கதை எண் 74 - பைபிள் கதைகள் (1)
எருசலேம் பெரிய கோவிலில் பஸ்கா பண்டிகை நடைபெற்றது.
வியாழன் இரவு, தாம் கைது செய்யப்படக் கூடும் என்று இயேசு எதிர்பார்த்தார்.
சாதாரணமாக, பஸ்கா பெருவிழா காலத்தில், வீடுகளில் பஸ்கா விருந்து நடைபெறும். இயேசுவும் சீடர்களும் தங்கியிருந்த மேல்மாடியில் பஸ்கா விருந்து ஆயத்தமாக இருந்தது.
யூதர்கள் நம்மைப் போல, தரையில் உட்கார்ந்து சாப்பிடமாட்டார்கள், யூதர்கள் படுத்துக் கொண்டு சாப்பிடுவர். பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு சாப்பிடுவர். இப்படி அவர்கள் சாப்பிடுவதால் சாப்பாட்டுக்கு முன்பு கைகளையும் பாதங்களையும் அலம்பிக் கொள்வர். சாப்பிடுவதற்கு முந்தி பாதங்களை அலம்ப வேண்டும் என்பது அவர்கள் மதச்சட்டம் சார்ந்த ஒழுங்கு.
பஸ்கா விருந்து ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. இயேசு வீட்டுச் சொந்தக்காரரோடு கீழே பேசிக் கொண்டிருந்தார்.
இயேசு வந்ததும் விருந்து சாப்பிட வேண்டியது தான் பாக்கி. இந்த நேரத்தில், சீடர்களுக்குள் ஒரு சின்ன தகராறு.
யூத வழக்கப்படி, விருந்து நடக்கும் போது பிரதான விருந்தாளி ஒருவர் இருப்பார். பிரதான விருந்தாளிக்கு வலது பக்கமும் இடது பக்கமும் அமர்ந்து விருந்து சாப்பிடுபவர்கள், மற்ற விருந்தாளிகளை விட பெரியவர்களாக மதிக்கப்படுவர்.
இயேசு பிரதான விருந்தாளி! இயேசுவுக்கு இடப்பக்கம் யாருக்கு... இயேசுவின் வலது பக்கம் யாருக்கு. அந்த இடத்தில் உட்காரும் தகுதி பெற்ற பெரியவர் யார்? இதில்தான் தகராறு ஆரம்பித்தது.
""நான்தான் வயதில் பெரியவன். எனக்கு தான் வலது பக்கம்,'' என்றார் பெரியவர் பேதுரு.
""நம்ப கூட்டத்திலேயே நான் தான் கடைக்குட்டி ஆகவே நான்தான்,'' என்றான் எல்லோரிலும் இளையவனாகிய யோவான்.
""நம்ப கூட்டத்தின் பணப் பொறுப்பு என்னிடம்... எனக்குத்தான் முதலிடம் என்றான்,'' யூதாஸ்.
இப்படி ஆளுக்கு ஆள் எனக்கு தான் எனக்குத்தான் என்று சொல்ல ஆரம்பித்து ஏதோ அடிதடி நடப்பதுபோல கூச்சல் கேட்டது மேல் அறையில்.
இயேசு மாடிப்படி ஏறி வந்தார். இவர்கள் போட்ட கூச்சலில் இயேசுவுக்கு விஷயம் விளங்கியது. இயேசு மாடி அறைக்குள் நுழைந்தார். கூச்சலும் குழப்பமும் அடங்கியது. நிசப்தம் நிலவியது. யாரும் எதுவுமே பேசவில்லை.
உள் அறைக்குப் போனார். மேலங்கியைக் கழற்றினார். சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இயேசு என்ன செய்கிறார்?
யாருக்குமே தெரியவில்லை! என்ன என்று கேட்க யாருக்கும் துணிவும் வரவில்லை.
அறைக்குள் போன இயேசு திரும்பி வந்தார். ஒரு நீளமான துணி அவர் கையில் இருந்தது. அந்தத் துணியின் ஒரு பகுதியை இடுப்பில் கட்டினார். இன்னொரு பகுதி நீளமாகத் தொங்கியது.
தாலமும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். இரண்டையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சீடன் கிட்டேயும் போனார். கீழே குனிந்து மண்டியிட்டு தாலத்தைக் கீழே வைத்து, சீடனின் காலை எடுத்து தாலத்தில் வைத்தார். கூஜாவிலிருந்து தண்ணீர் ஊற்றி பாதங்களைக் கழுவினார். இடுப்பில் கட்டியிருந்த துணியினால் பாதங்களைத் துடைத்தார்.
இப்படி ஒவ்வொருவர் பாதங்களையும் இயேசு கழுவினார். சீடர்கள் வாயடைத்து நின்றனர். காற்றுக் கூட அசையாத மவுனம் நிலவியது. இந்த சீடர்கள்தான், யார் பெரியவன் என்று அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கிட்டவுங்க. ஆனால், எல்லாருக்கும் பெரியவர் பிரதான விருந்தினரான இயேசு, எல்லார் பாதங்களையும் கழுவுகிறார்.
இயேசு பேதுருவிடம் வந்தார். இவர்தானே, இயேசுவுக்கு வலதுபக்கம் வேணும்ன்ணு கேட்டவரு!
இயேசு, பேதுருவின் காலைத் தொட்டவுடன், வெடுக்கென்று காலை பின்னால் இழுத்துக் கொண்டார் பேதுரு.
""ஆண்டவரே... குருநாதா அபச்சாரம் அபச்சாரம். ஆண்டவரும் போதகருமாகிய தாங்கள் இந்த அற்பனின் கால்களைத் தொட்டு பாதங்களைக் கழுவலாமா? நான் சம்மதிக்கமாட்டேன்,'' என்று சொன்ன பேதுருவின் குரல் கம்மிவிட்டது.
இயேசு அமைதியாக திரும்பவும் பேதுருவின் பாதங்களைத் தொட்டு, கட்டாயமாக எடுத்து தாலத்தில் வைத்தார்.
""பேதுரு... உன்னை நான் கழுவ வேண்டும். இல்லையென்றால் உனக்கு என்னுடன் பங்கில்லாமல் போய்விடுமே,'' என்றார் இயேசு.
முடிந்தது! எல்லாருடைய கால்களையும் இயேசு கழுவி, துடைத்து முடித்தார். தாலத்தையும் ஜாடியையும் எடுத்துக் கொண்டு உள் அறைக்குப் போனார். இடுப்பில் கட்டியிருந்த நீண்ட துணியை எடுத்துக் காயப் போட்டு விட்டு, அவருடைய அங்கியை எடுத்து அணிந்து கொண்டார். திரும்பி விருந்து நடக்கும் அறைக்கு வந்தார்.
மவுன முகம் இன்னும் கலையவில்லை!
சீடர்கள் பிரமிப்பில் இருந்தனர்.
""என்னை ஆண்டவர் என்கிறீர்கள்... சிலர் போதகர் என்கிறீர்கள். என் செயலைக் கவனித்தீர்களல்லவா?
""ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் பாதங்களைக் கழுவினேனானால்... நீங்கள் ஒருவர் பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும்! இதற்கான மன நிலை உங்களுக்கு இருக்க வேண்டும்!
""என்னை குருவாக நீங்கள் ஏற்றுக் கொண்டது உண்மையானால் குருவுக்கு மிஞ்சியவனல்ல சீடன்! வேலைக்காரன் எஜமானை விட பெரியவன் ஆகிவிட முடியாதே! இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். என்னை முன் மாதிரியாக வைத்து நீங்களும் பிறருக்கு சேவை செய்து வாழுங்கள்,'' என்றார்.
சீடர்களின் தலை கவிழ்ந்திருந்தது. அவர்கள் உள்ளம் உயர்ந்திருந்தது. சேவை செய்வதில் முதல் இடம் பெற வேண்டும் என்ற உண்மையை சீடர்கள் கற்றுக் கொண்டனர்.
இயேசு தன் வாழ்நாள் எல்லாம் பணிவு, தாழ்மை, அன்பு, நேர்மை இவைகளுக்கே முன்னுரிமை கொடுத்தார். நாமும் நம்மை தாழ்த்தியவர்களாக வாழும் போது உயர்வு நிச்சயம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
2 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
//யூதர்கள் நம்மைப் போல, தரையில் உட்கார்ந்து சாப்பிடமாட்டார்கள், யூதர்கள் படுத்துக் கொண்டு சாப்பிடுவர். பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு சாப்பிடுவர்//
எப்படி தூங்குவார்கள்?
//கூஜாவிலிருந்து தண்ணீர் ஊற்றி பாதங்களைக் கழுவினார். இடுப்பில் கட்டியிருந்த துணியினால் பாதங்களைத் துடைத்தார்.//
இவ்வழக்கம் நமது நாட்டில் இந்து மதத்தில் தான் உள்ளது என கேள்விப்பட்டேன்.
அந்த தண்ணீரை தலையில் தெளித்துக் கொள்வர் என்றும்
என்னார் அண்ணா,
யூதர்கள் எப்படி தூங்குவார்கள் என்று கேள்வி கேட்டிருக்கீங்க. எனக்கு தெரிந்து நாம தூங்குவது போல் தான் தூங்குவாங்க.
மேலும் யூதர்களைப் பற்றிய விபரங்களை ஜோசப் அண்ணாவிடம் கேட்டால் தெரியும்.
Post a Comment
<<=à®®à¯à®à®ªà¯à®ªà¯