சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, January 26, 2006

கதை எண் 76 - ஜெரி சொன்னா கேட்கணும்

ஒரு முறை புளியங்குடி காட்டில் மழை பெய்யாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வாடி கருகின. நீர் நிலைகள் வற்றி விலங்குகள் தவித்தன.

பறவைகள் நான்கு திக்கிலும் பறந்து சென்று செழிப்பான இடத்தைத் தேடின.
அப்படிச் சென்ற பறவைகளில் ஒரு ஜோடி கழுகுகளும் இருந்தன.

இரண்டு கழுகுகளும் வெகுதுõரம் பறந்து தாங்கள் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுப் பொரித்து குதுõகலமாக குடும்பம் நடத்தத் தகுதியான மரம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வரும் பொழுது, ஒரு தோப்பு அவற்றின் பார்வையில் பட்டது.

தோப்பில் நிறைய மரங்களிருந்தன. அவற்றில் ஒரு மரம் கிளையுடன் செழித்து வளர்ந்திருந்தது. ஆனால், அது வயதான மரம். அந்த மரத்தில் யாருமே கூடு கட்டவில்லை, ஏன் என்றும் தெரியவில்லை.

யாருமே இல்லாததால் தாங்களே முழுமரத்தையும் உபயோகிக்கலாம், வேறு யாரையும் இனிமேல் அனுமதிக்கக்கூடாது என்று நினைத்து, அம்மரத்தில் கூடு கட்டலாமென்று இரு கழுகுகளும் தீர்மானித்தன. அதன்படியே பலமான குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டைக் கட்டின. கூடு பலமாக, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டு அங்கு முட்டை இட்டு, குஞ்சு பொரிக்கலாமென்று அவை பேசிக் கொண்டன.

அப்போது அம்மரத்தடியில் வளை தோண்டி வசிக்கும் ஜெரி எலி ஒன்று வெளியே வந்து, மேலே கூடு கட்டிக் கொண்டிருக்கும் கழுகுகளைப் பார்த்தது. அதன் முகத்தில் கவலை குடி கொண்டது.

""கழுகுகளே... மேலே என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டது ஜெரி.

""கூடு கட்டுகிறோம்!'' என்றது ஆண் கழுகு.

""இந்த மரத்திலேயா தங்கப் போறீங்க?'' என்று கேட்டது ஜெரி.

""ஆமாம்! அதற்காகத் தான் கூடு கட்டுகிறோம். தங்குவதோடு, முட்டையிட்டு குஞ்சும் பொரித்துக் கொள்ளப் போகிறோம்!, குஞ்சுகள் வந்தப் பின்பு அவைகள் இம்மரத்தின் மேலேயே கூடு கட்டும், இனிமேல் இது எங்களுக்கு மட்டுமே சொந்தமான மரம்'' என்றது பெண் கழுகு.

""நீங்கள் கூடு கட்டி குஞ்சு பொரிப்பது பற்றி மிகவும் சந்தோஷம்... ஆனால்?'' என்று இழுத்தது ஜெரி எலி.

""என்ன ஆனால் என்று இழுக்கிறாய்?'' என்று கேட்டது ஆண் கழுகு.

""நீங்கள் வேறு ஒரு மரத்தில் கூடு கட்டக்கூடாதா?''

""ஏன் இந்த மரத்துக்கு என்ன?''

""இந்த மரம் வயதான மரம். நான் இதன் கீழ் பூமியில் வளை தோண்டி வசிக்கிறேன். அதனால் இம்மரத்தின் வேர் எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும். இம்மரம் பார்ப்பதற்கு பெரியதாக இருக்கிறதே தவிர, இதன் வேர்கள் எல்லாம் பூமியில் பலம் குன்றியுள்ளன. இம்மரம் பலமான காற்றை தாங்குமா என்பது சந்தேகம்தான். அதனால் தான் சொல்கிறேன்!'' என்றது ஜெரி.

""நாங்கள் இங்கேதான் கூடு கட்டி குஞ்சு பொரித்து இருப்போம்... அற்ப ஜீவன் நீ...! யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ உனக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்றது ஆண் கழுகு.

""என்னமோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். கேட்டால் கேளுங்கள்; கேட்காவிட்டால் போங்கள்!'' என்றது ஜெரி.

""அதிகமாகப் பேசினால், உன்னையே கொத்தி சாப்பிட்டு விடுவேன்...! வாயை மூடிக் கொண்டு போ!'' என்றது பெண் கழுகு. பேசியதோடு இல்லாமல் எலியின் மீது பாய இரண்டு கழுகுகளும் ஆக்ரோஷமுடன் "சர்'ரென்று பறந்து வந்தன.

வளைக்குள் பாய்ந்து சென்று அவைகளிடமிருந்து தப்பிவிட்டது ஜெரி.
கூட்டை பலமாக கட்டியப்பின்பு மூன்று முட்டையிட்டு குஞ்சு பொறிக்க காத்திருந்தன, சில நாட்களில் மூன்று கழுகு குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியில் வந்தன. ஆண் கழுகும், பெண் கழுகும் குஞ்சு கழுகுகளைப் பார்த்து, பார்த்து மகிழ்ந்தன.

சில நாட்கள் சென்றன. ஒரு நள் மாலையில் இரு கழுகுகளும் உணவு தேட வெளியே சென்றன, அப்படியே வெகுதூரம் போய் விட்டன.

அப்போ முதலில் லேசாக ஒரு காற்று வீசிற்று. பிறகு அது கொஞ்சம் பலமானது. பிறகு இன்னும் கொஞ்சம் பலமானது; அப்புறம் மிக மிக பலமாகி புயலாக உருவெடுத்தது.

புயல் வரத்தொடங்கியதை அறிந்த இரு கழுகுகளும் வேகமாக தங்கள் கூட்டிற்கு வர நினைத்தன, ஆனால் காற்றில் அவற்றால் பறக்க முடியவில்லை. அன்று இரவு முழுவதும் ஒரு மலைக்குகையில் பதுங்கி இருந்தன.

மறுநாள் காலையில் வேகவேகமாக தங்கள் குஞ்சுகள் இருக்கும் மரத்திற்கு வந்து பார்த்த போது, அவற்றின் இதயமே நின்று போய்விட்டது.

ஆமாம், அங்கே இருந்த அந்த பெரிய வயதான மரம், அடியோடு சாய்ந்து விழுந்து கிடந்தது, மரக்கிளைகள் எல்லாம் நொறுங்கி தூள் தூளாகியிருந்தது, அதை பார்த்த இரு கழுகுகளும் தங்கள் 3 குஞ்சுகள் இறந்து போய் விட்டதே, சின்ன எலி அன்றே சொன்னது அதை கேட்காமல் தங்கள் அருமை குஞ்சுகளை இழந்து விட்டோமே என்று கதறி அழுதன.

அப்போ அங்கே வந்த ஜெரி எலி "இப்போ அழுது என்ன பயன், அன்றே நான் சொன்னதை கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா, என் உருவத்தை பார்த்து, நான் சொன்ன நல்ல விசயத்தை ஏளனம் செய்தீங்களே!" என்றது.

உடனே கழுகுகள் "உண்மை தான், எங்களை மன்னியுங்கள், உங்கள் பேச்சை கேட்காததால் எங்கள் குழந்தைகள் இறந்து போய்விட்டன" என்றன.

உடனே ஜெரி "உங்க குழந்தைகள் இறந்து போனதாக யார் சொன்னார்கள்"?

பெண் கழுகு "அதோ அந்த பெரிய மரம் அடியோடு சாய்ந்து கிடக்கிறது, அதன் அடியில் தான் எங்கள் குழந்தைகள் நசுங்கி போயிருப்பாங்க".

ஜெரி "கவலை வேண்டாம் என் அருமை நண்பர்களே! காற்று பலமாக அடிக்கத் தொடங்கியதும், நான் என் குரங்கு நண்பன் கபீஷிடம் சொல்லி, உங்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் மலைக்குகையில் பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறேன், அங்கே தான் அனைத்து பறவைகள், விலங்குகள் இருக்கின்றன, வாங்க போய் உங்க அருமை குழந்தைகளை பார்க்கலாம்" என்றது.

அதைக் கேட்ட இரு கழுகுகளுக்கும் ஆனந்த கண்ணீர், இருவரும் ஜெரியிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டு, நன்றியை சொன்னார்கள்.

உடனே மலைக்குகைக்கு சென்று அங்கே கபீஷிக்கும் நன்றி சொல்லி, தங்கள் குழந்தைகளை கட்டி பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்தார்கள். அன்று முதல் அந்த கழுகுகளும், நம்ம ஜெரி எலியாரும், கபீஷ் குரங்காரும் நல்ல நண்பர்கள்.

6 மறுமொழிகள்:

At 12:35 PM, January 26, 2006, Anonymous Anonymous மொழிந்தது...

கதைக்கு நன்றி.

அன்புடன்,
சுரேஷ்

 
At 12:54 AM, January 27, 2006, Blogger சிவா மொழிந்தது...

அனுபவசாலி சொன்னா கேட்டுக்கணும் என்று நல்ல கருத்தை சொல்லிருக்கீங்க. ஜெரி இருக்கு. டாம் எங்கே :-). நம்ம கபீஷ் குரங்கும் இருக்குதே. நல்லா இருக்கு நண்பர்கள் கூட்டம். கதைக்கு நன்றி பரஞ்சோதி.

அன்புடன்
சிவா

 
At 7:31 PM, January 27, 2006, Blogger Unknown மொழிந்தது...

பரஞ்சோதி,
எப்ப உங்க படத்த மாத்துனீங்க? அந்த பறக்கும் குதிரைய காணோம்? :-))

குழந்தையோட இந்தப் படம் நல்லா இருக்கு. கதையும்தான்.

 
At 9:44 AM, January 28, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

சிறுவர் பூங்காவிற்கு வருகை தந்த அன்பு நண்பர் சுரேஷ் அவர்களுக்கு எனது நன்றிகள்.

தொடர்ந்து படியுங்கள்.

 
At 9:45 AM, January 28, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

சிவா,

கதையின் தலைப்பு நீங்க சொன்ன மாதிரி அனுபவசாலிகள் சொன்னா கேட்டுக்கணும் என்று வைக்கலாம் என்று நினைத்தேன், அப்புறம் ஜெரி என்றால் குழந்தைகள் விரும்பி படிப்பாங்கன்னு மாத்தினேன்.

விரைவில் டாமின் சாகசங்கள் பற்றிய கதை சொல்கிறேன்.

 
At 9:46 AM, January 28, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க பலூன் மாமா,

நலமாக இருக்கீங்களா?

குதிரைக்கு ஓய்வு கொடுத்திருக்கிறேன்.

அனைவரும் முகம் காட்டத் தொடங்கியிருப்பதால் நானும் என் புகைப்படம் போட்டிருக்கிறேன்.

 

Post a Comment

<<=முகப்பு