எண்ணிக் கொண்டே, அங்கிருந்து பறந்து சென்றது. அது சென்றவுடன் டாம் பூனையின் மடியிலிருந்து இறங்கிய ஜெரி சொன்னது.

""முதலில் நான் உன்னால் பயந்தேன். இரண்டாவதாகக் கஜாவினால் பயந்து போனேன். ஆகையால் நான் சாப்பிட்டவை எல்லாமே ஜீரணமாகிப் போய்விட்டது. பசியுடன் இருக்கும் என்னால் இந்த வலையைத் துண்டு துண்டாக வெட்ட முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆகவே, நான் முதலில் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து என் உடலில் வலு ஏற்றிய பின் இந்த வலையை வெட்டி உன்னை விடுவிக்கிறேன். அது வரை பொறு!'' என்ற ஜெரி அங்கிருந்து கிளம்பியது.

அப்போது டாம் பூனை ஜெரியைத் திட்டியது.

""அடேய், நம்பிக்கைத் துரோகி! உன் உயிரைப் போலத்தான் எல்லா உயிரும் என்று நினைத்துக் கூடப் பார்க்காமல், உதவி பெற்று முடித்தவுடன் ஓடி ஒளிகிறாயே! வெட்கமாக இல்லை!'' என்று திட்டி தீர்த்தது.

ஆனால், ஜெரி அதைச் சட்டை செய்யவில்லை. அங்கிருந்து கிளம்பித் தன் வளைக்குச் சென்றது. ஒரு மணி நேரமாயிற்று. ஜெரி திரும்பி வரவேயில்லை!
"அடக் கடவுளே, ஒரு சிற்றெலிக்கு ஆசைப்பட்டு என் அருமையான இன்னுயிரைத் துறக்கப் போகிறேனே! ஜெரி என்னை ஏமாற்றி விட்டதே! ஆசை காட்டி மோசம் செய்து விட்டதே!' என்று டாம் பூனை கதறி அழுதது.

துõரத்தில் வேடன் வந்து கொண்டிருந்தான்.

"வேடன் வந்து விட்டானே, நான் சாகப் போகிறேன்! என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையே! ஜெரியே, என்னைக் காப்பாற்று!' என்று கூக்குரலிட்டது டாம்.

திடீரென அங்கே ஜெரி தோன்றியது. விறுவிறுவென அது வலையைச் சின்னச் சின்னதாகக் கத்தரித்துப் போட்டது. அதற்குள் வேடன் நெருங்கி விட்டான்.

"வேடன் வந்துவிட்டான். சீக்கிரம்... சீக்கிரம்...' என்று நெஞ்சம் அதிரச் சொன்னது டாம். வேடன் இன்னும் சற்று நெருங்கி வரவும், பூனை வலையிலிருந்து தப்பிக்கவும் சரியாக இருந்தது. தலை தப்பியது என்ற பரபரப்பில் எத்திசையில் ஓடுவது என்று தெரியாமல் ஓட்டமாய் ஓடி மறைந்தது டாம்.

ஜெரியும் சீக்கிரமாக ஓடித் தன் வளையை அடைந்தது. வேடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. வளையிலிருந்து ஜெரி வெளியே வந்தது. வழக்கம் போல இரை பொறுக்கியது. அப்போது அங்கிருந்த மரத்தின் மேல் ஒரு குரங்கு கபீஷ் அமர்ந்திருந்தது. அது ஜெரியை அழைத்தது.
ஜெரி மரத்தை அண்ணாந்து பார்த்தது.

""நேற்று நடந்த அத்தனை சம்பவங்களையும் நான் பார்த்தேன். எனக்கு ஓர் சந்தேகம். அந்தக் கழுகு அந்த இடத்தை விட்டுப் போனவுடனேயே, நீ ஏன் வலையை அறுத்து அந்தப் டாம் பூனையைக் காப்பாற்றவில்லை. டாம் எவ்வளவு பயந்து போனது தெரியுமா?'' என்றது குரங்கு கபீஷ்.

இதைக் கேட்ட ஜெரி எலி "பக்'கெனச் சிரித்துவிட்டது.

""என்னை என்ன அவ்வளவு பெரிய பைத்தியக்காரன் என்றா நினைத்து விட்டீர்கள்? . டாம் பூனை என் எதிரி. அதே சமயம் ஆபத்தில் உதவியதால் அது நண்பனாகவும் ஆனது. ஆகவே நானும் அதைக் காப்பாற்ற எண்ணினேன்.

""கழுகு சென்றவுடன் நான் காப்பாற்றி இருந்தால், அந்தப் டாம் பூனை தப்பிப் போவதற்கு முன்னால் என்னையும் கொன்று தின்று விட்டுத்தான் போயிருக்கும். நானும் கழுகிடமிருந்து தப்ப வேண்டும். டாம் பூனையும் வேடனிட மிருந்தும் தப்ப வேண்டும். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பூனை என்னை நினைக்காது அல்லவா? அதனால்தான் அப்படி செஞ்சேன்,'' என்றது ஜெரி.

ஜெரியின் கூரிய அறிவை எண்ணி பாராட்டியது கபீஷ் குரங்கு.

Wednesday, October 12, 2005

கதை எண் 45 - பீர்பாலின் புத்திசாலித்தனம் (2)

பீர்பாலின் புத்திசாலித்தனம் எட்டுத் திக்கிலும் பரவி இருந்துச்சு. பக்கத்து ஊரு ராஜாவுக்கு ரொம்ப பொறாமை.. இப்படி ஒரு ஆள் நம்ம தேசத்துல இல்லயேன்ணு..எப்படியாவது இந்த பீர்பாலை அவமானப்படுத்தணுனு யோசிச்சிட்டிருந்தான்.ஒரு யோசனை தோணுச்சு.. உடனே தன்னோட நாட்டில இருக்கும் அனைத்து வகை அபூர்வ ரோஜா செடிகளையும் அக்பருக்கு பரிசா அனுப்பினார்.கூடவே ஒரு வேண்டுகோலும் விடுத்தார். என்ன தெரியுமா.."

பிரியமான ராஜாவே இதோ என்னோட சிறிய பரிசுகளை ஏத்துக்கங்க. எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருக்கு. உங்க ஊரு முட்டை கோஸ் சுவை ரொம்ப அருமையா இருக்குமாமே எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க. கூடவே உங்க பீர்பாலையும் அனுப்புங்க.. அப்படி ஒரு புத்திசாலி எங்க நாட்டுக்கு வரணும்னு நாங்க ஆசைப்படுறோம்"இப்படி ஒரு கடிதமும் அனுப்பினார்.

அக்பருக்கு ஒரே தர்ம சங்கடமாப் போச்சு. முட்டை கோஸ் அவங்க ஊருக்கு போய் சேரதுக்குள்ள அழுகிடுமே. என்ன செய்யறதுனு யோசிச்சார்.

உடனே பீர்பால் வந்தார். நான் கொண்டு போறேன் அரசே. எனக்கு ஒரு 10 மாட்டு வண்டி மட்டும் கொடுங்க அப்படின்னார்.

அக்பரும் பீர்பால் கேட்டதெல்லாம் கொடுத்தார். பீர்பால் பயணத்தை தொடங்கினார்.

சில காலம் கழிச்சு அந்த ராஜாவோட அரண்மனைக்கு போனாரு பீர்பால். 'ராஜா நீங்க கேட்ட பரிசில் கொண்டு வந்திருக்கேன் ஆனா நீங்க கொஞ்சம் அரண்மனைக்கு வெளிய வரணும்னு' சொன்னாரு நம்ம பீர்பால்.

ராஜாவுக்கு ஒரே சந்தோஷம்.. எப்படியும் முட்டை கோஸெல்லாம் அழுகி போயிருக்கும்.. பீர்பால் அவமானப்படப்போரார்னு நெனச்சிக்கிடே வெளிய வந்தார்..வந்தவர் அசந்து போயிட்டாரு..

பின்ன பீர்பால் என்ன பன்னார் கெரியுமா.. அந்த மாட்டு வண்டியிலவே முட்டை கோஸ் விதைச்சு எடுத்து வந்துட்டார்.அது இந்த தேசத்துக்கு வரதுக்குள்ள நல்லா விளைஞ்சு சமைக்க தயாரா இருந்தது.

அந்த ராஜா நம்ம பீர்பால் கிட்ட மன்னிப்பு கேட்டு அவருக்கு நிறைய பரிசில் கொடுத்து அனுப்பினார்.

(இந்த கதையை சிறுவர் பூங்காவில் மற்றோரு பதிவில் கருத்தாக சகோதரி கீதா சொல்லியிருந்தார்கள், குழந்தைகளா! எல்லோரும் கீதா அக்காவுக்கு நன்றி சொல்லுங்க)

Sunday, October 09, 2005

கதை எண் 44 - தெனாலியின் விளக்கம்

கிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது.
"நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை?' என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர்.

""ராமா! இதற்கு என்ன காரணம்? உனக்கு தெரியுமா?''

""அரசே! இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை புரியும்,'' என்றான்.

அரசர் உடனே பனித்துண்டு ஒன்றை கொண்டு வர ஏற்பாடுச் செய்தார்.
பனிக்கட்டியும் வந்தது. அதனை வாங்கின தெனாலிராமன் மன்னரிடம், ""அரசே! நீங்கள் இந்த பனிக்கட்டியை நிதி அமைச்சரிடம் கொடுங்கள். பின் அவர் அவரது உதவியாளரிடம் கொடுக்கட்டும். அதன் பிறகு பனிகட்டி அலுவலர்களிடம் போய்ச் சேரட்டும். அப்பொழுது உங்களுக்கு விஷயம் புரியும்,'' என்றான் தெனாலிராமன்.

பனிக்கட்டி கிட்டத்தட்ட 15 அலுவலர்களை தாண்டி கடைசியில் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று சேர்ந்தது. அப்பொழுது அவர் கையில் பனிக்கட்டி இல்லை. சிறிது நீர் தான் இருந்தது. பனிக்கட்டி உருகி அப்படி ஆகிவிட்டது. இப்பொழுது ராமன் சொன்னான்:

""புரிந்ததா! மன்னா இதுதான் காரணம். பணம் இவ்வளவு பேரையும் தாண்டி கடைசி அலுவலரிடம் செல்லும் பொழுது கரைந்து விடுகிறது.

""இதுதான் ஏழை மக்கள் படும் கஷ்டங்களுக்கு காரணம்,'' என்றான்.

மன்னன் புரிந்து கொண்டு நிர்வாகத்தை சீர்படுத்த முனைந்தார்.

Saturday, October 01, 2005

கதை எண் 43 - புத்திசாலி கழுதை
ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று புல்மேய்ந்து கொண்டிருந்தது.

கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.

ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ""ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.

""நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல். எனக்கு பசி அதிகமாக இருக்கிறது,'' என உறுமியது ஓநாய்.

""ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீர் என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உமது தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உமது உயிரை வாங்கி விடவும் கூடும். அதற்கு அருள் கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடும். அதற்குப் பிறகு நீர் என்னை அடித்துத் தின்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை,'' என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.

கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ""இடது காலில் தான் முள் இருக்கிறது!'' எனக் கூறிற்று.

ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்துப் படுகாயப்படுத்தியது.

கழுதையின் உதை தாளமாட்டாது ஓநாய் துடிதுடித்து வீழ்ந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.