சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, February 11, 2006

கதை எண் 80 - உலகத்தில் சிறந்தது (முல்லா கதைகள்)

நஸ்ருதீன் முல்லா அவர்கள் துருக்கி மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார்.

மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார். ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, “முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர் ? “ என்று கேட்டார்.

“சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது” என்று முல்லா ஆமாம் போட்டார்.

மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து “இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு” என்று உத்திரவிட்டார்.

நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.

அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி “உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர் ? “ என்று கேட்டார்.

“ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை” என்றார் முல்லா

“என்ன முல்லா, பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே” என்று மன்னர் கேட்டார்.

முல்லா சிரித்துக் கொண்டே “மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே” என்றார்.

மன்னரும் விழுந்து விழுந்து சிரித்தார்.

9 மறுமொழிகள்:

At 3:24 PM, February 11, 2006, Blogger ENNAR மொழிந்தது...

பரம்ஸ் இக்கதை கேட்டிருக்கேன்
நல்ல கதை

 
At 8:10 AM, February 12, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நான் இதே கதையை தெனாலி ராமன், கத்தரிக்காய், என்று படித்திருக்கிறேன் அண்ணா.

 
At 6:51 AM, February 13, 2006, Anonymous Anonymous மொழிந்தது...

நானும் படிச்சிருக்கேன்..
முதலில் கத்திருக்காய்க்கு கிரீடம் சூட்டுவார்கள்.. அடுத்த முறை மண்டையில் ஆணி அடிப்பார்கள்..

:)

இந்த கதையும் அருமை..

அன்புடன்
கீதா

 
At 7:06 PM, February 13, 2006, Blogger தாணு மொழிந்தது...

ஏற்கனவே தெரிந்த கதைதான் என்றாலும், வாசிக்கும்போது சிரிப்பு வருகிறது-கவுண்டமணி செந்தில் காமடி போல்.

 
At 9:45 PM, February 13, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க கீதா சகோதரி,

அதான் கத்திரிக்காய் தலையில் கொக்கி மாதிரி காம்பும் படந்த கீரிடமும் இருக்கிறதா?

எனக்கு நெய் கத்திரிக்காய் குழம்பு என்றால் கத்திரிக்காயை விட அதன் காம்பும் அந்த தொப்பியும் தான் ரொம்ப பிடிக்கும்.

 
At 9:52 PM, February 13, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

தாணு அக்கா, தெனாலி ராமன் கதைகள் நிறையவே இருக்குது, அத்துடன் பரமார்த்த குரு கதைகளும் இருக்குது. நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை. தொடர்ந்து படியுங்க. இடையிடையே நகைச்சுவை கதைகளையும் சொல்கிறேன்.

 
At 1:25 AM, February 14, 2006, Blogger Muthu மொழிந்தது...

:-) :-)

 
At 8:48 AM, February 14, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க முத்து,

எப்படி இருக்கீங்க.

ஊருக்கு எப்போ போக இருக்கீங்க.?

 
At 2:14 PM, February 14, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க பாரதி,

எப்படி இருக்கீங்க. எல்லோருக்கும் தெரிந்த கதைகள் நிறையவே இருக்குது, இருந்தாலும் புதிய கதைகளாக கொடுக்க விரும்புகிறேன். படித்து மகிழுங்கள்.

 

Post a Comment

<<=முகப்பு