சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, January 07, 2006

கதை எண் 73 - சோழ நாட்டு வீரச்சிறுவன்

சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் "சுங்கம் தவிர்த்த சோழன்' என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.

குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.

அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.

மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.

அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர்.

சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு ""என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?'' என்று ஆணவத்துடன் கேட்டான்.

மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.
சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.
அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.

முதல் நாள் வாட்போர்—
பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.

மறுநாள் மற்போர்—
சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.

கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன.

கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.

""மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?'' என்று இறுமாப்புடன் சொன்னான்.

மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.

அதே நேரத்தில்—

""இதோ, நானிருக்கிறேன்,'' என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.
அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான்.

""ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,'' எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.

என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்... கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.

தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான்.

கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது.

யாரிந்தச் சிறுவன்?

உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.

கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான்.

கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.

15 மறுமொழிகள்:

At 4:14 PM, January 07, 2006, Blogger மாதங்கி மொழிந்தது...

அந்த காலத்தில் நம் பாரம்பரியக் கலைகளான வர்மம், களரிபயட்டு முக்கியத்துவம் பெற்றிருந்தன.
சரி தோற்றவர்களை ஏன் மொட்டையிட்டு அசிங்கப்படுத்த வேணும். நல்லவேளையாக இவன் கர்வத்தை சிறுவன் கபிலன் அடக்கினான்

 
At 4:34 PM, January 07, 2006, Blogger ஞானவெட்டியான் மொழிந்தது...

அன்பு பரஞ்சோதி,
"ஆணவம் இருத்தலாகாது" எனும் கருத்தை விளக்கிய விதம் எனைக் கவர்ந்தது.

 
At 5:07 PM, January 07, 2006, Blogger சிவா மொழிந்தது...

பரஞ்சோதி! கதை நல்லாருக்கு! ஆனா கதைய டக்குன்னு முடிச்சிட்டீங்களே. சிறுவன் வந்தான் அடித்தான் முடிந்தது என்று ரொம்ப சீக்கிரம் முடிச்சிட்டீங்க :-).

 
At 7:17 PM, January 07, 2006, Blogger ENNAR மொழிந்தது...

நல்ல கதை இதே போல் ஒரு பொடியன் கவனால் அடித்து ஜெயிப்னான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனா?
ஆணவக்காரர்களின் கதையே இப்படித்தான்
ஒரு பொடியனிடம் மண்ணைக் கவ்வுவது

 
At 10:08 PM, January 07, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

சகோதரி மாதங்கி,

மிக்க நன்றி.

அந்த காலத்தில் தமிழர்களின் வீர விளையாட்டாக சிலம்பு, மற்போர், விற்போர், ஈட்டி எரிதல் போன்றவை இருந்தது தானே.

அந்த காலத்தில் எதிரி நாட்டை பலவகையில் மட்டம் தட்ட நினைப்பார்கள், அதில் ஒன்று தோற்றவர்கள் மொட்டை அடிக்கப்படுவது, அடிமையாவது. பாதி பயம் காட்டியே வெல்ல நினைப்பது தான் காரணம்.

 
At 10:13 PM, January 07, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

அய்யா, உங்க வருகைக்கு மிக்க நன்றி.

ஆணவம் கொள்ளலாகாது, அவ்வாறு கொண்டால் எப்படி எல்லாம் அடக்கப்பட்டார்கள் என்று சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன.

அடிக்கடி வாங்க.

 
At 10:16 PM, January 07, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க சிவா,

இப்போ தான் உங்க புராணம் படிச்சிட்டு வந்தேன், பனை மரம், தென்னை, மாமரக்கதைகள் எல்லாம் என் வாழ்க்கையிலும் உண்டு. நானும் என் நினைவலைகளில் சொல்லியிருக்கிறேன்.

அப்புறம் இந்த கதை முன்பு தினமலர் சிறுவர் மலரில் வந்தது, மாற்றி எழுத நேரமில்லை, அதான் அப்படியே கொடுத்திட்டேன்.

 
At 7:38 AM, January 08, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

என்னார் அண்ணா,

உங்க வருகைக்கு நன்றி.

கல்லால் அடித்து வென்றி வெற்றவர் டேவிட் என்ற தாவூது. கொல்லப்பட்டவர் கோலியாத். சின்ன வயதில் பள்ளியில் பைபிள் கதைகள் சொல்லும் போது கேட்டு மனதில் ஆழமாக பதிந்த கதை.

அதே தாவூது தான் மிக புத்திசாலியான சாலமோன் அரசனின் தந்தை.

 
At 11:04 AM, January 08, 2006, Blogger ENNAR மொழிந்தது...

பரம்ஸ் நிணைவாற்றல் தங்களுக்கு மிக அதிகம் நான் சாப்பிடாமல் சாப்பிட்ட நினைவில் இருப்பேன். பள்ளியில் படித்தேனே தவிர அந்த முழுக்கதை மற்றும் பெயர்களை மறந்துவிட்டேன் நினைவுபடித்தியதற்கு நன்றி

 
At 5:17 AM, January 12, 2006, Blogger டண்டணக்கா மொழிந்தது...

ஒரு நாலு மாசத்துக்கு முன்ன, உங்கக் பதிவ எங்க அக்கா பையனுக்கு கத சொல்ல அக்காங்ககிட்ட குடுத்தேன். அப்புறம் பையன் அவனா லேப் டாப்ப ஆன் பண்ணி, உங்க பதிவுக்கு போக சொல்லி புது கத வந்திருக்கானு அக்காவ டெய்லி செக் பண்ண் சொல்லி உயிர் எடுத்தான்னு சொன்னாங்க. உங்க பதிவ பார்த்த உடனே நான் நோட் பண்ணி வச்சுட்டேன், ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து ஊக்கத்தோட எழுதுங்க, நெறையா பேருக்கு பயன்படும்.

 
At 11:48 PM, January 13, 2006, Blogger Unknown மொழிந்தது...

பரஞ்சோதி,
பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா

 
At 9:44 PM, January 14, 2006, Blogger thanara மொழிந்தது...

கபிலனின் மனத்துணிவை
பாராட்டிக்கொள்கின்றேன்.

சகோதரருக்கு என் வாழ்த்துக்கள்.

தனரா

 
At 7:32 AM, January 15, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க டண்டணக்கா,

உங்க பெயரை என் ஒரு வயது மகள் சக்தியிடம் சொன்னால் ஒரே ஆட்டம் தான், ரண்டக்க, டண்டணக்கா என்றால் போதும் உற்சாகம் பொங்கி வருகிறது.

உங்க காமராஜர் பதிவுகள் அனைத்தும் பொக்கிஷம். தொடர்ந்து எழுதுங்க.

உங்க மருமகனுக்கு என்னுடைய வாழ்த்துகள். அனைவரும் போற்றும் வகையில் சிறந்தவராக வருவார்.

 
At 7:33 AM, January 15, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி கல்வெட்டு அவர்களே!

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

 
At 7:34 AM, January 15, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நண்பர் தனரா அவர்களுக்கு சிறுவர் பூங்காவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

 

Post a Comment

<<=முகப்பு