சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, January 21, 2006

கதை எண் 75 - கருணை கொண்ட உள்ளம், கடவுள் வாழும் இல்லம்

மகாத்மா காந்தியடிகளின் மானசீகக் குரு என்று கூறப்பட்ட டால்ஸ்டாய் அடிகளின் படைப்பில் இது ஒரு கதை . "What men live by". என்பது அவரிட்ட பெயர். ===========================================
இக்கதை நிகழ்ந்த புலம் மாஸ்கோ. மார்டீன் ஒரு செம்மான், ஏழை. குறைந்த வருவாயில் வாழ்ந்து வருபவன். மனைவியின் தேவைக்காக 'பர்' கோட் ஒன்று வாங்க விழைந்து இயலாமையால், அதற்குப் போதிய பண வசதி(ரூபிள்) இன்மையால் கொஞ்சம் ரொட்டி வாங்கிக் கொண்டு விட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

வழியில் இருந்த சர்ச் முற்றத்தின் ஊடாக நுழைந்து அந்தி மாலைப் பொழுதில் வந்து கொண்டிருந்த போது யாரோ முக்கி முனகும் சப்தம் கேட்டது. முகம் தெரியாதபடி பனி பெய்துகொண்டிருந்ததால் சற்று நெருங்கி அவன் சென்றுபார்த்தான்.

இளைஞன் ஒருவன் அரைகுறை உடையுடன் அங்கே விழுந்து பனியில் விரைத்துச் சுருண்டு கிடந்தான். இரக்கமும் கருணையும் மேலிட தன் மீது அணிந்து கொண்டிருந்த நீண்ட மேலங்கியைக் கழற்றி அந்த இளைஞனை அணைத்துத் தூக்கி அணிவித்து ஒரு வாடகை வண்டியில் ஏற்றித் தன்வீட்டிற்கு அழைத்து வந்தான்.

தன் குடும்பத்துக்கே பத்தாத நிலையில் வேற்றுநபர் ஒருவரை விருந்தாக அழைத்து வருவது என்ன விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். மனைவியின் மன நிலையைப் பற்றியும் எதிர்வினைகள் பற்றியும் யோசித்தான்.

வீட்டு வாயிலில் கணவனுடன் விருந்தாளி ஒருவனைப் பார்த்த அவள் அன்று ஏனோ வழக்கத்துக்கு மாறாக அமைதியாய் நடந்துகொண்டதோடன்றி அவனது உணவிற்காக எக்கேள்வியும் எழுப்பாமல் ஓட்ஸ் கஞ்சி தயாரித்து சூடாகக் கொடுத்தாள். சோர்வுற்றிருந்த விருந்தாளி பேச்சு மூச்சின்றி இருந்தவன் அவளது முகத்தைப் பார்த்து ஒருஇளநகை செய்துவிட்டு கஞ்சியைக் குடித்தான். கிழிசல் பாய் ஒன்றில் உறங்கிப் போனான்.

வந்தவனைப்பற்றிய விவரம் தெரியாத அவள் விழித்தபோது அவனைப்பற்றி நாளை தெரிந்து கொள்வோம் என்றான் மார்ட்டீன். மறுநாள் விடிந்தது, வந்தவன் பேசவும் இல்லை. உணவுகொடுத்தபோது உண்டான். மறுப்பதில்லை. இரு நாட்கள் கழிந்தன. அவனை என்ன செய்வது?பெரும்பாரமாய் அவனை தொடர்ந்து ஆதரிப்பதா? செய்வதறியாது தயங்கிக் குழம்பி நின்றான். சரி ஒருவாரம் வைத்திருந்து வெளியே அனுப்பிவிடலாம் என்று நினைத்து தன் சுயவேலையினைத் தொடர ஆரம்பித்தான்.

சிறிய வீடாதலின் மார்ட்டீன் தோல் தொழில் வேலைசெய்யும்போது விருந்தினன் அருகிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவனது கவனம் தெளிவாக இருந்தது. அவன் கருவிகளை யெடுத்து தோலை கச்சிதமாக வெட்டி மார்ட்டீன் செய்யும் அளவுக்கு சுத்தமாகச் செய்யத் தலைப்பட்டான். மேலும் அவன் மார்டினையும் விட விரைவாகவும் சிறப்பாகவும் அழகாகவும் அற்புதமாகவும் வடிவமைத்து காலணிகள், பர்ஸ், கைப்பைகள் என்று வித விதமாக தைத்து குவித்தான். அவனுக்கு சோர்வும் இல்லை பேச்சும் இல்லை.சரி பிறவிச் செவிட்டு உமையனாகவிருப்பான் என்று முடிவுக்கு வந்தனர். உண்ணும் நேரத்தில் கொடுத்தால் குடிப்பான். தாமதமானாலும் ஏனென்று கேட்பதில்லை. புதியவனின் கையால் தயாரான பொருட்கள் மிக விரைவில் விற்றதோடு, நல்ல பெயரும் பெற்று, பொருளின் தரம் அனைவரையும் கவர்ந்தது.

மார்ட்டின் செல்வாக்கு உயர்ந்தது. களங்கமற்ற வந்தவன் குழந்தையற்ற இல்லத்திற்கு வரம் பெற்ற குழந்தையாக, வாழவைக்க வந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வசதிகள் பெருகிடச் செல்வம் செழிக்க மார்ட்டீன் பெரிய வர்த்தகனாயினான். அவனது தயாரிப்புகள் விரும்பி வாங்கப்பட்டன. பெரிய கடைத்தெருவில் அலங்கார பெட்டிவைத்து புதிய உத்திகளுடன் வணிகப் புகழோடு முக்கியமான ஒரு நபர் என வாழத் தலைப்பட்டான்.

இரண்டு வருடங்கள் கழிந்தன.

ஒருநாள் காலையில் ஒரு சீமாட்டி தன்னுடைய விலை மிகுந்த கோச்சு வண்டியில் மார்ட்டீன் கடைக்கு வந்தாள். அவள் அழைத்து வந்த இரு பெண் குழந்தைகளில் ஒருத்தியின் இடது காலில் சிறிது ஊனம் தென்பட்டது.

இருகுழந்தைகளும் அச்சில் வார்த்தது போன்று இருந்தனர். அழகின் முழுமைப் பிம்பங்களாய் இருந்தனர்.. குழந்தைகளின் கால் அளவுகளை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடங்கினான் இளைய பணியாளன்.. அழகிய வடிவில் சிரிய தோற்றத்துடன் காலணிகளைத் நேர்த்தியாகத் தைத்தான்.

இடைப்பட்ட நேரத்தில் வந்த சீமாட்டி மார்ட்டீனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். தன் செல்வநிலை பற்றியும், தான் இளமையில் ஏற்பட்ட மணம்பற்றியும், கைவிட்டு இறந்த கணவன்பற்றியும், வாழ்வில் ஏற்பட்ட தனிமையும் பிறர் சூழ்ச்சியும் ,ஏற்படுத்திய வேதனை நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தாள். பின்னர் இக்குழந்தைகளைப் பற்றியும் பேசினாள் அனாதையாய் விடப்பட்டு தாயை இழந்த இவர்களைத் தான் எடுத்துவளர்த்து வருவதால் மட்டுமே உயிர்வாழ விரும்பியதாகவும் குறிப்பிட்டாள்.

அக்குழந்தைகளைப் பெற்ற ஒரு ஏழை பிரசவத்தின் போதே இறந்து போனதையும் அவளின் வறிய நிலையில் தான் அவளுக்கு உதவ நேர்ந்ததையும் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கடப்பாடு உருவானதையும் கூறினாள். அதுவே இன்று வாழ்வில் குறிக்கோளாக அமைந்தது பேரின்பம் என்றாள். முடித்து மெருகேற்றிய காலணிகளின் அமைப்பும் நேர்த்தியும் அனைவரையும் கவர்ந்தன. ஊனமான காலுக்கான காலணியும் மிகவும் கச்சிதமாக அமைந்ததில் சீமாட்டி உழைப்பாளியை மிகவும் பாராட்டி பரிசுகளுடன் சேர்த்து கூலியும் கொடுக்க முற்பட்டாள்.

காலணிகளுக்கான விலையை வாங்கவேண்டாம் என்று தன் சைகை மூலம் மார்டீனுக்குக் காட்டினான் இளையன். வேண்டுகோள் விடுத்த தன் இளையனை ஆச்சரியத்துடன் பார்த்தான் மார்ட்டீன். மறுத்தமைக்குக் காரணம் தெரியாவிட்டாலும் அவனுடைய விருப்பத்தை ஏற்று பலவந்தமாக சீமாட்டியின் கட்டாயத்தினைப் புறக்கணித்து, "இந்த இரண்டு ஆண்டுகளில் இன்று தான் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தன்னலம் பாராது என் குடும்பத்திற்காகவே உழைக்கும் இவனுடைய ஒரே ஒரு விருப்பமான செயல் இதுவே.

முதன் முறையாக இவனது உள்ளத்திலும் ஆசைகளும் இணக்கமும் உண்டு என்பதை உங்கள் குழந்தைகள் வருகை வாயிலாகத் தெரிந்து கொண்டேன். எனவே என்னை மன்னித்துவிடுங்கள் அடுத்து நீங்கள் வரும்போது நான் உங்களின் அன்புக் காணிக்கையை ஏற்றுக்கொள்வேன்" என்று வினயமாகப் பேசி இளையனின் விருப்பப்படி கூலி வாங்காமலேயே சீமாட்டியை வழியனுப்பிவைத்தான் மார்ட்டின்.

மேலும் இரு ஆண்டுகள் வேகமாகக் கழிந்தன. ஒருநாள் மாலை ஆடம்பரமாய் ஒரு செல்வந்தர் தன்னுடைய அருமையான கோச்வண்டியில் வந்து இறங்கி " மார்டீன் என்பவர் யார் ?"என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்து அமர்ந்தார்.

உயர்ந்த உருவமும், கனத்த உடல் அமைப்பும், வாழ்க்கையின் செழுமையயும் முழுதுணர்ந்து நுகர்ந்த பெருமையும் அவர் முகத்தே தெற்றென விளங்கின. சுற்றமும் மற்றோரும் கைகட்டி நிற்கும் பெரியதொரு தலைமைப் பொறுப்பு வகிக்கும் உயர்மட்ட மனிதனாய் அவர் காணப்பட்டார். விலையுயர்ந்த ஆடை அணிகலன்களும் மிடுக்கும் அவரைப் பற்றிய பெருமையையும் அச்சத்தையும் தோற்றுவித்தன. அவருடம் வந்த பணியாளன் ஒரு பெரிய சுமையைக் கொண்டுவந்து மேசையின் மீது வைத்தான். அதில் ஒரு அழகான பதனிடப்பட்ட தோல் சுருள் இருந்தது.

"மார்டீன், உன்னுடைய வேலை நுணுக்கம் பரவலாய்ப் பேசப்படுவதால் உன்னை நாடி நான் வந்திருக்கின்றேன். நான் வேட்டைக்கு சென்றிருந்தபோது ஒரு அபூர்வமான மிருகத்தைப் பார்த்தேன். அது என்னைத் தாக்க வந்த போது தான் அதனை நான் முதன்முறையாகப் பார்த்தேன் அது ஒரு அதிசய ஆட்கொல்லி மிருகம். இடையே நடந்த போராட்டத்தில் பலமான காயங்களுடன் நான் வெறிகொண்ட அதனை அழித்து அதன் தோலை பதப்படுத்திப் பக்குவப்படுத்தச்செய்து கொண்டு வந்திருக்கின்றேன். உயரிய தன்மையுடனும் அழகிய வேலைப்பாடுகளுடனும் தரமான ஒரு ஜோடி பூட்ஸ் செய்யவேண்டும். இந்தத் தோல் மீண்டும் கிடைக்க வாய்ப்பே இன்மையால் போதிய கவனமும் கருத்தும் செலுத்தி சீர்ிய முறையில் அதைச் செய்து தரவேண்டும்.

நான்கு நாட்களில் இதோ இந்தப் பணியாளன் வருவான் அவனிடம் கொடுத்து அனுப்பிவிடு." கூலி என்னவென்பதைக் கேட்காமலேயே ஒரு பெருந்தொகைப் பணத்தை மேஜையின் மேல் வைத்தார் செல்வந்தப் பிரமுகர்.

அடாவடித்தனமானதும் அதிகாரவர்க்கத்தின் தன்நலம் மட்டுமே கருதும் பாங்கும் போக்கும் மார்ட்டீனுக்கு அறவே பிடிக்கவில்லை. இப்படிப் பட்டதொரு அதிகாரப் பணி இதுவரை நடந்ததே இன்மையால் மனம் வெதும்பிப் போய் வேலையை மறுக்கவும் அச்சம் கொண்டதுடன், அதை வெளிப்படுத்திக் கூறவும் துணிய முடியவில்லை. மறுத்துக் கூறி அவருடய கோபத்திற்கு ஆளானால் விளைவு என்னவாக இருக்கும் என்பதும் அவனது அச்சத்தை அதிகரிக்கச் செய்தது. மேலும் நேரடியாக மறுப்பதகு அச்சம் மட்டுமே காரணம் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு பேச்சு.

தயக்கத்துடன் இளையனின் முகத்தினைப் பார்த்தான் மார்ட்டின். அவனுடைய முகம் தெளிவாகவும் இருந்தது; மேலும் அவன் செல்வந்தரை நோக்கி ஒரு புன் முறுவலும் செய்தான். தன் முகம் நோக்கிய மார்ட்டீனிடம் வந்த வேலையை விட வேண்டாம் என்றும் வாங்கிப் போடுமாறும் நயனமொழியிலும், சைகையின் மூலமும் உணர்த்தினான். விடை பெறும் போது மீண்டும் வலியுறுத்தி பூட்ஸ் மிகவும் கச்சிதமாக அமையவேண்டும் என்றும் குறித்த நாளில் தவறாமல் தான் அனுப்பிவைக்கும் பனியாளன் வசம் தந்துவிடவேண்டும் என்றும் கட்டாயப்படுதி விட்டுச் சென்றார் செல்வந்தர்.

வந்த பிரமுகரின் பேச்சுக்களையும் தோரணையையும் அறவே வெறுத்த மார்ட்டீன் நடந்து முடிந்த சம்பவத்தையே அசைபோட்டுக் கொண்டிருந்தான். சற்று வெளியில் உலாவிவிட்டு திரும்பவந்த மார்ட்டினுக்கு தலையில் பேரிடி ஒன்று விழுந்துவிட்டாற் போன்றதோர் சம்பவம் அங்கு காத்திருந்தது.

செல்வந்தரின் அன்புக்குப் பாத்தியப்பட்ட பாடம் செய்யப்பட்டிருந்த அரிய பிராணியின் தோலினில் செல்வந்தருக்கான தரமான பூட்ஸ் செய்யப்படாமல் சாதாரண செருப்புகள் ஒரு ஜோடி மெருகேற்றி அலங்கார வேலைப்பாடுகளுடன் பணி நிறைவு செய்து அருமையாக கண்ணாடிப் பெட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டதோடு அவரது முகவரி எழுதப்பட்டிருந்த ஓர் அட்டையையும் அதன் மேல் கோர்த்துக் கட்டப்பட்டிருந்தது.

நெருப்பினை மிதித்தது போன்று மார்ட்டீன் துவண்டுபோனான். நல்லவன், வல்லவன், வாழவழி வகுத்துத் தந்தவன், பேராளன்,தேடாமல் வந்தச் செல்வக்குமரன் என்றெல்லாம் யாரைப்பற்றி வந்தவர் போனவரிடமெல்லாம் வாயாரப் புகழ்ந்து கொண்டிருந்தானோ அந்த இளையன் தான் தோன்றித்தனமாய் செய்திருக்கும் செயல் மார்டீனுக்கு மிகவும் அச்சத்தைக் கொடுத்து காலடியினில் தரை விலகியதாக உணரத் தலைப் பட்டான்.

அவன் முன் நின்று கொண்டு,"ஏனடா நீ இங்கு என் வாழ்வினில் வந்தாய்? வறியநிலையினில் இருக்கும் போது நான் நிம்மதியாக விருந்தேன். வகையான வசதிக்கும் வாழ்வுக்கும் ஆளாக்கிப் பின்னர் மொத்தமாகக் என்னைக் குழி தோண்டிப் புதைக்கும் நோக்கம் உனக்கு எப்படியடா வந்தது? மக்கட் செல்வம் அற்ற எங்களுக்கு மகனாய் வந்தாய் என்று மதித்து இறுமாந்திருந்த எங்கள் குடும்பம் இன்றோடு அழிந்திட வழி வகுத்துத் தந்துவிட்டு ஏதும் அறியாதவன்போல் பேச்சு மூச்சற்று வாளாவிருக்கின்றாயே!. ஆழ்ந்து எங்கள் உரையடலை நீ வழக்கம் போல் கேட்டிருப்பாய் என்றுதான் எண்ணியிருந்தேன். வந்த கடுங்கோபி விரும்பிய தொன்றிருக்க வேண்டாத ஒன்றை வடிவமைத்துக் கொடுத்துவிட்டாயே? புரிதலில் தவறு நேர்ந்ததா, அன்றி நீ சரியாகப் புரிந்துகொண்டாயா என்பதை நான் சோதித்து அறியாதுவிட்டுவிட்டேனா? மாற்றுத் தோலும் எங்கிருந்தும் எப்படியும் பெறமுடியாத இச் சூழ்நிலையில் யாது செய்வேன்? தெய்வமே! ஊமையையும் செவிடனையும் நம்பி மோசம் போனேனே!" என்று புலம்பினான்.

என்னதான் திட்டிவைதாலும் அழுது புரண்டாலும் இளையனைப் பொறுத்தமட்டில் புரிந்து கொள்ள முடியாது என அவனுக்கு நன்கு தெரியும் என்றாலும் உபாயம் ஏதும் தெரியாமல் தலைவிதியென்று கூறும் நிலை இதுதான் போலும்! என்று நினைந்து கைகளை ஊன்றி மேசையின் மீது கவிழ்ந்தான்.

மனைவியை அழைத்துப் பேசினான். வீடு கடை அனைத்தையும் துறந்து இரவோடு இரவாக எங்கோ கண்காணாது போய்விடலாம் என்றும் பணியாளன் வந்து 'பூட்ஸ்-ஜோடி கேட்கும் போது இவனே இருந்து பதில் கூறிக்கொள்ளட்டும் எனத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்துமுடிக்க கணவனும் மனைவியும் இயங்க ஆரம்பித்தனர்.

வறுமையில் வாடியதும் எங்கிருந்தோ வந்த ஒருவனால் வாழ்வு தலை தூக்கி நிமிர்ந்துவும், இடைப்பட்ட காலத்தினில் வாழ்க்கையை வசதியாய் அமைத்து அதனைப் பாதியில் தட்டிப்பறித்ததுவும் நெஞ்சில் நிழலாட அத்தியாவசியப் பண்டங்களை சிறிது எடுத்து கொண்டு அதிகாலையில் பனி நீக்கும் அரசுத்துறை வாகனம் வந்து கதவு திறக்க வழிகிடைத்தவுடன் பிறர் அறியாது வெளியில் சென்றிட உத்தேசித்து செயலில் இறங்கினர் அத் தம்பதியர்.

வாயில் கதவு தட்டப்படும் ஒலி கேட்டது. யாரோ வாடிக்கையாளர் வந்திருப்பர் என்று வேண்டா வெறுப்புடன் மார்ட்டீன் எழுந்து கதவினைத் திறந்தான்.

அன்று தோல் சுருளைச் சுமந்து வந்த பணியாளன் கருத்து நெடிதுயர்ந்து நின்றான்.அவசர நிமித்தமாய் பரபரக்க இரண்டு நாட்களுக்கு முன்னமேயே வந்தது அவனுக்கு மேலும் பன்மடங்கு அதிர்ச்சியைத் தந்ததால் பொறியில் சிக்கிய எலிபோன்று அவன் திகைத்தான்.

வந்தவன் கேட்டான்" ஐயா பணி முடிந்து விட்டதா? மிகவும் அவசரத்தேவை என்பதால் ஓடோடி வந்துள்ளேன்." வாயிழந்து பேச்சிழந்து நாக்கு மேலணத்தில் ஒட்டிக் கொள்ள, பயத்தில் உறைந்து மார்ட்டீன் வந்தவனின் முகத்தையும் அதில் தோன்றும் பேரவசரக் குறிப்புகளையும், அவனால் விளையப் போகும் பிரளயத்தையும், குறித்த காலக் கெடுவிற்கு முன்னமேயே வந்து தன்னை ஒறுக்கப்போகும் பணியாளன் வடிவில் கூற்றுவனே வந்துள்ளதாக நினைந்து பேயறைபட்டவன் போன்று பதில் ஏதும் இல்லாதவனாக மலங்க மலங்க விழித்தான்.

ஐயா என் அவசரம் உங்களுக்குப் புரியவில்லையா? காரியங்கள் மிஞ்சிவிட்டன. கனவான் இறந்து போய்விட்டார். அவரின் புனித உடல் மாதாகோயில் முற்றத்தில் காத்திருக்கின்றது. நல்லடக்கம் நிகழ்வதற்காக என்னை எதிர்பார்த்து அங்கே உற்றாரும் மற்றோரும் குழுமியுள்ளானர். அவர் ஆசையாக அணிவதற்காகச் செய்யப்பட்டுள்ள புதிய பூட்ஸ் ஜோடியினை வெளியே எடுத்து அதனைப் பிரித்து சாதாரணச் செருப்பாக அதே அளவினில் மாற்றிக் கொடுங்கள். உங்கள் பணியினைத் துரிதப்படுத்தி நான் விரைந்து சென்றடைய தயவு கூர்ந்து விரைந்து செயற்படுங்கள். அளவிறந்த பணிகள் அங்கே தேங்கியுள்ளன" என்றான் பணியாள்.

மார்ட்டீன் கவனம் திரும்பி அவன் கூறிய சொற்களின் முழுமையினைப் புரிந்து கொள்ள சற்று அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் உள்ளிருந்து வந்த மார்டினின் வளர்ப்பு மகன் அலங்காரப் பெட்டகத்தினின்றும் ஒரு ஜோடி உரிய புதிய செருப்பை யெடுத்து வந்திருந்தவனிடம் காட்டிக் கொண்டிருக்கும் போதே கைகளினின்றும் அதைப் பறித்துகொண்டு ஓடிப் போக விழைந்தவன் போல் வந்திருந்த பணியாளன் ஏற்கனவே அது ஒரு பணி முடிந்த பொருட்கள் வரிசையில் அடைக்கலம் புகுந்திருந்ததைப் பார்த்து, அது முடிக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டன என்பதை எண்ணித் திகைத்தான்.

ஏதும் புரியாத மர்மக் கும்பலுக்குள் சிக்கிக் கொண்டது போன்று ஒவ்வொருவரையும் ஏற இறங்கப் பார்த்ததோடன்றி நீண்ட விடை கூறிவிட்டு அவசர நிமித்தமாய்ப் பறந்தான். நடப்பனவெல்லாம் என்ன? மார்ட்டினின் மனைவியும் வந்து சேர்ந்தாள்.

பூட்ஸை மாற்றித் தைக்க நேரம் பிடிக்கும் என்று வந்தவன் நினைத்திருக்க அதை முன் கூட்டியே செருப்பாய்த் தைத்துப் போட்ட வளர்ப்பு மகனை அச்சத்துடன் நோக்கினான் மார்ட்டீன்.

நடந்த நிகழ்வும் வந்தவன் கூறிய மரணச் செய்தியும், எவ்வித உணர்வும் அற்றவன், எதையுமே புரியமாட்டாதவன் என்று தான் நினைத்திருந்த மூங்கை யார்? அவனால் இத்துணை வசைமொழிகளை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடிந்தது? அனைத்தும் புரிந்தவனா? இப்பெற்றியுடையவனைத் தரந்தாழ்த்தி விட்டோமா? என்று கழிவிரக்கம் கொண்டு நொந்தான் மார்ட்டீன்.

ஓடிச் டென்று இளைஞனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு 'ஹோ' வென்று அழுது விம்மினான் மார்ட்டீன். கண்ணீர் சொரிய நின்றுகொண்டிருந்த மார்டீனின் மனைவி மகனின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள். உப்பற்றுக் கொடுத்தாலும் மருக்காது வாங்கி உண்ட அவனின் பெருந்தன்மையை அவள் நினைந்தாள்.

இனிய சங்கீத ஒலியினில் அன்பையும் கனிவையும் இழைத்து ஆதார ஸ்ருதி வருடலைத் தரும் தொனியில் "மார்ட்டீன்" என்று யாரோ கிணற்றுக்குள் இருந்து அழைப்பதுபோன்று ஒரு குரல் கேட்டது.

வெளியே வானம் கருத்து இடியும் மின்னலும் மழையும் மிகுந்து புயற்காற்றின் கடுமையால் சன்னல்திரைகளைக் கிழித்து படபட என்று கதவுகள் அடித்து ஒருவர் பேசுவது பிறருக்குக் கேட்க்காத வண்ணம் இரைச்சல் அதிகரித்தமைால் என்ன நடக்கின்றது என்பது எவரும் அனுமானிக்க முடியாமல் கலப்படமாக பேரிரைச்சல் மட்டுமே நிறைந்திருந்தது.

அத்தனை பேரிரைச்சலுக்கு மத்தியில் ஒரு இனிய சுனாதம் அனைத்து ஒலிகளையும் ஆழத்தின் கீழமுக்கி, வெள்ளத்தில் எதிர் நீச்சல் செய்யும் கருநாகம் போல் துல்லியமாக , ஆனால் மிக கூர்மையான மகுடி நாதம் போன்று சுண்டி இழுத்து மதுரமாய் ஒலித்தது. "அன்புடைய மார்ட்டீன்". குரல் வந்த அறையின் வடகிழக்கு மூலையினில் புதியவன் ஒருவன் நின்றிருந்தான்.

பொன் பஞ்சுப் பொதியலாய் ஒளி உமிழும் தாரகையாய், அன்பின் வடிவாய், அடைக்கலம் தரும் நற்கருணைப் பேராறாய் அவன் வசீகரித்து நின்று கொண்டு இருகை நீட்டி மார்ட்டீனை அழைத்தான். சுயம் அற்றுப் போய் பேரலையில் அல்லாடும் மரக்கட்டையென தள்ளாடி நின்ற மார்ட்டீன் மதுர வாசக அழைப்பின் விசையில் காந்தத்தால் ஈர்க்கப் பட்ட இரும்புத்துண்டு போன்று அவன் முன் கைகட்டி வாய் புதைத்து வணங்கி நின்றான். அவன் பின்புறத்தே அவனது மனைவியும் உள்ளீீடற்றுப் போய் நடைப் பிணமாய் நின்றுகொண்டு உரையாடலைச் செவிமடுத்தாள்.

"என்னை நன்கு பார் மார்ட்டீன். நீங்கள் இருவரும் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.உங்கள் இருவரிடமும் பயிற்சி பெறும் மாணவனாகச் சில ஆண்டுகள் தங்கிப் பழகித் தவம் புரிந்து கண்டறியாதன கண்டேன்.

நான் கற்றுக்கொண்டவை இயற்கையின் சாரம். அன்புத் தெய்வம் போன்று என்னை ஆதரித்தீர்கள். பயிற்சிமுடிந்தமையின் நான் உங்களைவிட்டு செல்கின்றேன்.எனக்கு விடை கொடுங்கள். உங்கள் வாழ்வு மேலும் சிறக்க நான் இறைவன் அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்." என்றான், கருமை நிறம் மறைந்து தெய்வீக ஒளிசூழ நின்றுகொண்டிருந்த அத் தேவதூதன்.

பேரிடராய், மரணவாயிலுக்கு இட்டுச்செல்லும் ஒரு சம்பவம் திசைமாறி கற்பனைக்கும் எட்டாத வகையில் எங்கோ தடம்பதித்துச் செல்வது வேடிக்கையாகவும் புரியாமலுமிருந்தது. மார்ட்டீன் சொன்னான்.

"ஐயா! நீங்கள் பேசுவதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டாத, விளங்காத புதிர்கள். விவரித்துக் கூறினாலும் அறிந்து கொள்ளவியலாதவை. எனக்கு ஒரு சிறுதகவல் மட்டும் சொல்லுங்கள். நீங்கள் யார்? தெய்வீகத் தோற்றம் இப்போது உங்களிடம் வரக்காரணம் யாது? அன்று அனாதையாய் வீழ்ந்துகிடந்த மர்மம் என்ன? ஏழையின் வீட்டில் அரைப்பட்டினியுடன் சில ஆண்டுகள் ஏன் தங்கியிருக்கவேண்டிய தாயிற்று? இங்கு பயிற்சி பெற்றதாகச் சொன்னது என்ன? வறுமையின் பிடியில் சிக்கிய தோல் தொழிலாளியின் அடிமையாய்க் காட்சிதந்து உழன்று என்னையும் அதிரப் பேச வைத்து ஒன்றுமே அறியாத ஊமையாய் நடந்த நாடகத்தில் கண்ட முடிவென்ன? "

நெகிழ்வான உண்மை உரிமையுடன் மாட்டீனின் கேள்விகளுக்கு மனமுவந்து அத் தேவ தூதன் கடமையாய்க் கொண்டு பதிலிறுத்தான். "எனதருமை மார்ட்டீன்! நான் விரைந்து சென்று இறைவன் பால் என் வணக்கத்தைத் தெரிவித்து என்பணியினைத் தொடர வேண்டும். என்றாலும் உண்மையின் தேடலாய் களங்கமற்ற உங்கள் ஐயங்களைத் தவிர்ப்பது என்கடமையாகும்" சற்று நிறுத்தி மீண்டும் அவன் சொன்னான்.

" அன்று வந்த இரட்டையர் சிறுமிகள் நினைவிருக்கிற தன்றோ? அக்குழந்தைகளின் தாயின் உயிர் பிரியவேண்டிய அன்னாளில் அவள் மரணத்துடன் போராடித் தவித்தாள். அவள் படும் அவஸ்தைகளை நேரில் பார்த்து உயிரைக் கவர்ந்து செல்ல வந்த நான் புதியதாய்ப் பிறந்த இரட்டைக்குழவிகள் தனிமைப்பட்டு இவ்வுலகில் அழிந்து போகும் என்று கருதி கருணை காட்டித் தாயின் உயிரைச் சிலகாலம் விட்டுவைக் கலாகுமா வென்று வேண்டுகோளை இறைவனனின்முன் வைத்தேன். அதற்கு இறைவன் திட்டமிட்டபடி வேறு ஒரு தூதனை அனுப்பி அத்தாயின் உயிரை எடுத்து வரச்செய்துடன் என்னைச் சபித்து," நீ பூவுலகில் சிலகாலம் தங்கி, உலகம் எதனால் நிலைபெற்றிருக்கின்றது? மனிதர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கின்றது? என்ன கொடுக்கப்படவில்லை? என்பதை அறிந்துகொண்டு வந்துசேர்வாயாக என்று கூறவும் தெய்வீக ஆற்றல் குறைந்து நான் மாதாகோயில் முற்றத்தில் வீழ்ந்தேன்."

தேவதூதன் மேலும் தொடர்ந்தான்," கருணையோடு உன் மனைவி எனக்கு அன்று ஓட்ஸ் கஞ்சி தரும்போது என் நண்பன் உடன் நின்று கொண்டிருந்தான்.அவன் முகம் பார்த்து முறுவலித்தேன். அன்றையத் தேர்வில் அவள் கண்டம் தப்பித்தாள். அக்கருணை பிறக்கவில்லையெனின் அவளின் உயிர் அன்று பறிபோயிருக்கும்."

"குழந்தைகட்குக் காலணிதைக்கவந்த சீமாட்டி தாயினு மேலாக அக்குழந்தைகளை ஆதரித்து அன்புகாட்டிச் செல்வச் சிறப்புடன் பராமரித்து வருகிறாள் என்பதை இறைவன் எனக்குக் காட்டியருளினார். அத்தாய் பிழைத்திருந்தால் அச்சிறுமிகள் வறுமையிலேயேதான் வாடியிருப்பார்கள்."

"உலகையே விலை பேசும் செல்வப்பிரமுகரின் கோச்சிலேயே நண்பன் வரக்கண்டேன். சற்று நேரத்தில் உயிர் பிரியும் தன்மை நெருங்கிவந்துள்ளமை அறியாத அவர் வேட்டைப் பிராணியின் நிலையையும் பூட்ஸ் விரும்புவதையும் ஆரவாரமாகத்தெரிவித்து வாங்கிச் செல்லக் கெடுவைத்துப் பேசினார். அவர் இறக்கும்போது அவருக்கு பூட்ஸ் அணிவித்து நல்லடக்கம் செய்யப் போவதில்லை. அவர் விருப்பத்திற்கு மாறாக செருப்பு மட்டுமே வழக்கமுறைமைப்படி தேவை யென்பதால் செருப்பைத் தைத்துப் போட்டேன்."

"உலகம் அன்பினால் நிலை பெற்றிருக்கின்றது என்பதையும், அன்புகூர்ந்து பிறருக்குத் தொண்டு புரியும் தன்மை மக்களுக்குக் கொடுக்கப்பட்ட செல்வம் என்பதையும், மரணம் என்று எப்படி சம்பவிக்குமென்று அறிய முடியாதவாறு இறைவனால் மறைக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுடன் வசிக்கும் போது நான் அறிந்து கொண்ட பாடம்" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றான் தேவதூதன்.

நன்றி: வெ.சுப்ரமணியன்.

9 மறுமொழிகள்:

At 6:10 AM, January 22, 2006, Blogger dondu(#11168674346665545885) மொழிந்தது...

பரஞ்சோதி அவர்களே,

நீங்கள் இங்கு குறிப்பிட்டக் கதையின் சரியான தலைப்பு "What men live by". "Godson" என்ற தலைப்பில் இருப்பது வேறு கதை.

இப்போது நீங்கள் இங்கு குறிப்பிட்ட கதைக்கு வருவோம்.

"வீட்டு வாயிலில் கணவனுடன் விருந்தாளி ஒருவனைப் பார்த்த அவள் அன்று ஏனோ வழக்கத்துக்கு மாறாக அமைதியாய் நடந்துகொண்டதோடன்றி அவனது உணவிற்காக எக்கேள்வியும் எழுப்பாமல் ஓட்ஸ் கஞ்சி தயாரித்து சூடாகக் கொடுத்தாள்."
முதலில் மனைவி கோபப்பட்டு வார்த்தைகளை விடுகிறாள். அதற்கு மார்ட்டின் கடவுளுக்காக அந்த வாலிபன் மேல் இரக்கம் காட்டுமாறு கேட்டுக் கொள்ள, பிறகு அவள் உணவு அளிக்கிறாள்.

"மார்ட்டின் செல்வாக்கு உயர்ந்தது. களங்கமற்ற வந்தவன் குழந்தையற்ற இல்லத்திற்கு வரம் பெற்ற குழந்தையாக, வாழவைக்க வந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வசதிகள் பெருகிடச் செல்வம் செழிக்க மார்ட்டீன் பெரிய வர்த்தகனாயினான். அவனது தயாரிப்புகள் விரும்பி வாங்கப்பட்டன. பெரிய கடைத்தெருவில் அலங்கார பெட்டிவைத்து புதிய உத்திகளுடன் வணிகப் புகழோடு முக்கியமான ஒரு நபர் என வாழத் தலைப்பட்டான்."
அப்படியேல்லாம் ட்ரமாட்டிக்காக மார்ட்டின் செல்வந்தனாகவில்லை. சாப்பாட்டுக்கு கஷ்டமில்லாத ஜீவனம்தான். ஆனால் அதுவே அவனுக்கு மிகப்பெரிய வரம் போலத் தென்பட்டது.

நீங்கள் கொடுத்த அடுத்த நிகழ்ச்சிகளின் வரிசையும் தவறே. முதலில் பணக்காரன் செருப்பு தைத்துக் கொள்ள வருகிறான், பிறகுதான் சீமாட்டி இரு குழந்தைகளுடன் வருகிறாள்.

நான் இந்தக் கதையை "23 tales from Leo Tolstoy" என்ற சிறுகதை தொகுப்பில் படித்தேன்.

அக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பின் கடைசி பாரா இதோ:

"And the angel's body was bared, and he was clothed in light so that
eye could not look on him; and his voice grew louder, as though it
came not from him but from heaven above. And the angel said:

"I have learnt that all men live not by care for themselves but by love.

"It was not given to the mother to know what her children needed for
their life. Nor was it given to the rich man to know what he himself
needed. Nor is it given to any man to know whether, when evening
comes, he will need boots for his body or slippers for his corpse.

"I remained alive when I was a man, not by care of myself, but
because love was present in a passer-by, and because he and his wife
pitied and loved me. The orphans remained alive not because of
their mother's care, but because there was love in the heart of a
woman, a stranger to them, who pitied and loved them. And all men
live not by the thought they spend on their own welfare, but because
love exists in man.

"I knew before that God gave life to men and desires that they
should live; now I understood more than that.

"I understood that God does not wish men to live apart, and
therefore he does not reveal to them what each one needs for
himself; but he wishes them to live united, and therefore reveals to
each of them what is necessary for all.

"I have now understood that though it seems to men that they live by
care for themselves, in truth it is love alone by which they live.
He who has love, is in God, and God is in him, for God is love."

And the angel sang praise to God, so that the hut trembled at his
voice. The roof opened, and a column of fire rose from earth to
heaven. Simon and his wife and children fell to the ground. Wings
appeared upon the angel's shoulders, and he rose into the heavens.

And when Simon came to himself the hut stood as before, and there
was no one in it but his own family."

பரஞ்சோதி அவர்களே இது மிக அருமையான கதை. என்னை மிகவும் பாதித்தது. சில மாதங்கள் முன்னால்தான் இணையத்திலிருந்து அதை காப்பி செய்து வன்தகட்டில் இறக்கிக் கொண்டேன். அவ்வப்போது மன அமைதிக்காக அதை நான் படிப்பதுண்டு. நீங்கள் குறிப்பிட்டதில் சில பிழைகள் தென்பட்டதால் அவற்றை இங்கு சுட்டிக் காட்டத் துணிந்தேன். மன்னிக்கவும்.

நீங்கள் ஒரு நல்ல சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

இப்பின்னுட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 6:14 PM, January 22, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க வாங்க ராகவன் அண்ணா,

முதன் முறையாக சிறுவர் பூங்கா வருகை தந்திருக்கீங்க என்று நினைக்கிறேன்.

நான் இக்கதையை முன்பு எப்போவே படித்து, கணினியில் சேமித்து வைத்திருந்தேன், அதை அப்படியே கொடுத்தேன்.

குழந்தைகளுக்கு ஏற்ப மாற்றலாமா என்று யோசித்தேன், பின்னர் பெரியவங்க படிச்சு, குழந்தைகளுக்கு ஏற்ப மாற்றி சொல்லட்டும் என்று அப்படியே கொடுத்து விட்டேன்.

மேலும் நீங்க சரியான கதையை சொன்னதற்கு நன்றி.

இக்கதையானது குழந்தைகளுக்கு என்பதால் மனைவி ஒன்றும் சொல்லும் விருந்தாளிக்கு உணவு கொடுப்பதும், புதிய விருந்தாளிக்கு உணவு கொடுத்ததற்காக, அவர் வேலைகள் செய்து, மார்ட்டீனை பணக்காரனாக மாற்றுவதாக சொல்லிருப்பதால், ஒருவருக்கு உதவினால் அதன் பலன் கண்டிப்பாக எதிர்பார்க்காமலேயே கிடைக்கும் என்பதும் புரிந்துக் கொள்ள முடியும் தானே.

சம்பவங்கள் மாறி இருந்தாலும் கதையின் முடிவுக்கு பொருத்தமாக இருக்கிறது தானே.

என்னையும் இக்கதையானது ரொம்பவே பாதித்தது, அதனாலேயே சேமித்து வைத்திருந்தேன், இக்கதையின் கருத்தை சொல்லும் வகையில் பல உண்மை சம்பவங்கள் என்னிடம் இருக்கின்றன, அவற்றை கதையாக சொல்ல இருக்கிறேன், அடிக்கடி படிக்க வாங்க.

அன்புடன்
பரஞ்சோதி

 
At 1:30 AM, January 24, 2006, Anonymous Anonymous மொழிந்தது...

"உலகம் அன்பினால் நிலை பெற்றிருக்கின்றது " -உண்மை

அருமையான கதை. படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி

அன்புடன்
கீதா

 
At 8:25 AM, January 24, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க சகோதரி,

நீண்ட நாட்களாக தங்களை காணமுடிவதில்லையே ஏன்?

உங்களையும் சிறுவர் பூங்காவில் ஒரு பதிவாளராக இணைத்தால் அடிக்கடி வருவீங்க என்று நினைக்கிறேன்.

பதிலுக்கு காத்திருக்கும்
பரஞ்சோதி.

(சிறுவர் பூங்காவில் பதிவாளராக இணைய விருப்பம் இருந்தால் மற்றவர்களும் சொல்லுங்க).

 
At 11:37 PM, January 24, 2006, Anonymous Anonymous மொழிந்தது...

வணக்கம்

நான் அவ்வப்போது வந்து கதையை படிச்சிட்டு தான் இருக்கேன்.. ஆனா பின்னூட்டம் இடாம போயிட்றேன் அதான் உங்களுக்கு தெரியலை.

அதுவுமில்லாம அடிக்கடி நண்பர்கள் வருகை, நாங்க ஊர் சுற்ற போவது இப்படியே போயிடுது.

அடுத்த வாரம் எங்க மாமனார், மாமியாரும் வாரங்க. 6 மாசம் கொஞ்சம் பிசிதான். :)

//உங்களையும் சிறுவர் பூங்காவில் ஒரு பதிவாளராக இணைத்தால் அடிக்கடி வருவீங்க என்று நினைக்கிறேன்.

பதிலுக்கு காத்திருக்கும்
பரஞ்சோதி.//

எனக்கு முழு சம்மதம். ஆனால் அடிக்கடி வந்து பதிவு போட முடியுமா தெரியலை. அதான் சொன்னேனெ எங்க அத்தை மாமா வருவதை.

:)

ஆனாலும் அடிக்கடி வருவேன்.

அன்புடன்
கீதா

தனிமடலிட g e e t h s @ g m a i l . c o m

 
At 3:57 AM, January 25, 2006, Blogger doondu மொழிந்தது...

டோண்டு பதிவில் இனிமேல் பின்னூட்டம் இட வேண்டாம். முதல் முறை என்பதால் எச்சரிக்கை செய்கிறேன்!

 
At 1:33 AM, January 26, 2006, Blogger சிவா மொழிந்தது...

பரஞ்சோதி! யப்பா! போன கதைக்கு (சோழநாட்டு வீர சிறுவன்) டக்குன்னு முடிச்சிட்டீங்கன்னு சொன்னதுக்கு இப்படியா..ரெண்டு நாள் உட்கார்ந்து படிக்க வேண்டியதா போச்சி :-)). அன்பே சிவம். அன்பே தெய்வம். அதையே அருமையான கதையா சொல்லிருக்கீங்க. பெரியவர்களுக்கான கதை போல. நமக்கு ரொம்ப புடிக்கிறது எல்லாம் குரங்கு, கரடின்னு மிருகம் வச்சி வருவது தான். அடுத்த கதை அப்படியே போடுங்க. நேயர் விருப்பம் :-))

 
At 4:22 AM, January 26, 2006, Blogger dondu(#11168674346665545885) மொழிந்தது...

பரஞ்சோதி அவர்களே,

கடவுளின் மகன் கதையையும் வெளியிடுங்கள். டால்ஸ்டாயின் எல்லா கதைகளும் அருமைதான்.

நிற்க. போலி டோண்டு உங்களையும் மிரட்டுகிறான் போலிருக்கிறது. அவனைப் பற்றி நான் இட்ட இப்பதிவைப் பாருங்கள். http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html#comments

இப்பின்னூட்டத்தின் நகலை அதே பதிவில் பின்னூட்டமாக நகலிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 4:07 PM, January 26, 2006, Blogger சிவா மொழிந்தது...

அப்புறம் பரஞ்சோதி. உங்க படம் (குழந்தையோடு) ரொம்ப நல்லா இருக்கு. சொல்ல மறந்துட்டேன். :-)

 

Post a Comment

<<=முகப்பு